Thursday 31 August 2017

நிலாச்சோறு - சிலப்பதிகாரம்

காவிரி கடலணைக்கும்
காதல் நகரம்...
கடல் கடந்த வாணிபம்
கரையேறும் இடம்...

விரிந்த காவிரியும்
வங்காளத்தில் இணைத்து...
அடிக்கும் அலையில்
நங்கூரமிட்ட நாவாய்களும்

அலையோடு போராடி
இன்பமுற விளையாடும்
காவிரிப்பூம்பட்டினம் இது...
சோழத்தின் கடல் நகரமிது...

வாணிகத்தில் திளைத்தவன்...
வறியோர்க்கும் எளியோர்கும்
உதவும் பண்புடையவன்...
அழகுடையோன் கோவலன் ...



மங்கையர்க்கரசி இவள்...
மானிடத்து தேவதையிவள்...
மன்மதனேங்கும் அழகியிவள்...
கற்பிக்கரசி கண்ணகியிவள்...

வாணிபக் குடும்பதில்
வரனாய் நுழைந்தாள்
நங்கையான கண்ணகி...
நாளும் வளர்ந்திட

கணவனைக் கண்ணாய்
காத்தாலே கற்புக்கரசியான
கண்ணகி ... தீராக்
காதலுடன் நாளும் நகர்ந்ததே...

பரத மங்கையிவள்...
பார் போற்றும்
அழகியிவள் நர்த்தனமாடி
இரும்பையும் இளகச்செய்திடும்
மாதவி இவள்...

மான் விழிப்பார்வையின்
மையலில் விழுந்தானே...
மதி கெட்டுப்போனானே...
மன்மதன் அழகுடைய கோவலன்...

நடனத்தில் விழுந்தான்...
நாளும் தேய்ந்தான்...
காதலாகி கசிந்தான்...
கற்புக்கரசியை மறந்தான்...

பிரிதலில் வாடியவளின்
பெயரை மறந்தான்...
கள்ளியின் வலையில்
காமத்தை பருகினான்...

அறிந்தும் இருந்தாள்
அந்தோ !! பரிதாபம்...
மங்கள லட்சுமியை
மதிக்காத போதும்

மனதால் நொந்து
மதியென தேய்ந்தாளும்
கோபம் காட்டவில்லை
கோவலனிடம் இவள் மட்டும்...

காதலில் தொடங்கியவன்
காமத்தில் விழுந்தான்...
கரைசேர தோன்றாமல்
கரைத்தான் செல்வத்தை...

பெரும் வணிகன்...
பெயர் இழந்தான்...
பொருள் இழந்தான்...
பொல்லாத சல்லாபத்தால்...

அனைத்தும் அகன்றது
இல்லத்தரசியான கண்ணகி மட்டும்
கலங்காதே என்று
காதலோடு நின்றாள்...

கடவுளாய் பார்த்தான்
கண்காண முடியாமல்
கூனிக் குறுகினான்...
தன்னிலை உணர்ந்து

வருந்திய மனதிற்கு
மருந்தாய் இருந்தாள்...
வாடிய பயிருக்கு
வசந்தகால  மழையானாள்...

காலச் சக்கரம்
கடத்தியது பழையதை...
புதியவனாய் புத்துயிர்
பெற்று உருப்பெற்றான்...

காவிரிப்பூம்பட்டினத்தைத் துறந்து
கோவலனும் கண்ணகியும்
மதுரை நோக்கி வந்தனர்...
முற்றுப் பெற்றதென

நினைத்த வாழ்வை
நெறியோடு வாழ்ந்திட...
புதியதாய் வாணிகம் நடத்திட...
புதுமனிதனாய் மாறிட...

தன்கால் சிலம்பை
துணையானவுக்கு கழற்றிக்
கொடுத்து விற்று
வியாபாரம் தொடங்க

நினைத்தவர்கள் வாழ்வில்...
நிலைதடுமாறிய வாழ்வை
நிலை நிறுத்த
எண்ணியவர் வாழ்வில்...

கொல்லன் வடிவில்
காலன் வந்தான்...
விற்கச் சென்ற சிலம்பு
வேந்தனின் மனைவியது என்றும்...

திருடியவன் கோவலன் என்றும்
திருட்டுப் பட்டம்
தாங்கி கழுவேற்றப்பட்டான் கோவலன் ...
தாங்குமோ ?.. கண்ணகிக்கு...

எழுந்தாள் காளியாய்
அணல் கக்கும்
விழியால் அரண்மனையில்
வேந்தனான பாண்டியனிடம்

உண்மையை உரைத்தாள்...
எள்ளி நகைத்தார்கள்...
சிபியின் வழிந்தோன்றல்கள்
கன்றிழந்த பசுவின்

குறை தீர்க்க
கண்ணாய் வளர்த்த மகனை
தேர்ச்சக்கரத்தில் பலியிட்ட
தர்மவானனான மனுநீதி சோழனின்

ஆட்சியில் வாழ்ந்த
குடிகள் நாங்கள்...
பாண்டிய நாட்டில்
துரோகம் இளைத்தீரே...

வெம்பி மனம்
வேதனை அடைந்து
விசும்பி அழுதவள்
வேந்தனிடம் உண்மையை  உடைக்க துணிந்தாள்...

அரசியாரின் சிலம்புடைக்கப்பட்டது
முத்துயெங்கும் தெறித்தது...
கண்ணகி தன் சிலம்புடைத்தாள்
மாணிக்ககற்களாய் தெறித்து...

பார்த்த பாண்டியன்
பரபரத்து போனான்...
உண்மையைறியாமல் நீதிவழங்கிய
அரசனே நியாமாயிது

ஊழ்வினைப் பயனில்
உன்னிடத்தில் தஞ்சமடைந்தோம்
அநீதியளித்து வாழ்வையழித்தாயே...
அழியட்டும் மதுரை...

மண்ணோடு மண்ணாய்
மடிந்து போகட்டும்...
இது பத்தினியின் சாபம்
அநீதியின் பலனை அனுபவிக்கட்டும்...

நேர்மை தவறி
நீதிக்கு முன்னால்
நிர்கதியாய் நின்ற பாண்டியன்
நிலைகுலைந்து வீழ்ந்தான்...

மண் விட்டு
விண்ணடைந்தான் பாண்டியன்...
அரசியாளும் தாங்காது
உடன் சென்றாள்...

கண்ணகியின் கோபத்தில்
அக்னியால் எரிந்தது மதுரை...
உயிரழந்த மணவாளனை
மடியிலமர்த்தி கண்ணீர் விட்டு

கதறித் துடிக்க...
கதிரவனும் கலங்கினானே
கார்மேகமென அழுதானே...
கண்ணகியின் நிலையெண்ணி...

எரிந்தும் அடங்காத
கோபத்தில் சேரதேசம் புகுந்து
மலையின் மீதேறி
மகேசனை வேண்டி

தவம் புரிந்து
தவமணியாய் நின்றாளே...
கற்புக்கரசியாய் நின்றாளே
கண்ணகியும் மக்கள் மனதில்...

சேரன் செங்குட்டுவன்
சன்னதியும் எடுப்பித்தானே...
மலையின் உச்சியில்
மௌனமாய் அமர்ந்த
கற்புக்கரசி கண்ணகிக்கு...

சிலையான மங்கையால்
சிதறுண்ட வாழ்வு...
சிலம்பால் முடிவுற்றது
சிலப்பதிகாரம் எனும்
காவியமாய் நின்றது...

- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -

No comments:

Post a Comment

Popular Posts