Monday, 7 August 2017

இருமலர்கள்

பூக்கள் இல்லா
நந்தவனம் இவள்..
நாளும் விழுந்து
தெறிக்கிறது மழைத்துளிகள்...

இருந்தும் பூப்பதும்
இல்லை இவள்
வனம் மட்டும்...
வாடித் தேய்கிறாள்

தேய்பிறை நிலவாய்..
கதிரொளியும் உட்புகுந்து
காதலைக் கூட்டி
நிறைத்து சென்றாலும்

கலைந்து விடுகிறதேனோ
இவள் மேகம் மட்டும்..
அழுகை ஆட்கொள்ள
எரிந்து நொடிகிறாள்...



வேதனை வலையில்
விழுந்து சாகிறாள்..
தூற்றல் வார்த்தைகளால்
துவன்று போகிறாள்...

வசந்தம் திரும்பி
வாடிய செடியினுள்
தென்றலாய் வருடி...
மலடான தளிரினுள்

காமத்தைக் கூட்டி...
காதலை நிரப்பி...
உயிர் கொடுத்து செல்லுதே...
ஒளி பெறச் செய்யுதே...

வண்ணத்துப்பூச்சியாய் மனம்
விரிந்து பறக்குதே...
விரக்தியான நெஞ்சத்தில்
விடியலை தந்து சென்றதே...

மலடான வனமும்
மொட்டுகளால் சூழ்ந்ததே...
மலரக்காத்து நின்றதே
மங்கையென அதுவும்...

தூற்றலும் வேதனையும்
தூரப் போனதே...
புதியதாய் இருமலர்கள்
பூரிப்புடன் விரிந்ததும்...

புத்துயிர் பெற்று
பிருந்தாவனமாய் ஆனதே...
அழுகையின்று ஆனந்தமயமாய்
உயிர் பெற்று நிற்குதே....

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts