Showing posts with label பேஸ்புக். Show all posts
Showing posts with label பேஸ்புக். Show all posts

Saturday, 23 June 2018

இருள் - சிறுகதை

இருளிற்கும் காமத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ன....?

இருளுடனான பிரயாணங்கள் இப்போதெல்லாம் சாத்தியப்படுவதே இல்லை. முகத்தில் தொடங்கும் பார்வை படர்ந்து பரவி எங்கெல்லாமோ நிலைக்குத்தி நிற்கின்றது. உடலை மறைக்கத் திமிறும் உடையை ஊடுருவி அதிவேகமாய் பிரயாணிக்கும் விரச பார்வைகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கின்றது.

இந்த ஆண்கள் நிஜமாகவே போதையுடன்தான் பிரயாணிக்கிறார்களோ....!

பின் எப்படி இத்தனை அருவருப்பை நான் பிரதிபலித்த பின்னும் இடைவிடாமல் பார்வைகளால் ஸ்பரிசிக்க முடிகிறது...?

எத்தனை முறைதான் முறைப்பது... எத்தனை முறைதான் சேலையை சரிசெய்வது...

என்னோடு சேர்த்து இரண்டு பெண்கள் பேருந்திற்குள் இருக்கிறோம். அவளும் இதே அவஸ்த்தையுடன் தலைகுனிந்தபடி நின்றுகொண்டிருப்பதாய் தோன்றுகிறது.

நாங்கள் இருவரும் தனித்து தெரிவதால் இந்த பார்வை மொய்ப்புகளா...? அல்லது இருளின் அடர்த்தி இவர்களுக்கு காம உணர்வை அள்ளி அப்பியுள்ளதா....?

பேருந்து விரைந்து கொண்டிருக்கிறது. ஒருவன் என் கழுத்துடன் கீழிறங்கி மார்பு பகுதிக்குள் தன் பார்வையை நிறுத்திக்கொண்டான். நான் நின்றபடி பிரயாணிப்பதால், அருகில் அமர்ந்திருந்த ஒரு கிழவன் இடையில் தெரியும் சிறு இடைவெளியை விடாமல் அவதானிக்கிறான். பக்கம் நிற்கும் தடித்த ஒருவன் காற்றில் பறக்கும் என் கேச ஸ்பரிசத்தை கண்மூடி அனுபவிக்கிறான்.



நான் பார்வைகளால் கற்பழிக்கப்படுகின்றேன். பலரது விரச பார்வைகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ பகற் பொழுதுகளை பேருந்து பிரயாணத்தில் கழித்ததுண்டு. இத்தகையதொரு அவஸ்த்தையை வெளிச்சம் எனக்கு உணர்த்தியதேயில்லை.

இப்போதைய என் சந்தேகமெல்லாம் இந்த இருளின் மீதானது அல்லது இருளுக்குள் கசியும் நிலவினதும், மின்விளக்கினதும் ஒளியின் மீதானது.

பலரது அந்தரங்கம் இருளுக்குள்தான் வெளிப்படுகிறது.... உலகின் பாதி அசிங்கங்கள் இருளுக்குள்தான் அரங்கேறுகின்றன.

இருள் ஒரு கறுப்பு அரக்கன். ஆண்களுக்கு சாதகமானவன். காம உணர்ச்சியை அதிகரிக்கத் துடிப்பவன். போதையுடனான மானிடர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு குதூகலிப்பவன்.

இன்னும் சிறிது தூரத்தில் நான் இறங்க வேண்டும். பேருந்தின் சரி மத்தியில் நான் நின்று கொண்டிருப்பதால், ஏதோ ஒரு பக்கம் நடந்தே நகர வேண்டிய கட்டாயம். அது பின் கதவு வழியாகவெனின், இத்தனை நேரம் ஒரு பக்கவாட்டில் என்னை மொய்த்த கண்களுக்கு என் மொத்த உருவத்தையும் பார்வையால் அள்ளி விழுங்கும் வாய்ப்பை தந்ததாகிவிடும். முன் கதவெனின் என் பின்புற அசைவு வெறித்து நோக்கப்படும்.

இரண்டிலுமே எனக்கு உடன்பாடில்லை. யன்னல்வழி தாவி குதித்திட இயலுமென்றால் இந்நேரம் குதித்து ஓடியிருக்கலாம்.

இந்த ஒவ்வொரு பார்வையினதும் உள்ளக கற்பனை எந்த எல்லையை தொட்டு மீள்கிறதென்று எங்கனம் நானறிவேன்...?

இதோ நான் இறங்கும் தருணம் வந்தாயிற்று. எந்த சணடாளன் முகத்திலும் விழிக்கும் திராணி என்னிடத்தில் இல்லை. முன் கதவுவழி இறங்குவதற்காய் மெதுவாய் நடக்கிறேன்.

சடாரென்ற பஸ்நிறுத்தம் ஒருதடவை என்னை குலுக்கி எடுக்கின்றது. தடுமாறி போனவளாய் பதட்டத்துடன் இறங்கிக் கொள்கிறேன்.

இத்தனை நேரம் பலரது பார்வைகளை சுமந்து கொண்டிருந்த என்னுடல் சற்றே ஆசுவாசிக்கிறது. துணித்துண்டொன்றோ தும்போ கொண்டு தேய்த்துத்தேய்த்து.... துடைத்து....... அத்தனை பார்வையெச்சங்களையும் கழுவிக்கொள்ள வேண்டும்.

என்னதான் கழுவித் துடைத்து என்னை தூய்மையாக்கிக் கொண்டாலும், ஒவ்வொரு இருள் பொழுதுடனான பிரயாணத்திலும் பலரது கற்பனையில் நான் கற்பழிக்கப்படுகிறேன் என்பது நிஜம்தானே.....!

நினைக்க... நினைக்க... கோபத்தின் பரவல் என்னை முழுதாய் ஆட்கொள்கிறது. என் கோபத்தின் மொத்த பங்கும் சடாரென இருளின் மீது திரும்புகிறது.

பாதையில் கிடந்த ஒரு கல்லை பொறுக்கி ஆவேசத்துடன் என் முன்னால் தெரியும் இருளின் மீது ஓங்கி வீசுகிறேன். இருளின் கறுத்த உடலை கிழித்துக்கொண்டு அந்த கல் வேகமாக உட்செல்கின்றது.

--------------------------------------------------------------------


#சிறுகதை #இருள் #பிரமிளாபிரதீபன் #பேஸ்புக் #தமிழ் #கற்பு #பெண் #உலகம் #பயணம் #ShortStory #PramilaPradeepan #FaceBook #Tamil #Girl #World #Travel #SIGARAMCO #சிகரம் 


#104/2018/SIGARAMCO 
2018/06/23 
இருள் - சிறுகதை 
https://www.sigaram.co/preview.php?n_id=330&code=zL2JPjKd 
பதிவர் : பிரமிளா பிரதீபன்
#சிறுகதை #இருள் #பிரமிளாபிரதீபன் #பேஸ்புக் #தமிழ் #கற்பு #பெண் #உலகம் #பயணம் #ShortStory #PramilaPradeepan #FaceBook #Tamil #Girl #World #Travel #SIGARAMCO #சிகரம் 

Saturday, 26 May 2018

வாழ்தலின் பொருட்டு - 05

கருத்த இவ்விருளைக் குழைத்து பொட்டிட்டுக் கொண்டபின் இருவிழி மூடி அவ்விருளின் நிறம் அப்பிய கணத்தில் பறக்கத் துவங்கியது பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்!

நேற்று சமைத்த பாத்திரத்தில் மீந்த சோறாய் காய்ந்து ஒட்டிக் கொண்ட நினைவுகளை அகற்ற தோதாய் ஊற வைக்கிறேன் உள்ளத்தை !

ஆவியில் அவித்த இட்லியாய் விண்டு விழுங்கிவைத்தும் நினைவைச் செரிக்கும் அகத்தினை பெற்றதும் வரமேதான்!

அணைந்த தீபத்தின் கருகல்வாடையாய் அடைகாத்த அன்பு விழித்திரை தாண்டி படர்கிறது துளிகளாய்!

எங்கோ எப்போதோ சிரித்து வைத்த, சிநேகித்த சில நொடிகள் குமிழிகளாய் உள்ளக்கிடங்கில் வெடித்துச் சிதறுகையில் கருநிற இருளில் மினுமினுக்கிறது நம்பிக்கை நட்சத்திரங்கள்...!

உன்னைப் போர்த்திக் கொண்டு உறங்குதலே மீயின்பம் ஆதலால் உன்னோடு சூடுபறக்கும் ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்து பசியாற்றிக் கொள்ள என்னோடே இருந்துவிடமாட்டாயா மையிருளே? !



உடைந்த வளையல் துண்டாய் உறுத்தி ரணமாக்குகிறது வலி உள்ளத்தை! சேர்த்து வைத்த அத்தனையும் செலவழித்துத் தீர்ந்ததுபோல் திக்கற்றுத் திணறுகையில்தான் அகோரப்பசியென்று பிசைந்து நிற்கிறது பிரியம் தேடி மனது !

கடைவாய்ப்பல் வலிக்கையில் அருந்தும் வெந்நீர்போல வெதுவெதுப்பை விதைக்கும் விழிகளின் பார்வையில் தான் இருக்கிறது வாழ்தலுக்கான நம்பிக்கை ! 

காற்றடித்த திசையெல்லாம் அசைந்து ஆடினாலும் கிளைகளுக்கும் இலைகளுக்குமான பிரியத்துக்கு உயிர் நீர் வார்ப்பதென்னவோ உண்மையில் மண்மூடிய வேர்கள் தான்!

மொய்த்து அரிக்கும் ஈயாய் இடைவிடாது மண்டை ஓட்டுக்குள் நச்சரிக்கும் நினைவைப் புறந்தள்ளி மீண்டும் துளிர்க்க ஒரு கோப்பை தேநீரோடு ஊடுருவி உயிர்பருகி கொள்(ல்) என்விழிகளே !
 

#095/2018/SIGARAMCO
2018/05/26
வாழ்தலின் பொருட்டு - 05

https://www.sigaram.co/preview.php?n_id=321&code=90Rxe1s2
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி) 
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE 
#சிகரம்

Wednesday, 28 March 2018

வாழ்தலின் பொருட்டு - 04





இன்று போலவேதான் அன்றைக்கும் 
என்னை முழுதாய் நனைத்தாய்...!
உதடுவழி உயிர் நீர் தந்து 
உயிர்ப்பித்தாய் என் பெண்மையை!

கொஞ்சம் தடுமாறுகையில் கரங்களை வலுவூட்டி தாவி எனை அணைத்தாய்! மலை மீது நின்ற படி உரசிய காற்றையும் உன்னையும் எனக்குள் அனுமதித்தபோது நான் ஈன்றிருந்தேன் உன்னால் கருவுற்று பல கவிக்குழந்தைகளை!

திகட்டத் திகட்ட நீ பொழிந்த தேகமுத்தத்தில் முழுதும் நனைந்தபின் குளிரத் தொடங்கியிருந்தது! உருகிக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சட்டென கரம் உதறி விலகிப் போய்விடுவாய்!

எனது மொத்தக் காதலையும் தொப்பலாய் நனைத்து பிழிந்தெடுத்தபின்னும் நீ மிச்சம் வைத்துப் போவதுதான் தீரா நோயாகிறது!

மறுநாளே காய்ச்சலில் விழும் எனக்கு கடும் எதிர்ப்பு வரும் உன்னை சந்திக்காதேயென...! மாட்டேன் எனச் சொல்வதெல்லாம் நீ மீண்டும் எப்போது வருவாய் என்பதை அறிந்திராததால் தான் ...!

நீ வந்தால் போதும் வந்துவிடுவேன் உன்னுள் நனைந்து என்னை உயிர்பித்துக் கொள்ள உயிர் மாமழையே!

உடனே வா தேநீரோடு காத்திருக்கிறேன்!

முடிந்து போன ஒரு நாள் என்பது
எதுவெனச் சொல்ல இயலாது...
ஏதோ ஒன்றின் துவக்கமாகலாம்,
ஏதோ ஒன்றின் முடிவுமாகலாம்...!

காலச்சக்கரத்தை
நொடிநொடியாய் தகர்த்து
புறவாசல் விரட்டியடித்து
மூச்சை இழுத்துவிடுகையில்,

அசதியில் தூக்கம் வர
கண்விழித்தால் மீண்டும் 
வாசல்படியோரம் கையசைத்து
வந்து நிற்கும் அடுத்தொரு நாளும்...!

சிறகுவெட்டப்பட்ட எனக்கு 
பரிசளிக்கப்பட்ட நந்தவனம்
நான்கு சுவர்களுக்குள்
மணத்துக் கிடக்கிறது...

அசைவற்றுக் காத்திருக்கையில் அதிசயத்தின் ஓர் நாளாகவும்... அவஸ்தைகளில் தவித்திருக்கையில் நகராத நாளாகவும் தன்னைத் தின்னக் கொடுக்கும் என் நாளே...!

சுழலும் உன் சக்கரம் நிறுத்தி என் சுவருக்குள் வந்தமர்ந்து போ... கால்களற்ற என் கடிகாரத்தை சற்று மட்டும் பின்னோக்கி வைக்கிறேன்...

என் பிரியமான நாளே,
நீ அருந்தத் தேநீர் தயாரிக்கிறேன் கசந்துபோன
உன் கணங்களைத் தித்திப்பாக்க கடிந்து கொள்ளாமல்
அருந்திப் போ, என்னோடமர்ந்து இன்றைக்கும் ஓரு கோப்பை தேநீர்...!

வாழ்தலின் பொருட்டு - 04 - 01

வாழ்தலின் பொருட்டு - 04 - 02

#083/2018/SigaramCO
2018/03/28
வாழ்தலின் பொருட்டு - 04   
https://www.sigaram.co/preview.php?n_id=309&code=JQpHy2s4  
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்
 
#083/2018/SigarmbharathiLK
2018/03/28
வாழ்தலின் பொருட்டு - 04   
https://newsigaram.blogspot.com/2018/03/VAAZHDHALIN-PORUTTU-04.html   
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்
 

Sunday, 19 November 2017

என்றேனும் ஒரு நாள்...

என்றேனும் ஒரு நாள் வரும்
இந்த உலகத்தில் திருநாள் வரும்!
அந்நாளில் நான்பாடும் பாடல் கேட்கும்
அழியாத இசையென்னும் தேனை வார்க்கும்!

தமிழே நீ என்னைத் தாலாட்டு
தாய் மடிபோல இனிக்காதே பாராட்டு!
விழி கொஞ்சும் வார்த்தைகள் நீதானே!
விடியாமல் போகுமா செந்தேனே?




உறவின்றி அழுகின்ற பறவை-இவள்
உயிர்வாழத் தந்தாயே உறவை!
ஊர்மெச்ச உன் பேரைச் சொல்வேனே!
உலகெங்கும் உனையள்ளிச் செல்வேனே!

மார்மீதும் தோள்மீதும் தாலாட்டினாய்!
மணம் வீசும் வார்த்தையால் சீராட்டினாய்!
சேய் என்றன் நினைவுக்குள் நீதானே!
சிறு பிழையேனும் வருமா என்தாயே?

நாடோடிப் பாட்டுக்காரி -உன்னை
நாள்தோறும் போற்றும் சூரி!
கரிகாலன் கதை சொல்ல வந்தேனே
கதையோடு கதையாக நின்றேனே!

இனி என்றன் பாடல் நில்லாது!
இளநெஞ்சின் ஆசை விட்டுச் செல்லாது!
ஒளி வீசும் நிலவே நீ வரவேண்டும்
ஒரு கோடி ஆனந்தம் தர வேண்டும்!

பாடல் வரிகள் : அம்பாளடியாள் | நன்றி |இப்பதிவு அம்பாளடியாள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது | சிறப்பான வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டும் | சிகரம் 

என்றேனும் ஒரு நாள் | அம்பாளடியாள் | பேஸ்புக்

என்றேனும் ஒரு நாள் | சிகரம் | SIGARAM.CO 

Popular Posts