Showing posts with label கோபால் கண்ணன். Show all posts
Showing posts with label கோபால் கண்ணன். Show all posts

Wednesday, 1 November 2017

மச்சமளவு முத்தம்

பறவையின் வாழ்வைப் பழகு
விடியலில் விரைந்தெழு
கதிரோனைக் காவல் வை
இறையைத் தொழு
திசையை தீர்மானம் செய்
செல்லும் இடத்தை
இல்லத்தில் சொல்

இரைதேடி பற ; சேகரி
இருள் வருவதற்குள்
இல்லம் திரும்பு
காலணிகளையும் பொய்களையும்
வீட்டிற்கு வெளியில் விடு
ஒளித்திரைகளை அணை
மக்களுடன் விளையாடு
அடுக்களையில் உதவிசெய்
கூடியமர்ந்து உண்டு களி
குழந்தைகளை உறங்க வை



உன் அறையை அலங்கரி
அன்புருக்கியை அழை
இடை தழுவு
விடுவிடு என இடைமறிப்பாள்
இயல்புதான்
இழுத்தணைத்து இறுக்கு

விரல்வெளிகளை
விரல்கள் செருகி நிரப்பு
அவளின் இடக்கை ரேகைகளை
உன் வலக்கை ரேகைகளால் போர்த்து
உன் துயரென்ன என பரிவுடன் வினவு
இறக்கி வை எனச்சொல்லி
உன் தோள்களைக் காட்டு
இளகும் குரலுக்குச் செவி கொடு
அக்கணம் அவளுக்குத் தந்தையாகு
தலை தடவு
உச்சந்தலையில் மச்சமளவு முத்தம் வை

உன் துயரையும் சொல்
அவள் உனக்குத் தாயாகியிருப்பாள்
மடி சாய்
மகிழ்ச்சி பழக்கு
கடல் குளித்து நீர்வழிய எழும் நிலவைப்போல்
உடை வழிய உடல் எழும் ; கண்டு ரசி
மிச்சம் வைத்திருக்கும் முத்தங்களை
தேகத்தில் ஒத்தடமிடு

ஒரேவித உணவு
நாவுக்குச் சலிப்பூட்டும்; புரிந்துகொள்
புதுப்புது உத்திகளில்
புணர்ச்சி விளக்கு
உடற்செல்கள் ஆழ்வுறக்கம் கேட்கும்
அனுமதி கொடு

குருவிகள் விடியலை அறிவிக்கும்
புதியநாள் அழைக்கிறது
புருவமத்தியில் முத்தமிட்டு
இணையை எழுப்பு
பறவையாகு
*
இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

Saturday, 28 October 2017

பேறுகாலம் (18+)

'அடுத்தமுற படுக்க வரட்டும்
மொறத்துலயே அடிக்கிறேன்'
வலி தாளாது
வசை பாடினாள் வள்ளி
'மொத புள்ளைக்கும் இதையே தான் சொன்ன
மூடுடி வாய'
பிரசவம் பார்க்கும்
பெரியக்கா கிழவி சீண்டினாள்


'இது மூணும் போதும்'
திண்ணையிலிருந்து
முனகிக் கொண்டான் முத்தப்பன்
மூன்றுநாட்கள் கடந்த பின்பு
ஆம்படையான்
முக வாட்டம் கண்ட வள்ளி
'புண்ணு ஆறட்டும் பொறுத்துக்க மாமா'
'அது கெடக்குது; ஆயுசுக்கும் காத்திருப்பேன்'
வகிட்டிலொரு முத்தமிட்டான் முத்தப்பன்
அத்தனையையும் மாத்திடுச்சே
அறுத்தெடுக்கும் மருத்துவம்
*
(மீள்: 15/05/2016)

இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

பேறுகாலம் - கோபால் கண்ணன் 

மல்லிகைக்கிழமை

*********************
‘வரும்போது
கால் கிலோ மல்லிகை மொக்கு
வாங்கிட்டு வந்துருங்க' -
அந்திக்குள் வீடு திரும்ப
வேண்டியதன் அவசியத்தை
புறப்படும்போதே பூடகமாகப்
புகுத்திடுவாய் மனத்திற்குள்




மாலை உன் கூந்தலேற
பகலெல்லாம் ‘போது’ஆகும்
மல்லிகையைப்போல்
நாளெல்லாம் நம்மிடையே இவ்
வெள்ளிக்கிழமை மெருகேறும்

மாரியம்மன் கோவில் அருகில்
கடைவிரித்துக் காத்திருப்பாள் பூக்காரி
நரைக்கூந்தல் திருநீற்று நெற்றி
வெள்ளுடை உடுத்தி
வெண்பளிங்கு அம்மன்சிலை போன்று
அமர்ந்து பூ தொடுப்பாள்
பூக்காரி என்றுதான் பொதுவாக அழைப்பர்
நான் பூவம்மா என்றழைப்பேன்

கொடிமல்லிப் பூ வளர்ப்பு
குறைந்துவிட்ட காரணத்தால்
முன்பணம் செலுத்திச் சொல்லி வைப்பேன்

அலுவல் முடித்துத் திரும்புகையில்
பூவுடன் சேர்த்து புன்னகையையும்
பொட்டலமாகக் கட்டிக்கொடுப்பாள்

இரை சேகரித்த தாய்க்குருவிபோல்
விரைந்து வீடடைவேன்
வெட்கத்துடன் பொட்டலம் பிரிப்பாய்

மொக்குகளைத் தரையில் கொட்டி
நூற்கண்டு பிரித்து பூ கட்டத்துவங்குவாய்
எதிரில் அமர்ந்து நான்
இரண்டிரண்டாக எடுத்துப் பிடித்துக்
கொடுக்கக் கொடுக்க
வாங்கி வாங்கி சரம் தொடுப்பாய்

எடுத்துக் கொடுக்கும் விரல் இரண்டும்
என்னுதடுகள்
பிடித்து வாங்கும் விரல் இரண்டும்
உன்னுதடுகள்
அவை நான்கும் பரிமாறிக்கொள்ளும்
மலர் முத்தங்கள்

முத்தச்சரந்தொடுத்தல் முடிந்ததும்
குளித்து வந்து கூந்தல் ஏற்றுவாய்
அதுவரை அடைத்து வைத்திருந்த 
வாசத்தையெல்லாம்
உன் கூந்தலுக்குக் கடத்தியபடி
என்னைப்பார்த்து பழிப்புக்காட்டிச் சிரிக்கும்

என் காத்திருப்பைக் கண்டு
இதோ
அழைத்து வந்துக்கொண்டிருக்கிறேன் 
இரவை
எனக் கட்டியங்கூறி
அந்தி வானம் சிவக்கும்
அங்கம் மெல்ல பூக்கும்
*

இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

மல்லிகைக்கிழமை

Popular Posts