அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து
குறள் 01
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
ஒருவரி குறள் விளக்கம் :
அகரம் பார்த்திபன் : அ.. ஆண்டவன் இரண்டும் முதலே...
பாலாஜி ஐயா : அகரம் எழுத்துக்கும் ஆண்டவன் உலகுக்கும் தொடக்கம்.
கவின்மொழிவர்மன் : அகரத்தின் தொடக்கமே பெற்றவர்கள்!
கவின்மொழிவர்மன் : முதலும் முடிவும் பெற்றோரே உலகு!
முனீஸ்வரன் : தமிழிற்கு அகரம் (முக்கியம்) தலைமைக்கு அவன் ஆதி (முக்கியம்).
பாலாஜி ஐயா : தமிழுக்கு அகரம் ஆதி ; தரணிக்கு அவனே ஆதி
முனீஸ்வரன் : தமிழிற்கு அ , தலைமைக்கு ஆதி.
கவின்மொழிவர்மன் : தமிழுக்கும், தலைமைக்கும் அகரமே ஆதி!
பாலாஜி ஐயா : தலைமைக்கு ஆதியே அகரம்! தமிழுக்கு அகரமே ஆதி!
ரவிசங்கர் பத்மநாதன் : அகராதி உடையவளே அனைத்திற்கும் தொடக்கம்.
(அகரம்+ஆதி+உடையவள்.)
முத்துகிருஷ்ணன் : பெற்றோரே எல்லோர் பிறப்பிற்கும் முன்.
சிகரம் பாரதி : மொழிகளின் சிகரம் 'அ'கரம். அகரத்தின் சிகரம் ஆதி சிவன்!
சிவரஞ்சனி : உலகிற்கு இறைவன் முதன்மையாக இருப்பதைப் போல எழுத்துக்கு முதன்மை 'அ'கரம்.
ஜெயபிரகாஷ் : "அ"கரமும் ஆதியும் உலகிற்கு முதன்மையானவர்கள்
குறள் 02
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
ஒருவரி குறள் விளக்கம் :
சிவரஞ்சனி : மூத்தோர்களைப் பணியாத ஒருவன் எவ்வளவு கற்றவனாக இருந்தாலும் அந்தக் கல்வியினால் பயனில்லை
ரவிசங்கர் பத்மநாதன் : கலம் கரைசேர கலங்கரையை கலப்பவனே கலபதி.
முனீஸ்வரன் : கற்றோரை மதி என்பதை கல்.
சிவதேவன் : மதியுள்ளோரை மதிக்காதவன் கற்றும் வீண்.
விஜயா : சான்றோரை மதிக்காதவன் சான்றிதழ் பெற்றும் வீண்.
பாலாஜி ஐயா : அடக்கமே அறிவு. பணிவின்றேல் பயனற்றது கல்வி.
பாலாஜி ஐயா : அடக்கமற்ற கல்வி அமைந்தென்ன பயன்?
கிருத்திகா : பணிவற்ற கல்வி வீண்
ரவிசங்கர் பத்மநாதன் : பணிவும் கல்வியும் முடிவில் கீர்த்தியில்.
கவின்மொழிவர்மன் : ஞானியானாலும் அறிஞர்களிடம் பணிவு வேண்டும்
கவின்மொழிவர்மன் : மேதையெனினும் பெரியோர்களை மதி
சிகரம் : பணிவுடையாரின் கல்வியே வாழ்க்கைக்கு பயன் தருவதாகும். மற்றதெல்லாம் ஏட்டுக்கல்வி மட்டுமே!
குறள் 03
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
ஒருவரி குறள் விளக்கம் :
ரவிசங்கர் பத்மநாதன் : மலர் மனம் உறையும் இறையை உறைவோர் இறப்பதில்லை..
ஜெயபிரகாஷ் : மலர் மனம் போல் புகழுடையோர் உடலளவில் இறந்தாலும் மனதளவில் உலகம் உள்ளவரை வாழ்வார்
விஜயா : கடவுளை நம்பினோர் கை விடப்படமாட்டார்
சதீஷ் விவேகா : அன்பு கொண்ட நெஞ்சத்தார் இறந்தும் வாழ்வார்கள்.
சதீஷ் விவேகா : அன்பே சிவமாய் இறைவன் பாதம் பணிந்தோர் இறந்தும் வாழ்வார்கள்
மனோ நிலவன் : அகமே சிவம் என உணர்ந்தோர்க்கு அழிவு இல்லை
ஜெயபிரகாஷ் : மலர்மிசையுடையோர் நிலமிசை நீடு வாழ்வார்
சிவதேவன் : வையத்தில் புகழோடு வாழ சான்றோரை பின்தொடர்
கவின்மொழிவர்மன் : மலர்மனம் பற்று, புகழ் சிறக்கும் முடிவற்று.
முனீஸ்வரன் : அன்பே இறை, உணர்ந்தவர் நீடு வாழ்வர்
குறள் 04
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
ஒருவரி குறள் விளக்கம் :
சிவதேவன் : தன்னலமின்றி வாழ்வோர்க்கு துன்பம் வரா
விஜயா : சுயநலமற்றவர் சுகமாய் வாழ்வார்
சிகரம் பாரதி : அன்புடையாரை பின்பற்றுதலே வாழ்வின் அறமாகும்.
முனீஸ்வரன் : பற்றற்றவனை பணிந்தால் துன்பம் இல்லை.
சதீஷ் விவேகா : தன்னலம் அற்றவனுக்கு துன்பம் இல்லை
சதீஷ் விவேகா : சுயநலம் அற்றவன் சுகமாய் வாழ்வான்
கார்த்திக் : விருப்பு வெறுப்பு அறுப்பின் துன்பம் இல்லை வாழ்வில்.
பாலாஜி : பற்றற்றானைப் பற்றினால் பாடுகள் இல்லை !
ஜெயபிரகாஷ் : உலகை உணர்ந்தவர் கோபப்படமாட்டார். தன்னை உணர்ந்தவர் துன்பப்படமாட்டார்.
கவின்மொழிவர்மன் : பிறர்நலம் பேணு, துன்பப்பிணி தொடரா!
குறள் 05
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
ஒருவரி குறள் விளக்கம் :
சதீஷ் விவேகா : கடவுளை அறிந்தவனுக்கு மகிழ்ச்சி சோகம் இரண்டும் ஒன்றே
சதீஷ் விவேகா : அனைத்தும் அவனென்று உணர எப்பிணியும் அண்டா
மனோ நிலவன் : இறைப்பற்று இருக்க இதர பற்று இல
கார்த்திகேயன் ரமணி : இறை அறிந்தோரை இருவினையும் தீண்டா.
கவின்மொழிவர்மன் : வீடுபேறு விரும்பின் இருவினை தீண்டா!
சிகரம் பாரதி : அன்புடையாரை எவ்வினையும் அண்டாது!
முனீஸ்வரன் : இருவினை விலக இறை நிலை உணர்
குறள் 06
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
ஒருவரி குறள் விளக்கம் :
சிகரம் பாரதி : ஐம்பொறி அடக்கினால் நீடூழி வாழ்வாய்!
கிருத்திகா : இறையொழுக்கம் தவறாதிருப்பின் நல்வாழ்வது நிலைபெறும்
பாலாஜி ஐயா : இறைபுகழ் பாடு இருவினை ஓட்டு!
பாலாஜி ஐயா : ஆசையவித்தவன் அறவழிநிற்க!
முனீஸ்வரன்: ஐம்புலன் அடக்க மக்கள் அகத்தினில் வாழலாம்.
குறள் 07
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
ஒருவரி குறள் விளக்கம் :
கவின்மொழிவர்மன் : இறைவனடியே மனக்கவலை தீர்க்கும் மருந்து.
மனோநிலவன் : கடவுளின் காலடி பற்றின் கவலைகள் இல
கார்த்திகேயன் : மனக்கவலை அறுக்க மாசற்றார் தாள் சேர்தல் நலம்.
முனீஸ்வரன் : இணையற்ற சான்றோரை பின்பற்றின் இல்லை கவலை
பாலாஜி ஐயா : இணையற்றோன் தாள் நினைந்து இகத்தினை மற !
குறள் 08
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
ஒருவரி குறள் விளக்கம் :
கவின்மொழிவர்மன் : பிறவாமை வேண்டின் இறையின் தாழ் பணி!
கிருத்திகா : முக்தி பெற ஐயடி சேர்
பாலாஜி ஐயா : அறக்கடலாம் இறைதுணையில் பிற கடலைத் தாண்டு!
ரவிசங்கர் பத்மநாதன் : அறக்கடல் அருளிருந்தால் கடற்கோளில் கூட நீச்சல் போடலாம்.
பவானி : இறையடி பற்றினால் எக்கடலும் கடக்கலாம்
முனீஸ்வரன் : பெரியோரை பணிந்தால் பயனுறும் பிறவிப் பயணம்
குறள் 09
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
ஒருவரி குறள் விளக்கம் :
கார்த்திகேயன் : ஆதியை வணங்கானுக்கு ஐம்பொறி இருந்தும் பலன் இல்லா நிலை.
முனீஸ்வரன் : எண்குண சான்றோரை வணங்கா நிலை சவமே.
ரவிசங்கர் பத்மநாதன் : பொறிகளும் பொய்த்தது போல் தான் படைத்தவனை பணியா விட்டால்.
பாலாஜி ஐயா : தலையே நீ வணங்கு தன்மைக ளற்றானை !
தன்மைகளற்றானைத் தலைவணங்கு!
கிருத்திகா : வாழ்வு பயனுற இறைதாள் பணி
சதீஷ் விவேகா : கடவுளை வணங்காமுடி இருந்தும் பயனில்லை
கவின்மொழிவர்மன் : எண்குணத்தானை வணங்காத்தலை வீண்!
சிகரம் பாரதி : ஐம்பொறிகளும் இணைந்து ஆற்றும் எட்டு குணங்களையும் பெறாதவனுக்கு ஐம்பொறிகளும் இல்லாதிருப்பதே மேல்!
குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
ஒருவரி குறள் விளக்கம் :
கவின்மொழிவர்மன் : இறையடி பணிபவர் வீடுபேறு அடைவர்!
பாலாஜி ஐயா : பேராளன் தாள்நினைந்து பிறவித் தளை நீக்கு!
மனோநிலவன் : பிறவி வேண்டாவெனில் இறையை வேண்டு.
கிருத்திகா : இறையை பணிந்தே பிறவியறுப்பாயே.
கவின்மொழிவர்மன் : பிறப்பறுக்க இறையடி சேர்!
//இத்தொகுப்பு தமிழ்கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவின் முயற்சியாகும். தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவுக்காக தொகுத்தளித்தவர் தோழர் முனீஸ்வரன் அவர்கள்.//
No comments:
Post a Comment