Sunday 6 August 2017

களவு போன கனவுகள் - 02



களவு போன கனவுகள்

வளமை கொழிக்கின்ற வளநாடு !
உழைப்பே உயர்வென்னும்
உண்மைக் கொள்கையிலே
உழைத்து வளம் பெருக்கி,
உள்ளம் மகிழ்வெய்த
உதவும் மனம்கொண்டு,
உருக்கும் நோயின்றி,
வாழ்வாங்கு வாழுகின்ற,
வள மைந்தர் வாழுகின்ற,
வளமை கொழிக்கின்ற வளநாடு !
வசந்தம் வந்தாலும்,
வாடைக்குப் பின் நாடிவரும்
கோடை வந்தாலும்,
அது
விரைவில் விலகாது !



என் இளமையின் இருக்கைகள் !
இதயம் மலர்ந்து இறகுகள்விரித்தே நான்
எங்கும் பறந்து சென்ற
இனிமைக் காலங்கள் !
இனிமேல் வாராத
இளமைக் காலங்கள் !
பச்சைப் படர் விரித்த
பசுமைப் புல்வெளியில்
எத்தனை முறைகள் நான்
இயைந்து நடந்திருப்பேன் !
எத்தனை கவிதைகள்
எழுதி மகிழ்ந்திருப்பேன் !

அழகுப் பொழிலோரம் ! அருமைச் சூழலது !
ஆங்கே-
உயர்ந்து நின்ற குன்றதுவும்,
குன்றின்மேல் குடிகொண்ட கோயிலதும்,
கோலக் கிளிகள்மிகு சோலையதும்,
சோலைக் கடுத்திருந்த ஆலையதும்…………… !

   இன்னும் ஏடறியா எத்தனையோ
   காட்சிகளும்,
   எந்தன் கண்களிலே
   நிழற்படமாய் இன்று
   நிலவி வரும் !

மாலை வேளையிலே, மாஞ்சோலை நிழலினிலே
மயக்கம் குடிகொண்ட விழிகளினோர் விளையாட்டில்,
தமைமறந்தே நிற்கின்ற காதலர்கள் !
அவர்தம்
விழிவீச்சில் சிந்துகின்ற
சிரிப்புச் சிதறல்கள் !
இளமையின் விளையாட்டை
ஒளிந்திருந்தே நோக்கும்
முதுகெலும்பற்ற சில முதுமைகள் !
   இன்னும்
   ஏடறியா எத்தனையோ காட்சிகளும்
   எந்தன் கண்களிலே
   நிழற்படமாய் இன்று நிலவிவரும் !
   ஆம் !
   இவை நிழலாகி விட்டசில
   நிஜங்களின் முன்னுருவம் !

இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
                                                                                               கனவுகள் தொடரும்....

No comments:

Post a Comment

Popular Posts