ஆகஸ்ட் 24-ம் தேதி நாளை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை ரசிகர்கள் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற விடாமல் சிறிது நேரம் தடுத்து நிறுத்தி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். காரணம் ஆரம்பத் துடுப்பாட்டம் குறிப்பிடத்தக்க அளவு காணப்பட்ட போதிலும் மத்திய மற்றும் பின் வரிசை வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இலங்கை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு இரண்டாவது போட்டியிலேனும் பிரகாசிக்குமா என்பது கேள்விக்குறியே.
2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி இடம்பெறவுள்ளது. இதில் பங்கு பெறும் அணிகளைத் தேர்வு செய்யும் காலகட்டத்தில் ஒருவருட காலப் பகுதிக்குள் முதல் ஏழு இடங்களைப் பெறும் அணிகளுடன் போட்டியை நடத்தும் நாடும் நேரடியாகத் தேர்வு பெறும். 30.09.2017 அன்று சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தலின் படி குறிப்பிட்ட தரவரிசைப் பட்டியலுக்குள் இடம்பெறும் அணிகளே உலகக் கிண்ணத்துக்குத் தேர்வாகும். ஏற்கனவே ஏழு அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் எட்டாவது இடத்தைப் பிடிக்கும் அணி உலகக் கிண்ணத்துக்கு தேர்வாகவுள்ளது. இலங்கை அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இதற்கான போட்டியில் உள்ளன.
இலங்கை எட்டாம் இடத்திலும் மே.இ.தீவுகள் ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. இலங்கை இத்தொடரின் எல்லாப் போட்டிகளிலும் தோற்று மே.இ.தீவுகள் இங்கிலாந்துக்கெதிரான எல்லாப் போட்டிகளிலும் வென்றால் மே.இ.தீவுகள் உலகக் கிண்ணத்துக்கு நேரடித் தகுதி பெறும். இலங்கை இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்றாலே உலகக் கிண்ணத்துக்கான நேரடித் தகுதி கிடைத்துவிடும். உலகக் கிண்ணத்தில் பத்து அணிகள் பங்குபற்றவுள்ளன. ஏழு அணிகள் தரவரிசைப் பட்டியலில் இருந்தும் ஒரு அணி போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையிலும் மிகுதி இரண்டு அணிகள் 2018 இல் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டிகளில் இருந்தும் தேர்வாகும்.
இலங்கை அணி கிடைத்துள்ள வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது தவறவிடுமா என்பது நாளை தெரியவரும். இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஓரளவுக்கு பலமுள்ளதாக இருந்தாலும் பந்து வீச்சு பலவீனமானதாகவே உள்ளது. விக்கெட்டுகளைக் கைப்பற்றாவிட்டாலும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். களத்தடுப்பிலும் பல்வேறு குறைகள் காணப்படுகின்றன. முதலாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. அணியில் காணப்படும் சிறுசிறு குறைகளைத் திருத்திக் கொண்டால் வெற்றி நிச்சயமே.
இலங்கை ( எதிர்பார்க்கப்படும் ) அணி :
01. நிரோஷன் திக்வெல்ல ( விக்கெட் காப்பாளர் )
02. தனுஷ்க குணதிலக்க
03. குஷல் மெண்டிஸ்
04. உபுல் தரங்க ( தலைவர் )
05. அஞ்சலோ மெத்யூஸ்
06. சாமர கப்புகெதர
07. மிலிந்த சிறிவர்தன
08. வணிந்து ஹசரங்க
09. அகில தனஞ்சய
10. லசித் மலிங்க
11. விஷ்வா பெர்னாண்டோ
இந்தியா ( எதிர்பார்க்கப்படும் ) அணி :
01.ரோஹித் ஷர்மா
02. ஷிக்கர் தவான்
03. விராட் கோலி ( தலைவர் )
04. கே எல் ராகுல்
05. மகேந்திர சிங் தோனி ( விக்கெட் காப்பாளர் )
06. கேதர் ஜாதவ்
07. ஹர்திக் பாண்டியா
08. ஆக்ஸர் பட்டேல்
09. யூஷ்வேந்திர சஹல்
10. புவனேஸ்வர் குமார்
11. ஜஸ்பிரிட் பும்ரா
அணி விபரங்களில் மாற்றம் இருக்கலாம். ஆனால் வெற்றிக் கனவில் மாற்றம் இருக்காது என்று நம்புவோம். தொடரை வெல்ல வேண்டும் என்பதை விடவும் உலகக் கிண்ணப் போட்டிக்கேனும் இலங்கை அணி நேரடித் தகுதி பெற்றுவிட வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
No comments:
Post a Comment