Thursday 16 March 2017

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 3

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் மூன்றாம் பகுதி உங்களுக்காக இங்கே:

முதலாம் பகுதி:


இரண்டாம் பகுதி:


மூன்றாம் பகுதி : 

சிகரம் பாரதி : தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை கண்டறிந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி அவசியமானவற்றை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மழை இயற்கை. எல்லோருக்கும் பொதுவானது. மொழி செயற்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டது. அதில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதில் தவறில்லை.

முனீஸ்வரன் : நானும் ஏற்கிறேன் ஏற்கனவே கலந்த சொற்களை மாற்ற முயற்சிப்பது முடியாது இனி கலக்காமல் தடுக்க முயல்வதே நன்று.

மாற்றம் என்பதை நிறைய பேர் தவறாக நினைக்கிறார்கள். சொல்லுங்க மாற்றம் என்றால் என்ன?

சிகரம் பாரதி : அம்மா என்பது இலகுவானது. ஆகவே மம்மியை நிராகரித்து விடலாம். மேலும் மம்மி எனும் சொல் அறுபது எழுபது ஆண்டுகள் நம்மோடு பயன்பாட்டில் இருந்ததல்ல. பயன்பாட்டில் சொல் இருந்த காலத்தையும் கவனத்திற் கொள்ளலாம்.

ஜெகஜோதி : வளர்ச்சி என்பது வேறு தனித்துவம் எனபது வேறு. தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்டது. புதுப்பித்துக்கும் வழி கொண்டது.

முனீஸ்வரன் :  இன்னும் 20 வருடங்கள் கழித்து மம்மி வழக்கு சொல்லாகிவிட்டால்.?

சிகரம் பாரதி : ஐந்தாம் தமிழ்ச்சங்கம் உருவாக வேண்டும். தமிழை வளப்படுத்த வேண்டும்.

ஜெகஜோதி : நம் தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள அனைத்து கடவுள்களின் பெயரையும் பாருங்கள். சமஸ்கிருதத்தின் மீது வைத்திருந்த மரியாதையா இல்லை தமிழில் பெயர் இல்லையா ?

கவின்மொழிவர்மன் : சமஸ்கிருதம் தமிழின்  உட்பிரிவாக்கூட இருக்கலாம், பிராமி,தமிழி போல.

சிகரம் பாரதி : மொழி பயன்பாட்டுக்கு கடினமாக இருந்தால் இவ்வாறான அபத்தங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது.இது. கோவில்களில் மந்திரங்களை தமிழில் ஓதச்செய்ய வேண்டும்

முனீஸ்வரன் :  ம் இல்லை நண்பா, அம்மா ஒன்றும் பயன்பாட்டிற்கு சிரமாக இல்லையே பின் ஏன்?

ஜெகஜோதி : அறியாமை, தாழ்வு மனப்பான்மை,

சிகரம் பாரதி : ஆங்கிலம் பல இடங்களிலும் பயன்பாட்டு மொழியாக இருக்கிறது. அலுவலகம் , பாடசாலை போன்ற இடங்களில். இதைச் சரி செய்தால் இவ்வாறான சொற்களை தமிழில் பயன்படுத்த பழகிவிடுவார்கள்.

முனீஸ்வரன் : பாடதிட்டங்களில் மாற்றம் வேண்டும்

ஜெகஜோதி : திரைத் துறை ஒரு முக்கிய காரணம்.

கவின்மொழிவர்மன் : ஐயா அம்மா என்பதே சீன மொழியில் மம்மா,பப்பா, வேறு மொழிகளில் அம்மே,மாதா, இப்படி பலவற்றில் தமிழோடு இயைந்தே வருகின்றன.

சிகரம் பாரதி : மேலும் பாமர மக்கள் ஆங்கிலக் கல்வியையே விரும்புகின்றனர். காரணம் ஆங்கிலத்தில் கற்றால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலை.

சக்தி : சமஸ்கிருதம் உட்பிரிவு இல்லை தமிழுக்கு சமமான மொழி

முனீஸ்வரன் : அடிப்படையில் மாற்றம் வேண்டும்

சிகரம் பாரதி : திரைத்துறையை திருத்த ரசிகர்கள் தயாராக இல்லை.

ஜெகஜோதி : ரசிகர்கள் ஏன் திருத்த வேண்டும். நடிப்பது தமிழ் மொழியில் . அவர்கள் தான் திருந்த வேண்டும்.

சங்கி : திரைத்துறையை தாக்குவது ஏன்🤔 அதிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த எத்தனையோ பேரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் தோழா.

கார்த்திகேயன் ரமணி : இல்லை !! திரைப்படம் நிறைய உள்ளன மேற்கோள் காட்ட!! அதே போல் எதிர்ப்பும் இருக்க தான்.....இருக்கு.

சிகரம் பாரதி : அதை நாம் ரசிக்கிறோம். அவர்களைக் கொண்டாடுகிறோம். பின் எப்படி அவர்கள் திருந்துவார்கள்?

சங்கி : அது ஒரு பொழுதுபோக்குத் துறை. அதை கட்டுப்படுத்துவது மிகக்கடினம். அதில் இருக்கும் தமிழ் பற்று உடையவர்களை மக்கள் தான் தூக்கி வைக்க வேண்டும்.  மக்கள் ரசிக்கும்...அதிகமாக செல்லும் படங்கள் தான்... இயக்குனர்கள் தான் வெற்றி பெறுகின்றனர்.

ஜெகஜோதி : இருக்கலாம் தோழி. ஆனால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம் . நம் ஊர் முதலவர்களை பார்த்தால் உங்களுக்கே புரியும். சில இல்லை இல்லை பல  நடிகர் நடிகைகள் பேட்டி கொடுக்கும் போது பாருங்கள். எனக்கு அப்படியே கோவம் வரும்.

கவின்மொழிவர்மன் : எவ்வளவோ உண்டு எடுத்துரைக்க!
இங்கு  அதை கூறின் பலருண்டு மறுத்துரைக்க!
அதனால் நான் வரவில்லை கருத்துரைக்க,!
எவருளரோ எம் தமிழை பிறவற்றிலிருந்து பிரித்துரைக்க!

பாலகுமரன் : அம்மா வழக்கில் உள்ளது எனவே மம்மி வேண்டாம். ஆனால் குளம்பி வழக்கில் இல்லை எனவே காபி ஏற்போம்.

கவின்மொழிவர்மன் : குளம்பி என்றால் வீட்டுல சேர்த்துக்கமாட்டாங்களா?

ஜெகஜோதி : தனி ஒருவன் திருந்துவது  எளிதா? தனி மனிதர்கள் சேர்ந்ததே சமூகம். தனி ஒருவன் திருந்தினால் வழி வழியாக சமூகம் திருந்தும்.

பாலகுமரன் : வழக்கில் உள்ளதை மாற்றி எல்லோரும் ஏற்கும் படி குளம்பி ஆக்க  முடியுமா?

முனீஸ்வரன் : காபி யை குழம்பியாக ஏற்க நானும் மறுக்கிறேன். ஆனால் இதே நிலை நாளை அம்மாவிற்கும் வந்துவிட கூடாது என்கிறேன்.

சங்கி : சரி தான் தோழா. திரைத் துறை பெரியது.... பரப்பளவு பெரியது. நடிகைகள்..உண்மை  தான். ஆனால் இப்பொழுது...குறும் படங்கள், இணையத்தள ஒளிக்கோப்புகள் (online videos) மிகவும் பிரபலமாகி வருகின்றன...இனி வருவோர் தமிழ் பற்றியும், மொழியை கெடுக்காமலும் நிறைய செய்யலாம். இருப்பதை திருத்துவது கடினம். தமிழ் படத்தில் நடிக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என திடமான முறை வரும் வரை.

கார்த்திகேயன் ரமணி : பட தயாரிப்பு மற்றும் இயக்குநர் கையாளும் விதத்தில் உள்ளது.

ஜெகஜோதி : துறை பெரியது, உண்மை.  சோறு போடும் மொழிக்கு துரோகம் செய்யும் முன் யோசிக்க வேண்டும்.

சங்கி : நிச்சயம். பல பேர் அறியாத விஷயம். அதுவும் ஓரு மிகப்பெரிய வணிக துறை. கலை துறை என்பது பேச்சுக்கு. சிலர் மட்டும் அந்த நோக்கத்துடன் இருக்கிறார்கள். சிலர் சில சமயம் இருக்கிறார்கள். மற்ற படி முழுமையாக அப்படி இருக்க சாத்தியம் இல்லை.

பாலகுமரன் : தமிழ் நாட்டில் பிறந்தவர்களே சுலபமாக மதிப்பெண்கள் பெற வேண்டுமென தமிழை தேர்வு செய்யாமல் ஒதுக்கிவிடுவது என்ன நியாயம்?

விவாதம் தொடரும்...

Wednesday 15 March 2017

கவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு

பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர்  கவியரசர் கண்ணதாசன்!  அவரது அசரவைக்கும் வரிகளைப்  படித்து அதன் எளிமையில் ஆழ்ந்து போன நாட்கள் கணக்கிலடங்கா ! சில பாடல்களைப் படிக்கும்போது அழகான ஒன்றிரண்டு பழஞ்சொல்லோ, பாடல் வரியோ,  கவிதை நயமோ, காப்பியநயமோ நமது நினைவுக்கு வராமல் போகாது! அது கவிஞர்களுக்கே உரித்தான பெருமை! சலுகையும் கூட ! ஆனால் அந்த வரிகளை எந்த அளவுக்கு மேலும் மெருகும், அழகும், எளிமையும், ஏற்றமும் கூட்டிப் படைக்க  அவனால் இயல்கிறது என்பதே கவியின் சிறப்பு!  அந்த வகையில் கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சில, எந்தெந்தப் பழைய வரிகளை நினைவூட்டுகிறது, அந்தப் பழைய பெட்டகத்துக்கு மேலும் எந்த அளவுக்கு அவர் எளிமையும் ஏற்றமும் அளித்து நமக்குத் தருகிறார் என்பதை அலசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். அல்லாது, கவியரசர் திறமையை எந்த வகையிலும் எள்ளுவதோ குறைப்படுத்துவதோ கிடையாது  எமது எண்ணம்!  நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்தத் தொடரை நேயர்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்!

1.  "நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ" 


படம்: வாழ்க்கைப் படகு
பாடகர்: பி.பி.ஸ்ரீநிவாஸ்

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே                (நேற்று)

உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே 
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே 
நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்       (நேற்று)

பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே  கனவோ  என்று  வாடினேன்  தனியே நின்று 
வண்டு  போல்  வந்தாய்  இன்று  மயங்கினேன்  உன்னைக்  கண்டு
                                                                                                        (நேற்று)

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே   

இந்த அருமையான வரிகளைப் படித்தால் மயங்காதவர் யாருளரோ? காதலன், தனக்கும் தன் காதலிக்கும் உண்டான உறவையும் நட்பையும் குறித்து மனம் வியந்து போற்றுகிறான் ! அன்பு கலந்த நெஞ்சங்களின் பிணைப்பைக் கண்டு வியக்கிறான் ! 'நாம் ஒருவரை ஒருவர் கண்டவுடன் நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும் ஆகிவிட்டோம்' என்கிறான்! இந்த அழகான வரிகளைப் படிக்கும்போது, ஒரு ஒப்புமைக்குக் 'குறுந்தொகை' கை கொடுக்கிறது.

"யாயும்  ஞாயும்  யார்  ஆகியரோ
எந்தையும்  நுந்தையும்  எம்முறைக் கேளிர்
யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்
செம்புலப்  பெயல்நீர்  போல
அன்புடை  நெஞ்சம் தாம்கலந் தனவே!"

இதன் பொருள் :
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே !

இதே கருத்தைத்தான் கவியரசர் மிக எளிமையாகக் கையாண்டிருக்கிறார் ! 'செம்மண்ணில் நீர்கலந்தாற்போல்' என்ற உவமையை, 'கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே' என்று அவர்தம்  உள்ளம் கலந்து விட்டதைக் குறிப்பிட்டு விட்டார். 

அடுத்தாற்போல், கீழ்க்கண்ட வரிகளைப் பாருங்கள் !

"உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
 விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே"

திருக்குறள் காமத்துப்பாலில் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள குறளை மேலும் எளிமைப்படுத்திக் கவியரசர் கூறியுள்ளது விளங்கும்.

குறள் :
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

இதற்கு மு.வரதராசனார் அவர்களின்  உரை :

'யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கிமெல்லத் தனக்குள் மகிழ்வாள்'

'நோக்காக்கால்' என்ற சொல்லை நகர்த்தி, எதுகை மோனை பிறழாமலிருக்க, 'விண்ணை நான் பார்க்கும்போது' என்று பாங்குறச் சொல்லியிருக்கிறார் ! அனைத்தையும் விட, இந்தக் கருத்தை மேலும் செம்மைப்படுத்தி அடுத்த இரண்டு வரிகளைக் கொடுத்துள்ள அழகே அழகு ! 
"நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்!"

அவள்மேல் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டும் விதத்தில் 'நேரிலே பார்த்துவிட்டால் நிலவு தேய்ந்து போகுமா, பூமுகம் சிவந்து போகுமா' என்றும் கேட்டு விடுகிறான் !

இறுதி நான்கு வரிகள் பேரழகு. மென்மேலும் கவிதையைச் செம்மைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. '

'உன் முகத்தையும் பார்த்தேன் தாமரை மலரையும் பார்த்தேன் கொவ்வையிதழையும் பார்த்தேன் குங்குமச் சிமிழையும் பார்த்தேன்' என்கிறான். 'உன்முன்னால் அவற்றின் சிறப்புக்கு மதிப்பில்லை' என்னும் விதத்தில். 'ஒருவேளை நான் கண்டது கனவோ என்று திகைத்து நிற்குங்காலை மலரைச் சுற்றும் வண்டைப்போல் நீ என்னைச் சுற்றி வந்து நின்றாய்'  என்று சொல்லி மகிழ்கிறான் !

இத்தனை அழகான ஒரு காதலை இவ்வளவு நேர்த்தியாக வேறு எந்தக் கவிஞனால் எழுதிவிட முடியும் ?

--கி.பாலாஜி

Saturday 11 March 2017

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 2

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் இரண்டாம் பகுதி உங்களுக்காக இங்கே:
 
முதலாம் பகுதி:
 

இரண்டாம் பகுதி:

ஜெகஜோதி : குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டிய நிலையில் தமிழ் இல்லை. உலக அரங்குக்கு அதை எடுத்து செல்வது நம் பணி, நமது அரசின் பணி. தூய தமிழ் மற்றும் எளிய தமிழ் வேண்டும் . ஆனால் பிறமொழி கலந்துதான் தமிழ் மொழி நிலை நிறுத்தப் பட வேண்டுமா?.  உலக மொழிகளுக்கெல்லாம் தாய் எம் மொழி .

பாலகுமரன் : பிறமொழி கலந்து என்று பொதுவாகக் கருதாமல் ஆண்டாண்டு காலமாக எம் தமிழ் மக்களின் நாவில், வாழ்வில் உணர்வில் கலந்து விட்ட சொற்களைப் பாருங்கள்... எம் தமிழர் பேசி பழகிவிட்ட  சொற்களை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயக்கம்? எம் தமிழர் புரிந்து கொள்ள முடியாத சொல்லை பேசுவானேன் ? மொழியே நம் கருத்தைத் தெளிவாகக் கூறத்தானே... காபி என்பதே எல்லா தமிழருக்கும் புரியும்.. பலருக்கும் புரியாத குளம்பி என குழப்புவானேன்...?

உண்மையில் தொல்காப்பியமும் நன்னூலும் எனக்கு புரியவில்லை.. விதிகளே புரியாததை வைத்துக் கொண்டு எம் தமிழில் அனைத்தும் உண்டென பழம் பெருமை நமக்குள் மட்டும் தான் பேசலாம் .. அதுவும் இக்குழுவில் உள்ளவர் போன்ற சில தமிழ் அன்பர்களிடம் ....

ஜெகஜோதி : இருக்கட்டும் காப்பி போன்ற பெயர் சொற்களுக்கு மாற்று தேவையில்லை அய்யா. ஆனால் இரவு என்று அழகு தமிழ் வார்த்தை இருக்கும் போது ராத்திரி என்றும், உழவு, உழவன் என்று இருக்கும் போது விவசாயி தேவையா?. சரி என்று இருக்கும் போது ஓகே தேவையா? புதிய சொற்கள் தேவை. இருப்பினும் பழைய நற்சொற்கள் மக்களிடம் மீண்டும் வர வேண்டும். இதுவே எனது கருத்து.

பாலகுமரன் : விவசாயி தமிழ் இல்லை என எந்த ஆதாரங்களை வைத்துக் கூறுகிறீர்கள்? அப்படியெனில் தமிழர்களின் வழக்கில் இச்சொல் எப்படி வந்தது? பழந்தமிழ் நூல்களில் நாம் பேசியறியாத சொற்கள் பல உள்ளன. அது போலவே நாம் பேசி வரும் சொற்களும் பழந்தமிழ் நூல்களில் இல்லாமல் இருக்கலாம்.
 
பார்த்திபன் : உழவன் தான் தமிழ்ச்சொல்
 
வெற்றிவேல் : தாடை மயிர் - தாடி - இதற்கு இணையாக பிடரி மயிர் எனப் பயன்படுத்தலாம். ஆனால் மயிர் என்ற அழகான சொல் இன்று அறவறுக்கத்தக்க சொல்லாக மாறிவிட்டதே! 

பார்த்திபன் : Know your English என்று the Hindu வில் ஒரு பகுதி வரும். இதில் கடைசியில் modern day English users எப்படி பேசுகிறார்கள் என்பதும் சேர்ந்தே தான் வரும்.. அது போலவே தற்காலத் தமிழன் பேசி வரும் தமிழும் ஏற்கப்படத் தான் வேண்டும்.

ஜெகஜோதி : விவசாயி தமிழ் வார்த்தை இல்லை. செம்மொழி வழக்கு வாதத்தில் இந்த வார்த்தையை வைத்தே தமிழ் பிற மொழி உதவியோடு இயங்குவது  போல் வாதாடப்பட்டது. நீதிபதி அவர்கள் தமிழில் உழவன் எனும் வார்த்தை இருப்பதாக எடுத்து கூறினார். இது போன்ற ஆபத்து நேரும் என்று தான் பிறமொழி கலப்பு தேவை இல்லை என்று கூறுகிறேன்.
 
முனீஸ்வரன் : அடையாளப்பெயரை தமிழாக்கம் செய்ய தேவையில்லை. அது நன்றாக இருக்காது. ஆனால் பழகிவிட்டோம் என மொழி கலப்பை ஏற்க முடியாது. ஆங்கிலம் மற்ற மொழிகளோடு கலந்ததால் தான் உலகம் முழுவதும் பரவியது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. இன்றைய ஆங்கிலத்தை பார்த்தாலே அது எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது புரியும். உதாரணமாக (sister-sis, aunty-ant, brother-bro,) இந்த நிலை தமிழிற்கு வரக்கூடாது என்பதற்காக தான் பிறமொழி கலக்காமல் பேச,எழுத கற்க வேண்டும். அடுத்து என்னை கேட்கலாம் பிறமொழி கலப்பு இல்லாமல் என்னால் பேச முடியுமா என...  உண்மையில் தற்போது என்னால் முடியாது. முயன்று வருகிறேன். 

சிகரம் பாரதி : தமிழுக்கு ஏற்ற சொற்களை தமிழோடு இணைத்துக்கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. மொழியானது நம் எண்ணங்களை வெளிப்படுத்த உதவியாக இருக்க வேண்டுமே தவிர உபத்திரவமாக இருக்கக் கூடாது.

முனீஸ்வரன் : செந்தமிழ் செப்ப வேண்டாம். பைந்தமிழ் பழகலாம். உண்மையில் பைந்தமிழின் பல சொற்கள், மற்ற மொழிகளில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. உதாரணம்(தெலுங்கு-செப்பு,மலையாளம்-நோக்கு) அவர்கள் வாழ்வியலோடு இந்த வார்த்தைகள் உள்ளது.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

வள்ளுவன்,கம்பன் தந்த வார்த்தைகள் தான் இவை.

ஆனால் அந்த வார்த்தையை தந்த நாம் அதை வழக்கொழித்துவிட்டோம். இதைப்போல் பழகிவிட்டோம் “மம்மி” என்று. அதனால் அதையும் தமிழாக அங்கீகரிக்க வேண்டும் என்று சொன்னால் ஏற்க முடியுமா?

முனீஸ்வரன் : மொழியை உபத்திரவமாக நாம் எண்ணாத வரை அப்படி இருக்காது. மழை உபத்திரவம் தான் உப்பு விற்பவனுக்கு. அது மழையின் குற்றமல்ல.

சிகரம் பாரதி : தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை கண்டறிந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி அவசியமானவற்றை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மழை இயற்கை. எல்லோருக்கும் பொதுவானது. மொழி செயற்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டது. அதில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதில் தவறில்லை.

விவாதம் தொடரும்...

Friday 10 March 2017

யார் அவன்?

அழகின் உருவம் அவன்
ஆள்வதில் வல்லவன் அவன்
இன்சொல் வர்மன் அவன்
ஈகையிற் சிறந்தோன் அவன்
உயர்ந்த மனிதன் அவன்
ஊர்பல வென்றான் அவன்
எதிரிக்கு யமன் அவன்
ஏசி அறியான் அவன்
ஐக்கெலாம் ஐ அவன்
ஒப்பில்லா அன்பினன் அவன்
ஓம்நமசிவாய என்பான் அவன்

யார் அவன்?
காலங்கள் கடந்து நிற்கும்
இராஜராஜேஸ்வரம் அமைத்தவன் அவன்...
குந்தவையின் அன்பு தம்பி அவன்...
இராஜராஜ சோழன் எனும்
அருண்மொழிவர்மன் தான் அவன்

......கீர்த்தீ ........
( கிருத்திகா )

Monday 6 March 2017

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 1

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய தலைப்பின் கீழான விவாதத்தின் தொகுப்பு உங்களுக்காக இங்கே:

தமிழ் கூறும் நல்லுலகம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் இருபத்தியோராம் நாள் விவாதத்திற்காக வழங்கப்படும் தலைப்பு : தமிழ் மொழி - இன்றும் - நாளையும்!

சிகரம் பாரதி : தமிழ்மொழியின் பழம்பெரும் பெருமைகள் பற்றி இன்று பேச வேண்டாம். தமிழ்மொழி இன்று எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்காக எதிர்காலத்தில் நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால மென்பொருள் ஆளப்போகும் உலகில் தமிழின் வளர்ச்சிக்கு நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்வோம்.



பாலாஜி : 'உலகவழக்கழிந்தொழிந்து சிதையாத' தமிழின் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து எத்தனைதான் நாம் போற்றி நின்றாலும்,  நமதருமைத் தமிழின் இன்றைய நிலைமையைத் தமிழராகிய நாமன்றி வேறு யார் சிந்திக்க இயலும்?  தமிழின் நிலையும் தரமும் என்றும் குறையாது என்பது உண்மை. எனினும் அத்தகைய பேறு பெற்ற தமிழ் தமிழராகிய நம் ஒவ்வொருவராலும்  எந்த அளவு வளர்க்கப் படுகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  கல்வித் துறையில் தமிழ் எந்த அளவுக்குப் புகட்டப்படுகிறது?  மொழியை இன்னும் சரிவர உச்சரிக்கக் கூட இயலாத அளவில் எத்தனையோ பேரை நாம் காண்கிறோம்! சொற்பிழையும் எழுத்துப் பிழையும் இன்றி நமது மொழியை நாம் பயில வேண்டும். அதற்கு நாமே மனது வைத்தல் வேண்டும். நம்மால் ஆனவரை பிழையற்ற முறையில் எழுதக் கற்போம்;  கற்பிப்போம்!

சிவரஞ்சனி : மிகவும் சரி ஐயா. முயற்சியும் சரியான பயிற்சியும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே.

சிகரம் பாரதி : ஆட்சி, கல்வி, வேலை என அனைத்திலும் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஆனால் எல்லாவற்றிலும் ஆங்கிலத்தையே நம்மவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.

ஜெகஜோதி : உண்மை அய்யா. ஒருவரை எப்படி இனம் காண்போம். பெயரை கொண்டல்லவா. ஆனால் இன்று தூய தமிழ் பெயர் குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறதா?. எதிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். அது தமிழுக்கு உண்டு. ஆனால் இன்றைய நவீன தமிழர்களுக்கு தனித்தன்மை என்பது சிறிதும் கிடையாது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் வீழ்வோம்.

சிகரம் பாரதி : பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது அவமானம் என்று கருதுகிறார்கள். அல்லது உச்சரிக்கக் கடினமான தமிழ்ப்பெயர்களை எண்கணிதத்திற்காக வைத்துவிட்டு ஆங்கிலப் பெயர்களால் உறவாடுகின்றனர்.

சிவரஞ்சனி : நல்ல தமிழில் பெயர் வைத்தால் கேலி செய்கிறார்கள் 

பாலாஜி : அப்படி சில செயல்கள் சந்தர்ப்ப வசத்தால் நேரலாம். ஆனால் பேசும் பொழுதாவது பிழையின்றிப் பேசக் கற்றால் போதும்

ஜெகஜோதி : அது நம் தவறல்ல. நம்மால் நமது பெயரை வைக்க முடியாது.

சிகரம் பாரதி : அதற்காகவே நாம் அறிமுகப்படுத்தியுள்ள அரிய தயாரிப்பு....
புனை பெயர்....

ஜெகஜோதி : கிருத்துவர்கள் ஆங்கில பெயரையும், இந்துக்கள் சம்ஸ்கிருத பெயரையும், முகமதியர் அரபு பெயரையும் தூக்கி கொண்டு தமிழன் என்றொரு உணர்வை அழித்துக் கொண்டு இருக்கிறோம்.

பாலாஜி : பெயரை விடவும் பெரிய செயல்கள் உள்ளனவே. அவற்றில் கவனம் செலுத்துவோம்.                        

சிகரம் பாரதி : அடிப்படை சரியாக இருக்க வேண்டும். அவ்வளவே.

சிகரம் பாரதி : நம் தமிழ் ஊடகங்களைத் திருத்த வேண்டும். நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தமிழ்க்கொலை மிக சிறப்பாக நடந்து வருகிறது.

ஜெகஜோதி : என் தமிழினம் இந்த அளவுக்கு சொரணை கெட்டு பிற மொழி கலந்து பேசிக்கொண்டு திரிவதற்கு முதல் காரணம் தமிழ் சினிமா தான்

ஜெகஜோதி : தமிழ் தெரிந்த நபர் ஒருவருடன் தமிழில் உரையாடுவதை விடுத்து ஆங்கிலத்தில் உரையாடுவதே பெருமை என திரையில் காட்டியது. எம் ஜி ஆர் முதல் இன்று உள்ள நாடக தொடர்கள் வரை அப்படித்தான் சித்தரிக்கப்படுகிறது. ஆங்கிலம் கலந்து பேசினாலோ அல்லது ஆங்கிலத்தில் ஒருவன் பேசினாலோ அவனை மெத்த அறிவாளியாக காண்பித்து தாய் மொழியை இழி மொழியாக நினைக்க வைத்ததும் தமிழ் திரை உலகின் அளப்பரிய சாதனை.

பாலகுமரன் : தமிழ் இனி

இன்று காலை ஒரு நண்பர் தாடி தமிழ் இல்லை என்றார். ஆனால் அதற்கு இணையான தமிழ் சொல் என்னவென்று சொல்ல முடியவில்லை. அதனால் தாடி என்பதையே தமிழ் ஆக்கிவிட்டால் என்ன?
தனித் தமிழ் தூயதமிழ் என பழங்கதை பேசிக் கொண்டிராமல் நெடிய பழக்கத்தில் உள்ள சொற்களை தமிழ் என அறிவியுங்கள். பரவிய இடமெல்லாம் பாரம்பரிய அயல் மொழி சொற்களை ஏற்றுக் கொண்ட ஆங்கிலம் இன்று உலகெங்கும் பேசப்படுகிறது. நாம் இன்னும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். தமிழ் சொல்லகராதியை விரிவுபடுத்துங்கள். தமிழ் இலக்கண விதிகளை  எளிமைப் படுத்துங்கள். பிற மொழி சொற்களை சேர்த்தால் தவறு என்பவர்கள் சற்று யோசியுங்கள்... நாம் பெருமை பேசும் சோழனின் கல்வெட்டுக்களை அனைவராலும் படிக்க முடியுமா? 300_400 ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட தமிழ் பாடலை பதவுரை இல்லாமல் புரிந்து கொள்ளத்தான் முடியுமா? அதுவும் தமிழ் தானே? இப்படியே போனால் 300-400 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் இருக்கும். ஆனால்  சொல்லும் பொருளும் எழுத்தும் மாறித் தான் போய் இருக்கும். நாமே அதை விதிப்படி சரியென்றே நெறிப்படுத்தினால் என்ன? உதாணமாக முடி நடை முறை சொல்லாகவும் மயிர் கெட்ட சொல்லாகவும் கூந்தல் வழக்கொழிந்த சொல்லாகவும் மாறித் தான் போய் இருக்கும்.


தூயதமிழ் பேசி தமிழ் பற்றை காட்டாமல் வாழ்க்கை மாற்றத்திற்கு ஏற்ப இப்படி மாறலாம். தமிழில் கையொப்பம் இடுங்கள். சுயகுறிப்புகளில், மாத வரவு செலவு கணக்குகளில், புதுப்புத்தகத்தில் முதல் பக்கத்தில் உங்கள் பெயர், புதுப்பேனாவின் முதல் எழுத்து சோதனைகளில் தமிழ் மட்டுமே பயன் படுத்துவோம்... முக்கியமாக நம் பிள்ளைகளுக்கு mummy Daddy uncle aunty ஆகியன கற்றுத் தராமல் இருப்போம்.

விவாதம் தொடரும்....

Wednesday 1 March 2017

இன்பத்தமிழ்

இன்பத்தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் !

தமிழுக்கு மணமென்று பேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ! - இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் !

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் ! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் ! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

Popular Posts