Showing posts with label சிகரம் பாரதி. Show all posts
Showing posts with label சிகரம் பாரதி. Show all posts

Saturday, 2 June 2018

பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது 'சிகரம்' !

வணக்கம் 'சிகரம்' வாசகர்களே!

உங்கள் அனைவரையும் இன்னுமோர் ஆண்டுவிழா தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2006.06.01 அன்று தனது பயணத்தைத் தொடங்கிய 'சிகரம்' பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக பயணத்தைத் துவங்கி வலைத்தளத்தில் தவழ்ந்து இன்று இணையத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது 'சிகரம்'. எத்தனையோ சோதனைகளைத் தாண்டி சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது 'சிகரம்'. 



இத்தனை ஆண்டுகளாக எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும் நண்பர்கள், உறவினர்கள், வலைத்தள நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தனக்கென ஓர் தனித்த அடையாளத்துடன் தனி இணையத்தள முகவரியில் 'சிகரம்' கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டளவில் தனி நிறுவனமாக 'சிகரம்' உருவாகும் என நம்புகிறோம். 



மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த அடிப்படையில் உலகம் தோன்றியது முதல் இன்று வரை அநேக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்களின்படி இனிவரும் காலம் தகவல் தொழிநுட்ப யுகமாக அமையும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகவல் தொழிநுட்பத்தை முழுமையாக சார்ந்து இயங்கப் போகிற உலகில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். தகவல் தொழிநுட்ப உலகை தமிழிலும் முழுமையாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே 'சிகரம்' நிறுவனத்தின் நோக்கம். 



'சிகரம்' இணையத்தளம் தமிழ் மொழியையும் தமிழரையும் உலக அரங்கில் தனித்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. 'சிகரம்' இணையத்தளத்தின் வடிவமைப்பில் விரைவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்படும். காலத்திற்கேற்ற பொருத்தமான படைப்புகளுடன் உங்கள் விழித்திரைகளை நோக்கி நாம் வருவோம். 



பிறந்திருக்கும் இந்த பதின்மூன்றாம் 'சிகரம் ஆண்டு' சிகரம் இணையத்தள வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை ஆண்டாக அமைய வேண்டுகிறோம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் பரந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிகரத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அந்த மக்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் சிகரத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும். 

'சிகரம்' - மக்கள் சிகரம்! - தமிழின் சிகரம்!! நம் மண்ணின் சிகரம்!!!

#சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary #சிகரம்


#100/2018/SIGARAMCO
2018/06/01
பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது 'சிகரம்' ! 
https://www.sigaram.co/preview.php?n_id=326&code=8gR1tAVn 
பதிவு : சிகரம் 
#சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary  
#சிகரம்

Thursday, 15 March 2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!

பள்ளிக் காலத்தில் மிருகக் காட்சி சாலை விலங்குகளை நம் உறவினர்களாகச் சித்தரித்து கேலி செய்து மகிழ்ந்திருப்போம். எனக்குப் பள்ளிக் காலத்தில் மிருகக் காட்சி சாலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. இலங்கையின் தலைநகரமான கொழும்புக்கு வேலை தேடி வந்த பின் ஒரு முறை களனியில் (Kelaniya) உள்ள மீன்கள் மற்றும் பறவைகள் சரணாலயத்துக்குச் சென்று வந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை (2018.03.11) தெஹிவளையில் உள்ள மிருகக் காட்சி சாலைக்குச் சென்று வந்தோம். மனைவி, மகள் மற்றும் உறவுகள் எல்லாம் ஏழு பேர் சென்று வந்தோம்.



காலை பதினொன்று முப்பதுக்கு நாங்கள் இருக்கும் மாளிகாவத்தையில் இருந்து 176 ஆம் இலக்க பேரூந்தில் பயணித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் தெஹிவளையைச் சென்றடைந்தோம். ஒருவருக்கு தலா நூறு ரூபாய் நுழைவுக் கட்டணம். உள்ளே நுழைந்ததும் மிருகக் காட்சி சாலையின் வரைபடம் அச்சிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதில் ஒன்றை எடுத்துக் கொண்டேன். ஆனால் இறுதிவரை அந்த வரைபடத்தின் மூலம் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. வரைபடம் எங்களைக் குழப்பி அலைய விட்டது தான் மிச்சம்.



முன்பு எனது பாடசாலை நண்பன் விசு தொழில் நிமித்தமாக இந்தப் பகுதியில் தான் தங்கியிருந்தான். தெஹிவளை என்றாலே அவனது நினைவு தான் எனக்கு வரும். அவன் இப்போது யாழ்ப்பாணத்தில் தொழில் புரிகிறான். அவனோடு அரசியல் பேசித் திரிந்த நாட்கள் பல.



மிருகக் காட்சி சாலையில் முதலில் கடல் சிங்கம் எங்களை வரவேற்றது. அதற்கு ஒருநாளைக்கு ஒரு தடவை தான் உணவாம். சுமார் மூன்றரை கிலோ உணவு தினமும் மாலை நான்கு மணியளவில் வழங்கப்படுகிறது. டொல்பினை ஒத்திருந்தாலும் இது மீசை வைத்த சிங்கம்.



அதற்கு அருகிலேயே மீன் சிகிச்சை நிலையம் காணப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்த் தொட்டிக்குள் இரு கால்களையும் வைத்துக்கொண்டு சுமார் பதினைந்து நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது இதற்கெனவே வளர்க்கப்பட்ட சிறிய அளவிலான மீன்கள் நம் கால்களைக் கடித்து சிகிச்சை அளிக்கும். இதற்கான கட்டணம் இலங்கை ரூபாய் இருநூறு. நாம நல்ல ஆரோக்கியமாத்தானே இருக்கோம், நமக்கு எதுக்கு இதெல்லாம் என்று சொல்லி அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தோம்.



அடுத்தது நீர் வாழ் உயிர் காட்சி சாலைக்குச் (Aquarium) சென்றோம். விதவிதமான மீன்கள் மற்றும் சில நீர் வாழ் உயிரினங்கள் அங்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. 



தொடர்ந்து பாம்பு காட்சி சாலை, கிளிகள் காட்சி சாலை மற்றும் வண்ணத்துப்பூச்சி காட்சி சாலை போன்றவற்றைப் பார்வையிட்டோம். குரங்குகள், மான், யானை, முதலை, ஆமை, கொக்கு மற்றும் பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகள் அங்கு காணக்கிடைத்தன.



அன்றைய தினம் நாங்கள் காலிமுகத் திடலுக்கும் திரையரங்குக்கும் செல்லத் திட்டமிட்டிருந்ததால் பகல் 12.30 அளவில் மிருகக் காட்சி சாலைக்குச் சென்ற நாங்கள் மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து திரும்பினோம். ஆனால் காலிமுகத் திடலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. திரையரங்குக்கு சென்று இலங்கையில் தயாரித்து வெளியிடப்பட்ட 'கோமாளி கிங்ஸ்' திரைப்படத்துக்கு சென்று வந்தோம்.



மிருகக் காட்சி சாலையைச் சுற்றிப்பார்க்க ஒருநாள் முழுவதும் வேண்டும். சிலநேரங்களில் அது கூட போதாது என்றே கூற வேண்டும். ஆற அமர ரசித்து சுற்றிப்பார்க்க இரண்டு நாட்களாவது செல்லும்.



தெஹிவளை மிருகக்காட்சி சாலையானது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோன் ஹேகன்பேக் என்னும் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இலங்கையில் பிடிக்கப்பட்ட காட்டு விலங்குகளை ஐரோப்பாவுக்கு அனுப்பும் வரை அடைத்து வைக்கும் ஒரு இடமாக பதினோரு ஏக்கர் பரப்பளவில் பராமரிக்கப்பட்டது. இது ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந் நிறுவனம் 1936இல் நஷ்டத்தை எதிர்நோக்கியதால் அரசினால் பொறுப்பேற்கப்பட்டது.



1946இல் தன்னாட்சி அதிகாரமுடைய திணைக்களமாக தெஹிவளை உயிரியல் பூங்கா மாற்றம் பெற்றது. அதன்போது மக்களை மகிழ்விப்பதே திணைக்களத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. விலங்கு கண்காட்சி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. 



1970 மற்றும் 1980களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய முகாமைத்துவ மாற்றங்களின் பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய திறந்த மிருகக் காட்சி சாலையை பராமரிப்பதும் விலங்கினங்களைப் பாதுகாப்பதுமே முக்கிய நோக்கமாக இருந்தது. விலங்கு கண்காட்சி நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன. தற்போது 21 ஏக்கர் பரப்பளவில் தெஹிவளை மிருகக் காட்சி சாலை செயற்பட்டு வருகின்றது. 



இங்கு வைக்கப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகள் பலவற்றில் தமிழ்க்கொலைகள் தாராளமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை அரசு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.



இலங்கையில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையும் ஒன்றாகும். பார்க்க மறந்துடாதீக... அப்புறம் வருத்தப்படுவீக...!



தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்! - சிகரம்பாரதி 

#078/2018
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்! 
https://www.sigaram.co/preview.php?n_id=304&code=gmFQ91xR
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #travel #experience 
#SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  
#சிகரம்   

#078/2018/SIGARAMBHARATHILK
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #travel #experience 
#SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  

Sunday, 11 March 2018

என்னோடு நான்

பயணங்கள் எப்போதுமே அழகானவை. அதிலும் இரயில் பயணம் என்றால் சொல்லவும் வேண்டுமா? தை மாதத்தின் ஞாயிறு மாலைப் பொழுதொன்றில் என்னைத் தேடிப் பயணப்பட்ட போது சில நிமிட இரயில் பயணம் பல வருட வாழ்க்கையின் சாராம்சத்தை உணர்த்தி நின்றது. என்னை நானே உணர்ந்து கொண்டேன். என்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு எனக்குத் தேவைப்படுவதெல்லாம் இடைவிடாத தேடலும் அயராத உழைப்பும் விடா முயற்சியும் மட்டும் தான் என்பதை என்னை நான் தேடிய கணங்களில் உணர்ந்து கொண்டேன்.

கொஞ்சம் நடை, கொஞ்சம் தேநீர் மற்றும் கொஞ்சம் பயணம் என என்னை நான் தேடிக் கொண்டிருந்தேன். தொலைந்து போன என்னைப் பற்றிய சில குறிப்புகள் அங்கே கிடைக்கப் பெற்றன. அதில் எனக்கென்று நான் சுயமாக எந்தவொரு உறவையும் தேடிவைத்துக் கொள்ளவில்லை என்றொரு குறிப்பு. தூரத்தில் உள்ள உறவுகளை அருகாமையில் கொண்டு வந்து தந்த இணையம் அருகில் உள்ள உறவுகளை நெருக்கமாக்க மறந்து போய் விட்டது. இல்லை... இல்லை... என்னை மறக்க வைத்து விட்டது.




கடந்த காலத்தின் வலிகளும் எதிர்காலத்தின் சுமைகளும் நிகழ்காலத்தை இருளடையச் செய்து வைத்திருக்கின்றன. பகல் பொழுதிலும் அந்தகார இருள் என்னைச் சூழ்ந்திருக்கிறது. இருளில் இருந்து விடுபடுவதற்கான போராட்டம் தினசரி நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

எனக்கென ஒரு தூரநோக்கையும் அதை அடைய சில இலட்சியப் பாதைகளையும் வகுத்துக் கொண்டேன். ஆனால் அதை அடைய நீ எடுத்துக்கொண்ட முயற்சி எத்தகையது என்பதை நீ எண்ணிப்பார் என என்னைப் பற்றிய குறிப்புகள் என்னை வினாவின. உண்மை தான். எனக்கான தூர நோக்கை அடைய நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகச் சொற்பம் தான்.

என்னைப் பற்றிய குறிப்புகளில் எதிர்மறையான குறிப்புகளே அதிகம். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று அனுதினமும் என் நாட்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். என் வழியெல்லாம் இருள் சூழ்ந்து பனி படர்ந்த வண்ணமாய் இருக்கிறது. கைவிளக்கொன்றைப் பிடித்தபடி எனக்கான பாதையைத் தேடி பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

தனிமையான பொழுதொன்றில் சுற்றிலும் இயற்கை துணையிருக்க மழைத்தூறலுடன் தேநீர்க் கோப்பை ஒன்று போதும் நம்மோடு நாமே உறவாட. ஒவ்வொரு துளித் தேநீரும் உதடு வழி தொண்டைக்குழி நனைத்து இரைப்பையைச் சென்றடையும் போது அதன் சுகமே தனிதான். ஒவ்வொரு துளியும் இரைப்பையைச் சென்றடையும் போது ஏற்படும் உணர்வுகள் வித்தியாசமானவை. அந்த மணித்துளிகள் சேமித்து வைக்கப்பட வேண்டியவை. அப்போது எனக்கான புதிய குறிப்புகளை நான் எழுதிக்கொள்ள வேண்டும்.


எனது இலட்சியத்தை அடைவதற்கு எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மிகச் சொற்பம். அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அதிலும் மிகச் சொற்பம். கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விட்டு ஏங்கிய நேரங்கள் அனேகம்.

இனி வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய காலம். எதிர்காலத்தை நோக்கி உறுதியாக அடியெடுத்து வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தெளிவான பாதையை வகுத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய நேரமிது. இறந்த காலமோ எதிர் காலமோ நம் கையிலில்லை. நிகழ்காலத்தை சரியான திட்டமிடலுடன் எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த வேண்டும்.

காலத்தோடு கைகோர்த்து பயணிக்கப் போகும் ஒவ்வொரு தருணமும் மிகச் சவாலானதாகவே இருக்கும். 

#077/2018
என்னோடு நான்  
https://www.sigaram.co/preview.php?n_id=303&code=abTNjpnJ 
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #என்னோடுநான் #வாழ்க்கை #sigarambharathi #life #MewithMe #SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  
#சிகரம்   

Sunday, 24 September 2017

மீண்டும் நான்



சாண் ஏற
முழம் சறுக்குமென்பார்
ஆனால்
சாணும் சறுக்க
முழமும் சறுக்கும்
என் வாழ்வில்

எத்தனையோ முயற்சிகள்
அத்தனையிலும் தோல்விகள்
ஆனாலும்
வெற்றித்திருமகளின் கரம்
பற்றத் துடிக்கிறது மனம்
அவள் மீது
நான் கொண்ட காதல்
தீரவில்லை இப்போதும்
என்றேனும்
அவள் நெற்றி மீது
முத்தமிடுவேன் என
உரைத்துக் கொண்டேயிருக்கிறது
என் மனம்

தோல்விகள்
தந்த வலிகள்
என்னை
உருக்குலைத்துவிடவில்லை
தேர்ந்த
சிற்பக்கலைஞனின்
நுணுக்கத்துடன்
என்னைச்
செதுக்கியிருக்கின்றன

சிற்பம்
முழுமை பெறும் நாளில்
என் எதிரிகள்
தன் தோள்களில்
என்னைத் தாங்க
உங்கள் முன்
வலம் வருவேன்
நான்!

Wednesday, 20 September 2017

புரியாத புதிர்

ஆர்ப்பரிக்கும்
அலை கடலென
அலைபாய்கிறது மனம்
எழுத்திலும்
சொல்லிலும்
சொல்லிவிட முடியவில்லை
என் உணர்வுகளை...   

மொத்தமும் அழிந்து போய்
சொச்சமாய் மிச்சமிருக்கும்
வரலாற்றுச் சின்னங்களைப் போல்
என் மனதுக்குள்ளும்
ஆங்காங்கே சில
நினைவுகள்
கவனிப்பாரின்றிக்
கிடக்கின்றன...

எண்ணத்தில் உள்ளது
எந்த இறைவனுக்கும்
புரிவதில்லை
வார்த்தைகளில் சொன்னால்
மனிதர்களுக்கும் புரிவதில்லை...⁠⁠⁠⁠




அண்டம் உருவாகி
ஆயிரங்கோடி
ஆண்டுகளாகியும்
அடங்கவில்லை
அலைகடலின் சீற்றம்
அதுபோல்
இறந்த பின்னும்
அடங்கப்போவதில்லை
என் மன அலைகளும்...

கடவுளைப் போலவே
யாருக்கும் புரியாத
புதிராய்
இருந்துவிட்டுப்
போகட்டும்
என்
எண்ணங்களும்...⁠⁠⁠⁠                   

இப்படைப்பு கவிஞர் சிகரம் பாரதி அவர்களின் படைப்பாகும்!

Popular Posts