Saturday 30 June 2018

சிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018

வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

#101/2018
2018/06/02
சிகரம் செய்தி மடல் - 015 - சிகரம் பதிவுகள் 2018
https://www.sigaram.co/preview.php?n_id=327&code=Iw9eVEgJ 
பதிவு : சிகரம்
#SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
#சிகரம்


#102/2018/SIGARAMCO
2018/06/02
இராஜராஜர் பராக்...! 
https://www.sigaram.co/preview.php?n_id=328&code=42yL9Jq0
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO

#103/2018/SIGARAMCO
2018/06/03
சிகரம் டுவிட்டர் - 03 
http://sigaram.co/preview.php?n_id=329&code=YOSFqHhN 
பதிவு : சிகரம் 
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER

#104/2018/SIGARAMCO 
2018/06/23 
இருள் - சிறுகதை 
https://www.sigaram.co/preview.php?n_id=330&code=zL2JPjKd 
பதிவர் : பிரமிளா பிரதீபன்
#சிறுகதை #இருள் #பிரமிளாபிரதீபன் #பேஸ்புக் #தமிழ் #கற்பு #பெண் #உலகம் #பயணம் #ShortStory #PramilaPradeepan #FaceBook #Tamil #Girl #World #Travel #SIGARAMCO 
#சிகரம்
 
#105/2018/SIGARAMCO 
2018/06/23 
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  
https://www.sigaram.co/preview.php?n_id=331&code=yrsx9Dl2 
'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே?
#சிகரம்

 

#106/2018/SIGARAMCO 
2018/06/23 
பதிவர் : கவின்மொழிவர்மன் 
#பெரியபுராணம்_சேக்கிழார் #கவின்மொழிவர்மன் #கண்ணப்பநாயனார் #கவிதை #தமிழ் #பக்தி #Kavinmozhivarman #Tamil #poem #Thamizh #KannappaNaayanaar #SIGARAMCO #சிகரம் 
#சிகரம்

#107/2018/SIGARAMCO 
2018/06/25 
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01  
https://www.sigaram.co/preview.php?n_id=333&code=iM6b2IBO
பதிவர் : சதீஷ் விவேகா
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம்
#சிகரம்

#108/2018/SIGARAMCO 
2018/06/28 
சிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்  
https://www.sigaram.co/preview.php?n_id=334&code=TIRVZDxY  
பதிவர் : தங்க. வேல்முருகன்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A #SIGARAM 
#சிகரம்

#109/2018/SIGARAMCO
2018/06/28 
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02  
https://www.sigaram.co/preview.php?n_id=335&code=b4hzgUix
பதிவர் : சதீஷ் விவேகா
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம்
#சிகரம்

#110/2018/SIGARAMCO 
2018/06/29 
சிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்   
https://www.sigaram.co/preview.php?n_id=336&code=sJIKfSpV
பதிவர் : மாரிராஜன்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #மாரிராஜன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Maariraajan #Interview #Q&A #SIGARAMCO
#சிகரம்

சிகரம் இணையத்தளத்தின் அண்மைய அலெக்ஸா மதிப்பெண்களின் நிலை பற்றிப் பார்ப்போம்.


முதலாவது தரவரிசை:
04/01/2018 - 12,513,910

இன்றைய அலெக்ஸா தரவரிசை:
12/04/2018 - 10,452,448
02/06/2018 - 19,175,025

இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

சிகரம் இணையத்தள அறிவிப்பு:
சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளுக்கு அப்படைப்பினை எழுதியவரே பொறுப்பாவார். படைப்பாளி சிகரம் இணையத்தளத்திற்கு வேறு தளங்களில் வெளியான படைப்பை தன் சுய விருப்பின் பேரில் வழங்கலாம். அது அவரது பொறுப்பாகும். சிகரம் இணையத்தளம் தானாக ஒரு படைப்பாளியின் படைப்பை வேறு தளங்களில் இருந்து எடுத்துப் பதிவிட்டால் அது பற்றிய முழுமையான குறிப்புகளை பதிவுடன் இணைத்து வழங்கும். படைப்பாளி முதன்முதலில் தான் சிகரம் இணையத்தளத்திற்கு வழங்கிய படைப்பை சிகரம் இணையத்தளத்தின் முன் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சிகரம் இணையத்தளத்தில் குறித்த படைப்பு வெளியிடப்பட்டமைக்கான குறிப்பை இணைத்து வெளியிட முடியும்.

சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளில் இணைக்கப்படும் மூன்றாம் தரப்பு புகைப்படங்களுக்கு சிகரம் இணையத்தளம் ஒரு போதும் உரிமை கொண்டாட மாட்டாது. சிகரம் இணையத்தள படைப்புகளை சிறப்புற வெளியிடும் நோக்கத்துக்காக மட்டுமே மூன்றாம் தரப்பு புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாம் தரப்பு புகைப்பட உரிமையாளர்கள் அல்லது இணையத்தளங்களுக்கு எமது நன்றிகள்.

https://www.sigaram.co/index.php | sigaramco@gmail.com | editor@sigaram.co

-சிகரம்

Friday 29 June 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்:
பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!


கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு சராசரி கலை இலக்கிய ரசிகன். வரலாறு விரும்பி... கொஞ்சம் ஆர்வக்கோளாறு...

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?

நம்மை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?

ஆரோக்கியமாக இல்லை. சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறப்பு. மருத்துவர்கள் மாறுவதால் தீர்வுகிட்டாது. மருத்துவர்களாய் மாறினால் தீர்வு கிட்டும். 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?

சமூக பண்பாடு, அதன் கலாச்சாரம் இவற்றை தக்கவைப்பதில் மொழியின் பங்கு அளப்பரியது.

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?

வருத்தங்களை தேடிச்சென்று சம்பாதிக்காமல் இருக்க வேண்டும்.



கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?

நமது பாரம்பரிய வரலாற்றை அறிந்திருந்தால் இன்னும் செம்மையான வாழ்க்கை வாழ்ந்திருப்போம். கடந்த கால தொடர்ச்சிதானே எதிர்காலம்? பாட்டனின் வித்தையை தெரிந்த பேரன் பாக்கியவான்.

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?

கணினி மயமாகிவரும் சூழ்நிலையால்தான் புத்தக வாசிப்பு அதிகமாகியுள்ளது. வந்து குவியும் புத்தகங்களும், விற்றுத்தீரும் நிகழ்வுகளும் இதற்கு சான்று.

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?

விடத்தை தவிர்த்துவிட்டு அமுதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு தவம் செய்யாமல் கிடைத்த வரம்.

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?

பட்டியல் பெரியது.பாகுபாடு பார்க்க விருப்பம் இல்லை.

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?

நமது மொழியில் பேசவேண்டும். எழுதவும் வேண்டும். பேசவைக்கவும் வேண்டும். எழுத வைக்கவும் வேண்டும். 

-சிகரம் 

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #மாரிராஜன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Maariraajan #Interview #Q&A #SIGARAMCO #சிகரம் 

தொடர்புடைய பதிவுகள் : 

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A 
#SIGARAM #சிகரம்

#110/2018/SIGARAMCO 
2018/06/29 
சிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்   
https://www.sigaram.co/preview.php?n_id=336&code=sJIKfSpV
பதிவர் : மாரிராஜன்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #மாரிராஜன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Maariraajan #Interview #Q&A #SIGARAMCO
#சிகரம்

Thursday 28 June 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01 


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02 


சோழ மன்னர்களில் கோச்செங்கட் சோழர் காலம் வரை தங்களின் ஆளுமையால் தொண்டை மண்டலத்தையும், சோழத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதன் பிறகு நடந்த ஆட்சி மாற்றங்களாலும் அண்டை தேசத்துடனான போர்களாலும் சோழத்தின் ஆளுமையும் வலிமையும் குன்றத் தொடங்கியது. இந்தக் காலத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளப் பல்லவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இதற்கான திட்டத்தையும் தீட்டத் தயாரானார்கள். 

இதற்கான அமைச்சரவைக் கூட்டமும் விடியலில் தொடங்கும் என்ற வாய்மொழி உத்தரவு அனைத்து அமைச்சர்களுக்கும் சேனைத் தளபதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து அமைச்சர்களும் தன்னுடைய உதவியாளர்களிடம் தாம் வகிக்கும் பொறுப்புகளின் நிலவரங்களைக் கணக்கிட்டு அதற்குண்டான விபரங்களையும் சேகரிக்க உத்தரவிட்டார்கள்.  

நிதித்துறையைச் சார்ந்த அமைச்சர் தற்போதைய நிதியிருப்பையும் வரவேண்டிய வருவாயினங்களையும் இன்னும் சில மாதத்திற்கு நாட்டின் நிர்வாகத்திற்குத் தேவைப்படக்கூடிய நிதியையும் ஓலையில் குறித்துக் கொண்டார். அதேபோல் நாட்டின் உணவுப் பொருட்களின் கையிருப்புகள், மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்புகள், ஆயுதக் கிடங்கில் ஆயுதங்களின் இருப்பு மற்றும் தேவை என அனைத்து விபரங்களையும் சேகரித்து அனைத்து அமைச்சர்களும் தங்களின் துறைகளுக்கான நிலவரத்தை விரல்நுனியில் வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் கூடும் அவைக்குச் செல்ல ஆயத்தமானார்கள். 

தளபதிகள் தங்களுடைய படையின் சாதக, பாதகங்களைப் பற்றி உபதளபதிகளிடம் விவாதித்துக் கொண்டு மறுநாள் நடக்கும் விவாதத்திற்குத் தயாரானார்கள். உதவியாளர்களுக்கும், உபதளபதிகளுக்கும் எதற்காக இந்தக் கணக்கீடுகள் என்று விளங்காவிடினும் ஆனால் ஏதோ முக்கிய நிகழ்வுக்கு நம் தேசம் தயாராகிறது என்பது மட்டும் விளங்கியது. அவர்கள் தனக்கான பணிகளை முடித்துக் கொடுத்து விட்டு இல்லம் திரும்பினார்கள்.

அடுத்த நாளுக்கான விடியல் பல்லவ தேசத்திற்கான விடியலாய் விடிந்தது. அதிகாலையில் சிவன், விஷ்ணு ஆலயங்களில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளும் புத்த விஹாரங்களிலும் சமணப்பள்ளிகளிலும் வழிபாடுகளும் நடக்கத் தொடங்கியது. யாழின் இசையும் அதற்கேற்றாற்போல் பாடும் யுவதிகளின் குரலின் இனிமையும் காற்றைக் கிழிக்கும் காளையர்களின் கம்பு சுழற்றலும் பல்லவ தேசத்து மக்களின் பண்பாட்டையும் கலையையும் வீரத்தையும் உணர்த்தியது. 

காலைநேரத்துக் கடைவீதிகளில் வியாபரக் கூச்சலும் எருது பூட்டப்பட்ட வண்டிகளில் வாணிபப் பொருட்களின் பயணமும் உடன் பயணிக்கும் சலங்கையின் ஒலியும் இதனைக் கடந்து நகர்ந்து போக மிகப்பெரிய மதில்களையுடைய அரண்மனையும் அதைச் சுற்றி ஓடும் நதியும் நதியினுள் நாட்டிடயமாடும் கொடியும் கொடியில் மலர்ந்த பூக்களும் பூக்ககளைச் சூழ்ந்து விளையாடும் மீன்களும் மீன்களை வேட்டையாடும் முதலைகளும் என அழகும் ஆபத்தும் நிறைந்த அகழி அரண்மனையைக் காத்திருந்தது. அகழியைத் தாண்டிச் செல்லத் தேக்காலான பாலமும் பாலத்தைக் கடந்ததும் அண்ணாந்து பார்க்கத் தலைப்பாகை கீழே விழுந்திடும் உயரத்தில் நிற்கும் வாயிற்கதவுகளும் காற்றும் உள்நுழைய அனுமதிகேட்டு நிற்குமளவு பாதுகாப்பும் அரண்மனைக்குள் செல்பவர்களை சோதனை செய்யும் வீரர்களும் அவர்களின் முறுக்கு மீசையும் பார்வையால் மிரட்டும் உருண்ட விழிகளும் அவர்களிடம் மிரட்சியுடன் நிற்கும் மக்களும் என அனைத்தையும் கடந்து உள்ளே நுழைந்ததும்...

இருதேர் செல்லுமளவு இருக்கும் இரண்டாம் நிலையான வாயிலும் முதல் நிலை வாயிலுக்கும் இரண்டாம் நிலை வாயிலுக்கும் சரியான அளவு இடைவெளியும் கலைநயத்துடன் கூடிய வாயிற்கதவுகளின் வேலைப்பாடுகளும் வெள்ளி முலாம் பூசியதுபோல் வெண்சுண்ணாம்பால் மிளிரும் இரண்டாம் நிலை மதிற்சுவரும் மதிலின் மேல் இரண்டாம் நிலை அடுக்கு பாதுகாப்பும் வாயிலைக் கடந்து உள்ளே சிறிது தூரம் சென்றதும் நான்கு புறவாயிலில் இருந்து வரும் சாலைகள் சந்திக்கும் நிலையும் நான்கு வாயிலுக்கும் செல்ல நேராகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட சாலையும் இருபுறத்திலும் ராஜ்ஜியத்தின் முக்கியஸ்தர்களும், விருந்தினர்களும் தங்கும் மாளிகைகளும் இதை அதிசயித்துப் பார்த்துச் சிறிது தூரம் நடந்து வந்ததும் சந்தனம், மா, பலா, அரசு,புன்னை, வேம்பு என மரங்களாலும் விதவிதமான பூக்களாலும் சூழ்ந்த நந்தவனமும் இந்த இயற்கை அரணுக்கு மையத்தில் பல்லவர்களின் அரண்மனை அழகுடன் அமைந்திருந்தது. 

அகிலின் மணம் எங்கும் சூழ்ந்திருக்க, ஒவ்வொரு தூணிலுள்ள சிற்பமும் பல கதைகளைச் சொல்லியபடி நின்றிருந்தது. அதில் வியந்து லயித்து அரண்மனையின் முன் மண்டபத்திற்குள் நுழைந்ததும் காலத்தால் அழியாத பல வீரச்செயல்களை ஓவியமாய்த் தாங்கிய சுவர் நின்றிருந்தது இமைக்க மறந்து விழியும் விரியப் பார்த்தே கடந்து இத்தனை அழகையும் பார்த்து மெய்மறந்து ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தால் அனைத்துத் துறை அமைச்சர்களும் தளபதிகளும் தெளிவான புள்ளிவிவரங்களுடன் அமைதியாய் அமர்ந்திருந்தார்கள். 

பல்லவ மன்னரான பப்பதேவரும் இளவரசரான சிவஸ்கந்தவர்மனும் மெய்க்காப்பாளர்களின் புடைசூழ மேல் தளத்திலிருந்து ஆலோசனை மண்டபத்தை நோக்கித் தீவிரமாய் விவாதித்த படியே வந்தார்கள். முரசடித்து மன்னரின் வருகை அறிவிக்கப்பட்டது. மண்டபத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் பெருமக்களும் தளபதிகளும் முக்கிய நிர்வாகிகளும் எழுந்து நின்று மன்னரை மரியாதையுடன் வரவேற்கத் தயாரானார்கள். 

நீண்ட கேசம் காற்றிலாடிட ஆட்டத்தை அடக்கி கிரீடம் அம்சமாய் அமர்ந்திருக்க நெற்றியின் மத்தியில் திலகம் ஜொலித்திட முகத்திற்கு மேலும் அது அழகைக் கூட்டிட சிவந்த தோலுடன் விரிந்த மார்பில் போர் பல கண்டதிற்கான அடையாளத் தழும்புகளைத் தாங்கி நிற்க மேலே போர்த்திய பட்டாடை இலை மறையாய் காய் மறையாய் தழும்புகளைக் காட்டி நிற்க நேரான பார்வையும் விரைவான நடையும் வயதைக் கணிக்கத் திணறிட கணிப்புத் தொடங்கி முடியும் முன் வேகமாய் ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தார் மன்னர். இளவரசரும் இளமை ததும்பிடும் வசீகரத்துடன் மன்னரின் அதே கம்பீரத்துடன் மன்னருக்குப் பின்னே மண்டபத்திற்குள் நுழைந்தார். மெய்காப்பாளர்களின் தலைவர் மட்டும் ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தார். மற்ற வீரர்கள் மண்டபத்திற்குப் புறத்தே பாதுகாப்புக்காக நின்று கொண்டார்கள். 

ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்ததும் அனைத்து பெருமக்களும் வாழ்த்து கோஷங்களுடன் வரவேற்றார்கள். மன்னர் தன்னுடைய இருக்கைக்குச் சென்று திரும்பி அனைவருக்கும் இரு கரம்குவித்து வணக்கத்தைக் கூறிவிட்டு ஒவ்வொருவரின் முகத்தையும் பார்வையிட்டார். அனைவரின் முகத்திலும் தெளிவு இருந்தது. அனைவரையும் கையமர்த்தி அமரச் சொல்லிப் பின் அமர்ந்தார். சில விநாடிகள் நிசப்தம் நிலவியது மண்டபம் முழுவதும். "ஏன் தந்தையே இப்படியொரு பேரமைதி, புயலுக்கு முன்னிருக்கும் அமைதி போன்று..." என்று மௌனத்தைக் கலைத்தார் இளவரசர் சிவஸ்கந்தவர்மர். "ஆம் சரியாய்த் தான் சொன்னாய் சிவா. இது புயலுக்கு முன்னிருக்கும் அமைதி தான்" என்று மெல்லிய புன்முறுவலுடன் செல்லமாய்த் தன் மகனும் வருங்கால மன்னருமான சிவஸ்கந்தவர்மரைப் பார்த்துச் சொன்னார் மன்னர். வார்த்தையின் பொருள் விளங்கிய இளவரசரும் சிரித்தார் தந்தையைப் பார்த்து.

அமர்ந்திருந்த பெருமக்களுக்கு விசயம் விளங்கினாலும் அமைதி காத்து மன்னரின் வாய்மொழிச் செய்தியைக் கேட்க ஆவலாய் அமர்ந்திருந்தார்கள். மன்னர் அமைச்சர்களைப் பார்த்து "நான் நேற்று காலை தங்களிடம் ஒப்படைத்த பணியை முடித்து விட்டீர்களா?" என்றார் மென்மையாய். அனைவரும் ஒருமித்த குரலில் முடித்தாயிற்று அரசே என்றார்கள் பணிவுடன். 

"நல்லது விசயத்திற்கு வருகிறேன். சோழ தேசத்தின் கையிலிருக்கும் தொண்டை மண்டலத்தை நம் வசப்படுத்த நாம் நீண்ட நாட்களாய்க் காத்திருந்த நாள் கனிந்து கைகூடி வந்துவிட்டது. அதற்காக நாமெடுக்கும் முதல் நகர்வுக்கான திட்டத்தை இளவரசர் தெரிவித்திருக்கிறார். அவரின் திட்டம் எனக்குச் சரியெனப் படுகிறது. அந்தத் திட்டத்தை நீங்களும் கேளுங்கள், பின் இதைப் பற்றி விவாதிப்போம்" என்று தன்மையாய்க் கூறிவிட்டு, "சிவா நீயே நம் வியூகத்தை விவரி" என்று இளவரசரிடம் கூறினார்.  




மன்னருக்கு நன்றியைக் கூறி ஆசனத்திலிருந்து எழுந்தார் இளவரசர் சிவஸ்கந்தவர்மர். தொண்டையைச் சரிசெய்து கொண்டு "நான் வியூகங்களைப் பற்றி வினவும் முன் சில கேள்விக்கான விடைகளை நமது அமைச்சர் பெருமக்களிடம் தெளிவு பெறவேண்டும் தந்தையே" என்றார் மன்னரைப் பார்த்துப் பணிவுடன். "ம்... ஆகட்டும் கேள்" என்றார் மன்னர்.

"முதலில் நான் உணவுப் பொருட்கள் மற்றும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு பற்றிய விபரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சரே விபரங்கள் கைவசம் உள்ளதா?" என்று சந்தேகத்துடன் கேட்டார் இளவரசர். அமைச்சர் சாந்தமான குரலில் "உள்ளது இளவரசே" என்றார் பணிவுடன். "சொல்லுங்கள் அமைச்சரே..." என்றார் ஆர்வமாய் இளவரசர். "நேற்றைய கணக்கின்படி நான்கு மாதத்திற்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கிடங்குகளில் பாதுகாப்பாய் உள்ளது இளவரசே" என்றார் தீர்க்கமாய் அமைச்சர். 

"நல்லது... அடுத்து நாட்டின் நிதிநிலை தற்பொழுது எவ்வாறு உள்ளது அமைச்சரே?" என்று நிதியமைச்சரின் முகம் பார்த்துக் கேட்டார் இளவரசர். "இளவரசே நிதிநிலை நன்றாய் உள்ளது. எவ்வித வருமானம் இல்லாவிடினும் இருமாதத்திற்கு நாட்டைச் சிறப்புடன் நிர்வகிக்க இயலும்..." என்று அமைச்சர் முடிக்கும் முன்னரே "எப்படி இவ்வளவு துல்லியமாய்ச் சொல்ல முடிகிறது அமைச்சரே?" என்று எதிர் கேள்வியைத் தொடுத்தார் இளவரசர். "இளவரசே நாட்டிற்கு மிகப்பெரும் பிணியே பசியும் பஞ்சமும் தான். நேற்று நீங்கள் உரைத்ததும் உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயமும் எவ்வாறு உள்ளது என்று அமைச்சரிடம் வினாவினேன், அவரும் சிறப்பாய் உள்ளது. நீர் இருப்பும் வேளாண்மையும் கடந்த சில வருடங்களை விட இம்முறை இறைவனின் புண்ணியத்தில் மாரியும், விளைச்சலும் நமக்கு சாதகமாய்த் தான் உள்ளது என்றார்... அதுவே எமக்குப் பெரும் துணிச்சலைத் தந்தது இளவரசே. நிலுவையிலிருந்த வருமானங்களை விரைவாக வசூலிக்க கடைக்கோடி கிராமம் வரை ஓலை அனுப்பியிருக்கிறேன் இளவரசே. இம்முறை வேளாண்மை சிறப்பாய் இருப்பதால் அனைத்து தொழிலும் சிறப்பாய்த் தானிருக்கும், அதனால் வரியினங்களும் கூடும். நான் இருமாதம் என்று குறைத்துத் தான் மதிப்பிட்டிள்ளேன் இளவரசே..." என்றார் விரிவான விளக்கத்துடன் நிதியமைச்சர். "அருமை.. அருமை.. நன்றி அமைச்சரே" என்று பெருமிதத்துடன் வாழ்த்தி அமைச்சரை அமர்த்தினார் இளவரசர் சிவஸ்கந்தவர்மன். 

"இன்னும் யாரிடமாவது கேள்வி கேட்க வேண்டுமா சிவா?" என்றார் மன்னர் சிரித்தவாறே. "போதும் போதும் தந்தையே! இந்தத் தகவல் இப்போதைக்குப் போதும்... நான் விசாரித்து அறிந்ததும் நம் அமைச்சர்களின் பதிலும் ஒரே மாதிரி தான் உள்ளது தந்தையே" என்றார் இளவரசர். "பிறகேன் தாமதம் திட்டத்தைப் பற்றிக் கூறு" என்றார் மன்னர். 

"உத்தரவு தந்தையே!" என்று பேச ஆரம்பித்தார். "நாம் பல மாதங்களாய் எல்லைகளை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசித்து வந்தோம். அதற்குச் சரியான நேரம் இப்பொழுதுதான் அமைந்து வந்திருக்கிறது. அதற்கு முன் நம் பல்லவ அரசின் நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ளவே உங்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன். சரி நாம் தொண்டை மண்டலப் படையெடுப்பைத் தற்போது நிகழ்த்துவதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருப்பினும் முன்னரே தாரளமாய் உரைக்கலாம் உங்களின் கருத்தை!" என்றார் இளவரசர். 

அமைச்சர் ஒருவர் தயங்கியபடி எழுந்து "தவறாக நினைக்க வேண்டாம் இளவரசே! தொண்டை மண்டலப் போர் இப்பொழுது நம் தேசத்திற்கு பாதுகாப்பான போராக இருக்குமா? நாம் இப்போருக்கு அதிகம் முனைப்பு காட்டுவது ஆபத்தில் முடிந்திடுமோ? என்ற பயத்தினால் தான் கேட்கிறேன்" என்று மெல்லிய குரலில் பணிவுடன் கேட்டார். புன்முறுவலை விடுத்து "ஏன் சந்தேகம் அமைச்சரே, எதனால் இவ்வினா உங்களுக்கு எழுகிறது?" என்றார் இளவரசர். 

"இளவரசே தாங்கள் அறியாததில்லை. நாம் தொண்டை மண்டலத்தை அடையும் முன்னர் இடையில் வேங்கட மலையிலிருக்கும் களப்பிரர்களை வீழ்த்த வேண்டும். அதுவும் அடர்ந்த வனப்பகுதி..." என்று இழுத்தார் அமைச்சர். "சரிதான், நீங்கள் சொல்வது மிகச் சரிதான். ஆனால் இப்படியே காரணத்தைச் சொல்லிக் கொண்டே போனால் நாம் எப்பொழுது தான் தொண்டை மண்டலத்தை அடைவது? ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவது? இம்முறை அனைத்து காரணிகளும் நமக்கு சாதகமாய் அமைந்துள்ளது. இம்முறை தவறவிடக் கூடாது அமைச்சரே! அதற்காகத்தான் இவ்வளவு முனைப்பு" என்று ஆக்ரோஷமாய் பேசினார் இளவரசர். 

சாந்தமடைந்து அவரே தொடர்ந்தார். "களப்பிரர்கள் நகர்வுக்கான தடை மிகப்பெரும் தடை. அதில் மாற்றுக் கருத்தில்லை. காரணம் அவர்களின் ராஜ்ஜியம் கொஞ்சம் வலிமையடைந்து வருகிறது. நட்பு நாடுகள் கரம்கோர்த்தும் தனது வலிமையை அதிகரித்து நந்தி மலையிலிருந்தவர்கள் படிப்படியாய் நகர்ந்து இன்று வேங்கடத்தில் வந்து நிற்கிறார்கள். இதில் நமக்கு நன்மை என்னவெனில் அவர்கள் கூட்டங்களாக குழுக்களாகப் பிரிந்து இருக்கிறார்கள். வேங்கடத்தில் இருப்பது களப்பிரர்களின் ஒரு குழுவே. நாம் முன்னறிவிப்பின்றி ஒரு தாக்குதலைக் களப்பிரர்கள் மேல் நிகழ்த்தி அவர்கள் ஒன்றிணையும் முன்னர் அருவா வடதலைக்குள் புகுந்து சோழர்கள் மேல் தாக்குதல் நடத்தி ராஜ்ஜியத்தை நிலை நிறுத்த வேண்டும்!"

"இளவரசே தவறாக எண்ண வேண்டாம்! களப்பிரர்களை வீழ்த்தி நகர்வது சுலபமாய் இருந்தாலும் சோழர்களின் கடல் போன்ற சேனையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? சோழர்களின் வீரத்தைப் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியும். தெரிந்திருந்தும் அவர்களைச் சீண்டுவது புலியின் குகைக்குள் தனித்துச் செல்வதுபோல் ஆகாதா? இது நமக்குப் பின்னடைவைத் தந்துவிடாதா இளவரசே?" என்று பணிவுடன் சொன்னார் தளபதிகளில் ஒருவர். 

"ம்... அருமை... உங்களின் உவமையும் எதிரியானாலும் அவர்களைப் பாராட்டும் விதமும்... நீர் புலவராக வேண்டியவர் தளபதியாரே!" என்று கூறியதும் மண்டபமெங்கும் சிரிப்பொலி பரவியது. "தளபதியாரே நன்றாகவே தெரியும்! தெரிந்த பின்புதான் இந்த முடிவை எடுத்தேன்" என்றார் இளவரசர் புன்னகை மாறாது. தளபதி புரியாமல் இளவரசரை ஆச்சரியத்துடன் பார்த்தார். 

"தளபதியாரே! சோழர்களின் ஆட்சியில் தெளிவு குன்றத் தொடங்கியிருக்கிறது. இதை அறிவீரா தாங்கள்?" 

"ஆம் இளவரசே! செங்கணார் காலத்திற்குப் பிறகு பல குழப்பங்கள் நிலவி வருகிறது" என்று பதிலளித்தார் தளபதியார். 

"தற்பொழுது தலைநகரத்தைப் புகாரிலிருந்து உறையூருக்கு மாற்றி விட்டார்கள், தெரியுமல்லவா தங்களுக்கு?" என்றதும் "ஆம் தெரியும் இளவரசே!" என்று தலையசைத்தார் தளபதி. "தலைநகர் மாற்றத்தினால் நிர்வாகத்தில் குழப்பம் நிலவிவருகிறது. அதை அறிந்தீர்களா?" 

"உண்மைதான் இளவரசே, நிர்வாகத்தில் இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை என்றார்கள் என்னுடைய ஒற்றர்கள்..."

"ஒன்று பரந்த தேசத்தை நிர்வகிக்கும் திறன் வாய்ந்த ஒரு அரசர் சோழநாட்டில் தற்பொழுதில்லை. இரண்டாவது புகாரில் தலைநகர் இல்லை. புகார் தலைநகரமாய் இருந்தால் வேங்கடத்தைத் தாண்டியதும் சோழத்தின் பெரும் சேனை நம் முன் நிற்கும். ஆனால் இப்பொழுது உறையூர் தலைநகர். ஆகவே முன்பிருந்த அளவிற்கு பாதுகாப்பு புகாரில் இருக்காது. மூன்றாவது நிர்வாகத்தில் தற்போதுள்ள குழப்பநிலை. ஆட்சியை நிலைப்படுத்தும் நிர்வாகத்திலே குழப்பம் இருப்பின் அரசனின் மனநிலை தெளிவில்லாமல் தீர்க்கமான முடிவெடுக்க முடியாத நிலையில் தானிருக்கும். சோழர்களுக்கு விசயம் அறிந்து தயாராவதற்கு முன் நாம் அருவா வடதலை நாட்டில் காலூன்றிவிட்டால் சோழ அரசன் நம் மீது போர்தொடுக்க முனைவானா? நிர்வாகத்தைக் கவனிப்பானா? இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பானா?" என்று பதிலையே கேள்வியாய் சபையினரிடம் வைத்தார் இளவரசர் சிவஸ்கந்தவர்மன். 

தளபதியார் முகம் மலர்ந்தபடி "இருப்பதைக் காக்கவே நினைப்பார் இளவரசே." அமைச்சரின் தோள்பிடித்து "இப்பொழுது விளங்கியதா இது சரியான சந்தர்ப்பம். இதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் சொன்னதிற்கான காரணம்?" என்று அனைவரையும் பார்த்து கேட்பது போல் அந்த அமைச்சரிடம் கேட்டார் இளவரசர். சபையோர்கள் அனைவரும் "விளங்கியது இளவரசே!" என்றார்கள். அமைச்சரோ மௌனமாய்த் தலையசைத்தார். இளவரசரும் கையைப்பற்றி அமைச்சரைத் தேற்றி நகர்ந்தார். 

"ஆனால் இதில் மற்றுமொரு சிக்கலும் உண்டு. நாம் போர் தொடுப்பதைக் களப்பிரர்கள் முன்பே அறிந்துவிட்டார்கள் என்றால் நட்பு நாட்டின் துணையோடு நம்மை எதிர்ப்பார்கள். இங்கு தாமதமாகும் நேரத்தில் அவர்களின் நந்திமலையிலிருக்கும் சேனை நம் பல்லவ தேசத்திற்குள் நுழைந்தாலோ அல்லது மற்றொரு முனையிலிருந்து நம்மைத் தாக்கினாலோ நம் திட்டமனைத்தும் வீணாகிவிடும். அதனால் நம் பல்லவ தேசத்திற்குத் தீங்கு நேராதவாறு நகர்ந்து நாட்டை விரிவுபடுத்த வேண்டும்."

"இளவரசே, எப்பொழுது நாம் போர்தொடுக்கப் போகிறோம்?" என்று தளபதி கேட்டார். "இன்னும் பத்து நாட்களில்...!" என்றார் இளவரசர். "அதற்கு முன் படையெடுப்புக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் சேகரித்துத் தரம் பார்த்துக் கொள்ளுங்கள். வீரர்களை நம் இளைஞர் பயிற்சிப் பட்டறையிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். போர் தொடுக்கப் போகிறோம் என்பதை மட்டும் ரகசியம் காத்து வைத்திருங்கள்...!"

"சந்தேகமோ இல்லை மாற்றுக் கருத்தோ இருப்பின் தாராளமாய்க் கூறுங்கள்" என்றார் சாந்தமாய் இளவரசர். இம்முறை அனைவரும் "சம்மதம் இளவரசே!" என்று ஒற்றைக் குரலில் கூறினார்கள். அனைவரும் ஒத்துழைக்கும் படி கேட்டு சபைக்கு வணக்கத்தையும் நன்றியையும் கூறி அமர்ந்தார் இளவரசர். 

"நீங்கள் அனைவரும் விடைபெறுவதற்கு முன் உங்களிடம் என்னுடைய மனந்திறந்து சில விசயங்களைப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார் கொஞ்சம் தழுதழுத்த குரலில் மன்னர். சபையினர் அனைவரும் நகராது மன்னரையே பார்த்து அமர்ந்திருந்தார்கள். 

"நாம் இப்பொழுது சந்திக்கப் போகும் போரானது ஒருநாளுக்கான போரில்லை! ஒரு தலைமுறையினரின் கனவை நினைவாக்கக் கூடிய போர். இதுவரை போராடி வாழ்ந்து வந்த தேசத்தின் உயர்வை உலகிற்குப் பறைசாற்றிடும் போர். இதுபோன்றதொரு நாள் அமையாதா என ஏங்கிய நாட்கள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியுமா? நம் தேசத்து மூத்த குடிகளைக் கேளுங்கள். அப்பொழுது உங்களுக்குப் புரியும். நாம் இப்பொழுது பெறும் வெற்றி ஒவ்வொன்றும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தென உணருங்கள். நம் பல்லவ தேசத்தின் உயர்வுக்காக நாமிட்டிருக்கும் விதை என்று உணருங்கள். இன்று யாருக்கும் அடிமையில்லாது பல்லவ தேசத்தை மீட்டு வந்துவிட்டோம். ஆனால் பல்லவ தேசம் மாபெரும் சாம்ராஜ்யமாய் ஜொலிக்க நாம் எடுக்கும் இந்த அடி மிக முக்கியமானது. பிசகினால் வீழ்வது நாம் மட்டுமில்லை நம் தேசமும் நம் முன்னோர்களின் கனவும் நம் சந்ததியினரின் எதிர்காலமும் தான். நினைவில் வைத்து செயல்படுங்கள்...!" என்று போருக்கான காரணத்தை உணர்வுப்பூர்வமாய் அவையிலிருக்கும் இளங்காளைகளுக்கு விளக்கினார். 

சபையிலிருந்த அனைவரும் போருக்கான முக்கியத்துவத்தை உணரத் துவங்கினார்கள். அனைவருக்குள்ளும் புதுரத்தம் பாய்ந்தது போல் இருந்தது.

"இளவரசர் போரின் வியூகத்தை விபரமாய்த் தெளிவாய் விளக்கி விட்டார். போர் தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டியதை உங்களுக்குக் கூற நினைக்கிறேன். நாம் முதலில் நம் தளபதிகளின் கீழிருக்கும் ஒற்றர் குழு களப்பிரர்களின் எல்லைக்குள் சென்று நிலவரத்தைக் கண்காணித்து மீண்டுமொரு முறை உறுதி செய்து செய்தி அனுப்பட்டும், பிறகு வீரர்கள் சிறுசிறு குழுக்களாய் வனத்திற்குள் பிரவேசிக்கட்டும். இங்கிருந்தே ஒன்றிணைந்து செல்வது வேண்டாம். வனத்திற்குள் சென்று பெரும் படையாய் உருவெடுக்கட்டும். நான் ஏன் இதைச் சொல்ல வருகிறேன் என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எள்ளளவும் எதிரிக்கு சந்தேகம் வராமல் நம் நகர்வு இருக்க வேண்டும். தெளிவாய் அதே நேரத்தில் நிதானத்துடன் இருங்கள்!" என்று அறிவுரையையும், ஆலோசனையையும் மன்னர் கூறி முடித்ததும்...

"அரசே நீங்கள் உரைத்ததை அனைவரும் நிச்சயம் நன்கு உணர்ந்திருப்பார்கள். உங்களின் ஆசியைக் கூறி வழியனுப்பி வையுங்கள்" என்றார் தலைமை அமைச்சர். "நிச்சயமாய்...!" என்று ஆசனத்திலிருந்து கம்பீரமாய் எழுந்து நின்றார். அனைத்து தளபதிகளும் அமைச்சர்களும் மற்றும் இளவரசரும் முன்கால் மண்டியிட்டுத் தலைவணங்கி நின்றார்கள் அரசர் பப்பதேவரின் முன். வலக்கையை உயர்த்தி "விஜயீ பவ... சிரஞ்சீவி பவ..." என்று ஆசி வழங்கினார். அனைவரும் எழுந்து அமைதியாய் நின்றார்கள். "சரி. இனி ஆக வேண்டிய வேலையைக் கவனியுங்கள். தீர்க்கமாய் திடமாய் இருங்கள்" என்று கூறி அனைவரையும் வழியனுப்பி வைத்தார் பல்லவ மன்னர். 

"உத்தரவு அரசே!" என்று விடைபெற்றார்கள் அனைவரும். இளவரசர் தனக்கான பணியைச் செய்ய வேகமாய்க் கிளம்பினார். மன்னர் மட்டும் தனியாய் நின்று கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் இரு போரைச் சந்திக்கப் போகும் வீரர்களை எண்ணி மன வருத்தமும் இந்தச் சமயத்தை நழுவவிடக் கூடாது என்ற எண்ணமும் அவருள் ஓடிக் கொண்டிருந்தது.

என்ன நடக்கும் பார்ப்போம்....

- சதீஷ் விவேகா

#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 





#109/2018/SIGARAMCO
2018/06/28 
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02  
https://www.sigaram.co/preview.php?n_id=335&code=b4hzgUix
பதிவர் : சதீஷ் விவேகா
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம்
#சிகரம் 


இந்தப் பதிவு https://www.sigaram.co இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் https://sigaram-one.blogspot.com/ வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 'வானவல்லி' தளத்தின் ஊடாக நீங்கள் 'முடி மீட்ட மூவேந்தர்கள்' தொடரைத் தொடரலாம். சிரமத்திற்கு வருந்துகிறோம்.

சிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்: 

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

பெயர் : தங்க வேல்முருகன் 
ஊர் : விருத்தாசலம் அருகில், திருமுட்டம் வட்டம், மருங்கூர் கிராமம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. 
படிப்பு : தமிழில் எம்.ஏ, எம்ஃபில்.
வேலை : சிங்கப்பூரில் 
படைப்பு : சமீபத்தில் வெளியிட்ட 'நினைப்பதற்கு நேரமில்லை' கவிதை நூல்.

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

நல்ல படைப்பு சமூக விழிப்புணர்வு முன்னேற்றத்தைப் பற்றியே இருக்க வேண்டும். 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 

விழிப்புணர்வு தேவை 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

மொழிதான் குழந்தைக்குத் தாய் போன்றது. 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

யாரையும் பிடிக்கவில்லை என்று ஒதுக்கக் கூடாது. மற்றவருக்கு உதவிக் கொண்டே மகிழ்வுப்படுத்த வேண்டும். 



கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேணடுமா? 

கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும், எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 

அழியாது. புத்தக வாசிப்பைத் தூண்டுமளவுக்கு எழுத வேண்டும். மேலும் கணினியும் ஓர் காப்பகம் தானே?

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

எடுத்துக் கொள்கின்ற மனநிலையைப் பொறுத்தது. 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

அறிவுமதி, கரிகாலன், இமயம், கண்மணி குணசேகரன், இரத்தின புகழேந்தி. 

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். படிக்கவும் படைக்கவும் தூண்ட வேண்டும். 

-சிகரம் 

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A #SIGARAM #சிகரம் 

#108/2018/SIGARAMCO 
2018/06/28 
சிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்  
https://www.sigaram.co/preview.php?n_id=334&code=TIRVZDxY  
பதிவர் : தங்க. வேல்முருகன்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A #SIGARAM 
#சிகரம்

Monday 25 June 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01

வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படிந்திருக்கும். அதை மறக்க நினைப்போரும் உண்டு... மறைக்க நினைப்போரும் உண்டு... அதேபோல் மறை(ற)ந்து இருக்கும் வரலாறு இன்றளவும் தமிழக வரலாற்றில் உண்டு. அதை வெளிக்கொணரப் பல வரலாற்று அறிஞர்கள் தங்களின் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் ஆய்வுகளை மையமாய்க் கொண்டு தமிழக வரலாற்றையும் இருண்ட காலத்தைப் பற்றியும் சோழர் சரித்திரத் தேடல் என்ற தலைப்பில் கட்டுரை வடிவில் அளித்தார் திரு. மாரிராஜன் அண்ணண் அவர்கள். அவரளித்த தீக்குச்சியின் வெளிச்சத்தின் மூலம் இருண்ட காலத்தைக் காண ஆவல் கொண்டேன் நான். அந்த ஆவலே இந்தக் காலத்தைப் பற்றி எழுதவும் தூண்டியது. அந்தக் காலத்தை நோக்கிப் பயணப்படப் பல ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் பல நல்லுள்ளங்களின் ஆதரவும் இத் தொடரை எழுத வழிநடத்திச் சென்றது. யாரைப் பற்றியது? எந்தக் காலமது? என்ன நடந்தது? பார்ப்போம்.

காலத்தால் கணிக்க இயலாத தொன்மை வாய்ந்த தமிழினம், பெரும் காவியங்களையும் இலக்கியங்களையும் படைத்து மொழியுடன் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரத்தையும் வளர்த்துக் கொண்டிருந்த காலத்தில் வேங்கட மலையை ஒட்டிய பகுதியை அரசாட்சி செய்த வம்சமொன்று பெரும் படையுடன் தொண்டை மண்டலத்தின் வழியே சோழ தேசத்தினுள் நுழைந்து சோழத்தைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வந்து, பின் பாண்டிய தேசத்தையும், சேர தேசத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சுமார் (கி.பி 250 முதல் கி.பி 575 வரை) முன்னூறு ஆண்டுகள் மூவேந்தர்களையும் அடக்கியாண்டு ஆளுமை செலுத்தி வந்தார்கள் களப்பிரர் எனும் ஓர் இனம். இவர்கள் யார்? இவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த போர்கள், அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை, சமயநெறிகள், மன்னர்களின் ஆட்சி முறைகள் என எந்தத் தகவலும் பெருமளவு கிடைக்கப் பெறவில்லை. சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், பெரிய புராணப் பாடல்கள் மூலம் மட்டுமே இவர்களின் தகவல்களை அறிய முடிகிறது. அவ்வாறு கிடைத்த தகவல்களை வைத்தே தமிழ் நாட்டில் களப்பிரர்கள் ஆளுமை செலுத்தியதை ஆய்வு செய்துள்ளார்கள் ஆய்வாளர்கள். அவர்களின் ஆய்வு நூல்களை அடிப்படையாய்க் கொண்டு நான் இத்தொடரை எழுதியுள்ளேன். இந்தத் தொடர் அக்கால நிகழ்வை ஓரளவேணும் உணர்த்தும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். இனி பயணிப்போம்.


அகண்ட பாரதம் அன்று பல நாடுகளாய்ப் பிரிந்திருந்த காலம். நாட்டின் மன்னர்களுக்கிடையே தன் நாட்டை விஸ்தரிக்கும் எண்ணம் மேலோங்கிப் பல பிரிவுகளைக் கொண்ட படைகளின் மூலம் அண்டை நாட்டைப் பிடித்துத் தம் வீரத்தைப் பறைசாற்றி வந்த சமயம். அந்த சமயத்தில் பாரதத்தின் வடக்குப் பகுதியில் நந்தவம்சத்தை சாண்டில்யரின் துணையுடன் சந்திர குப்த மௌரியர் வேரோடு அழித்து சந்திர குப்தர் தலைமையில் மகத தேசத்தைக் கைபற்றிக் கொண்டு மௌரிய வம்சம் பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியது.

அதே சமயத்தில் தமிழகத்தில் மூத்த குடிகளான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். பொன்னாலான மாடமாளிகைகள் அமைத்தும் அதற்கு அரண்களாய் அகழியையும், கோட்டை மதில்களையும், நேர்த்தியான வடிவமைப்பில் நகரங்களைக் கட்டமைத்தும் நாட்டையும் மக்களையும் காக்கப் பலவகைப் படைகளைக் கொண்டும் பல்வகைத் தொழில்களைக் குடிகள் செய்து கொண்டிருக்க நேர்மையுடன் ஆட்சி செய்து வந்தார்கள் மூவேந்தர்கள்.

கடல்வழியே கிரேக்கர்களுடனும், ரோமானியர்களுடனும் இன்னும் பிற தேசத்தவருடனும் முத்து, அகில், சந்தனம் மற்றும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்து தன் நாட்டின் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள் மூவேந்தர்கள். உள்நாட்டு வாணிகமும் முறைப்படுத்தப்பட்டு ஐவகை நில மக்களும் தங்களிடம் உள்ள பொருட்களுக்கு மாற்றாய்ப் பிற பொருட்களைப் பெற்று பண்டமாற்று முறையின் மூலம் சிறப்பாய் வாணிபம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மௌரியப் பேரரசை உயர்நிலைக்கு உயர்த்தியவரான அசோகர் தென்னகத்தின் அழகில் மயங்கி மகதத்திலிருந்து தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்தார். 

அசோகரின் படை வடக்கு எல்லையை விரிவுபடுத்தி, வரும் வழியெங்கும் வெற்றி மாலை சூடி பாரத்தின் தென்கோடிக்கு மௌரியர்களின் காலாட்படை, பெரிய தேர்ப்படை, யானைப் படை குதிரைப்படையுடன் வடுகர்களின் படையும் மற்றும் கோசர்களின் படையும் சேர்ந்து வந்தது.

முதலில் வடுகர் படை துளுவ நாட்டிற்குள் நுழைந்து பட்டத்து யானையை வீழ்த்தி அரசனான நன்னனையும் வீழ்த்தி , துளுவநாட்டின் தலைநகரமான பாழியையும் கையகப்படுத்தி படைகளுடன் அங்கேயே தங்கித் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டார்கள் வடுகர்கள். கோசர் படையானது சேர தேசத்திற்குள் நுழைந்து சேரரையும் கைக்குள் அடக்கிவிட்டு முன்னே வடவடுகரான கோசரின் படையை விட்டு, பின் மௌரியப் பேரரசின் பெரும் படை சோழநாட்டிற்குள் நுழைந்தது. வந்தவர்கள் அழுந்தூர் வேளான திதியனைத் தாக்கினார்கள். வேங்கையாய்ப் பாய்ந்து தாக்கினார் திதியனும். இப்படையெடுப்பை அறிந்த சோழ மன்னனான இளஞ் சேட்சென்னி தனது படையுடன் வந்து கோசரை வீழ்த்தி சோழ நாட்டை விட்டுத் துரத்தியடித்தது மட்டுமில்லாமல் இனி தெற்கே வரவேண்டும் என்ற எண்ணமே மௌரியர்களுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் துளுவ நாட்டிலுள்ள பாழி வரையும் இளஞ் சேட்சென்னி துரத்தி வந்து பகைவர்களின் படையை அழித்து ஒழித்து காவல் நிறைந்த பாழியையும் சேர நாட்டையும் மீட்டெடுத்தார். இதனாலேயே இவர் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்றழைக்கப்பட்டார். 

வட இந்தியாவிலிருந்து தற்போதைய மைசூர் வரை தன்னாட்சிக்குக் கீழ் கொண்டு வந்து தன்நாட்டை விஸ்தரித்த அசோகர் தென்னாட்டை மட்டும் கைப்பற்ற முடியாமல் சோகமாய்த் திரும்பினார். இதற்குப் பிறகு மூவேந்தர்களுக்கிடையே பெரும் மனமாற்றம் ஏற்பட்டு வடநாட்டவர்களின் படையெடுப்புகளை ஒன்றுபட்டு எதிர்த்தார்கள். இதனால் வடநாட்டினர் தென்னாட்டின் மீது படையெடுப்பது என்பது பொய்த்துப் போய்க் கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது சிறுசிறு எல்லைப்போர்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. 



மௌரியர்களின் ஆட்சியில் அசோகர் மறைந்ததும் மத்தியில் திறமையான ஆட்சியின்றி தடுமாறியது மகதம். வாரிசு சண்டைகள், உள்நாட்டுக் கிளர்ச்சிகள், பிறநாட்டினர் படையெடுப்புகள் போன்ற காரணங்களினால் மௌரிய வம்சம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்தது. அசோகரின் காலத்தில் சாதவாகனர் என்ற ஆந்திர தேசத்தவர்கள் அம்மாகாணத்தை மௌரியர்க்குக் கட்டுப்பட்ட அரசர்களாய் அரசாட்சி செய்துவந்தார்கள். மௌரியர்கள் வீழ்ச்சிக்குப்பின் ஆந்திர தேசத்தை சுயராஜ்ஜியமாக்கி அரசாளத் துவங்கிவிட்டார்கள். இவர்களை எதிர்த்தவர்களை எல்லாம் வலிமையான காலாட்படை, குதிரை மற்றும் யானைப் படை கொண்டு அடக்கி ஆளுமை செலுத்தினார்கள். வடக்கே கங்கையிலிருந்து தெற்கே வேங்கட மலையின் எல்லை வரை விரிந்து பெரும் சாம்ராஜ்யமாய் வளர்ந்தது. 

சாதவாகனர்கள் தங்கள் தேசத்தைப் பல மாகாணங்களாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் தனக்குக் கீழ்ப்படிந்த சிற்றரசர்களுக்கு நிர்வாகப் பொறுப்பைக் கொடுத்து சாதவாகனர் அவர்களின் பேரரசை ஆட்சி செய்து வந்தார்கள். சாதவாகனர்களின் தென்பகுதியின் ஆட்சிப்பொறுப்பைப் பல்லவர்கள் ஏற்றிருந்தார்கள். அந்தச் சமயத்தில் பல்லவர்களுக்கும் தெற்குப்பகுதியில் உள்ள சிற்றரசர்களுக்கும் பல எல்லைப்போர்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. எத்தனை பேர் பல்லவர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் தென்பகுதியின் மேல் போர் புரிந்தாலும் தன்னிலையை இழக்காது எதிர்த்து வந்தவர்களை வலிமையுடனும் சிறப்பான திட்டமிடுதலுடனும் துரத்தியடித்தார்கள். இவ்வாறு அடிபட்ட பாம்பாய் அடங்கியவர்களில் களப்பிரர்களும் ஒருவர். 

அடிமை நாடாய் இருப்பதை விரும்பாத களப்பிரர்களின் மேல் பல்லவர்கள் பலமுறை போர் தொடுத்தார்கள் காரணம் களப்பிரர்களின் வாழும் வேங்கட மலை பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள அடிக்கடி எல்லைத் தகராறு நடந்து வந்தது. ஒவ்வொரு முறையும் தன்னுடைய வேங்கட மலைப் பகுதியைக் கைவிடாமல் எதிர்த்து நின்றார்கள் களப்பிரர்கள். சற்று வலிமை பெற்றதும் பல்லவர்களின் இடத்தைக் கைப்பற்றக் களப்பிரர்கள் போர் தொடுத்தார்கள். இவ்வாறு இருவருக்குள்ளும் அடிக்கடி போர் நிகழ்வது வாடிக்கையாய் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வீழ்த்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் இந்தக் களப்பிரர்கள்? 

கருநாட தேசத்திலிருந்து மைசூர் தேசத்தின் சிரவண பௌகொள வட்டாரத்தில் கோலாரிலுள்ள (கோலாலபுரம்) நந்தி மலையை உள்ளடக்கிய தேசமாய் இந்த களபப்பு ராஜ்ஜியம் இருந்தது. இந்தப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தவர்களே களப்பிரர்கள் ஆவார். வேளாண்மையை முதன்மைத் தொழிலாய்க் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு ராஜ்ஜியத்தின் கீழ் சிற்றரசர்களாய் அரசாட்சி செய்தவர்கள் களப்பிரர்கள். இவர்களின் ஆட்சிமொழி பாலி, பிராகிருதம் ஆகும். இவர்களின் சமயம் எது என்பது தெளிவாய்த் தெரியாவிட்டாலும் சமண, பௌத்த மதங்களைப் பெருமளவு இவர்கள் ஆதரித்து வந்தார்கள். சங்கப் பாடல்களில் திருமாலை வழிபட்டதாய்க் குறிப்பிடுகிறார்கள்.

காலங்கள் உருண்டோட கி.பி மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர்கள் வேங்கட மலை வரை தங்களின் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள். இந்தக் காலட்டத்தில் மொத்தத் தென்னிந்தியாவும் பல ஆட்சி மாற்றங்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. மூவேந்தர்கள் பல எல்லைப் போர்களைக் கொங்கு நாட்டை ஆட்சி செய்து வந்த சிற்றரசர்கள் மீது நடத்தத் துவங்கினார்கள். தனது எல்லைகளை விரிவுபடுத்தும் வேட்கை வேகமாய்ப் பரவி வந்த சூழலில் சாதவாகனர்களும் தங்களின் பலமான ஆட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தும் வந்தார்கள். இது பல ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது. 

தனது வீரத்தைப் பறைசாற்றும் எண்ணத்தில் அடிக்கடி போர் நடத்தினார்கள் அன்றைய தென்னக அரசர்கள். இதனால் நாட்டின் நிதி, நிர்வாகம் அனைத்தும் குலையத் தொடங்கியது. தென்னகத்து சிற்றரசர்களின் வலிமை அதிகரிக்கத் தொடங்கி மூவேந்தர்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது.

சாதவாகனர்களின் பெரும் ராஜ்ஜியம் வீழத் தொடங்கியதை அறிந்த பல்லவர்கள் முன்னெச்சரிக்கையாக சுதாகரித்து தனக்கானதொரு சுயராஜ்ஜியத்தை நிறுவ முற்பட்டார்கள். தென்னகதில் தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் இருந்த பகுதிகளை முழுமையாய்த் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஸ்திரமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டதும் தனது எல்லைகளை விரிவுபடுத்தும் எண்ணம் தானாய் அவர்களுக்குள் பிறந்தது. 

அந்தக் காலத்தில் சோழப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த தொண்டை மண்டலத்தைத் தன்னுடைய ஆளுகைக்குக் கீழ்க் கொணர்ந்திடப் பேராவல் கொண்டார்கள் பல்லவர்கள். அன்று அருவா நாடு, அருவா வடதலை நாடு என இரண்டு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது இம்மண்டலம். கல்வியிலும் வளமையிலும் வேத சாலைகளும் புத்த விகாரங்களும் சைவ வைணவ ஆலயங்களும் யவனர்கள் வாணிகம் செய்யும் இடமாகவும் சிறப்புற்று இருந்தது தொண்டை மண்டலம். இவ்வாறு அழகான தேசமாய்த் தொண்டை மண்டலம் விளங்கிட சோழப் பேரரசரான கரிகாலரின் பெரும் முயற்சியே காரணமாய் இருந்தது. 

கரிகாலரை சேர, பாண்டியர் என இரு அரசர்களும் வெண்ணி எனும் இடத்தில் எதிர்த்தனர். அவர்களை வென்று பின் தென்பாண்டியும் சேர நாட்டையும் வென்று தன்னுடைய சோழப்பேரரசின் கீழ் சேர்த்து வடக்கு நோக்கி நகர்ந்து அருவா நாட்டை அடைந்து அங்கிருந்த குறும்பரை அடக்கி அருவாளரையும் வென்று வேங்கட மலை வரை தனது சோழநாட்டை விரிவுபடுத்தினார் கரிகாற் சோழர். தொண்டை மண்டலத்தை இருபத்தி நான்கு கோட்டங்களாகப் பிரித்து அங்கு வேளாளர்கள் பலரைக் குடியமர்த்தி இந்த இரு நாடுகளையும் தொண்டை மண்டலம் என்ற ஒரு தேசமாக்கி அதன் தலைநகரமாகக் காஞ்சியை நிர்மாணம் செய்து அகழி சூழ்ந்த பெரும் அரண் அமைத்து பெரும் மாட மாளிகைககள் அரண்மனைகளை அமைத்து அந்த தேசத்திற்கு தன் இனத்தவரில் ஒருவரை சிற்றரசராய் நியமித்து காடுகளை சம நிலமாக்கச் செய்து நீரினை சேமிக்கப் பல ஏரிகள் அமைத்து வாய்க்கால் மூலமாய் நாட்டின் மூலைக்கும் நீரைக் கொண்டுபோய்ச் சேர்த்து துளிநீரும் வீணாகாமல் மதகுகள் பல அமைத்து வேளாண்மை செழிக்கச் செய்தார். சோழ நாடு சோறுடைத்து என்ற சிறப்பும் கிடைத்தது. பிறகே வடக்கு நோக்கித் தன் படையுடன் சென்று பல தடைகளைத் தகர்த்து இமயத்தில் புலிக்கொடியை நிலைநாட்டினார் கரிகாற் சோழர்.

இவ்வாறு கரிகாற் சோழரின் ஆட்சியில் உதயமான தொண்டை மண்டலமானது பொன் விளையும் பூமியாக விளங்கியது. அவருக்கு பிறகு வந்த சோழ அரசர்களும் தொண்டை நாட்டையும் அதன் தலைநகரமான காஞ்சியையும் கண்ணிமைபோல் பேணிக்காத்து வந்தார்கள். கலையிலும், கல்வியிலும், கேள்விகளிலும், வேதங்களைப் போதிப்பதிலும் சிறந்து பல சமயங்கள் கலந்திருந்தாலும் தனித்துவமாய்க் காஞ்சி விளங்கியது. ஆனால் கால மாற்றத்தில் இப்பெருமை மிக்க தேசம் பல காரணங்களினால் சோழத்தின் கரத்திலிருந்து நழுவியது. தொண்டை மண்டலம் நழுவிய காரணத்தால் தென்னகத்தில் பல மாற்றங்களும் நிகழ்ந்தது. எப்படி?

மீண்டும் வருவோம்...

- சதீஷ் விவேகா

#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 




#107/2018/SIGARAMCO 
2018/06/25 
பதிவர் : சதீஷ் விவேகா 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

இந்தப் பதிவு https://www.sigaram.co இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் https://sigaram-one.blogspot.com/ வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 'வானவல்லி' தளத்தின் ஊடாக நீங்கள் 'முடி மீட்ட மூவேந்தர்கள்' தொடரைத் தொடரலாம். சிரமத்திற்கு வருந்துகிறோம்.

Popular Posts