Saturday 26 August 2017

தங்கைக்கோர் கவிதை

தாய் வழியே
தங்கையாய் வந்தவளே...
தமையன் எழுதுகிறேன்
தங்கைக்கோர் கவிதையை...

ஐயிறு திங்கள்
எனைத் தாங்கிய மடி
உனைத் தாங்கிட...
ஓராயிரம் கனவுகள்
என்னுள்...

தந்தையின் உயிர்கொண்டு...
தாயின் உடல்கொண்டு...
தமையனின் அன்பைக்காண
தரணியில் வந்தவளே...



நீ பிறந்த கணத்தில்
நெடுந்தவம் நானிருக்க..
குதித்து வந்தாய்
கலையாய் நீயும்...

மருத்துவமனை ஊஞ்சலில்
மோகனப் புன்னகை
வீசி நீ படுத்திருக்க...
விசும்பியதே கதிரவனும்
தன் ஒளியிழந்து...

தாமரை மொட்டாய்
பூத்து நீயிருக்க...
தாமரை இதழாய்
அங்கமெங்கும் உன் நிறமிருக்க...

கோகுலத்து கண்ணணாய்
கோவையில் பிறந்தவளே- உன்
அழகைப் பார்த்து மயங்கி
அம்புலியும் உதிக்க மறந்ததே...

இவையனைத்தையும் பார்த்து
அருகில் வந்து
உன் விரலை  நான் தொட...
பற்றிக் கொண்டவள்

இன்றுவரை விடவில்லை...
கலையின் அம்சம்
கொண்டவளடி நீ...
காயத்திரியாய் ஆனாயடி...

தவழ்ந்து வந்து
தாவி ஏறி
மார்பில் பாதம்பதித்து
மதியில் நிறைவாயடி நீ...

பிரியமனம் கேளாது...
பிரிந்த நாளும் ஓடாது...
ஆசையாய் அண்ணாயென்று
அழைக்கையில் அகிலமும் மறக்குமடி...

ஆசைகள் பலவுண்டு...
அக்கறையும் அதற்குமேலுண்டு
உன்மேல் எனக்கு - அதை
உணர்த்திட வார்த்தையில்லை...

தரம் உள்ளவனாய்...
கண்ணியம் உள்ளவனாய்...
உன் மனம் புரிந்தவனாய்...
எங்கள் மனம் கவர்ந்தவனாய்...

உனக்கு வரன் பார்த்து...
நீ மாலையிடும் முன்னரே
நான் மாலையிட்டு
கரம்பிடித்து திலகமிட்டு...

மணமேடையில் அமர்த்தி
மங்கள நாண்
கழுத்தில் ஏறிடும்
அந்நேரத்தில் மகிழ்ந்து நீயிருக்க...

உன் முகம் பார்த்து
ஓரத்தில் வழியும்
என் விழி நீரை
என்னுள் புதைத்து...

உள்ளங்கை பிடித்து
உரித்தானவனிடம் ஒப்படைத்து...
உச்சி முகர்ந்து
முத்தமிட்டு வழியனுப்பிவைத்து...

பிறிதொரு நாளில்...

தங்கைக்கு தேவதையாய்
தளிரொன்று பிறந்திட...
தாய்மாமனாய் நான் மடிதாங்கி
தங்கத்தை தங்கத்தால் வார்த்தெடுத்து...

பிஞ்சின் சிறுநீர் - என்
புத்தாடையை நனைத்திட
சிறுநீரும் பன்னீராய்
மணக்குமடி ...
அந்தாடையையும் பொக்கிஷமாய்
காப்பேனடி...

தாயிற்கு அடுத்து - இந்த
தாய்மாமன் மறவாது
காப்பேன் என்
கண்ணின் மணியாய்..

இந்த வரம்
மட்டும் தந்திடடி...
தங்கையே இது
தமையனின் வேண்டுகோளடி...


- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -

கவிஞரின் குறிப்பு:
என் தங்கை ( சிற்றப்பாவின் மகள்) ஆசையாய் எனைக் கேட்டாள், அவளைப் பற்றிய கவிதையை .. .தங்கைக்காக தமையனின் கவிதை...

No comments:

Post a Comment

Popular Posts