Showing posts with label ஆய்வுக் கட்டுரை. Show all posts
Showing posts with label ஆய்வுக் கட்டுரை. Show all posts

Wednesday, 6 December 2017

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02

வணக்கம் நண்பர்களே!

இலக்கணம் :

ஒரு மொழிக்குச் சிறப்பையும் அழகையும் கொடுப்பது அம்மொழிக்கான இலக்கணம் தான். இலக்கணம் என்பது மொழியைத் தவறில்லாமல் கற்க பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்கு கட்டுப்பட்டுத்தான் மொழிகள் இயங்கும். உயிருள்ள எந்த ஒரு மொழிக்கும் இந்த இலக்கணம் இன்றியமையாதது. நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றளவும் “கன்னித்தமிழ்” என்ற சிறப்பைப் பெற்று தமிழ்மொழி தன் இளமையும் இனிமையும் மாறாமல் இருப்பதற்கு காரணம் நம் இலக்கணமே.

முத்தமிழ் இலக்கணம் :

உலகில் உள்ள பல்வேறுபட்ட மொழிகளில் இலக்கணம் என்பது எழுத்துக்கும், சொல்லுக்கும் பொருளுக்குமாக இருக்கும். ஆனால் நம் மொழியாம் தமிழ்மொழியில் இயல், இசை மற்றும் நாடகம் என மூன்று பிரிவுகளைக் கொண்டு முத்தமிழ் என்று போற்றப்படுகிறது. இம்மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியே இலக்கணம் உண்டு. முத்தமிழுக்குமாய் இலக்கணம் கொண்ட நூல் அகத்தியம் ஆகும்.



இசைத்தமிழ் இலக்கணம் :

இசைத்தமிழ் பண்ணிசைத்துப் பாடும் தமிழ். இசைக்கான இலக்கணம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இனிமையாக இயற்றப்படுகிறது. இயற்றமிழில் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்களும், அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பண்ணிசைகளும், அருணகிரிநாதர் , வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முத்துத் தாண்டவர் போன்றோரின் பாடல்களும் இசைத்தமிழே.

நாடகத்தமிழ் இலக்கணம் :

நாடகத்தமிழ் கூத்து பற்றி வழங்கும் தமிழ். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தை கூத்து என்பர். இக்கூத்து தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இயற்றமிழ் இலக்கணம் :

செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதியே இயற்றமிழாகும். இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இயற்றமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி என்பதாகும்.

இயற்றமிழின் ஐந்து வகைகளைப் பற்றியும், இவ்விலக்கணம் எவ்வாறு இலக்கியத்துடன் தொடர்பு கொண்டது என்பதையும் அடுத்த பதிவில் காண்போம்!!!

(தொடர்கிறேன்...)

இப்பதிவு பதிவர் பௌசியா இக்பால் அவர்களின் படைப்பாகும்.

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02 - பௌசியா இக்பால் - சிகரம் 

#சங்கஇலக்கியம் #இலக்கியம் #ஆய்வுக்கட்டுரை

Tuesday, 28 November 2017

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01

வணக்கம் நண்பர்களே!

இந்தப்பதிவு என் நீண்ட நெடுநாள் ஆசை. இதனைப்பற்றி விரிவாக, தெளிவாக, அழகாக பேசவேண்டும் என்பது என் விருப்பம். இனிவரும் நாட்களில் இந்தத் தலைப்பில் நான் தரும் பதிவுகள் அனைத்திற்கும் நண்பர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விவாதங்களையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன். விவாதமற்ற பதிவு கிணற்றில் இட்ட கல் என்பது என் கருத்து. இவ்வளவு பீடிகையுடன் துவங்குகிறது என்னவாக இருக்கும்? இதுவரை படிப்பவர்களின் மனதில் இந்த வினா எழுந்திருக்கும். இனியும் தாமதிப்பது தவறு என்பதால் கூறிவிடுகிறேன்.



நான் பெரிதும் விரும்பும், இன்று என்னை நானே புடம்பார்க்க செய்யும், ஒவ்வொரு நாளும் எனக்கு புதியதாய் ஒன்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும், அமுதினும் இனிய, என்றும் இளமை மாறா, தினம் தினம் புதுப்பொலிவுடன் வளர்ந்து கொண்டிருக்கும் எம் மொழியாம் “தமிழ்மொழி” பற்றிய பதிவு தான் இனிவரும் நாட்களில் நான் தொடரவிருக்கிறேன்.

இவ்வளவு சிறப்பாக பேச, தினமும் ஓய்வின்றி பேச அப்படி என்ன இருக்கப்போகிறது தமிழ்மொழியில்? தமிழக எல்லையை தாண்டினால் மதிப்பற்ற ஓர் மொழி இது. நுனிநாக்கு ஆங்கிலம் உலகம் முழுவதும் சுற்றி வர உபயோகப்படுகிறது. வடநாட்டு ஹிந்தி தெரிந்து இருந்தால் மத்திய அரசாங்கத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலையையும், இந்தியாவில் எங்கு சென்றாலும் தடையின்றி அனைவருடனும் பேச தொடர்புகொள்ள ஏற்ற மொழி.

இப்படிப்பட்ட எந்த சிறப்புமற்ற, பயனுமற்ற தமிழ்மொழியைப் பற்றி பேச என்ன இருக்கிறது? என எண்ணம் கொண்ட நண்பர்கள் நிச்சயம் இப்பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

“நான் ஏன் இம்மொழியை பெரிதும் விரும்பிகிறேன்?” என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்ட கேள்வி இது. நான் படித்தது தமிழ்வழி கல்வி. பள்ளிநாட்களில் என்னுடன் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியை பிழையுடன் எழுதுவார்கள். நான் பெரும்பாலும் பிழையுடன் எழுதமாட்டேன். அந்நாட்களில் எனக்கு ஒரு கர்வம் எனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்று!   (என் அறியா வயதின் மாபெரும் சாதனை இது) அதன் பின், மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே சித்திர கதைகள், சிறுகதைகள் இவற்றை எல்லாம் படிப்பேன். பெரும்பாலும் இவை அனைத்தும் தேவதைக் கதைகள், மாயவிநோத கதைகள். இவற்றைப் படிக்கும் போது என் மனதில் கற்பனை உருவங்கள் தோன்றி என் அகக்கண்ணில் அக்கதையை கண்டு இரசிப்பேன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அப்பாவுடன் நூலகம் சென்று எனக்கென தனியாக பயனர் அட்டை பெற்றுக்கொண்டேன். மாதத்தில் இருமுறை நூலகத்தில் பாதிநாளாவது செலவழிப்பேன். மறக்கமுடியா தருணம் அது!!!

தமிழ்வழிக்கல்வி என்பதால் பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களை படித்ததில்லை.. (எட்டாம் வகுப்பிற்கு பிறகு) பாடத்தில் இருக்கும் non detailed கதைகளைப் படித்தபின் ஆங்கில புத்தகங்களையும் தேடிப்படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டேன். என்னதான் ஆங்கில புத்தகங்களைப் படித்தாலும் தமிழ்மொழியில் கூறப்பட்டிருக்கும் கதைகள், கற்பனைகள் ஏற்படுத்திய தாக்கத்தை எனக்கு ஆங்கிலம் தரவில்லை. சரி, என் சுயபுராணத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
  
தமிழ்மொழி என்றாலே இலக்கணமும் இலக்கியமும் தான், நம் மனதில் நிழலாடும். இன்றும் பலருக்கு இலக்கணம் என்றால் கடினத்திலும் கடினம். ஏன் இத்தகைய எண்ணம்? இலக்கியம் என்றால் அது ஒரு ஆழ்கடல். அதில் உள்ள தொகுதிகள் அதிகம். திருக்குறள், வாழ்த்துப்பாடல், மூதுரை, அவ்வையார் இவற்றை தெரிந்து வைத்திருப்பதே பெரும்பாடு என்ற எண்ணம் இத்தலைமுறை பிள்ளைகளுக்கு. இதனை மாற்றலாம், இந்த எண்ணத்தை மாற்றி இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் சுவையை ஊட்டினால், மொழிமீதான காதல் ஊற்று பெருக்கெடுக்கும். அதனால் என்ன பயன்? என நினைப்பவர்களுக்கு இப்பதிவின் மூன்றாம் பத்தியில் நான் கூறியுள்ள ஆதங்கம் மாற வாய்ப்புள்ளது. என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். முடிந்தவரை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிவரும் நாட்களில் இலக்கியம், இலக்கணம் என்று பேசுவோம்... நன்றி நண்பர்களே!!!

இப்பதிவு பதிவர் பௌசியா இக்பால் அவர்களின் படைப்பாகும்.

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01 - பௌசியா இக்பால் - சிகரம் 

#சங்கஇலக்கியம் #இலக்கியம் #ஆய்வுக்கட்டுரை

Wednesday, 15 November 2017

இலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை

சங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும் அதன் விளக்கமும் இங்கே தந்துள்ளேன்.

அகநானூறு பாடல் எண் #21

திணை : பாலைத்திணை

பாடியவர் : காவன் முல்லைப் பூதனார்
  
மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்,
அம் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணை தோள்,

மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்!
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம்! வல்லே
எழு இனி வாழி என் நெஞ்சே!



தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். அவ்வாறு செல்லும் தலைவன் பாதிவழியில் மனக்குழப்பத்துக்கு ஆளாகிறான். இதனை அவனது மனதுக்கும் நெஞ்சுக்கும் நடைபெறும் போராட்டமாகச் சித்திரிக்கிறார் புலவர்.

தலைவன் தலைவியுடன் இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அச்சமயம்  தலைவனுக்கு மேலும் பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. உணர்வுகளின் பிறப்பிடமாகிய நெஞ்சு, "நல்ல உணவு, சிறந்த உடை, வீடு நிறைய அலங்காரப் பொருள்கள், கூடுதல் வசதிகள் என்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்றால் குடும்ப வாழ்வு மேலும்  பொலிவுபெற்றுத் திகழும்" என்று  தலைவனை ஆசைக்காட்டி  தூண்டுகிறது.

ஆனால், தலைவியை இதற்காகப் பிரிந்து சென்றால் அவள் பிரிவுத்துயரால் ஆட்கொள்ளப்பட்டு தனது பொலிவை இழந்துவிடுவாளே என தலைவன் தவிக்கிறான். தலைவனின் இந்த தவிப்பை புலவர் பின்வருமாறு விளக்குகிறார்.

தலைவியின் முல்லைப்பூ போன்ற பற்கள் தம் முறுவலை இழக்குமே?

அழகிய வயிறு சரியாக உணவருந்தாமல் ஒட்டிப்போய்விடுமே?

பெரிய பின்புறம் வாட்டத்தினால் சிறுத்துப்போய்விடுமே? 

பின்னலுற்று நீண்டு தாழ்ந்திருக்கும் கூந்தல் பேணப்படாமல் பரட்டையாய்ப் போய்விடுமே?

உருண்டு திரண்ட மென்மையான மூங்கில் போன்ற தோள்கள் உருமாறிப்போய்விடுமே?

எனவே தொலைதூரத்துக்கு அவளை விட்டுப் பிரியவேண்டாம்  என்று தலைவனின் மனம் வாதாடிப் பார்க்கிறது.

நெடுநேரம் வாதாடியும் நெஞ்சம் கேட்கவில்லை. காதலை பணம் வெல்கிறது. எனவே தலைவன் பொருளீட்டப் பிரிந்து செல்கிறான்.

பாதி வழியில், அதுவும் பாலைநிலத்து நட்ட நடுக்காட்டில், நெஞ்சம் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறது. தலைவியின் காதலை எண்ணி துன்பம் கொண்டு, இனிமேல் ஒரு எட்டுக்கூட எடுத்துவைக்க முடியாது என்று அங்கேயே அமர்ந்துவிடுகிறது.

வம்படியாக அதன் கையைப் பிடித்துத் தூக்க முயல்கிறது மனம்.

“எழுந்திரு, நல்ல பிள்ளையல்லவா!” என்று தாங்குகிறான் தலைவன்.

“நீ சொன்னவாறே, வீடு பொலிவுபெற, பலவித செல்வங்களையும் ஈட்டி வருவோம். சீக்கிரம் வா!" என்று தலைவன் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

மனித மனதின் ஆசைகளையும், காதலும், செல்வமும் மாறி மாறி மனிதனை ஆட்டுவிக்கும் தன்மையையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.

இன்றல்ல நேற்றல்ல... சங்க காலம் முதலே மனிதனை இத்தன்மைகள் பாடாய்படுத்திக் கொண்டிருப்பதை இப்பாடல் வாயிலாக அறியமுடிகிறது.

நன்றி -
பௌசியா (முகநூல் பதிவு)

பேஸ்புக்கில் பௌசியா என்பவர் எழுதி வெளியான இப்பதிவை கிருத்திகா நமக்காக தொகுத்தளித்துள்ளார்.

இலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை

Saturday, 4 November 2017

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள கல்விசார் இருக்கை ஆகும். தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்படவிருக்கும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான நன்கொடைகள் மூலம் அமைக்கப்படவுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் வாழும் சில தனிப்பட்ட தமிழ் ஆர்வலர்களின் எண்ணத்தில் உருவான இது, ஹார்வார்டு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இடம்பெற்ற தொடர் சந்திப்புக்களின் விளைவாகச் சாத்தியமானது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கலைகளுக்கும் மானிட அறிவியலுக்குமான துறையின் கீழ் இயங்கும் தென்னாசியக் கற்கைகள் பிரிவின் கீழ் இந்த இருக்கை அமைக்கப்பட உள்ளது.

வரலாறு

அவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் வைதேகியும், அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவ நிபுணரான விஜய் ஜானகிராமனும்பேசிக்கொண்டபோது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் எண்ணம் உருவானது. தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்கான அழைப்புக் கிடைத்தது. ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.[1] இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாகத் தமிழுக்கு ஒரு இருக்கையை நிறுவுவதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகம் முன்வந்தது. இதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறக்கொடையாகக் கொடுக்கப்படவேண்டும்.

நிதி திரட்டல்

ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் தனித்தனியே 500,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மிகுதி 5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இலாப நோக்கற்ற நிறுவனம் (Tamil Chair Inc) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.[2] மருத்துவர் விஜய் ஜானகிராமன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம், திருமதி வைதேகி ஹெர்பெர்ட், திரு பால் பாண்டியன், திரு அப்பாதுரை முத்துலிங்கம், முனைவர் சொர்ணம் சங்கர், திரு குமார் குமரப்பன், முனைவர் ஆறுமுகம் முருகன் ஆகியோர் ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள்.[3]
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த முயற்சியை ஆதரித்துப் பேசியுள்ளனர். தமிழக அரசு இதற்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.[4] தவிர நடிகர்கள், பல்வேறு உயர் பதவிகளில் உள்ளோரும்[5] இப்பணிக்கு நிதியுதவி வழங்கும்படி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2017 அக்டோபர் 21 அன்று கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஏ. ஆர். ரகுமான். அவர் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ், ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார். கிஷான் நித்தி, ரஹ்மான், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் 25,000 டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) காசோலையை வழங்கினர்.[6] ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிக்காக ரூ.10 கோடி வழங்க தமிழக அரசு 2017 அக்டோபர் மாத இறுதியில் உத்தரவிட்டது.[7]

தேவையும் முக்கியத்துவமும்

தமிழ் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மொழிகளுள் ஒன்று. ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குகிறது. அண்மையில் ஒரு செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களுள் அடங்கும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியதும், அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சீர்செய்யப்படலாம். இந்த அடிப்படையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 379 ஆண்டுகள் (2015) பழமையான இது ஐக்கிய அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம். நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கி வழங்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்துக்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும், அங்கீகாரமும் உள்ளன. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று இருப்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழாய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.

தற்போதைய நிலையும் வாய்ப்புக்களும்

ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தெற்காசியவியல் பிரிவின்கீழ் இப்போதும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தொடக்கத் தமிழ், இடைநிலைத் தமிழ், உயர்நிலைத் தமிழ் என மூன்று நிலைகளில் தமிழ்ப் பாடநெறிகள் உள்ளன.[8] ஜொனதன் ரிப்ளே என்பவர் சுமார் 20 மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து வருகிறார். ஆனாலும், இங்கே தமிழுக்கெனத் தனியான ஒரு பேராசிரியரின் கீழ் இயங்கும் கல்விசார் இருக்கை கிடையாது. இதனால், ஹார்வார்டில் தமிழாய்வு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய இருக்கை உருவாக்கப்படும்போது, தெற்காசியவியல் பிரிவின்கீழ் தமிழுக்கெனத் தனியான பிரிவு ஒன்றை உருவாக்கவும், அதற்கெனப் பேராசிரியர் ஒருவரை நியமிக்கவும் முடியும். இதன்மூலம், ஹார்வார்டில் தமிழ்க் கல்வியையும், தமிழ் ஆய்வையும் புதிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.


மேற்கோள்கள் மற்றும் வெளியிணைப்புக்களுக்கு : ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா

Monday, 4 September 2017

அனிதா - சிதையில் சிதைந்த கனவுகள்!

அனிதா
=======

மாணவி அனிதாவின் தற்கொலை பெரும் வருத்தத்துக்கு உரியது. அது தமிழகத்தை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக பெண் குழந்தை உள்ளவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். எளிய பின்னணியில் இருந்து வந்து பெரும் போராட்டங்களுக்கும் நிறைய வெற்றிகளுக்கும் பின் இந்த முடிவுக்கு அவள் வந்திருக்கிறாள். இந்தியாவில் எளிய பின்னணியில், விளிம்பு நிலையில் வாழ்பவர்களுக்கு வாழ்வே போராட்டமாகத்தான் கழிகிறது. தினம்தோறும் சிறு சிறு போர்களை தாண்டித்தான் கடக்க வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஒரு கட்டத்தில் பெரும் ஆயாசம் வந்து விடுகிறது. ஒரு முக்கிய தோல்வி அடுத்து ஒன்றுமே இல்லை எனும் ஆயாசத்தை தந்து விடுகிறது. அப்போது தற்கொலை ஒரு எளிய விடுதலையாக பார்க்கப் பட்டு விடுகிறது.



‘காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ளவில்லையா?’, ‘பத்தாவது ஃபெயில் (சித்தியடையாவிட்டால்) ஆனா தற்கொலை செய்து கொள்ளவில்லையா?’ என்றெல்லாம் அனிதாவின் மரணத்தை கண்டனம் செய்பவர்கள் கேட்கிறார்கள். இதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ‘இதெல்லாம் ஒரு மேட்டரா? (விடயமா)’ என்பது முதல். அடுத்து ‘இது இங்கே தினம் நடப்பதுதான். இந்த அளவுக்கு அலப்பறை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதது!’ என்பது.

இங்கே நிறைய தற்கொலைகள் நிறைய காரணங்களுக்காக நடக்கின்றன. மதுவுக்கு அடிமையாகி அதனை விட முடியாத கழிவிரக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பத் தலைவரை எனக்குத் தெரியும். என்னுடன் பத்தாவது படித்த குருபிரசாத் என்னோடும் இதர நண்பர்களோடும்தான் ரிசல்ட் (தேர்வு முடிவு) பேப்பர் வாங்க கடைக்குப் போனான். அதில் செக் பண்ணி (தேடிப் பார்த்து) அவன் நம்பர் இல்லை என்றதும் மிகவும் அமைதியாக, எங்களுடன் பேசாமலேயே வீட்டுக்குப் போனவன் குளியலறையில் கெரஸின் (மண்ணெண்ணெய்) ஊற்றிக் கொண்டான். அவனை பாடையில் முழுக்க மூடித்தான் கொண்டு போனார்கள். அது நடந்து பல மாதங்களுக்கு அது என் தூக்கத்தை நாசம் செய்து கொண்டிருந்தது. நான் பத்தாவது பாஸ் பண்ணியதை (சித்தியெய்தியதை) கொண்டாடவே இல்லை.



அதன் பின் நிறைய தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் என் நட்பு, உறவு வட்டத்தில் நடந்து விட்டிருக்கிறது. அதனாலேயே ‘இதெல்லாம் மேட்டரா?’ (விடயமா) என்று கடந்து செல்ல இயலவில்லை. தவிர நீட் ஆதரவாளர்கள் சொல்வது போல இதற்கும் மன உறுதிக்கும் சம்பந்தம் இல்லை. ஓரளவு உளவியல் ரீதியான பிரச்சனைதான் தற்கொலைக்கு தூண்டுகிறது என்றாலும் அதற்கு பெரும் மன உறுதி தேவைப்படுகிறது. உங்கள் வாழ்வையே ஒற்றை விஷயத்தில் நீங்கள் ஒப்படைக்கிறீர்கள். அதைத் தாண்டிய வேறு உங்களிடம் இல்லை என்று மனதை பயிற்றுவிக்கிறீர்கள். அது உங்கள் காதலியோ, பத்தாவது ரிசல்ட்டோ (பெறுபேறோ) , மருத்துவக் கல்லூரி சீட்டோ (அனுமதி) எதுவாகவும் இருக்கலாம்.

தவிர முட்டாள்கள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வதில்லை. உலக மகா ஜீனியஸ்கள் (அறிஞர்கள்) கூட இதற்கு விதிவிலக்கில்லை. உளவியல் துறையின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட், ஓவியக்கலையில் புரட்சி செய்த வான் காக், கம்பியூட்டரை (கணினி) கண்டுபிடித்த ஆலன் டியூரிங், இலக்கிய ஆளுமைகள் வர்ஜினியா உல்ஃப், ஹெமிங்க்வே, சில்வியா பிளாத், அமெரிக்க இசையின் வேரைப் பிடித்து ஆட்டிய கர்ட் கோபைன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவிலும் ஹிந்தி திரையுலகை அறுபதுகளில் கலக்கிய இயக்குனர் குரு தத் மூன்று முறை தற்கொலைக்கு முயன்று மூன்றாம் தடவை ‘வெற்றி’ பெற்றார். தமிழ்க் கவிஞர் ஆத்மாநாமின் தற்கொலை நாம் எல்லாரும் அறிந்ததே.

இவர்கள் யாரும் தோல்வியாளர்கள் இல்லை. தத்தமது துறையில் உலகையே புரட்டிப் போட்டவர்கள்.

அனிதாவிடம் என்ன மாதிரியான உளவியல் அழுத்தங்கள் இருந்திருந்தது என்பது நமக்கு தெரியாது. அவள் ஒரு வான் காக் ஆகவோ, வர்ஜினியா உல்ஃப் ஆகவோ வளர்ந்திருக்கும் வாய்ப்புகள் இருந்தன. இவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் அந்த ‘மெல்லிய கோட்டை’ தாண்டி விடுகிறார்கள். சாதாரண ‘ஏதோ படிப்பை முடி, வேலைக்குப் போ, கல்யாணம் பண்ணிக்கொள், குழந்தை பெற்றுக்கொள், பூந்தமல்லியில் வீடு வாங்கு…’ என்கிற வாழ்வு முறை டெம்ப்லேட்டில் (நடைமுறை) இவர்களுக்கு ஒப்புதல் இருப்பதில்லை. அனிதா தன் விளிம்பு நிலை வாழ்க்கைத் தரத்தை கடுமையாக வெறுத்து இருக்கலாம். அதனை மாற்றியே தீருவேன் என்கிற கங்கணம் கட்டி மருத்துவப் படிப்பை அந்த விடுதலைக்கு சாவியாக பாவித்திருக்கலாம். அந்த சாவிக்கான பெரும் போராட்டத்தில் தோல்வியுற்றதும் வந்த பெரும் அதிர்ச்சி அடுத்த மாற்று வாய்ப்புகள் பற்றிய யோசனையே வராமல் போயிருக்கலாம்.

இதுதான் காரணமா என்று எனக்குத் தெரியாது. இதுவாக இருக்கலாம் என்று நான் கருதிக் கொள்கிறேன். அதுதான் அந்த சிறுமியின் மரணத்துக்கு நான் தரும் மரியாதையாக இருக்கும். மரணத்தை, அதுவும் வாழ்வில் போராடி முன்னேறிய ஒரு சிறுமியின் தற்கொலையை கேலி செய்வது, விமர்சிப்பது மோசமான சிந்தனாவாதத்தின் விளைவு. அதனை நாம் செய்ய வேண்டாம் என்று எல்லாரையும் வேண்டிக் கொள்கிறேன்.

கடைசியாக, இந்த தற்கொலை நீட் பற்றிய விவாதத்தை மேலும் நாராசமாக ஆக்கி விட்டிருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு, மடிந்து இடஒதுக்கீடு, சாதியவாதம், தேசியவாதம் போன்ற பற்பல பரிணாமங்களில் விரிந்து நடந்து கொண்டிருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான். நீட் பற்றிய பெரிய கருத்தியலை நான் நேற்று வரை உருவாக்கிக் கொள்ளவில்லை. இன்று இது பற்றி நிறைய படித்ததில், சிந்தித்ததில் இது குறித்து ஒரு தெளிவு பிறந்தது. இந்தியா மாதிரி பன்மைக் கலாச்சாரம், மொழிகள், இனக்குழுக்கள் இருக்கும் தேசத்தில், குறிப்பாக பல்வகை பொருளாதார நிலை கொண்ட தேசத்தில் இப்படிப்பட்ட பொதுத் தேர்வு முறை நடைமுறையில் சாத்தியமாகாது என்று நம்புகிறேன். இது பற்றி தனியாக விபரமாக எழுதுகிறேன். இப்போதைக்கு அனிதாவின் மரணம் என்னில் ஏற்படுத்தி இருக்கும் இந்த பாதிப்பு தேசிய அளவில் நிறைய பேரிடம் வந்து, அதுவே நீட் விஷயத்திலும் மாறுதல்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி நடந்தால் பலனடையப் போகும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளின் வெற்றிக்கு தரப்பட்ட விலையாக அனிதாவின் உயிரைக் கருத வேண்டும்.

இறந்த அந்த மாணவியின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

# நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மருத்துவ மாணவி அனிதா இப்போது நம்முடன் இல்லை. ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் நீட் தேர்வுக்கெதிரான போராட்டத்தை ஒரே புள்ளியில் ஒன்றிணைத்திருக்கிறார். அடுத்த வருடத்துக்குள் இவ்விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். காரணம் அனைத்து படிப்புகளுக்கும் மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவது நாம் அறிந்ததே.

மேலும் இப்பதிவு ஒரு பேஸ்புக் பதிவாகும். ஸ்ரீதர் சுப்பிரமணியம் Sridhar Subramaniam  என்னும் பேஸ்புக் பதிவரின் பக்கத்தில் 'அனிதா' என்னும் தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட பதிவு இது. தற்போதைய சூழ்நிலையில் இப்பதிவு மிக அவசியம் என்பதாலும் சிறப்பான புரிதலோடு எழுதப்பட்டிருக்கிறது என்பதாலும் நமது 'சிகரம்' இணையத்தில் இப்பதிவை வெளியிடுகிறோம். இப்பதிவு சார்ந்த அத்தனை பாராட்டுகளும் ஸ்ரீதர் சுப்பிரமணியம் Sridhar Subramaniam  அவர்களுக்கு மட்டுமே உரித்தாகும். தோழருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!       

#ANITHA-SITHAIYIL-SIDHAINTHA-KANAVUGAL
#ANITHA #NEET #SUICIDE #MBBS #TNGOVT #MODI #PM #PJP #AIADMK #DMK #STALIN #MKSTALIN #JAYALALITHA #DissolveTNGovt

Monday, 7 August 2017

மரணம் என்பது என்ன?

அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி  இன்னும் விடை தெரியாமல் மண்டையை சொறியும் முக்கியமான ஒரு புதிர் மரணம். ஆமாம்... உண்மையில் மரணம் என்பதை மருத்துவம் எப்படித் தீர்மானிக்கிறது? நம்ம ராமசாமி போய்ட்டாரா? அப்டின்னு தீர்மானிப்பது எப்படி? அது கொஞ்சம் சிக்கல் தான். ஏன்? மரணம் என்பதற்கு மருத்துவத்தில் வரைவிலக்கணம் இல்லை... அதான். "சுவாசம் மற்றும் உணர்வுகளின் மீள முடியாத நிரந்தர இழப்பு மரணம்" என்று ஐக்கிய ராச்சியத்தில் மொட்டையாக ஒரு கூற்று உண்டு. ஆனால் பூரண விளக்கம் கிடையாது ('The irreversible loss of the capacity for consciousness, combined with irreversible loss of the capacity to breathe'.)

ஒரு தேர்ந்த அனுபவம் மிக்க மருத்துவர் அதனை தீர்மானிப்பார். உடல் தன் செயற்பாடு இழப்பது மரணம். அதனை சில அறிகுறிகளை வைத்து அறிகின்றனர். அவை எவை எனத் தெரியுமா? 

வெளிறல் - ஆங்கிலத்தில் இதை Pallor என்பார்கள். உடம்பில் வழமையாக ரத்த ஓட்டம் கூடிய பகுதிகள் சிவப்பாக இருக்கும் . இறந்த பின்பு நமது இரத்த ஓட்டம் செயலிழந்து விடுவதால் அந்த இடங்கள் வெளிறிப் போய் விடும். நமது உடலில் வெப்பம் பரவ குருதியே காரணமாக இருப்பதால் உடல் சில்லிட்டுப் போய் விடும். 



அசைவற்ற தன்மை -  இது கொஞ்சம் நிச்சயம் இல்லாத விஷயம். இதை நம்பி அடக்கம் பண்ணப் பார்த்து பல கல்லறைகளில் உயிர்த்தெழுந்து ஓடினவர்கள் உண்டு. ஆனால் ஒருவரின் மரணத்தை தீர்மானிக்க கட்டாயம் அவரின் அசைவற்ற தன்மை நிரூபிக்கப் படவேண்டும். குறிப்பாக சுவாச அசைவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு அந்த அசைவு சில நிமிஷம் இல்லாது போகலாம். 

திறந்த கண்கள் - இது நமக்கு பரிச்சயமான ஒன்று. நம் தமிழ்ப் படங்களில் சாகும் நபர் இப்படித்தான் சாவார். ஆனால் இறந்த ஒருவர் கண்களை திறந்த படியே சாவார் என்று கட்டாயம் இல்லை. இந்நிலையில் கண்ணின் சுற்றயல் பகுதி கண்ணீர் முகிலால் சூழ்ந்து காணப் படலாம்..

நாடித் துடிப்பு ( Pulse ) இல்லாமல் போகும். வழமையாக கையில் பார்ப்பது நமக்கு பரிச்சயம். ஆனால் மருத்துவ ரீதியாக கழுத்தில் ( Carotid ) அதுவும் ஒரு நிமிடம் வரை பார்க்க வேண்டும். இது இல்லை என்றால்... அன்னாரின் பூதவுடல்...

இதயத் துடிப்பும் அதே ஒரு நிமிடம் சோதிக்கப் படும்.
சுவாச அசைவுகள் கிட்டத் தட்ட 3 நிமிடங்கள் அவதானிக்கப் படும்.

கண்ணின் மணி சோதிக்கப் படும். உங்கள் கண்ணை கண்ணாடி முன்பாக சென்று உன்னிப்பாக அவதானியுங்கள் . ஒரு டோர்ச் ஒளி (கை மின்விளக்கு) உங்கள் கண்ணில் படட்டும் . கண்மணி சுருங்கும் . இது ஆங்கிலத்தில் Corneal Reflex எனப்படும். இறந்த மனிதனுக்கு இதுவும் சோதிக்கப் படும்.

இவ்வளவும் பார்த்து முடிந்த பின்புதான் மரணத்தை முடிவு செய்வார்கள். (எவ்வளவு கஷ்டம்? ) இம்புட்டும் இல்லை என நூறு வீதம் முடிவு பண்ணி விட்டுதான் மருத்துவர் கண்ணாடியை கழற்றுவார்... "மன்னிச்சிருங்க... நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணினோம்.... எல்லாத்துக்கும் சொல்லி அனுப்பிடுங்க..."

அப்படியும் ஏதாவது ஒரு விஷயம் நம்பிக்கை தருகிற பட்சம் "கடவுள் மேல் நம்பிக்கை வைங்க..." இதெல்லாம் சொல்கிறார்கள்... நீங்கள் அடிக்கும் மருத்துவர் நகைச்சுவை மாதிரி இல்லையாக்கும்....

//இக்கட்டுரை மருத்துவர் அருண்பிரசாத் அவர்களின் படைப்பாகும். மேலும் இப்படைப்பு அவரது வலைத்தளத்தில் 26.11.2012 அன்று வெளியானது. அவரது அனுமதியுடன் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.//

Monday, 3 July 2017

பெண் பலவீனமானவளா?

பெண் என்பவள் சக்தியாம். ஆம் மாபெரும் சக்தி அவள். என்ன இல்லை அவளிடம்? இங்கு பலரும் ஒருவரிடம் என்ன இருக்கிறது என்று தேடுவதேயில்லை. நீ அவள் போல அழகாக இல்லை, இவள் போல அறிவாக இல்லை என என்ன இல்லை என்பதை தேடியே இருப்பதை மறக்கிறோம் இருக்கும் நிம்மதியை தொலைக்கிறோம்.

இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், நான் இப்பதிவின் முக்கிய பகுதிக்கு வருகிறேன்.ஆண்கள் ஏன் பெண்ணை பலவீனமானவர்கள் என்றே சொல்கிறார்கள்? உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தன்னை விட  பலமுடையவர்களாக வேறு எவரும் இருக்கக் கூடாது என்பது தான். அதிலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் குறிப்பாக ஒரு ஆண் இந்த அடிப்படை இயல்பை எவ்வாறு கையாள்கிறான் என்று உற்று நோக்குவோம். தோற்பவரோடு மட்டும் விளையாடி தான் வெற்றி பெற்றதாக கூறும் சிறுபிள்ளைகளை நாம் பார்த்திருப்போம். அதையே தான் வளர்ந்த ஆணும் செய்கிறான்.

தன்னை பலமுள்ளவன் என்று காட்ட பெண்ணை பலவீனமானவள் என அறிவித்தல் நியாயமா? எதிர்ப்பாலினம் என்ற ஒன்று மட்டும்தான் வேறுபாடு. மற்றபடி அவளும் மனித இனம் தான் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு உண்டு?
தராசுக்கு கூட சீர்தூக்கி பார்க்க அதன்  இரு தட்டுகளிலும் பொருள் வேண்டும். இந்த சமூகம் மட்டும் ஏன் பெண்ணை தரையில் இட்டு சீர்தூக்கி பார்க்கிறது? பெண்ணை தனக்கு நிகராக மதிக்கும் போற்றும் என் தோழர்களுக்கும் உறவுகளுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம்.

* இது எந்த தனிப்பட்ட நபரையும் சாடும் பதிவல்ல.இது என் பார்வை அவ்வளவே.

இப்பதிவு பதிவர் கிருத்திகா அவர்களின் படைப்பாகும். 

Wednesday, 15 March 2017

கவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு

பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர்  கவியரசர் கண்ணதாசன்!  அவரது அசரவைக்கும் வரிகளைப்  படித்து அதன் எளிமையில் ஆழ்ந்து போன நாட்கள் கணக்கிலடங்கா ! சில பாடல்களைப் படிக்கும்போது அழகான ஒன்றிரண்டு பழஞ்சொல்லோ, பாடல் வரியோ,  கவிதை நயமோ, காப்பியநயமோ நமது நினைவுக்கு வராமல் போகாது! அது கவிஞர்களுக்கே உரித்தான பெருமை! சலுகையும் கூட ! ஆனால் அந்த வரிகளை எந்த அளவுக்கு மேலும் மெருகும், அழகும், எளிமையும், ஏற்றமும் கூட்டிப் படைக்க  அவனால் இயல்கிறது என்பதே கவியின் சிறப்பு!  அந்த வகையில் கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சில, எந்தெந்தப் பழைய வரிகளை நினைவூட்டுகிறது, அந்தப் பழைய பெட்டகத்துக்கு மேலும் எந்த அளவுக்கு அவர் எளிமையும் ஏற்றமும் அளித்து நமக்குத் தருகிறார் என்பதை அலசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். அல்லாது, கவியரசர் திறமையை எந்த வகையிலும் எள்ளுவதோ குறைப்படுத்துவதோ கிடையாது  எமது எண்ணம்!  நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்தத் தொடரை நேயர்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்!

1.  "நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ" 


படம்: வாழ்க்கைப் படகு
பாடகர்: பி.பி.ஸ்ரீநிவாஸ்

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே                (நேற்று)

உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே 
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே 
நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்       (நேற்று)

பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே  கனவோ  என்று  வாடினேன்  தனியே நின்று 
வண்டு  போல்  வந்தாய்  இன்று  மயங்கினேன்  உன்னைக்  கண்டு
                                                                                                        (நேற்று)

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே   

இந்த அருமையான வரிகளைப் படித்தால் மயங்காதவர் யாருளரோ? காதலன், தனக்கும் தன் காதலிக்கும் உண்டான உறவையும் நட்பையும் குறித்து மனம் வியந்து போற்றுகிறான் ! அன்பு கலந்த நெஞ்சங்களின் பிணைப்பைக் கண்டு வியக்கிறான் ! 'நாம் ஒருவரை ஒருவர் கண்டவுடன் நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும் ஆகிவிட்டோம்' என்கிறான்! இந்த அழகான வரிகளைப் படிக்கும்போது, ஒரு ஒப்புமைக்குக் 'குறுந்தொகை' கை கொடுக்கிறது.

"யாயும்  ஞாயும்  யார்  ஆகியரோ
எந்தையும்  நுந்தையும்  எம்முறைக் கேளிர்
யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்
செம்புலப்  பெயல்நீர்  போல
அன்புடை  நெஞ்சம் தாம்கலந் தனவே!"

இதன் பொருள் :
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே !

இதே கருத்தைத்தான் கவியரசர் மிக எளிமையாகக் கையாண்டிருக்கிறார் ! 'செம்மண்ணில் நீர்கலந்தாற்போல்' என்ற உவமையை, 'கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே' என்று அவர்தம்  உள்ளம் கலந்து விட்டதைக் குறிப்பிட்டு விட்டார். 

அடுத்தாற்போல், கீழ்க்கண்ட வரிகளைப் பாருங்கள் !

"உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
 விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே"

திருக்குறள் காமத்துப்பாலில் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள குறளை மேலும் எளிமைப்படுத்திக் கவியரசர் கூறியுள்ளது விளங்கும்.

குறள் :
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

இதற்கு மு.வரதராசனார் அவர்களின்  உரை :

'யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கிமெல்லத் தனக்குள் மகிழ்வாள்'

'நோக்காக்கால்' என்ற சொல்லை நகர்த்தி, எதுகை மோனை பிறழாமலிருக்க, 'விண்ணை நான் பார்க்கும்போது' என்று பாங்குறச் சொல்லியிருக்கிறார் ! அனைத்தையும் விட, இந்தக் கருத்தை மேலும் செம்மைப்படுத்தி அடுத்த இரண்டு வரிகளைக் கொடுத்துள்ள அழகே அழகு ! 
"நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்!"

அவள்மேல் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டும் விதத்தில் 'நேரிலே பார்த்துவிட்டால் நிலவு தேய்ந்து போகுமா, பூமுகம் சிவந்து போகுமா' என்றும் கேட்டு விடுகிறான் !

இறுதி நான்கு வரிகள் பேரழகு. மென்மேலும் கவிதையைச் செம்மைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. '

'உன் முகத்தையும் பார்த்தேன் தாமரை மலரையும் பார்த்தேன் கொவ்வையிதழையும் பார்த்தேன் குங்குமச் சிமிழையும் பார்த்தேன்' என்கிறான். 'உன்முன்னால் அவற்றின் சிறப்புக்கு மதிப்பில்லை' என்னும் விதத்தில். 'ஒருவேளை நான் கண்டது கனவோ என்று திகைத்து நிற்குங்காலை மலரைச் சுற்றும் வண்டைப்போல் நீ என்னைச் சுற்றி வந்து நின்றாய்'  என்று சொல்லி மகிழ்கிறான் !

இத்தனை அழகான ஒரு காதலை இவ்வளவு நேர்த்தியாக வேறு எந்தக் கவிஞனால் எழுதிவிட முடியும் ?

--கி.பாலாஜி

Popular Posts