Thursday 25 January 2018

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீய, ஆரிய, கிரேக்க, இலத்தீன், மெக்ஸிக்கன், பெருவியன் மொழிகள் வழக்கொழிந்து போய் விட்டன. அத்துணைத் தொன்மையான தமிழ் மொழி இன்னும் உயிரோடு கன்னித் தமிழாக விளங்குகிறது.

மொழியை முதலாளி மொழியென்றோ, தொழிலாளி மொழியென்றோ எந்த ஒரு வர்க்கமும் தனி உரிமை கொண்டாட முடியாது. மொழி சமுதாய மக்களின் ஒவ்வொரு துளிக்கும் முழுக்கடலுக்கும் சொந்தம். எந்த மொழியும் ஒரு தனி வர்க்கத்தின் கருவியல்ல. சமுதாய மக்கள் பரஸ்பரம் சகல விதத்திலும் ஈடுபாடு கொள்வதற்கும், உறவு கொண்டாடுவதற்கும் இன்றியமையாத கருவி மொழி.



புதிய புதிய சமூக அமைப்புகள் தோன்றும் பொழுது, புதிய புதிய உற்பத்தி முறைகளும், ஒட்டுறவுகளும், ஆட்சி அமைப்புகளும், வாணிபப் போக்குகளும், பண்பாட்டு வெளியீடுகளும், இன்னோரென்னவைகளும் தோன்றும். மொழி இவைகளை எல்லாம் பிரதிபலிக்க வேண்டும். மொழி அல்லது சொல்லகராதி சர்வசதா மாறுதலுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற தொழிலும், விவசாயமும், வர்த்தகமும், போக்குவரத்தும், தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் தாங்கள் செயல்படும் பொருட்டுப் புதிய சொற்களாலும், வெளியீடுகளாலும் ஒவ்வொரு மொழியும் சொல்லகராதியைப் பெருக்கிச் செழிப்படையச் செய்ய வேண்டுமென்று தேவைப்படுகின்றன. தேவைக்குத் தக்கபடி வேர்ச்சொல் தொகுதியைப் பெருக்கவோ சொல்லகராதியை வளப்படுத்தவோ கொஞ்சமும் தயக்கம் காட்டுதல் கூடாது.

இவ்வாறு செய்தால்தான், எந்த மொழியும் சமுதாயத்தின் சகல ஈடுபாடுகளுக்கும், உறவு முறைகளுக்கும் பயன்படும். அவ்வாறு பயன்படாத மொழி அழிந்தொழிந்து போகும்.

அன்றிருந்த தமிழர்கள் அன்றைய நிலைமைக்குத் தக்கபடி சொற்களை உற்பத்தி செய்தனர். அதே போல் இன்றைய தமிழர்களும் இன்றைய வளர்ச்சிக்குத் தக்கபடி தமிழில் சொற்களை உற்பத்தி செய்ய முடியும். சிறந்த வேர்ச்சொல் தொகுதியும் அற்புதமான இலக்கண முறையும் கொண்டது நமது தாய்மொழியாம் தமிழ்மொழி.

டாக்டர் நீரா.சீனிவாசன் போன்ற புதிய புதிய எழுத்தாளர்கள் சகல விஞ்ஞான உண்மைகளையும் தமிழில் கூற முடியுமென்று முன் வந்திருக்கிறார்கள். ஒரு சாதாரண யந்திரத் தொழிலாளியிடம் பேசிப்பார்த்தால் அவன் நவீன தொழில் முறை நுட்பங்களைத் தமிழில் அனாயாசமாக வெளியிடுவதைப் பார்க்கலாம். எத்தகையப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் தமிழில் பேசவும் எழுதவும் வல்லார் எண்ணிக்கை தமிழர்களிடையில் பெருகி வருகிறது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழியில் மட்டுமல்ல, அண்மையில் வளர்ச்சியடைந்த உக்ரேனியன், பைலோரஷ்யன், எஸ்டோனியன், லாட்வியன், லிதுவேனியன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்ல, மத்திய ஆசிய மொழிகளான உஸ்பெக், காஷக், அர்மேனியன், தாத்தார், அஜர்பைஜான், பாஷ்கீர், டாக்மென் மொழிகளிலும் சகல பொருள்களையும் கற்றுக் கொடுக்கின்றனர்.

"தமிழ் நாட்டில் தேசியக்கல்வி நடைபெற வேண்டுமாயின் அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ்பாசையில் நடத்த வேண்டும்" என்பது பொருள் என்று பாரதி 'தேசியக் கல்வி' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்று பாரதி தமிழ் மக்களை அழைக்கிறார்!

- ப.சீவானந்தம். 

(14.4.1962இல் சீவானந்தம் எழுதியது.)

"தமிழ்மொழி மீட்புப் போராளி" ப.சீவானந்தம் நினைவு நாள் (18.1.1963) சிறப்பாக நம்மோடு இக்கட்டுரையை "தமிழ் கூறும் நல்லுலகம்" வாட்ஸப் குழுவினூடாக பகிர்ந்து கொண்டவர் நண்பர் அகரம் பார்த்திபன்.

#சிகரம் #தமிழ்கூறும்நல்லுலகம் #SIGARAM #SIGARAMCO #TAMIL 

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! - சிகரம்

-சிகரம்

No comments:

Post a Comment

Popular Posts