Friday 1 September 2017

இலங்கை கிரிக்கெட் அணியைத் துரத்தும் துரதிஷ்டம் ; தோனியின் 300வது போட்டி !

இலங்கை அணியைத் துரதிஷ்டம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்து தொடரை இழந்தது. தற்போது அடுத்தடுத்து நான்கு ஒரு நாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. நேற்று ( 31 ) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியிலும் தொடர்ச்சியான தோல்வியைத் தழுவியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இலங்கை அணியின் குறைவான இலக்குகளையே துரத்தியடித்து சோர்ந்து போயிருந்த இந்திய அணி தனது விஸ்வரூபத்தை ஐம்பது ஓவர்களிலும் வெளிப்படுத்தி ஐந்து விக்கெட் இழப்புக்கு 375 ஓட்டங்களைக் குவித்தது. ரோஹித் ஷர்மா 104, கோலி 131, பாண்டே 50 மற்றும் தோனி 49 என அதிரடி ஆட்டங்களின் மூலம் ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாகப் பந்து வீசிய அகில தனஞ்ஜயவின் பந்து வீச்சு இப்போட்டியில் எடுபடவில்லை. அனைவருக்கும் தர்ம அடி விழுந்தது.



அதிரடியாக பதிலளித்து வெற்றி பெறும் அல்லது கௌரவமான தோல்வியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொந்த மண்ணில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களிலான தோல்வி என்ற அவப்பெயரையே பெற்றுக் கொண்டது. இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி தனது 300வது போட்டியில் விளையாட இலங்கை அணியில் லசித் மலிங்க இப்போட்டியில் கைப்பற்றிய விக்கெட்டுடன் தனது 300வது விக்கெட்டைக் கைப்பற்றிக்கொண்டார்.

இந்தியாவின் 375 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அஞ்சலோ மெத்தியூஸ் 70 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இலங்கை அணி 168 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார்.



இலங்கை அணி உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெற எஞ்சியிருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால் ஒரு நாள் தரப்படுத்தலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி எட்டாம் இடத்தில் உள்ள இலங்கை அணியை பின்தள்ளி நேரடியாக உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெற இங்கிலாந்து அணியை அதனுடன் இடம்பெறவுள்ள ஆறு போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் கட்டாயம் வென்றாக வேண்டும். இலங்கை அணி எஞ்சியுள்ள ஒரு போட்டியிலும் தோற்றுப் போனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்துக்கான தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளைத் தோற்றால் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை உறுதி செய்து கொள்ளும். 

இறுதிப் போட்டியிலேனும் ஆறுதல் வெற்றியையாவது இலங்கை அணி பெற்றுக்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

No comments:

Post a Comment

Popular Posts