Sunday 6 August 2017

மெய்யின்பம்

உறக்கம் பிடிக்கா
முன் இரவில்...
உலகம் அறியா
ஓர் நிலையில்...

தனிமைச் சிறையில்
தேக்கி வைத்த
ஆசை மட்டும்
என்னுடன் இருக்க...

இரவுபகல் அறியாது
இருட்டறையில் கடக்கிறது
உந்தன் நினைவில்
எந்தன் வாழ்க்கை...

விடுவிக்கப்படுவேனா? இல்லை
விண்ணுலகம் செல்வேனா?
தெரியாது கண்மணியே...
நிகழ்காலத்தைக் கடக்க

கடந்தகாலத்தின் காதல்
கருமையில் ஒளியூட்டுகிறதடி...
நாளும் எனக்கு
உயிரூட்டுகிறதடி கண்மணியே...

அருகில் நீயிருக்க
அருமை புரியவில்லை...
அகன்று வந்தபின்
அனைத்தும் விளங்கிடுதே..

வெளியில் இருக்கையில்
இருள் தெரியவில்லை
இருட்டறையில் இருக்கையில்
அனைத்தும் விளங்கிடுதே..

இருளின் அருமை
விடியலில் புரிகிறது...
குளிரின் கொடுமை
செங்கதிரில் தெறிக்கிறது...

பகலில் சூரியனாய்
வாட்டிடும் கொடூரனே...
இருளில் அம்புலியாய்
இன்புறச் செய்கிறானே...



இரண்டும் இவனென்று
அறிந்தும் மனம்
ஏற்க மறுக்கிறதே...
ஏனென்று தெரியவில்லை...

இரவு ... பகல்...
இருள்.. ஒளி...
இறப்பு ... பிறப்பு...
ஆக்கம் ... அழிவு...

ஆயிரம் முரண்கள்
இரண்டிற்கும் இடையில்...
இருந்தும் நகர்கிறது
இன்பமாய் இவ்வுலகு...

இதுபோலவே எங்களுக்குள்ளும்
ஒராயிரம் முரண்கள்...
காதலென்ற சொல்
கட்டிப்போட்டது இருவரையும்...

இமையை மூடுகையிலும்
இமைக்க மறந்திடுகையிலும்
காற்று உரசுகையிலும்
காற்று வெளியிடையிலும்...

காதலியுன் ஞாபகம்
கடத்திச் செல்லுதே
அண்டத்தின் வெளிக்கு
அகிலத்தை கடந்து...

மிதக்கும் மனதும்
மோகம் கொள்கிறதடி
மோகனப் புன்னகையில்
மோதி நகர்கையில்...

உடலின் வெப்பம்
என்னை எரிக்குதடி
எரிமலையின் குழம்பாய்
மனமோ இறுகுதடி...

முகத்தை பார்த்ததும்
பகலவன் அணைக்கும்
பனியாய் நானும்
உன்னுள் நுழைவேன்...

உயிர்த்தொட்டு உயிர்ப்பேன்
உணர்வேன் மெய்யின்பத்தை
என் அணைப்பில்...
உன் மூச்சில்...

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts