Monday 21 August 2017

தமிழிசை பிரவாகத்திலே

ஆலாபனை கீர்த்தனைகள்
ஆதியிலே இசையமுதம்,
தேவார பண்வகைகள்
தினந்தோறும் அருமருந்தாம்,
குளிரோடையின் சலசலப்பும்
மலர்வாடை மனமயங்கும்
கருவண்டின் ரீங்காரம்
மயக்குமிசை சிருங்காரம்...

கரகமொடு காவடியும்
நடனமதில் ராகங்களாம்,
சிலம்பமொடு வில்வளையும்
ஓசையதும் கீதங்களாம்,
நாவளைத்து பாவெடுக்கும்
சந்தங்களில் அகரமதாம்,
ஜதியோடு ஸ்ருதிசேர்க்கும்
தாளங்களும் கானங்களாம்!

ஈரெட்டு ராகங்களும்
ஈரைந்து நாடிகளும்,
தாளமென்றும் சுரமென்றும்
ஏழுவகை அதிலுண்டு,
சந்தங்களும் விருத்தங்களும்
வெண்பாவில்  பாடல்களும்,
சீர்பிரித்து பாவமைத்து
சிலேடைகளில் சிந்துகளாம்..

குழந்தையழுதால் தாலாட்டு
உயிர்மரித்தால் ஒப்பாரி,
விளையாட்டில் கபடிப்பாட்டு
வம்பிழுக்க நையாண்டி,
ருதுவானால் பேப்பாட்டு
மணமுடிப்பில் நலங்குப்பாட்டு,
வளைகாப்பில் ஆசிப்பாட்டு
சோறூட்ட நிலாப்பாட்டு...

ஏற்றமிறைக்க ஏத்தப்பாட்டு
நாற்றுநட நடவுப்பாட்டு,
களையெடுக்க கழனிப்பாட்டு
கதிரறுக்க எசப்பாட்டு
கதிரடிக்க நெல்லுப்பாட்டு,
திருவிழாவில் கும்மிப்பாட்டு
காதலுக்கும் காதற்பாட்டு...

பழந்திரையில்  வார்த்தைகளே
கவிதைகளாய் அழகூட்ட
பண்தமிழும் இசைரகமும்
உள்ளினித்து  மனம்வருடும்
வீரமேற்றும் பாசமுரைத்து
காதல்சோகம் சேர்த்துப்பிழியும்

மனங்களிக்க மெல்லிசையும்
நடனமிட கானாப்பாட்டும்
தோல்வியிலே தத்துவமும்
கருணைபொங்க பக்தியதும்
மண்வாசக் கிராமப்பாட்டும்
மனந்துள்ளும் மேற்கிசையும்

புதுஇசைகள் பிறக்குதோ
இசையதிலே துயிலுதோ
மொழிபேதம் தானன்றி
இசையுலகை ஆளுதோ...
மனமதையே ரசிக்குதோ
இசையதிலே லயிக்குதோ,
தமிழிசைப் பிரவாகத்திலே
தரணியதும் மூழ்குதோ...

-இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -

No comments:

Post a Comment

Popular Posts