Friday 25 August 2017

சிறகுகள் விரித்து...

சிறகுகள் விரித்து
 பறந்திட வேண்டும்!
உறவை மறந்து உலகினை
வலம்வர வேண்டும்!

இடர்தலை அறுத்திடல்
 வேண்டும்,
இறையடி பணிந்திடல்
 வேண்டும்!

துன்பம் மறந்திடல்
 வேண்டும்!
துறவறம் நாடிடல்
 வேண்டும்!

வதுவை ஒதுக்கிட
 வேண்டும்!
அரிவை மறந்திட
 வேண்டும்!

கயமை எரித்திட
 வேண்டும்!
பயத்தை துரத்திட
வேண்டும்!



ஆசை அழித்திட
வேண்டும்!
அறவழி நடந்திட
வேண்டும்!

வானாய் உயர்ந்திட
வேண்டும்!
பிறர் வாழ உழைத்திட
வேண்டும்!

நாணாய் வளைந்திட
வேண்டும்!
நானாய் இருந்திட
வேண்டும்!

ஊனை வெறுத்திட
வேண்டும்!
உயிர்களை விரும்பிட
வேண்டும்!

அன்பை பற்றிட
வேண்டும்!
நற் பண்பை பெற்றிட
வேண்டும்!

காற்றாய் கடுகிட
வேண்டும்!
தே னூற்றாய் இனித்திட
வேண்டும்!

இசையாய் வருடிட
வேண்டும்!
திசையாய் விரிந்திட
வேண்டும்!

பயிராய் செழித்திட
வேண்டும்!
பழமாய் இனித்திட
வேண்டும்!

வானாய், மீனாய்
நிலமாய், மரமாய்
ஊனாய், உயிராய்
பணமாய், சினமாய்.!

யாவும் அழித்து
யானென மறந்து
சவமாய் மாறி
சிவமே துணையென
சேவடி நாடிட வேண்டும்!

இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.

No comments:

Post a Comment

Popular Posts