Showing posts with label வரவேற்பறை. Show all posts
Showing posts with label வரவேற்பறை. Show all posts

Saturday, 2 June 2018

பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது 'சிகரம்' !

வணக்கம் 'சிகரம்' வாசகர்களே!

உங்கள் அனைவரையும் இன்னுமோர் ஆண்டுவிழா தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2006.06.01 அன்று தனது பயணத்தைத் தொடங்கிய 'சிகரம்' பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக பயணத்தைத் துவங்கி வலைத்தளத்தில் தவழ்ந்து இன்று இணையத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது 'சிகரம்'. எத்தனையோ சோதனைகளைத் தாண்டி சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது 'சிகரம்'. 



இத்தனை ஆண்டுகளாக எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும் நண்பர்கள், உறவினர்கள், வலைத்தள நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தனக்கென ஓர் தனித்த அடையாளத்துடன் தனி இணையத்தள முகவரியில் 'சிகரம்' கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டளவில் தனி நிறுவனமாக 'சிகரம்' உருவாகும் என நம்புகிறோம். 



மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த அடிப்படையில் உலகம் தோன்றியது முதல் இன்று வரை அநேக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்களின்படி இனிவரும் காலம் தகவல் தொழிநுட்ப யுகமாக அமையும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகவல் தொழிநுட்பத்தை முழுமையாக சார்ந்து இயங்கப் போகிற உலகில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். தகவல் தொழிநுட்ப உலகை தமிழிலும் முழுமையாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே 'சிகரம்' நிறுவனத்தின் நோக்கம். 



'சிகரம்' இணையத்தளம் தமிழ் மொழியையும் தமிழரையும் உலக அரங்கில் தனித்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. 'சிகரம்' இணையத்தளத்தின் வடிவமைப்பில் விரைவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்படும். காலத்திற்கேற்ற பொருத்தமான படைப்புகளுடன் உங்கள் விழித்திரைகளை நோக்கி நாம் வருவோம். 



பிறந்திருக்கும் இந்த பதின்மூன்றாம் 'சிகரம் ஆண்டு' சிகரம் இணையத்தள வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை ஆண்டாக அமைய வேண்டுகிறோம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் பரந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிகரத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அந்த மக்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் சிகரத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும். 

'சிகரம்' - மக்கள் சிகரம்! - தமிழின் சிகரம்!! நம் மண்ணின் சிகரம்!!!

#சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary #சிகரம்


#100/2018/SIGARAMCO
2018/06/01
பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது 'சிகரம்' ! 
https://www.sigaram.co/preview.php?n_id=326&code=8gR1tAVn 
பதிவு : சிகரம் 
#சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary  
#சிகரம்

Saturday, 1 July 2017

சிகரம் - ஆசிரியர் பக்கம் - 01

வணக்கம் நண்பர்களே! 'சிகரம்' இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்!

எமது நீண்டகால இலக்காக இருந்த 'சிகரம்' அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். 'சிகரம்' இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.

இன்றைய நவீன உலகில் மொழிகள் நிலைத்திருப்பிற்காக கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. குறிப்பாக தமிழ் மொழி பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. ஆகவே நாம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே தனித்தனி தீவுகள் போல எடுக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்தால் தான் உறுதியான, நிலையான வளர்ச்சியை அடைய முடியும். அந்தப் பணியை சிகரம் செய்யப் போகிறது. மேலும் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் நாம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் நமது பணிக்கூற்றை கவனித்தால் புரிந்துகொள்ள முடியும்.

எமது மகுட வாசகமாக 'தமிழ் கூறும் நல்லுலகு' என்னும் கூற்றைத் தெரிவு செய்திருப்பதுடன் எமது தூர நோக்காக 'தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்' என்னும் கூற்றை தெரிவு செய்துள்ளோம்.

தற்போது இணைய ஊடகமே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆகவே இணைய வெளியில் நமது இருப்பை நாம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை தனி ஒருவனாக யாராலும் செய்ய முடியாது. அவரவர் சக்திக்கேற்ப சிறிய பங்களிப்பை வழங்கலாம். ஆனால் ஒன்றிணைந்த பங்களிப்பின் மூலமே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆகவே நம் மூச்சிலும் பேச்சிலும் உயிரெனக் கலந்துள்ள தமிழ் மொழியை உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களிடையே கொண்டு சென்று சேர்ப்போம் வாருங்கள்!

- சிகரம் பாரதி.

சிகரம் பணிக்கூற்று - 2017.07.01 - 2018.05.31

சிகரம்

திருவள்ளுவராண்டு 2048 ஆனி 17, 2017.07.01 - சனிக்கிழமை.

மகுட வாசகம்


தமிழ் கூறும் நல்லுலகு!

தூரநோக்கு


தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்!

எமது இலட்சிய நோக்கு


* தமிழர் வரலாறு, பழந்தமிழ் நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், காட்சிப்படுத்தல் மற்றும் எண்ணிமமாக்கல்.

* தமிழில் உலகின் மிகப்பெரிய எண்ணிம நூலகத்தையும் தரவு மையத்தையும் உருவாக்குதலும்  உலகின் முதற்தர தமிழ்ச் செய்திச் சேவையாகத்  தொழிற்படுதலும்.

* உலகின் மொழிகள் அனைத்திலும் தலை சிறந்த படைப்புகள் அனைத்தையும் தமிழில் வழங்குதலும் கடந்தகால மற்றும் தற்கால தமிழ்ப் படைப்புக்களை எண்ணிமமாக்கலும்  படைப்பாளிகளை ஊக்குவித்தல், கௌரவித்தல்.

* அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதல் மற்றும் சகோதர மொழிகளுக்கு மதிப்பளித்தலும் அவர்களின் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்தை தமிழிலும் அந்தந்த மொழிகளிலும் ஆவணப்படுத்தலும்.
* உலக அளவில் தமிழ் மொழிக்கானதும் தமிழ் மக்களுக்கானதுமான உறுதியான, உயரிய அங்கீகாரத்தைப் பெற்றெடுத்தலும் தமிழ் மக்களுக்கென தனியான, தனித்துவமான சுய முகவரியை வென்றெடுத்தலும்.

* தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகத்துறை சார்ந்த வணிகத்துறைகளில் தடம் பதித்து வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துதலும் மக்களுக்கான மக்களின் வணிகமாக செயற்படுதலும்.⁠⁠⁠⁠

* இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் இலக்கியம், கலை மற்றும் வாழ்வியல் ஆகியவற்றை உலகறியச் செய்தலும் தரவுகளைத் தொகுத்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் ஆவணப்படுத்தலும்.

* தமிழ் மொழியின் பெருமையையும் வளமையையும் மட்டுமல்லாது தமிழ்ப் படைப்புகளையும் உலக மொழிகளினூடாக உலகறியச் செய்தல். மொழிபெயர்ப்பு இலக்கியத்தை பிறமொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகளுக்கும் ஆக்குதல்.



குறிக்கோள்கள் 

 
01. மலையக மக்களின் கல்வியறிவை மேம்படுத்துவதுடன் அரசியல், சமுதாய விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தி மலையக தமிழர்களின் கலை, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதுடன் கல்வி, மருத்துவம், விளையாட்டு, பண்பாடு, விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என சகல துறைகளிலும் வளர்ச்சியடைந்த - உச்ச பட்ச அபிவிருத்தியடைந்த மலையகத்தை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு கையளித்தல்.

02. தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்.

03. சிகரம் ஊடகத்துறையினூடாக எவ்விதமான பக்கச்சார்புமின்றியும் அச்சமுமின்றியும் நீதித்தன்மையுடன் உடனுக்குடன் உண்மையானதும் தெளிவானதும் உறுதியானதுமான செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தல். மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு உடன் தீர்வு காணுதல். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கபடுவதோடு சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் நிறுவனம் குரல் கொடுக்கும்.

04. தமிழ்க் கருத்தரங்குகளை தினசரி, வாராந்தம், மாதாந்தம் என உரிய கால அளவுகளில் நடத்துதலும் வருடாந்த மாநாடுகளை உலக அளவில் ஒழுங்கு செய்து நடத்துதல் மற்றும் உலக அளவில் இடம்பெறும் இவ்வாறான ஏனைய நிகழ்ச்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குதலும் மற்றும் தமிழ்க் கலை, இலக்கிய நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குதல் மற்றும் ஆவணப்படுத்தலும் 

05. தாய்மொழி வழிக் கல்வி தொடர்பிலான அவசியத்தை மக்களுக்கு உணர்த்துதல் மற்றும் தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் தமிழில் தாய்மொழி வழிக் கல்விக்கான வளங்களை மாணாக்கர்கள் பெற்றுக்கொள்ள ஆவண செய்தல். 
06. தமிழ்ப் படைப்பாளிகளை உரிய முறையில் இனங்கண்டு அவர்களின் படைப்புகளை உலகறியச் செய்தலும் திறமையான படைப்பாளிகளை ஊக்குவித்தலும் நலிந்த பொருளாதாரம் கொண்ட படைப்பாளிகளுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குதலும் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை உரிய முறையில் ஆவணப்படுத்துதலும்.

07. உலகின் மிகப் பெரிய எண்ணிம நூலகம் மற்றும் ஆவணக்காப்பகத்தை உருவாக்குதல். இதற்காக ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களை இணைத்துக் கொள்ளல் அல்லது அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல். மேலும் மின்னூல் மற்றும் மின்னிதழ் வெளியீட்டை தமிழில் ஊக்கப்படுத்தல். தற்கால படைப்பாளிகளின் படைப்புகளை அவர்களின் அனுமதியுடன் மின்னூலாக்கம் செய்தல். நமது எண்ணிம நூலகத்தின் வாயிலாக கட்டணத்துடன் அல்லது கட்டணமின்றி அவற்றை படிக்கும் வசதியை மக்களுக்கு வழங்குதல்.


08. வெளியிடப்படும் நூல் சார்ந்த அல்லது அச்சு சார்ந்த துறையில் (பத்திரிகைகள், புத்தகங்கள்) தகவல் சேகரிப்பு, அச்சிடல், வெளியிடல் என்பவற்றில் முறையான தரத்தை பேணுதலும் எண்ணிம வடிவிலான வெளியீடுகள் மற்றும் ஆவணப்படுத்தல் தொடர்பில் முறையான தரக்கொள்கையைப் பின்பற்றுதலும்.


சிகரம் குறிக்கோள்கள் : 2017.07.01 முதல் 2018.05.31 வரையிலான காலப்பகுதிக்கு உரியது.


# சிகரம் இணையத்தளத்தினூடாக தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை உலகறியச் செய்தல்

# சிகரம் பாரதியின் வலைத்தளங்கள், சிகரம் நிறுவன வலைத்தளங்கள் மற்றும் நட்பு வட்டார வலைத்தளங்கள் ஆகியவற்றில் வெளியான படைப்புகள் அனைத்தையும் சிகரம் இணையத்தளத்தினூடாக வெளியிடல்

# வாராந்தம் அல்லது மாதாந்த கால இடைவெளியில் சிகரம் இணையத்தளத்தில் வெளியிடப்படும் படைப்புகளை இணைத்து சிகரம் மின்னிதழை வெளியிடல்

# எழுத்தினூடாக மட்டுமல்லாது குரல்ஒலி மற்றும் காணொளி வாயிலாகவும் தமிழ்ப் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல்

# தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவின் படைப்புகளை சிகரம் இணையத்தளத்தில் வெளியிடுதலும் தமிழ் மொழியை வளப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை குழுவுடன் இணைந்து முன்னெடுத்தலும்

# சிகரம் இணையத்தளத்தை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக விளம்பரப்படுத்தலை மேற்கொள்ளல்⁠⁠⁠⁠

# மலையகம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் பிற படைப்புகளை வெளியிடல்

# சக வலைத்தளங்கள் அல்லது இணையத்தளங்களில் வெளியான தரமான படைப்புகளை உரியவர்களின் அனுமதியோடு மீள் பிரசுரம் செய்தல்

சிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது.


^ சிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.

^ சிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்

^ திறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்

^ 2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்

- சிகரம் -

Monday, 19 June 2017

பதினோராம் வருடப் பூர்த்தியில் சிகரம்!

வணக்கம் நண்பர்களே! 2006.06.01 அன்று 'சிகரம்' கையெழுத்து சஞ்சிகையாக தனது பயணத்தைத் துவங்கியது. பதினோரு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பண்ணிரண்டாவது அகவையில் உங்கள் 'சிகரம்' காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஒரு குழந்தை போல் மெல்ல மெல்ல நிதானமாக'சிகரம்' தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. வெற்றிப் பாதையில் மெதுவாகவே பயணித்துக் கொண்டிருந்தாலும் இலக்கை நோக்கித் தெளிவாக பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 'சிகரம்' இணையத்தளத்தின் ஆரம்பம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். 'சிகரம்' இணையத்தள வடிவமைப்பின் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில பணிகளே எஞ்சியுள்ளன. அவையும் முடிவடைந்த பின்னர் இணையத்தளம் தனது தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்யக் காத்திருக்கிறது. 

மேலும் இம்மாதம் முதல் குரல்ஒலி மற்றும் காணொளி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் 'சிகரம்' உங்களை நாடி வந்து கொண்டிருக்கிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியையும் இச்சந்தர்ப்பத்தில் உங்களுக்கு வழங்கக் கடமைப் பட்டிருக்கிறேன். விரைவில் நிறுவன அமைப்பாக எமது பணியைத் தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நண்பர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஊக்கப்படுத்தலுமே எம்மை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை. மிக்க நன்றி நண்பர்களே. 

தமிழரையும் தமிழையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லும் எமது நோக்கத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நமது மொழி, பண்பாடு ஆகியவற்றை பேணிக் காக்கவும் வளர்க்கவும் தமிழராகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுதல் அவசியமாகும். தற்போதைய தமிழர் அரசியல் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தமிழ்த் தலைமைகள் என்று சொல்லிக்கொல்வோரும் குறிப்பிடும்படியாக எதையும் சாதிக்கவில்லை. எல்லோரும் சுயநல அரசியலிலேயே ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே அரசியல் ரீதியாகவும் உறுதியான அடிக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம். அனைத்திற்கும் நாம் துணை நிற்போம். வாருங்கள் ஒன்றிணைந்து பயணிக்கலாம்.

வெல்க தமிழ்!

Monday, 13 February 2017

SIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது!

நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் உதயமாகிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் 'சிகரம்' இணையத்தளம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. வடிவமைப்புப் பணிகள் கடந்த மாதம் (தை 2048) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துர்முகி வருடம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் நான்காம் நாள் (2017.02.16) அன்று வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்து எனது கைகளுக்கு இணையத்தளம் ஒப்படைக்கப்படும். மாசி மாதம் ஏழாம் நாள் (2017.02.19) அன்று உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன். வடிவமைப்புப் பணிகளில் ஏதேனும் தாமதங்கள் நேர்ந்தாலோ அல்லது ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள நேர்ந்தாலோ மாசி மாதம் இருபத்தோராம் நாள் (2017.03.05) உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளம் சமர்ப்பிக்கப்படும். பதிவுகள் இடப்பட்டு முழுமையான பாவனைக்குரிய தளம் வைகாசி மாதம் பதினெட்டாம் நாள் (2017.06.01) அன்று உங்கள் எண்ணங்களுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது. 'சிகரம்' வலைத்தளத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களாக நீங்கள் நல்கி வரும் பங்களிப்பை தொடர்ந்தும் வலைத்தளத்திலும் இணையத்தளத்திலும் வழங்குவீர்கள் எனத் திடமாக நம்புகிறேன். மேலும் 'சிகரம்' இணையத்தளத்திற்கு வாசகர் என்னும் நிலையைத் தாண்டி எழுத்தாளர்களாகவும் உங்கள் மேலான பங்களிப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 'சிகரம்' இணையத்தளம் 'சிகரம்பாரதி (லெட்சுமணன்)' ஆகிய எனது தனிப்பட்ட தளமல்ல. இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமானது. இலக்கணம், இலக்கியம், கலை, அறிவியல், பண்பாடு, அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் அழகு தமிழில் உங்கள் கரம் சேர்ப்பதே எங்கள் நோக்கம். 



எமது தூரநோக்கு "சமுதாயத்தின் பொறுப்புமிக்கதும் சமுதாயத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதுமான வணிகமாக செயற்படுத்தலும் தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லுதலும் எமது தூர நோக்காகும்" என 2009 ஆம் ஆண்டு "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகையின் 75 ஆவது வெளியீட்டில் பிரகடனப் படுத்தப்பட்டது. அந்த அடிப்படையிலேயே இதுவரை செயற்பட்டுவருகிறேன். நீண்டகாலக் கனவான இணையத்தளம் உருவாக்கும் எண்ணமும் இதோ ஈடேறப் போகிறது. இனி முறையான வணிகமாக ஆரம்பித்து "சிகரம்" இன் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இன்னும் இரண்டாண்டுகளில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். கடந்த பத்து ஆண்டுகளாக "சிகரம்" இன் பல்வேறு வடிவங்களிலான பயணத்திற்கு நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காய் அனைவரும் ஒன்றிணைவோமாக!

சிகரம் இன் பயணம் 2003 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமானது. சிறுசிறு கையெழுத்துப் பத்திரிகைகள் மற்றும் பல முயற்சிகளினூடாக பயணம் தொடங்கப்பட்டது. முழுமையான தேர்ந்த கையெழுத்துப் பத்திரிகையாக 2006 ஆம் ஆண்டிலேயே தோற்றம் பெற்றது. 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் "சரஸ்வதி" என்னும் இலக்கிய கையெழுத்து சஞ்சிகையை துவக்கினேன். இலக்கியத்தில் எனக்கும் ஆர்வம் இருந்ததால் நாளுக்கு நாள் சஞ்சிகையை மெருகேற்றி வந்தேன். ஆனால் இலக்கிய சஞ்சிகை மாணவர்களிடையே உரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆகவே சஞ்சிகையின் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் 2006.06.01 முதல் "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகையை பல்சுவை சஞ்சிகையாக துவக்கினேன். அன்று முதல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவு வரை 100 இதழ்களை வெளியிட்டேன். வாசகர் பற்றாக்குறை காரணமாக 2009 இல் இடைநிறுத்த வேண்டியேற்பட்டது. அதன் பின் தேசிய நாளேடுகளுக்கும் இலக்கிய சஞ்சிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் வலைத்தளத்தில் காலடி பதித்தேன். இப்போது இணையத்தளத்திலும் கால் பதித்தாயிற்று. இனியென்ன? எல்லாமே வெற்றிதான்!

"சிகரம்" இணையத்தளம் உங்களின் பங்களிப்புடன்தான் முன்னேறப் போகிறது. 'சிகரம் பாரதி' ஆகிய எனது படைப்புகளில் "சிகரம்" இணையத்தளத்துக்குப் பொருத்தமானவை மட்டும் இணையத்தில் வெளியாகும். மற்றவை வலைத்தளத்தில் மட்டும் வெளியாகும். உங்கள் வலைத்தளங்களில் வெளியிடும் பதிப்புகளையும் எமது இணையத்தளத்தில் வெளியிடலாம். கடந்தகாலப் படைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படும். அனைத்தும் உங்கள் சொந்தப் படைப்பாக இருந்தால் போதுமானது. இரு கை இணைந்தால் தான் ஓசை. வாசகர்களாகிய உங்களுடன் சேர்ந்து செய்தால் தான் அது சேவை. இணையத்தில் தமிழ்த் தொண்டு செய்ய விரும்பும் அனைவரும் எம்மோடு கைகோர்க்கலாம். தமிழ் மொழி எங்கள் மூச்சு. அதைக் காப்பதே எங்கள் நோக்கு!

உங்கள் படைப்புகளை அனுப்ப மற்றும் இதர தொடர்புகளுக்கு sigaramco@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை அல்லது SIGARAM CO என்னும் கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தலாம். வாட்ஸப் போன்ற செயலிகளினூடாகவும் உங்கள் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சங்கங்களிலும் இணைந்துகொள்ளவுள்ளோம். இவ்வளவு ஏன் பிளாக்கரில் கூட கால் பதிக்கிறது நம் சிகரம்! தமிழால் இணைவோம்! தமிழுக்காய் இணைவோம்! தமிழை வளர்ப்போம்! தமிழைக் காப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

தொடர்புகளுக்கு :-

இணையத்தளம்  : https://sigaram.co/
மின்னஞ்சல்           : sigaramco@gmail.com
பிளாக்கர்                : http://sigaramco.blogspot.com/
கூகிள் பிளஸ்         : https://plus.google.com/u/0/105797588665610856560
டுவிட்டர்                  : @sigaramco
பேஸ்புக்                   : sigaramco

Popular Posts