Wednesday 25 April 2018

முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02

முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் முனைவர் இரா. குணசீலன். 'வேர்களைத் தேடி' என்னும் வலைப்பதிவின் மூலம் தமிழ் மொழியின் வேர்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார். உலக அளவில் தொழிநுட்பத் தமிழைக் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறார். 'சிகரம்' இணையத்தளத்துக்காக நேர்காணல் என்றதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இதோ முனைவர் இரா. குணசீலன் அவர்களுடனான நமது நேர்காணலின் இரண்டாம் பகுதி உங்களுக்காக: 



சிகரம் : தமிழில் விஞ்ஞானம், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன துறைகளுக்கான தமிழ்ச் சொற்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. இதை சரிசெய்வது எப்படி?
குணசீலன் : இயன்றவரை ஒவ்வொரு தமிழரும் தம் துறை சார்ந்த சொற்களைத் தமிழில் கலைச்சொல்லாகப் பயன்படுத்தவேண்டும். என் மாணவர்கள் நான் பயன்படுத்தும் கணினிசார்ந்த சொற்களைத் தமிழிலேயே பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் முகநூல், மின்னஞ்சல், குறுந்தகவல், திறன்பேசி என பேசுவதைப்பார்த்து வியந்த, சிரித்தவர்கள் இப்போது அவர்களே அச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு ஆசிரியர்களுடன் நான் நின்றால் பிற ஆசிரியர்களிடம் குட் மார்னிங் என்று கூறும் மாணவர்கள் என்னைப் பார்த்து காலை வணக்கம் ஐயா என்றுதான் கூறுவார்கள். கலைச்சொல்லாக்கங்களைப் பயன்படுத்துவதில் தமிழ் விக்சனரி பெரும் உதவியாக உள்ளது.

https://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்  - தற்பொழுதுள்ள சொற்கள் = 3,54,597

சிகரம் : பேஸ்புக், வாடஸப் போன்ற சொற்கள் வணிகப் பெயர்ச் சொற்கள். இவற்றை முகநூல், புலனம் என்று மொழியாக்கம் செய்வது தவறல்லவா?

குணசீலன் : விக்சனரி போன்ற பல தளங்கள் மட்டுமின்றி இணையத் தமிழ் மாநாடுகளிலும் கலைச்சொல்லாக்கங்கள் குறித்த விவாதங்கள் நடந்துதான் வருகின்றன. இருந்தாலும் முகநூல் போன்ற பல கலைச் சொல்லாக்கங்களை தமிழுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. வணிகப் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்வது தவறு என்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் உலவுவது எப்படி சரியாகும்? அது அவர்களது விருப்பம் என்றால் இது தமிழுணர்வாளர்களின் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாமே?

சிகரம் : பெயர்ச் சொற்கள் ஒரு மனிதனை, ஒரு பொருளை அல்லது ஏதேனும் ஒன்றை அடையாளப்படுத்துபவை. அதனை மொழிக்கு ஒரு பெயரில் வைத்தால் சிக்கல் அல்லவா ஏற்படும்? பெயர்ச் சொல் மொழியாக்கம் பெயரின் மூல அடையாளத்தை அழிக்கும் செயலல்லவா? சிகரம் என்னும் தமிழ் இணையத்தளத்தை எந்த மொழியிலும் சிகரம் என்றே அழைக்க வேண்டும். அது போலத்தானே பேஸ்புக்கும் வாட்ஸப்பும்?

குணசீலன் : தங்கள் கருத்தை வரவேற்கிறேன் நண்பரே. ஆனால் எனது பார்வை என்னவென்றால் ஆங்கிலத்திலிருக்கும் வார்த்தைகள் யாவும் அம்மொழிக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. கிரேக்கம், இலத்தீன் என பலமொழிகளின் கலவையே அம்மொழி. ஆனால் அம்மொழி இன்று உலகையே ஆள்கிறது. இன்றைய நிலையில் அறிவு மனித இனத்தின் பொதுவான சொத்து. அப்படியிருக்கும்போது எந்தவொரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை அவரவர் தாய்மொழியிலேயே பயன்படுத்துவது என்பது மொழிசார்ந்த உணர்வு. இன்று சூப்பர் கம்யுட்டர்களை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அந்நாடு அமொிக்காவையே முந்திவிட்டது. அதற்கு அடிப்படைக் காரணம் சீனர்களின் மொழி உணர்வு. கலைச்சொல்லாக்கத்தின் தொடக்கநிலையிலிருக்கும் நாம் இதுபோன்ற பல தடைகளையும் கடந்துதான் செல்லவேண்டும். 

முதலில் எந்வொரு அறிவியல் துறையாக இருந்தாலும் அதனை தமிழில் புரியவைக்க கலைச்சொல்லாக்கங்கள் அடிப்படையாக அமைகின்றன. எந்த மொழிச்சொல்லாக இருந்தாலும் அச்சொல்லின் மூலச் சொல் எது என்று அறிவதற்கே வேர்ச்சொல் ஆய்வு என்ற துறை உள்ளது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நூல்களை வாசித்தால் நமக்கு ஒன்று புரியும். எந்தவொரு அறிவியல் மரபுகளையும் நாம் அழகுத் தமிழில் விளக்கமுடியும் என்பதே அது. கணினிக்கு 01 என்பதுதானே மொழி. அப்படியிருக்க அதை அவரவர் தாய்மொழிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் ஏன் அவ்வாறு பயன்படுத்த இயலவில்லை...? என்பதே எனதுகேள்வியாக உள்ளது. 



தங்கள் கேள்வி கலைச்சொல்லாக்க நெறிமுறை சார்ந்தது. எனது கருத்தோ தமிழ்மொழி சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கலைச்சொல்லாக்கத்தின் தற்காலத் தேவை குறித்தது. கூகுளில் பணியாற்றும் சுந்தர் பிச்சை போல இன்னும் மிகச்சிறந்த அறிவாளர்கள் தமிழைத் தாய்மொழியாக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் அறிவு ஆங்கிலமொழியைச் சார்ந்தே இருக்கிறது. தமிழ் காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் மொழி. இந்த நிலையும் மாறும். ஒருநாள் கலைச்சொல்லாக் வரலாற்றில் இதுபோன்ற கருத்தாடல்களும் வாசிக்கப்படும்.

சிகரம் : நல்லது. எனது சொந்தக் கருத்தை இந்த இடத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். எனது கருத்தானது பேஸ்புக் என்னும் பெயர்ச்சொல்லை தமிழ்ப்படுத்தக் கூடாது என்பதே. ஆனால் பேஸ்புக்கின் டைம்லைன், ஸ்டேட்டஸ், லைக் போன்ற செயல்பாடுகளை / பதங்களை தமிழ்ப்படுத்தினால் தவறில்லை. பேஸ்புக் என்பதை தமிழ்ப்படுத்தினால் இன்னும் நோக்கியா, சோனி, மைக்ரோசாப்ட் என்று நீளும் ஆயிரமாயிரம் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்ய நேரும். பின் பெயர்ச் சொற்களை கலைச்சொல்லாக்கம் செய்வது மட்டுமே நம் வேலையாக இருக்கும். எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் பெயர்ச் சொல்லுக்கு அதன் மதிப்பை வழங்குவது தான் நியாயம். இது எனது கருத்து மட்டுமே. நேர்காணலோடு தொடர்பில்லை.

சிகரம் : அரசியல் குறித்த தங்கள் பார்வை என்ன?

குணசீலன் : 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறை என்று வைக்கப் படும்' என்றார் வள்ளுவர். ஒருகாலத்தில் சேவையாகக் கருதப்பட்ட அரசியல் இன்று வணிகமாகிவிட்டது. ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசங்களுக்கு விலைபோவதும் இன்றைய மக்களின் இயல்பாகவுள்ளது.

சிகரம் : மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறானதாக உள்ளது?

குணசீலன் : ஊடகங்களின் வளர்ச்சியால்தான் மொழித்தாக்கம் மிகுந்து வருகிறது நண்பரே.

சிகரம் : இன்றைய தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் தமிழை ஆங்கிலம் கலந்து பயன்படுத்தும் போக்கு மிக அதிகமாக உள்ளதே?

குணசீலன் : ஆம் நண்பரே. கவிஞர் காசியானந்தன் அவர்கள் சொல்வது போல இது லன்டன் டங் என்னும் நோய். அவர்கள் பேசுவது தமிங்கிலம்.

மொழியை விடவும் மேலானது மொழி உணர்வு. எனவே தமிழை விடவும் தலையாயது தமிழுணர்வு. மொழி உணர்வு இறந்த தேசத்தில் மொழியும் இறந்துபடும். தமிழுணர்வு இழக்கும் நாட்டில் மிஞ்சுவது தமிழின் சவமே. மொழி உணர்வைக் கழித்துவிட்டு மிச்ச உணர்வுகளை ஊட்டுவது பிணத்துக்கு ஏற்றும் ஊசி மருந்துகளே. மொழி உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இன அடிமைகளாவது இயல்பு. தமிழுரிமை பறிகொடுத்த மக்களைத் தளைப்படுத்துவது எளிது.

சிகரம் : உங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ன?

குணசீலன்: கணினியை முழுக்க முழுக்க தமிழிலேயே பயன்படுத்தவேண்டும். இயங்குதளம் தொடங்கி மென்பொருள் வரை. காலத்துக்கு ஏற்ற எல்லாத் தொழில்நுட்பங்களிலும் தமிழ் செல்வாக்குப் பெற்றுத் திகழவேண்டும் என்பதே என் கனவு. அதற்கு என்னால் இயன்றவை தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்குதல், மென்பொருள் உருவாக்குதல், மாணவர்களை அதற்கு நெறிப்படுத்துதல் ஆகியன என் அடிப்படையான இலக்கு. திருக்குறளின் பெருமைகளை உரையாசிரியர்களைக் கடந்து குறளின் மெய்யான பொருளை உணரும் நுட்பத்தை என் வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலக்கு.

சிகரம் : இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகளிலேயே இணைய முகவரியைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்தனர். ஆனால் அறிமுகக் கட்டத்தைத் தாண்டி உலக நாடுகளில் அமுல்படுத்தப்படவோ அல்லது அறிமுகம் செய்யப்பட்ட நாடுகளில் பயன்படுத்தப் படவோ இல்லையே? இதில் காணப்படும் சிக்கல்கள் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?



குணசீலன் : இணைய உலாவியில், ஒரு தளத்தின் பெயரை அடித்தவுடன், அந்தத்தளம் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் சர்வரின் ஐபி அட்ரஸ் (IP Address) உலாவிக்குக் கிடைக்கும். இது இணையச் சேவை தரும் நிறுவனத்திற்கு (ISP – Internet Service Provider) தெரிந்திருக்கும். இணையச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் DNS (Domain Name System) எனப்படும் இணையத் தகவல்கிடங்கில் இருந்து இந்த ஐபி அட்ரஸ் தகவலை எடுத்துக் கொடுக்கும். DNS என்பது டெலிஃபோன் டைரக்டரி போன்றது. ஒரு இணைய தளப்பெயரைக் கொடுத்தால், அது அந்த இணைய தளத்திற்கான ஐபி அட்ரஸைக் கொடுக்கும். உலகில் இருக்கும் அனைத்து இணைய தளங்களின் ஐபி அட்ரஸ்களும், ஒரு DNSக்கு தெரிந்திருக்காது என்பதால், அது அதற்குத் தெரிந்த இன்னொரு DNSஇடம் கேட்க சொல்லும். அதற்கும் தெரியாவிட்டால், இன்னொன்றுக்கு. இது ஒரு தொடர் செயல்பாடு.

இந்த நுட்பியல் பின்புலத்தில் இப்போது தங்கள் சிகரம் தளத்தை தேடவேண்டுமானால் https://www.sigaram.co என்றுதான் தேடவேண்டும் என்று இல்லையே. தற்போது சிகரம் என்று தேடினாலும் கிடைக்கும். ஆனால் இதில் என்ன நடைமுறைச் சிக்கல் என்றால், எது தாங்கள் தேடும் சிகரம்? அது திரைப்படமா, இயற்கைவளமா? இணையதளமா? என்பதுதான். இதற்குத்தான் இப்போது கணினிக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் போதிக்கப்பட்டுவருகிறது. ஒருங்குறி என்னும் எழுத்துமுறை கணினியுடன் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இணையதளங்களுக்கான பெயர்களை தமிழிலேயே வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றே கருதுகிறேன்.

சிகரம் : நமது எல்லாத் தேவைகளும் இணையத்தின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தளங்கள் மீதான வைரஸ் தாக்குதல்கள் தனி மனித பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலல்லவா? இப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு நம்பிக்கையோடு இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகிற்குள் காலடி எடுத்து வைக்க முடியும்?

குணசீலன் : ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்தமூல மென்பொருள்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. வைரஸ் எனப்படும் நச்சுநிரல்கள் இவற்றில் பரவுவதில்லை. இணையவெளியில் இன்று தனிஉரிமை என்பதும், தகவல் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் காலத்துக்கு ஏற்ப நுட்பங்களை சராசரி மனிதர்களும் அறிந்துகொள்ள வேண்டும். அறிந்துகொள்ள முயலாதவர்கள் ஏமாற்றமடைவதும், பாதிக்கப்படுவதும் தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் வாழத்தகுதியுள்ளன மட்டுமே வாழும். அல்லன செத்து மடியும். இது இணையஉலகத்துக்கும் ஏற்புடையதாகத் தான் உள்ளது.

சிகரம் : திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகிறது? அதன் பயன்பாடுகள் யாவை?

குணசீலன் : திறந்த மூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்ரொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்ரொடரை வெளியிடுவார்கள். அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்ரொடரை படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும். இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும். இவ் விளக்கமானது இலவச மென்பொருளின் வழிகாட்டியை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்டது. இவற்றை எழுதியதும், மாற்றியமைத்ததும் புரூசு பெரன்சு என்பவர்.


மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்குவது இதன் தனிச்சிறப்பாக அமைகிறது. இம்மென்பொருள்கள் பற்றியும் இதன் பயன்பாடுகள்பற்றியும் யுடியுப்பிலும், விக்கிப்பீடியாவிலும் நிறைய செய்திகள் காணக்கிடைக்கின்றன.

சிகரம் : "தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்" - இது சிகரம் கையெழுத்துப் பத்திரிகையாக இருந்த போது 2006 ஆம் ஆண்டில் (எனது பதினாறாம் வயதில்) சிகரத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட இலட்சிய நோக்கம். இதனை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் நிகழ்த்துவது சாத்தியமா?

குணசீலன் : நுட்பியல் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழை தகவமைத்துக்கொள்ள முதலில் கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மெக்காலே கல்விமுறையை மாற்றவேண்டும். உலகத் தரத்திலான கல்வியை வழங்கவேண்டும். மாணவர்களுக்கு திறனறிந்து அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். தமிழ் என்பது எல்லா அறிவியல் துறைகளிலும் பங்காற்றவேண்டும். கலைச்சொல்லாக்கங்களை உருவாக்கவேண்டிய பெரிய பணி தமிழ்ச் சமூகத்துக்கு சவாலாக உள்ளது. அறிவு எந்தமொழிக்கும் சொந்தமானதல்ல, மொழியின் எல்லையே சிந்தனையில் எல்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். பொறியியல் படிப்புக்கு இன்றைய நிலைதான் கலை அறிவியல் படிப்புக்கு நாளை ஏற்படும். இன்று தேவை இளம் விஞ்ஞானிகள் மட்டுமல்லை, இளம் விவசாயிகளும்தான். கலாம் விதைத்த விதைகள் அறுவடையாகும் காலம் 2020. நம்பிக்கையோடு நடைபயில்வோம். இன்றைய இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல. பயன்படுத்தப்படாதவர்களே. இருள் இருள் என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட நாம் விளக்கேற்றிவைப்போம்.

சிகரம் : உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

குணசீலன் : தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன், புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், கல்கி, சுஜாதா, மு.வரதராசனா், கி.ராஜநாராயணன், அறிஞர் அண்ணா, இறையன்பு, கண்ணதாசன், வைரமுத்து, இராஜேஷ்குமார்.

சிகரம் : பிடித்த புத்தகங்கள்?

குணசீலன் : திருக்குறள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன் கவிதை நூல்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, தமிழ்க்காதல்

சிகரம் : சஞ்சிகைகள் வாசிப்பதுண்டா?

குணசீலன் : தமிழ்க் கம்யுட்டர், வளர்தொழில், தடம் ஆகியவை தொடர்ந்து வாசிப்பதுண்டு. இணையத்தில் முத்துக்கமலம், இனம், பதிவுகள், வரலாறு வாசிப்பது வழக்கம்

சிகரம் : தொழிநுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் சாதாரண மக்கள் பலர் இன்னமும் அடிப்படைத் தொழிநுட்ப வசதிகளையே பெற்றுக் கொள்ளாதிருக்கும் நிலையில் முழுமையான தொழிநுட்ப அடிப்படையிலான தினசரி வாழ்க்கை சாத்தியமாகுமா?

குணசீலன் : இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

5 ஜி சேவை அறிமுகமாகவுள்ள இன்றைய நிலையில் நம் நாட்டில் பல தொழில்நுட்ப வசதிகளை தனியார்தான் வழங்கி வருகிறது. bsnl என்னும் அரசு சேவையகம் மாட்டுவண்டி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது.

இன்றைய தனியார் பள்ளியில் முதல் வகுப்பிலேயே ரோபோட்டிக் பொறியியல் நுட்பம் கற்றுத்தரப் படுகிறது. ஆனால் அரசுக் கல்லூரியில் கணினிக்கல்வி என்பது போதுமானதாக இல்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்கும் வரை சராசரி மக்களுக்கும் தொழில்நுட்ப வசதி என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.



சிகரம் : சிகரம் இணையத்தளம் குறித்த தங்கள் பார்வையைப் பதிவு செய்ய முடியுமா?

குணசீலன் : சரியான திட்டமிடல் பாதி வெற்றிக்குச் சமமானது. 'தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்!' என்ற தங்கள் நோக்கும், அதற்கான தங்களின் போக்கும் என்னை மிகவும் கவர்ந்தன. தெளிவான நோக்குடன் சரியான பாதையில் செல்லும் இந்த இணையம் எதிர்காலத்தில் திட்டமிட்ட இலக்குகளை அடையும் என்று கருதுகிறேன். பாராட்டுக்கள்.

சிகரம் : சிகரம் இணையத்தளத்தின் குறைபாடுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

குணசீலன் : குறைபாடு என்றும் ஏதும் தோன்றவில்லை. இருந்தாலும் தாங்கள் கேட்பதால்... பிற இணையதளங்களில் காணக்கிடைக்கும் சராசரி செய்திகளும் தங்கள் தளத்தில் கிடைப்பதை குறையாகக் கருதுகிறேன். சிகரம் தளம் சென்றால் புதிய செய்தி பிற இணையதளங்களில் காணக்கிடைக்காத செய்திகள் கிடைக்கும் என்ற எண்ணத்தைப் பார்வைாயாளர்களிடம் உருவாக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்

சிகரம் : இந்த நேர்காணலின் மூலம் நீங்கள் மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி?

குணசீலன் : சமூகத் தளங்களின் வழியாக தமிழ் மொழியை வளர்ப்பதுடன், சமூக மாற்றத்துக்கும் வித்திடமுடியும் என்ற கருத்தையும் சமூகத்தளங்களில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டும் என்ற சிந்தனையையும் பதிவுசெய்யவிரும்புகிறேன்.

சிகரம் இணையத்தளத்துடனான நேர்காணலுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி பொறுமையாகவும் முழுமையாகவும் திறமையாகவும் பதிலளித்த முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கு 'சிகரம்' இணையத்தளம் சார்பில் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். 

093/2018/SIGARAMCO 
2018/04/25
முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02 
https://www.sigaram.co/preview.php?n_id=319&code=8mRs6EIP 
#நேர்காணல் #தமிழ் #குணசீலன் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE
#சிகரம் 

050/2018/SigarambharathiLK
2018/04/25
முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02 
https://newsigaram.blogspot.com/2018/04/SGM-P93-GUNASEELAN..html 
#நேர்காணல் #தமிழ் #குணசீலன் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE
#சிகரம்  

Friday 13 April 2018

முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 01

முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் முனைவர் இரா. குணசீலன். 'வேர்களைத் தேடி' என்னும் வலைப்பதிவின் மூலம் தமிழ் மொழியின் வேர்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார். உலக அளவில் தொழிநுட்பத் தமிழைக் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறார். 'சிகரம்' இணையத்தளத்துக்காக நேர்காணல் என்றதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இதோ முனைவர் இரா. குணசீலன் அவர்களுடனான நமது நேர்காணல் உங்களுக்காக:

சிகரம் : உங்களை நமது வாசகர்களிடம் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

குணசீலன் : முனைவா் இரா.குணசீலன் சங்க இலக்கியத்திலும், கணினித் தமிழ் வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ்த்துறையில் எம்.ஏ., எம்.ஏ.எம்.பில்., பி.எச்டி., முடித்து, யுஜிசி நடத்தும் நெட் தேர்விலும் தேர்ச்சியடைந்தவர். பத்து ஆண்டுகளாக தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி வருபவர். சங்க ஓவியங்கள், உயிருள்ள பெயர்கள் என சங்க இலக்கியங்கள் தொடர்பாக இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் 30 கட்டுரைகள் வழங்கியதோடு இணையத்தமிழ் மாநாட்டிலும் கட்டுரை வழங்கியிருக்கிறார்.

www.gunathamizh.com என்ற வலைப்பதிவின் வழியாக 10 ஆண்டுகளாக சங்கஇலக்கியம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்த இணையதளத்தைப் பாராட்டி தினமணி, ஆனந்தவிகடன் இதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இவ்விணையதளத்துக்கு அமெரிக்காவில் இயங்கும் தமிழ்மணம் என்ற இணையதளம் விருது வழங்கியுள்ளது. தமிழில் சங்க இலக்கியப் பொன்மொழிகளைக் குறுஞ்செயலிகளாகவும் வெளியிட்டிருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்துறையுடன் இணைந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒப்பிலக்கிய நோக்கில் பன்னாட்டுக் கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.



சிகரம் : ஒரு மொழியின் வளர்ச்சியில் தொழிநுட்பம் எத்தகைய பங்கை வகிக்கிறது?

குணசீலன் : ஒரு மொழியின் வளர்ச்சியில் தொழிநுட்பம் அடித்தளமாகவே அமைகிறது. ஏனென்றால் ஒரு மனிதன் இன்றைய பணியை இன்றைய கருவிகொண்டு செய்யவேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்க்கை நலிவடையும். காலத்திற்கேற்ற தொழில்நுட்பம் அதற்கேற்ற கலைச்சொல்லாக்கம் என ஒரு மொழியை வளப்படுத்தவேண்டும். அறிவியல் துறைகள் யாவும் தாய்மொழியிலேயே படிக்கவேண்டும். 

மொழி என்பது ஒரு இனத்தின், பண்பாட்டின் அனுபவத்தின் அடையாளம். அதை உணராமல் நம்மைச் சுற்றி நிகழும் தொழில்நுட்பங்களை ஆங்கில மொழியைக் கொண்டே பயன்படுத்துவதால் மீண்டும் நாம் ஆங்கிலேயருக்கு அடியாகத்தான் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். நான் கணினி, இணையம், சமூகத்தளங்கள், திறன்பேசி என நுட்பியல் பயன்பாடுகள் யாவும் தமிழிலேயே பயன்படுத்துகிறேன். நாம் எல்லோரும் இந்த மனநிலைக்கு வந்தால் தமிழ் வையத்தலைமை கொள்ளும்.

சிகரம் : புதுக்கவிதைகளின் வருகை மரபுக்கவிதைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக உணர்கிறீர்களா?

குணசீலன் : காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும். பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர். அதனால் புதுக்கவிதை என்பது காலத்திற்கேற்ற வடிவம் என்று கருதுகிறேன். இதை ஆதிக்கம் என்று கருதவில்லை. 

மரபுக்கவிதைகளில் இலக்கண எல்லைகளுக்குள் கட்டுப்பட்டு கருத்துக்கள் முழுமையாக சென்று சேர இயலாத நிலை ஏற்படுகிறது. இருந்தாலும் திருக்குறளோ, சங்கஇலக்கியமோ இன்னும் நிறைய மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள் தொட இயலாத உயரங்களைத் தொட்டு காலத்தை வென்று நிற்கின்றன. அதனால் எத்தனை காலங்கள் ஆனாலும் புதுக்கவிதைகளால் மரபுக்கவிதைகளை ஆதிக்கம் செய்ய இயலாது. ஏனென்றால் மரபுக்கவிதைகளின் இன்றைய வடிவமே புதுக்கவிதை என்பது என் கருத்து.

சிகரம் : "தற்போது தமிழ் மொழியின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் என எல்லாம் தமிழில் கிடைக்கிறது. நாமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறோம். ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளது. அதாவது இவர்கள் பயன்படுத்தும் சொற்களை முறைமைப்படுத்த முறையான அமைப்பு ஒன்று இல்லை. ஆகவே ஏதாவதொரு சொல்லுக்கு அவர்கள் வழங்குவதே இறுதியான தமிழாக்கமாக இருக்கும். இது நம் மொழியை மேல் நாட்டவர்களின் கைகளுக்கு கொண்டு சேர்த்துவிடும்! தமிழ் மொழியை சத்தமின்றி அடிமையாக்கும் பணியை பெருவணிக நிறுவனங்கள் செய்து வருகின்றன." - இக்கூற்றை ஒப்புக்கொள்கிறீர்களா?

குணசீலன்: தற்போது மென்பொருள்கள், குறுஞ்செயலிகள், சமூகத்தளங்கள் என பல நிலைகளிலும் தமிழ் வளர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தாலும் அதை எத்தனை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விக்கிப்பீடியாவில் தமிழ் இப்போதுதான் ஒரு லட்சம் கட்டுரைகளைக் கடந்துள்ளது. ஆங்கிலத்தில் இலட்சக்கணக்கில் கட்டுரைகள் உள்ள நிலையில் தமிழில் கோடிக்கணக்கில் எழுதுவதற்கான களங்கள் உள்ளன. காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் மொழி தமிழ். அதனால் எக்காலத்திலும் தமிழை யாரும் அடிமைப்படுத்திவிட முடியாது. தமிழ் மொழியை உணர்ந்த யாரும் தமிழுக்கு அடிமையாவார்களே தவிர தமிழை அடிமைப்படுத்த மாட்டார்கள். 

இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்கள் பார்வையில் தமிழர்களை நல்ல சந்தையாகப் (மந்தையாக) பார்க்கிறார்கள். “ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாரவண்டி இழுக்கிறது கொம்பை மறந்த மாடு” என்பார் காசியானந்தன். அதுபோல தமிழ் மொழியின் பெருமையை உணராத தமிழர்களால் தான் தமிழின் பெருமை இன்னும் பெரிய உயரத்தை அடையாமல் இருக்கிறது. தொழில்நுட்பத்தால் தமிழை அடிமையாக்கவேண்டும் என யார் நினைத்தாலும் அது பகல் கனவாகவே இருக்கும். ஏனென்றால் தமிழ் மொழியின் இயல்பு அது. 

ஊர்ச்சொற்கள் அனைத்திலும் வேர்ச்சொற்கள் கொண்ட மொழி அது. வேர்ச்சொற்களின் பெருமையை மொழிஞாயிறு பாவாணர் தம் கட்டுரைகளில் அழகுபட மொழிந்துள்ளார். இப்போது தமிழர்க்குத் தேவை விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வு இல்லாமையால்தான் கணினி, இணையம், திறன்பேசி என பல்வேறு நுட்பங்களிலும் அமெரிக்கா, சீனா, கொரியா என பல நாடுகளின் ஆதிக்கம் உள்ளது. தமிழர்கள் யாவரும் தமிழிலேயே நுட்பியல் கருவிகளைப் பயன்படுத்துவோம். தமிழ் நுட்ப வசதியில்லாத எந்தவொரு கண்டுபிடிப்புக்கும் தமிழர்களிடம் வரவேற்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டால் தமிழின் நிலையை உலகு அறியும்.

சிகரம் : ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழர்கள் வாழ்வில் மட்டுமல்லாது உலக மக்களின் வாழ்க்கையிலும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்கள் வெவ்வேறாகவே இருந்து வருகின்றன. வணிக நிறுவனங்கள் கூட ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இது மொழி ரீதியான கலாச்சாரத்தை ஒரு காலகட்டத்தில் இல்லாதொழித்து விடும் அபாயமல்லவா?



குணசீலன் : ஒரு மொழியை அழித்தால் இனம் தானாகவே அழிந்துவிடும். அவ்வாறு தமிழை அழிக்கும் முயற்சியே இது. ஆங்கிலம் அறிவு என்றும் சிவப்பு என்பது அழகு என்றும் மூளைச் சலவை செய்யப்பட்டது போலத்தான் இந்த புத்தாண்டு தொடர்பான நிகழ்வுகளும் நடக்கின்றன. ஏப்ரல் மாத முதல்நாளை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவதுபோல வரலாற்றில் எதிர்காலத்தில் இந்த ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடியவர்களை முட்டாள்களாகவே பார்க்கும் நிலை வரும்.

சிகரம் : 'தொழிநுட்ப வளர்ச்சி கலாச்சார அழிவிற்கு வித்திடும் காரணி' என்னும் கூற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?

குணசீலன் : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலாச்சாரம் என்பது தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது என்பது தான் எனது பார்வை. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிதல்லவா. இவ்வளவு நுட்பியல் வளர்ச்சியிலும் ஏறுதழுவுதல் என்ற மரபுக்காக ஏன் போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்துக்கு சமூக தளங்களும் நுட்பியல் வளர்ச்சிகளும் எவ்வளவு துணைநின்றன என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

சிகரம் : பிறமொழி இலக்கியங்கள் பற்றியும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பற்றியும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

குணசீலன் : அறிவு மொழி எல்லைகளைக் கடந்தது. எல்லா மொழிகளிலும் அறிவுச் செல்வங்கள் உள்ளன. மொழிபெயர்ப்பு வழிதான் பிற மொழிகளின் அறிவுச் செல்வங்களை அறிந்து கொள்ளமுடிகிறது. சீனம், கிரேக்கம், இலத்தீன் என பல்வேறு மொழிகளுடனும் தமிழ் மொழி இலக்கியங்களை ஒப்பிட்டு நோக்கமுடிகிறது. மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் எந்த அளவுக்கு ஒரு மொழியில் பெருகுகின்றனவோ அந்த அளவுக்கு அம்மொழி வளம்பெறுகிறது.

சிகரம் : புத்தக வாசிப்பு குறைந்து வருவது தொழிநுட்ப வளர்ச்சியா அல்லது மொழியறிவின் வீழ்ச்சியா?

குணசீலன் : புத்தக வாசிப்பு குறைவது தொழில்நுட்ப வளர்ச்சியே தவிர மொழியறிவின் வீழ்ச்சி அல்ல. ஒலிநூல், மின்னூல், காணொளி என அறிவுத்தளம் விரிவடைந்துள்ளது. நூல்களே அறிவு என்ற எல்லை இன்று விக்கிப்பீடியா, கூகுள் தேடல், வர்டுவல் ரீடிங் ரூம், வீட்டில் என மாறினாலும் வாசிப்பு மாறவில்லை என்பதை நாம் உணரவேண்டும்

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியில் சாதாரண மக்களுக்கு அக்கறை உள்ளது எனக் கருதுகிறீர்களா?

குணசீலன் : நல்ல வாக்காளர்களால் தான் நல்ல அரசியல்வாதிகள் உருவாகிறார்கள். நல்ல அரசியல்வாதிகளால்தான் நல்ல சமூகம் உருவாகிறது. நல்ல சமூகத்தில் தான் மொழி வளர்ச்சியடைகிறது. ஒன்றைச்சார்ந்துதான் இன்னொன்று அமைகிறது. இதை ஒவ்வொருவரும் உணரவேண்டும், உணர்த்தவேண்டும். சாதாரண மக்களால் சாதாரண அரசியல்வாதிகளைத் தான் உருவாக்க முடியும். மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் முதலில் தாம் முழுமையாக மாறவேண்டும். இருள் இருள் என சொல்லிக்கொண்டே இருப்பதைவிட ஒரு சிறு விளக்கேற்றிவைப்பது மேலானது. 100 சாதாரணமானவர்களை மாற்ற ஒரு நல்ல சிந்தனையாளர் போதும். உலக புரட்சியாளர்கள் வரலாறுகளை வாசித்தால் இவ்வுண்மை புலப்படும்.

சிகரம் : செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்பாடு குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. அது குறித்து சற்று விளக்க முடியுமா?

குணசீலன் : மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல, கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வழி தமிழ்மொழியைக் கற்றல், கற்பித்தல் காலத்தின் தேவையாகிறது.

சிகரம் : செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் இயந்திரங்களுக்கு அறிவை வழங்குவது ஆபத்தான செயலல்லவா?

குணசீலன் : ஒருமுறை அப்துல் கலாம் அவர்களிடம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கணினிகள் எப்படி இருக்கும் என்ற வினா கேட்கப்பட்டது . அதற்கு அவரளித்த பதில், 'இன்றைய கணினிகளைவிட 20 மடங்கு ஆற்றலுடையதாக இருக்கும் என்றும் அன்றைய மனிதனின் மூளை அக்கணினியை விட 20 மடங்கு ஆற்றலுடன் இருக்கும்' என்றும் பதிலளித்தார். அக்கருத்தையே நானும் தங்களுக்குப் பதிலாக வழங்குகிறேன்



சிகரம் : செயற்கை நுண்ணறிவுத் திறன் தமிழ் மொழி மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் எத்தகைய பங்கை வகிக்கக் கூடும்?

குணசீலன் : செயற்கை நுண்ணறிவுத்திறன் (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகள் வெளிவந்தன. 2030-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏஐ நுட்பத்தின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் 6.6 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஏஐ தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் எல்லாத்துறைகளிலும் இருக்கும் என்பதால் இத்தொழில்நுட்பமானது தமிழ் மொழியில் எந்த அளவு பயன்படுகிறது, என்பதை அறிந்து எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நாம் நம் தமிழ் மொழியின் நுட்பங்களை வளர்த்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது. சுருக்கமாக சொன்னால், அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவையும் தமிழ் மொழியிலேயே பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

சிகரம் : தமிழ் மொழி எதிர்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்நோக்கக் கூடும்?

குணசீலன் : கணினியில் ஒருங்குறி என்னும் எழுத்துரிமை பெற்றாலும் அதை முழுமையாக உள்வாங்காத தமிழ் தலைமுறையினரால் தமிழ் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வர்டுவல் கம்யுட்டிங் போன்ற சமகால தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கணினிக்கு தமிழ் பயிற்றவேண்டிய பெரும் சவால் நம் முன் உள்ளது. உலகமயமாக்கலால் ஆங்கிலத்தையே நம்பி வாழும் தமிழர்களுக்கு தமிழ் பயிற்றவேண்டிய அவல நிலையும் நம் மிகப்பெரும் சவாலாகவே அமையும் என்று கருதுகிறேன்.

சிகரம்: சமூக வலைத்தளங்கள் எனப்படும் பேஸ்புக், வாட்ஸப் போன்றவை வரமா? சாபமா?

குணசீலன் : சமூகத்தளங்களைத் தாய்மொழியில் சரியான வழியில் பயன்படுத்துபவர்களுக்கு வரம்! பிறமொழியில் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சாபம்!

நட்பு வட்டம் விரிவடைய, துறைசார் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள, எதிர்வினைகளை உடனே அறிய, என பல நிலைகளில் சமூகத்தளங்கள் வரமாகவே உள்ளன. நேரத்தை மறந்து இதில் நாம் நம்மைத் தொலைக்கும்போதும் தவறான நட்பு வட்டம் விரிவடையும்போதும், இவை சாபமாகவும் அமைகின்றன.

சிகரம் : தனித்தமிழில் பேசுவது கடினமானதா?

குணசீலன் : மிக மிக எளிதானது. மொழியின் சிறப்பையும், தேவையையும் உணர்ந்தால் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது குறையும். பிறமொழிப் பயன்பாடு குறையக் குறைய தனித்தமிழ் சொற்களின் பயன்பாடு மிகும். அழகிய தனித்தமிழ் இயல்பாகவே வரும்.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையக் கூடிய காரணிகள் தற்போது என்ன இருக்கின்றன?

குணசீலன் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் காரணிகளாக நான் கருதுவது மைக்ரோசாப்ட், கூகுள், முகநூல், கட்செவி என பன்னாட்டு நுட்பியல் நிறுவனங்கள் யாவும் தமது எல்லா தயாரிப்புகளிலும் தமிழ் மொழிக்கு சிறப்பிடம் வழங்கி வருவதே. மக்கள் வளமுள்ள மொழி என்பதால் இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் சீனா, கொரியா போல எல்லா நிலைகளிலும் தமிழ் உயர்வடையும் என்பது என் எண்ணம்.

சிகரம் : மேலைத்தேய கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆழ ஊடுருவிவிட்டது. இது நம் கலாச்சாரத்தை அடியோடு அழித்து விடும். இதனை தடுத்து தமிழர் கலாச்சாரத்தை மீள நிலைநிறுத்துவது சாத்தியமா? சாத்தியமாயின் எவ்வாறு?

குணசீலன் : தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் தான் உள்ளது. ஏறுதழுவல் பெயரால் கூடிய இளைஞர் கூட்டம் கூடியது அதற்காக மட்டுமல்ல, தமிழர் பண்பாட்டின் மீட்புக்கான போராட்டமாகவே கருதுகிறேன். கலாம் கனவு கண்டதுபோல, இளைஞர்கள் மனதில் ஆழ விதைக்கவேண்டும்.

முனைவர் இரா.குணசீலன் அவர்களுடனான நேர்காணலின் இரண்டாம் பகுதியை அடுத்த வாரம் எதிர்பாருங்கள் - சிகரம் 

#092/2018/SIGARAMCO
2018/04/13
#நேர்காணல் #தமிழ் #குணசீலன் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE

#092/2018/SigarambharathiLK
2018/04/13
#நேர்காணல் #தமிழ் #குணசீலன் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE

Thursday 12 April 2018

சிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018

வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

#081/2018
2018/03/25
சிகரம் செய்தி மடல் - 013 - சிகரம் பதிவுகள் 2018
https://www.sigaram.co/preview.php?n_id=307&code=7vq5cdKf
பதிவு : சிகரம்
#SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
#சிகரம்
   

#082/2018
2018/03/25
பதிவர் : கவின்மொழிவர்மன் 
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM 

#083/2018
2018/03/28
வாழ்தலின் பொருட்டு - 04
https://www.sigaram.co/preview.php?n_id=309&code=JQpHy2s4  
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்

#084/2018
2018/03/29
கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO
https://www.sigaram.co/preview.php?n_id=310&code=XKQJNUBq
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்

#085/2018
2018/03/31
சிகரம் வலைப்பூங்கா - 01    
https://www.sigaram.co/preview.php?n_id=311&code=cuwfqMoK  
பதிவு : சிகரம்
#sigaram #sigaramco #tamil #tamilblogs #reading 
#வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா 
#சிகரம் 

#086/2018/SIGARAMCO 
2018/04/03
இயற்கை போற்றுக!   
https://www.sigaram.co/preview.php?n_id=312&code=SmGCvneo  
பதிவர் : பாலாஜி 
#தமிழ் #கவிதை #பாலாஜி #இயற்கை 
#SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #NATURE #BAALAJI
#சிகரம் 



#087/2018/SIGARAMCO 
2018/04/03
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018    
https://www.sigaram.co/preview.php?n_id=313&code=c5Gd6V2K   
பதிவு : சிகரம்
#IPL #IPL2018 #VIVOIPL #CSK #MI #DD #SRH #KNR #KXIP #RCB #RR #StarSports #hotstar #MSD #WhistlePodu #MIvsCSK #ஐபிஎல் #ஐபிஎல்2018
#சிகரம் 

#088/2018/SIGARAMCO
2018/04/04
அறம் செழிக்க வாழ்வோம்!     
https://www.sigaram.co/preview.php?n_id=314&code=f14K6rPC  
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO 

#TAMIL #POEM #இயற்கை #NATURE #LIFE #சிகரம் 

#089/2018/SIGARAMCO 
2018/04/04
கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!      
https://www.sigaram.co/preview.php?n_id=315&code=0idOVAp6   
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்


#090/2018/SIGARAMCO
11/04/2018
கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!
https://goo.gl/onqHNF
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்

சிகரம் இணையத்தளத்தின் அண்மைய அலெக்ஸா மதிப்பெண்களின் நிலை பற்றிப் பார்ப்போம்.

முதலாவது தரவரிசை:
04/01/2018 - 12,513,910

இன்றைய அலெக்ஸா தரவரிசை:
12/04/2018 - 10,452,448

இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

சிகரம் இணையத்தள அறிவிப்பு:
சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளுக்கு அப்படைப்பினை எழுதியவரே பொறுப்பாவார். படைப்பாளி சிகரம் இணையத்தளத்திற்கு வேறு தளங்களில் வெளியான படைப்பை தன் சுய விருப்பின் பேரில் வழங்கலாம். அது அவரது பொறுப்பாகும். சிகரம் இணையத்தளம் தானாக ஒரு படைப்பாளியின் படைப்பை வேறு தளங்களில் இருந்து எடுத்துப் பதிவிட்டால் அது பற்றிய முழுமையான குறிப்புகளை பதிவுடன் இணைத்து வழங்கும். படைப்பாளி முதன்முதலில் தான் சிகரம் இணையத்தளத்திற்கு வழங்கிய படைப்பை சிகரம் இணையத்தளத்தின் முன் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சிகரம் இணையத்தளத்தில் குறித்த படைப்பு வெளியிடப்பட்டமைக்கான குறிப்பை இணைத்து வெளியிட முடியும்.

சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளில் இணைக்கப்படும் மூன்றாம் தரப்பு புகைப்படங்களுக்கு சிகரம் இணையத்தளம் ஒரு போதும் உரிமை கொண்டாட மாட்டாது. சிகரம் இணையத்தள படைப்புகளை சிறப்புற வெளியிடும் நோக்கத்துக்காக மட்டுமே மூன்றாம் தரப்பு புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாம் தரப்பு புகைப்பட உரிமையாளர்கள் அல்லது இணையத்தளங்களுக்கு எமது நன்றிகள்.

https://www.sigaram.co/index.php | sigaramco@gmail.com | editor@sigaram.co

-சிகரம்

Wednesday 11 April 2018

கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!

அதிகாரம் 84
பேதமை 

*******

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை 
(குறள் 837)

****

முட்டாளின் செல்வம்!

****
பணத்தாசை
வெறிபிடித்துப்
பலலட்சம்
சேர்த்துவைத்து
மனத்திலே
அன்பில்லாது
மரம்போன்று
வாழும்மாந்தர்,

காலையில்
எழுந்திருந்து
கண்களில்
பணத்தைஒற்றி
சாமியே
நீதானென்று
சாம்பிராணி
சூடம்காட்டி,

பெற்றத்தாய்
தந்தையேனும்
உற்றதோர்
மனைவியேனும்
தான்பெற்றப்
பிள்ளைக்கேனும்
காட்டாமல்
பணம்மறைத்து,



அப்படி
உள்ளோன்காசை
அடுத்தவர்த்
தின்றுபார்ப்பார்
தன்னுடை
உறவுஇங்கே
தாங்காதுப்
பசியில்வாடும்,

மனத்திலே
அன்புமின்றி
மண்டையில்
அறிவுமின்றி
வாழ்கின்றப்
பேதைக்காசை
வழிச்செல்வோர்
தின்பாரென்றான்!

****

ஏதிலார் - தொடர்பற்ற மற்றவர்.

தமர் - உரிய உறவுகள்.

பேதை - அறிவற்றவர்.

****

உரைநடை விளக்கம்.

*****

தாய், தந்தை, மனைவி மக்களோடு வாழ்ந்தும், மனத்தினில் அன்பும் மண்டையில் அறிவுமின்றி வாழும் பேதை, பொருள்வளத்தில் சிறந்திருந்தபோதும், அப்பொருளை இவனை ஏமாற்றி மற்றவர்கள் அனுபவித்து மகிழ்ந்திருக்க, உரிய உறவுகள் அடிப்படை தேவைக்குக்கூட பணம்இன்றி அல்லல் பட்டு வாழநேரும் என்கிறார் நமது அறிவுத்தந்தை.

அப்படியில்லாமல் நாம் ஈட்டியப் பொருளை, நமது உற்ற உறவுகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துப் பயன்படுத்தி நாம் அடுத்தவரிடம் ஏமாறாமல் இருந்து மகிழ்வோடு வாழ்வோம் உறவுகளே.

****

என்றும் அன்புடன்
இனிய உறவுடன்...

என் வணக்கமும் வாழ்த்துகளும்!

எல்லாநேரமும்
உங்கள்நினைவுடன் ...
கவிஞர் .
மானம்பாடி புண்ணியமூர்த்தி 

#090/2018/SIGARAMCO
11/04/2018
கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!
https://goo.gl/onqHNF
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம் 


#090/2018/SigarambharathiLK
11/04/2018
கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்! 
https://goo.gl/QsFZ11 
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம் 


Wednesday 4 April 2018

கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!

அதிகாரம் 65
சொல்வன்மை 

****

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது 
உணர விரித்துஉரையா தார்
(குறள் 650)

*****

மணமற்ற மலர்கள்!

******

வீட்டினில்
விடுதி தன்னில்
விழாக்களில்
பல இடத்தில்
செயற்கையாம்
மலர்கள் தன்னை
மிகுதியாய்
அலங்க ரிப்பர்,

கொத்துகள்
கொத்தாய் அங்கே
கோடியாய்
அவையி ருந்தும்
கண்களை
நிறைக்கு மல்லால்
நறுமணம்
உண்டோ சொல்வீர்?



தன்வீடு
முழுதும் ஆங்கே
தலையணை
போன்ற நூல்கள்
பன்நூறு
அடுக்கி வைத்துப்
படித்தவர் ஆனபோதும்,

கற்றுநாம்
உணர்ந்த செய்தி
கல்லாதார்
கண் திறக்க
உதவவேப்
பேசா ராகில்
ஊமைக்கு
நிகர்தா னென்றான்,


எவருக்கும்
பயன்ப டாது
இருக்கின்ற
மனித ரெல்லாம்
மணமற்ற
மலரே யென்று
மனம்வெம்பி
எழுதி வைத்தான்!

****

இணர்ஊழ்த்தும் - கொத்துக் கொத்தாக இருந்தும்.

நாறா - மணம் இல்லாத.

*****

மானம்பாடி புண்ணியமூர்த்தி .
21.02.2018.

#089/2018/SIGARAMCO 
2018/04/04
கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!      
https://www.sigaram.co/preview.php?n_id=315&code=0idOVAp6   
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம் 


#089/2018/SigarambharathiLK
2018/04/04
கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!      
https://newsigaram.blogspot.com/2018/04/KAVIKKURAL-0015-MANAMATRA-MALARGAL.html   
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்

அறம் செழிக்க வாழ்வோம்!

ஆறுகள், குளங்கள் அமைத்திட்டே 
நீர்வளம் மிகுந்தே பெருக்கிடுவோம்!
ஆழ்துளை கிணறுகள் அகற்றிட்டே 
நிலத்தடிநீரை உயர்த்திடுவோம்!

வீடுகள்தோறும் மரம் வளர்ப்போம்
இயற்கை வளத்தை பெருக்கிடுவோம்!
உரங்கள், மருந்துகள் தவிர்த்திடுவோம்
மண்ணின் வளத்தினை காத்திடுவோம்!



பாரம்பரிய தானியங்கள் வளர்த்திடுவோம்
ஆரோக்கியமான சந்ததி கொடுத்திடுவோம்!
இயற்கை மருந்துகள் எடுத்திடுவோம்
எதிர்வினை உடலில் தவிர்த்திடுவோம்!

லஞ்சம், ஊழல் தவிர்த்திடுவோம்-நல்லாட்சி 
நாட்டில் அமைத்திடுவோம்!
வரி, விலை நாட்டில் குறைத்திடுவோம்
வறுமை என்பதை தவிர்த்திடுவோம்!

ஆயுத அரசியல் தவிர்த்திடுவோம்-அறத்தினை 
தழுவியே வாழ்ந்திடுவோம்!
பாவையர் உரிமையை உயர்த்திடுவோம்
பாரினில் பெண்மையை புகழ்ந்திடுவோம்!

ஜாதிமதப் பிரிவினை அழித்திடுவோம்
சமத்துவம் போற்றி வாழ்ந்திடுவோம்!
வஞ்சகம் குரோதம் தவிர்த்திடுவோம்
அறத்தினை செழிக்க வாழ்ந்திடுவோம்!

-கவின்மொழிவர்மன்

#088/2018/SIGARAMCO
2018/04/04
அறம் செழிக்க வாழ்வோம்!     
https://www.sigaram.co/preview.php?n_id=314&code=f14K6rPC  
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO 

#TAMIL #POEM #இயற்கை #NATURE #LIFE
#சிகரம்


#088/2018/SigarambharathiLK
2018/04/04
அறம் செழிக்க வாழ்வோம்!     
https://newsigaram.blogspot.com/2018/04/ARAM-SEZHIKKA-VAAZHVOM.html  
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO 

#TAMIL #POEM #இயற்கை #NATURE #LIFE
#சிகரம்

Popular Posts