Thursday 29 June 2017

விதையெனவே துளிர்வேனோ?

என்னென்று
 பிறப்பெடுத்தேன்!

உள்ளத்தில்
எவ்வளவோ
 ஆசைகொண்டேன்!

எனக்கென்று
 நன்மையில்லை....
 என்றேயென்னை
 படைத்துவிட்டான்!

கனவென்று
எவ்வளவோ
கடுகளவும்-
கை கூடவில்லை,

மண்ணென்ற
பூமிதனில்
 மனம்மட்டும்
ஏக்கம் கொள்ள!

ஓரடி நானேற;
ஓரடி தான் சேர்த்து
 ஏழடியாய் தடுமாற!

எத்தனை எத்தனை
 துன்பமதை
அத்தனையும் நான்
தாங்க!

அடுத்தடுத்து
எனை அழுத்த....
நான் விழுந்து
 புதைவேனோ-இல்லை
நிலமதனில்
 விதையெனவே
துளிர்வேனோ!.......?

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!

புயலென புறப்படு...

தள்ளா விளையுளும் என்றான்
வள்ளுவன்....
இதுவே தண்டுவடம் என்றது
பள்ளிப்பாடம்...
மூவர்ணத்தில் ஒன்றாகுமிது
என்றது தேசியம்...
நாட்டின் மூலதனமிது என்றது அரசியல்....
பாரதம் விவசாய பூமியென்றது
பூகோளம்...
சோழநாடு சோறுடைத்து
என்றது வரலாறு....
நாட்டின் தலைவனிவனே என
கூப்பாடிட்டனர் தலைவர்கள்....
ஆண்டுக்கு அளவில்லாத பணம்
ஒதுக்கியது பாதீடு..
படிப்பதற்கு கனியாய் இனித்தது...ஆனால்
நிகழ்வுகளோ காயாக கசந்ததே...
தள்ளா விளைகள் விலையாகி போனது...
தண்டுவடம் முடமாகி போனது....
வர்ணத்தை வர்ணாசிரமம் வதைத்தது...
மூலத்தின் மூச்சை மத்தியம்
மிதித்துருவியது....
சோறுடைத்த சோழநாடு
ஏறுடைத்து நிற்கிறது...
கூப்பாடிட்டவர் தலைவனை
குப்பையில் எரிந்தனர்..
ஒதுக்கிய பணம் ஒதுங்கி கிடக்கிறது...
சோறு போட்டவன் பிச்சை எடுக்கிறான்...
பிச்சை எடுத்தவன் பகட்டாக திரிகிறான்..
பொழிந்த வானம் பொய்த்தது....
விளைந்த பூமி விழுந்தது..
நதி பாயந்த நாடு நாதியத்து நிக்குது...
குதித்து சாக கூட நீரில்லை நாட்டில்...
இளந்தென்றல் வீசிய இடத்தில்
கார்பன் காற்று..
உயிரளித்தவளின் கருவறுத்து
மலடாகிப் போனாள்...
சதியின் சதுராட்டத்தால் மன்னவன்
மண்ணிழந்து நிற்கிறான்...
மானம் காத்தவன்
அம்மணமாக நிற்கிறான்..
அவனம்மணம் நம்
நிர்வாணத்தின் நெடிதானே...
நிர்வாக நிர்வாணத்தை மறைக்க
அவனாடை இழக்கலாமா...
ஊழலெனும் விபச்சாரம்
அவனை விழுங்குவதற்குள்...
கோவண கோனைக் காப்பது
நம் கடமையன்றோ..
இது நீடித்தால் நம்மை இருள் பீடிக்கும்...
பசுமை நிலம் பாலையாக நீடிக்கும்..
எதிர்காலம் விவசாயத்தை
ஏட்டில் மட்டுமே ஜோடிக்கும்..
ஒன்றாக ஓங்கி அடித்தால்
பயம் வரும் மாடிக்கும்...
நீரோட்டம் பார்த்தவன் போராட்டத்தில்...
அவனை தனித்து விடலாமா ஏமாற்றத்தில்...
அவனளித்தால் தான் உனக்கு சாப்பாடு...
கேட்கவில்லையா அவன் கூப்பாடு...
அவனுக்குதவ தேவையில்லை
கோட்பாடு...
வருங்காலம் வாழ நீயும்
புயலென புறப்படு...
 

இக்கவிதை கவிஞர் ரவிசங்கர் பத்மநாதன் அவர்களின் படைப்பாகும்!

Tuesday 27 June 2017

சிகரம் - குறிக்கோள்கள் ( 2006-2017)

01. எவ்விதமான பக்கச்சார்புமின்றியும் அச்சமுமின்றியும் நீதித்தன்மையுடன் உடனுக்குடன் உண்மையானதும் தெளிவானதும் உறுதியானதுமான செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தல்.



02. தமிழையும் தமிழரையும் பாதுகாத்தலும் சகல துறைகளிலும் முன்னேற்றுதலும்.

03. ஒழுக்கம், நேர்மை, நேரம், கடமை,கட்டுப்பாடு, கல்வி என்று சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக எதிர்கால சட்டபூர்வ நிறுவன முகாமைத்துவக்குழு , ஊழியக் குழு என்பவற்றை அமைத்தல்.

04. மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு உடன் தீர்வு காணுதல். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கபடுவதோடு சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் நிறுவனம் குரல் கொடுக்கும்.

05.01. நடுவுநிலைமையுடன் செயற்படுதலும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மக்கள் மத்தியில் நிலை நாட்டுதல்.

05.02. சேவைநோக்குடன் செயற்படும் அதேவேளை அது நிறுவனத்தை பாதிக்காத வகையிலான சேவைகளாக அமைக்கப்படுவதுடன் உச்ச இலாபம் தரக்கூடிய துறைகளையும் முன்னுரிமைப்படுத்தி செயற்படல்.


06. வெளியிடப்படும் நூல் சார்ந்த அல்லது அச்சு சார்ந்த துறையில் (பத்திரிகைகள், புத்தகங்கள்) தகவல் சேகரிப்பு, அச்சிடல், வெளியிடல் என்பவற்றில் முறையான தரத்தை பேணுதல் .

07. மலையக மக்களின் கல்வியறிவை மேம்படுத்துவதுடன் அரசியல், சமுதாய விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தி மலையக தமிழர்களின் கலை, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதுடன் கல்வி, மருத்துவம், விளையாட்டு, பண்பாடு, விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என சகல துறைகளிலும் வளர்ச்சியடைந்த - உச்ச பட்ச அபிவிருத்தியடைந்த மலையகத்தை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு கையளித்தல்.

08. தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்.

இது 'சிகரம்' இன் 2006 - 2017 ஜூன் வரையான காலப்பகுதியில் எம்மால் முன்கொண்டு செல்லப்பட்ட குறிக்கோள்களாகும். மறுசீரமைக்கப்பட்ட புதிய குறிக்கோள்கள் விரைவில் வெளியிடப்படும்!

- சிகரம் -

Saturday 24 June 2017

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...

பராசக்தி (1952) சிவாஜி க‌ணேச‌ன், க‌லைஞ‌ர் கருணாநிதி
கூட்ட‌ணியில் ஒரு புதிய‌ திருப்புமுனையை
ப‌டைத்த‌ அருமையான‌ ப‌ட‌ம்.  அதில் இருந்து ஒரு பாடல்...
 
எழுதியவர் : உடுமலை நாராயண கவி

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே⁠⁠⁠⁠

Friday 23 June 2017

தாயே... யென்தாயே...

ரோஜா படத்தில் காதல் ரோஜாவே பாடலை அம்மா பாடலாக மாற்றி எழுதும் போட்டியில் கலந்து அதில் வைரமுத்து அவர்களின் மகன் கபிலன் வைரமுத்து கையொப்பம் இட்ட சான்றிதழை பெற்றேன்.. அப்பாடலை கீழே பதிந்துள்ளேன்

தாயே... யென்தாயே...

கண்ணிமையாய் காத்தாயே...

தனிமையிலே தவிக்கவிட்டு சென்றாயே...

அகமுழுதும் நீயே அழ வைத்தாய் தாயே

தனிமையிலே நானே தவிக்கின்றேன் தாயே

மெய்யின்றுதான் பொய்யாகுமா தாயே
                                             ( தாயே)

சரணம்1
உந்தன் சொந்தம் போலவே வேறு சொந்தம் இல்லையே

உந்தன் வார்த்தை போலவே வேறு வேதம் இல்லையே

உந்தன் பாதம் போலவே  சொர்க்கம் வேறு இல்லையே

நீயில்லாத வாழ்க்கையில்  நானும்
கலங்கி நிற்கிறேன்

வாழ்க்கையென்ன வாழ்க்கை தேவையுந்தன் தாய்மை

நீயில்லாமல் நானும் வாழத் தேவையில்லை

புல்லொன்று தான் புயல் தாங்குமா தாயே

சரணம்2
நீ கடந்த பாதையை எந்தன் கண்கள்  தேடுதே

நீ பதித்த முத்தத்தை மீண்டும் கன்னம் கேட்குதே

நீ கொடுத்த மூச்சிலே நானுமிங்கு வாழ்கிறேன்

சிதையிலெரியும் தீயென வெந்து நானும் சாகிறேன்

நிலவுயில்லா வானை பூமி
பார்த்தில்லை

நீயில்லாத பூமி எனக்கு தேவையில்லை

கண்ணீரிலே கரை சேர்கிறேன் நானே..

இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.

Tuesday 20 June 2017

அறுவடைக் காலம்

பொன்னு விளைகின்ற பூமி
விதை நெல்லேயினி
எங்கசாமி

முப்போகம் விளைந்திட
மும்மாரி பொழிந்திட
ஏர்பூட்டி உழவுசெய்து

ஆழ உழுது
அளவாய் நீர்பாய்ச்சி
விதை நெல்லை
விதைத்து ஆரம்பமானது
முதல் விளைச்சல்

விதையும் முளைவிட
முளைத்ததை கட்டாக்கி       
ஆரம்பமானதே நாற்று நடல்

ஏலேலோ ராகம் பாடி
ஏகனை முன்நிறுத்தி
கண்ணாக நெல் வரப்பை
கழனியாக மாற்றி

தலை தாழ்ந்து நாணியே
திருமணப் பெண்போல்
எனைப்பார்த்து
நிலம் நோக்கி நின்றதுவே
நெல்மணியும்..

இறுதிப் பாய்ச்சலுக்கு
நீரின்றி நின்றவனைப்
பார்த்து

பொறுக்கவில்லை பொன்னிக்கும்
புறப்பட்டது மண்கலங்கி
கண்கலங்கி நின்றவனைப்
பார்த்து கழனி தேடி
வந்ததுவே

அறுவடையும் தொடங்கியதே
அறுத்த நெல்லும் குலுங்கியதே
விளைச்சல் செய்தது
விலை போகுமா?

விம்மலும் தொடங்கியதே
விலை தாழ்ந்திடுமோ என்று..

விளைவித்த நெல்லுக்கு
விளைவித்தவன் விலை
நிர்ணயிக்கும் நாளும் வருமா...

நான் பெற்ற பிள்ளைக்கு
நான் பெயர் வைக்கும்
நாளும் வருமா..

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்.

Monday 19 June 2017

இடுக்கண் களைவ தாரிங்கே?

உணவும் உடுக்கையும் இழந்த உழவனின்
இடுக்கண் களைவ தாரிங்கே ?
உண்பதோர் நாழி அளப்பதற் காளில்லை!
உடுக்கும் நாலுமுழம்
கிடைக்க வழியில்லை!
மயிர்போயின் வாழாக்
கவரிமான் போலிங்கு
வாழ்ந்தும் ஆயிற்று!

காற்றுக்கு-
சுவாசிக்கும் காற்றுக்கும்
விலை கேட்கும் காலம்வரும் !
வீதியில் விழுந்து
புரண் டலையும் நேரம் வரும்!
பிச்சையோ நாம்  கேட்கின்றோம்?
பிழைக்க வழி யாமறிவோம் !
பிழைத்தும்மைப் பேணவும் யாமறிவோம்!
விழுந்துலகைக் காக்கின்ற
மழைத்துளியை வீணாக்கி விடவேண்டாம்!

விவசாயம் செய்வதற்கு வகை செய்தால்
அதுபோதும்!
வீதிவரை வரும் தென்றல்
வீட்டினுள்ளும்  நுழைந்தெம்மை
நலன் விசாரிக்கும் நாள்தோறும் !
விவசாயம் செழித்திடவே வகை செய்து தாரும் !
விவேகம்  அதுவே!  விளக்கமும் அதுவேதான்!
சுழன்றும் ஏர்ப் பின்னதே உலகென்பார்! 
சுழன் றுழன்று   கொண்டேதா
னிருக்கின்றானுழவன் ஒவ்வொரு வனு மிங்கே !

உணவின்றி நாட்டின் உழவன் மரிப்பதுவோ! 
உணவை அளிக்கின்ற அவனன்றோ உலகின் மூத்தகுடி !

உணர்வீர்  அவன் பெருமை! உணவின்றி
அவன்மரித்தால் உலகே மரிப்பதுபோல் !

அன்னை மனம் நொந்தால்
அவர்மக்கள் வாழ்வாரோ வளம்பெற்று ?

--கி.பாலாஜி
10.04.2017
மாலை 4.15

பதினோராம் வருடப் பூர்த்தியில் சிகரம்!

வணக்கம் நண்பர்களே! 2006.06.01 அன்று 'சிகரம்' கையெழுத்து சஞ்சிகையாக தனது பயணத்தைத் துவங்கியது. பதினோரு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பண்ணிரண்டாவது அகவையில் உங்கள் 'சிகரம்' காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஒரு குழந்தை போல் மெல்ல மெல்ல நிதானமாக'சிகரம்' தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. வெற்றிப் பாதையில் மெதுவாகவே பயணித்துக் கொண்டிருந்தாலும் இலக்கை நோக்கித் தெளிவாக பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 'சிகரம்' இணையத்தளத்தின் ஆரம்பம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். 'சிகரம்' இணையத்தள வடிவமைப்பின் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில பணிகளே எஞ்சியுள்ளன. அவையும் முடிவடைந்த பின்னர் இணையத்தளம் தனது தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்யக் காத்திருக்கிறது. 

மேலும் இம்மாதம் முதல் குரல்ஒலி மற்றும் காணொளி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் 'சிகரம்' உங்களை நாடி வந்து கொண்டிருக்கிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியையும் இச்சந்தர்ப்பத்தில் உங்களுக்கு வழங்கக் கடமைப் பட்டிருக்கிறேன். விரைவில் நிறுவன அமைப்பாக எமது பணியைத் தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நண்பர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஊக்கப்படுத்தலுமே எம்மை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை. மிக்க நன்றி நண்பர்களே. 

தமிழரையும் தமிழையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லும் எமது நோக்கத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நமது மொழி, பண்பாடு ஆகியவற்றை பேணிக் காக்கவும் வளர்க்கவும் தமிழராகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுதல் அவசியமாகும். தற்போதைய தமிழர் அரசியல் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தமிழ்த் தலைமைகள் என்று சொல்லிக்கொல்வோரும் குறிப்பிடும்படியாக எதையும் சாதிக்கவில்லை. எல்லோரும் சுயநல அரசியலிலேயே ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே அரசியல் ரீதியாகவும் உறுதியான அடிக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம். அனைத்திற்கும் நாம் துணை நிற்போம். வாருங்கள் ஒன்றிணைந்து பயணிக்கலாம்.

வெல்க தமிழ்!

கொடும்பாவி!

சிந்தைக்கு
இனியனன்!

செந்தமிழ்
மொழியினன்!

படைப்புகளின்
பரமனவன்!

ஏழைகளின்
பாமரனவன்!

எளிமையின்
மாற்றுருவினன்!

புலமையில்
வித்தகமனவன்!

ஒன்றையும்
விடுத்தனவன்!

உலகையே
உரைத்தனன்!

எனக்கோ!

பாவிகளில் அவன்
கொடும்பாவி!

பார்புகழும்
மேதாவி!

நான்படைக்க
வரியொன்றையும்
விட்டவனில்லை!

அவனின் வரியன்றி
தமிழதனில்
கற்றவனில்லை!

ஆதியிலே
மலர்ந்திட்ட
ஆதவன் நீ!

ஆண்களே
மயங்கிடும்
ஆரனங்கு நீ!

அகிலமே
முழங்கிடும்
என் பாரத தீ!

என்றென்றும்
நான்
போ(தூ)றறும்
பார தீ!!!_,_

கவின்மொழிவர்மன்…..

இது கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களால் எழுதப்பட்டு 'மின்னல் கீற்றுகள்' வலைத்தளத்தில் 17.04.2017 அன்று வெளியிடப்பட்ட படைப்பாகும்!

Popular Posts