Thursday 31 May 2018

மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01

மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர்.  'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா வீரம்மா தம்பதிகளுக்கு 1944 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி பிறந்தார். தேயிலைத் தொழிற்சாலைகளில் மேலதிகாரியாகப் பணியாற்றிய இவர், சிறுகதை, புதினம் மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியதனூடாக மலையக இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.  'சாரல் நாடன்' 31.07.2014 அன்று காலமானார்.  'சாரல் நாடன்' அவர்களை பாடசாலைக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் செப்டெம்பர் 2008 ஆம் ஆண்டு 'செங்கதிர்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளியானது. அதனை 'சிகரம்' வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம்.

'சாரல் நாடன்' - சில முக்கிய குறிப்புகள்:

* இவர் மலையகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் சிறந்தவர் என்ற வகையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். 

* இலங்கை சமாதான நீதிவானாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

* 'சாரல் வெளியீட்டகம்' இன் உரிமையாளரான இவர் இதன் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

* இவரைப் பற்றிய தகவல்களோடு வெளியான நூல் 'சாதனையாளர் சாரல் நாடன்' என்பதாகும்.

* இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.

* நான்கு தடவை மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா விருது பெற்றுள்ளார்.

* இவரின் இயற்பெயர் கருப்பையா நல்லையா என்பதாகும்.



எழுத்தாளர் 'சாரல் நாடன்' அவர்களைப் பற்றி இணையத்தில் வெளியாகியுள்ள சில குறிப்புகள்:







இவர் எழுதிய நூல்கள்:

05. மலைக் கொழுந்தி (1994) - சாகித்திய விருது பெற்றது

12. பேரேட்டில் சில பக்கங்கள் (2005)

14. புதிய இலக்கிய உலகம் (2006)



மலையகத்தின் வரலாற்றில் தடம் பதித்த 'சாரல் நாடன்' அவர்களுடனான நேர்காணல்:

சிகரம் : வணக்கம் ஐயா!

சாரல் : வணக்கம்!

சிகரம் : உங்களுடைய கலைத்துறைப் பிரவேசத்திற்கான காரணம்?

சாரல் : மலைநாட்டின் மீதான பற்று

சிகரம் : உங்களது கலைத்துறைக்கு ஊக்கமளித்தோர்?

சாரல் : எனது ஆசிரியர்கள்.

சிகரம் : நீங்கள் சாரல் நாடன் எனும் புனைபெயர் வைத்துக்கொண்டதற்கான காரணம்?

சாரல் : கலித்தொகை படித்தேன். அதில் சாரல் நாடன் என்றொரு பெயர் வந்தது. சாரல் நாடன் என்பது மலைநாட்டைக் குறிக்கும் ஒரு சொல்லாக அமைகிறது. அதனாலேயே இந்த சாரல் நாடன் எனும் பெயரை வைத்துக் கொண்டேன்.

சிகரம் : உங்களுடைய முதலாவது படைப்பு எது?

சாரல் : 1960இல் படைத்தேன். அது 'ஐயோ பாவம்' என்னும் கவிதை.



சிகரம் : அதனைத் தொடர்ந்து உங்களது எழுத்துப் பணி எவ்வாறு அமைந்தது?

சாரல் : சில நூல்களை எழுதியிருக்கிறேன். எனது சாரல் வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டு வைத்திருக்கிறேன்.

சிகரம் : உங்களுடைய முதலாவது படைப்பின் கரு?

சாரல் : மலைநாட்டு மக்களின் அவலங்களைச் சித்தரிப்பதாக அமைந்திருந்தது.

சிகரம் : அதனைத் தொடர்ந்து வந்த படைப்புகளில் எடுத்துக்கொண்ட கருப்பொருள்?

சாரல் : மலையகத்து வாழ்க்கையை எழுத்தாக்கி மக்களுக்கு உணர்த்த முயற்சித்தேன்.

சிகரம் : உங்களுடைய படைப்பின் மூலம் வாசகர்களுக்கு சொல்ல விழையும் கருத்து?

சாரல் : மலைநாட்டு மக்களின் அவலங்கள்

சிகரம் : எழுத்துப் பணியில் நீங்கள் அடைந்த வெற்றி?

சாரல் : எழுத்துப் பணியில் வெற்றி அடைந்தேன் என்று கூற முடியாது. ஏனெனில் எனது கருத்துக்கள் எனது படைப்புக்களின் மூலம் வாசகர்களுக்கு சென்றடைந்திருக்குமானால் அதை ஒரு சிறு வெற்றியாகக் கருதலாம்.



(அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.

சாரல் : எனது படைப்புக்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?

சிகரம் : ஆம்

சாரல் : என்ன படைப்புகள்?

சிகரம் : மலைக்கொழுந்தி, மலையகத் தமிழ் இலக்கியம் முதலியவை.

தொடர்ந்து எனது வினாக்களுக்கு அவர் பதிலளித்தார்.)

சிகரம் : இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகள்?

சாரல் : முதல் கவிதை 1960இல் படைத்தேன். முதலில்கூடச் சொன்னேன். 'ஐயோ பாவம்' என்ற கவிதை. அதுதான் என்னுடைய முதல் படைப்பு.

சிகரம் : உங்களுடைய கட்டுரைகள்?

சாரல் : கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

சிகரம் : உங்களுடைய சிறுகதைகள்?

சாரல் : பதினைந்து சிறுகதைகள் எழுதியிருந்தேன். அது மலைக்கொழுந்தி என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பாக இந்தியா, சென்னையில் இருந்து வெளிவந்தது.

சிகரம் : நீங்கள் எழுதியுள்ள நாவல்கள் பற்றி...?

சாரல் : 'பிணம் தின்னும் சாத்திரம்' என்ற நாவலை எழுதியிருக்கிறேன். இது பற்றிய விபரம் 2002 வீரகேசரியில் வெளிவந்தது. மேலும் 'பலி' எனும் குறுநாவலையும் எழுதியிருக்கிறேன்.

இது ஒரு வித்தியாசமான முறையில் எழுதப்பட்டதொரு குறுநாவலாகும். அதன் முதல் அத்தியாயத்தை என்.எஸ்.எம் ராமையா எழுதினார். இரண்டாம் அத்தியாயத்தை தெளிவத்தை ஜோசப் எழுதினார். மூன்றாம் அத்தியாயத்தை நான் எழுதினேன். ஆனாலும் நாம் மூவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. தபால் மூலம் தான் குறுநாவல் எழுதப்பட்டது. 

அதாவது முதலில் ராமையா முதல் அத்தியாயத்தை எழுதி ஜோசப்புக்கு தபால் மூலம் அனுப்பினார். அவர் இரண்டாம் அத்தியாயத்தை எழுதி எனக்கு அனுப்பினார். ஆக, மூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த 'பலி' எனப்படும் குறுநாவல் மூவர் இணைந்து எழுதிய ஒரு குறுநாவலாக அமைந்தது. 

இது 1967 தைத்திங்கள் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட பொங்கல் விழா மலருக்கு அழகு சேர்ப்பதாகவும் அமைந்தது. இது 1997இல் 30 வருடங்களின் பின் 'கொழுந்து' சஞ்சிகையில் 11 மற்றும் 12ஆம் இதழ்களில் மீள்பிரசுரம் செய்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

#சிகரம் #சிகரம்பாரதி #நேர்காணல் #சாரல்நாடன் #மலையகம் #இலக்கியம் #SIGARAM #SigaramBharathi #Interview #SaaralNadan #Malaiyagam #UpCountry

#097/2018/SIGARAMCO
2018/05/31
மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01 
https://www.sigaram.co/preview.php?n_id=323&code=N7gU1jPW 
'சாரல் நாடன்'
#சிகரம் #சிகரம்பாரதி #நேர்காணல் #சாரல்நாடன் #மலையகம் #இலக்கியம் #SIGARAM #SigaramBharathi #Interview #SaaralNadan #Malaiyagam #UpCountry  

Saturday 26 May 2018

மலையகமும் மறுவாழ்வும்

இலங்கையில் இருந்து ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஐவர் மூன்று தசாப்தங்கள் கடந்து இலங்கை வந்திருந்தனர். கேகாலை மாவட்டத்தில் இருந்து தமிழகம் சென்ற (ஈழம் மலர் மன்னன்) தம்பிராஜா (தமிழகத்தில் கிராம அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), ஆகரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் இருந்து சென்ற செவந்தி (இவர் நீதிமன்ற நிர்வாக உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), தலவாக்கலை பகுதியில் இருந்து சென்ற பூபாலன், நாவலப்பிட்டி பகுதியில் இருந்து சென்ற ஜெயசிங் (இவர்கள் இருவரும் வங்கி அதிகாரிகளாக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்) ஆகியோருடன் இரத்தினபுரி, லெல்லோபிட்டிய தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழகன் (ராமச்சந்திரன்) ஆகியோர் வருகை தந்திருந்தனர். 

தெளிவத்தை ஜோசப்


திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றும் தமிழகன் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கை திரும்பி பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்புகள் ஊடாக தனதும், இலங்கை மலையக எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் இணைத்ததாக மலையகமும் மறுவாழ்வும் எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை தொகுத்திருந்தார். திருச்சியில் வாழும் தாயகம் திரும்பியவரான டார்வின்தாசன் (இவர் களுத்துறை மாவட்டம் மத்துகமவை சேர்ந்தவர்) தனது அங்குசம் பதிப்பகத்தின் ஊடாக வெளியிட்டிருக்கும் இந்த நூலை இலங்கையிலேயே முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு இந்தக் குழுவினர் இலங்கை வந்திருந்தனர்.

அ. லோரன்ஸ் 


எனினும் எதிர்பாராத விதமாக தமிழ்ச்சங்கத்திற்கு முன்பாகவே கேகாலை மாவட்ட கந்தலோயா பாடசாலையிலும், ஹட்டனில் இடம்பெற்ற மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்விலும் மேற்படி நூல் முதல் அறிமுகத்தை கண்டுவிட்டநிலையில் கொழும்புத் தமிழச்சங்க அறிமுக நிகழ்வு ஆரம்பமானது.

இரா.சடகோபன்


இலங்கை மலையக எழுத்தாளர்களான இரா.சடகோபன் எழுதிய மலையகத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, மல்லியப்புசந்தி திலகர் எழுதிய இலங்கை(யில்) தமிழர்கள், எம். வாமதேவன் எழுதிய தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, அ.லோறன்ஸ் எழுதிய மலையகத் தமிழர்களின் அடையாளம் தொடர்பான பிரச்சினைகள், மலையகத் தமிழ்த் தேசியம் தொடர்பான பிரச்சினைகள் ஆகிய கட்டுரைகளுடன் தமிழக மலையக மக்களின் வாழ்நிலையை விளக்கும் 'கடல்தாண்டி... கண்ணீர் சிந்தி...', இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோரின் மறுவாழ்வுத் திட்டங்கள் ஒரு பார்வை ஆகிய தமிழகனின் இரு கட்டுரைகளையும் கொண்டதாக நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது.

சன் பிரபாகரன் 


மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளரான இரா.சடகோபனின் வரவேற்புரையுடன் கலந்த சுருக்க உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் தலைமையுரையை மலைநாட்டு எழுத்தாளர் மன்ற தலைவர் தெளிவத்தை ஜோசப் ஆற்றினார். ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா சென்ற மலையகத் தமிழ் மக்களுக்கும் ஈழயுத்தத்தினால் பாதிப்புற்று அகதிகளாகப் போன மலையகத் தமிழ் மக்களுக்கும் வேறுபாடு தெரியாது எல்லோரையும் அகதிகளாகப் பார்க்கும் நிலைமை தமிழ் நாட்டில் காணப்படுகின்றது. தமிழ் நாட்டில் வாழும் சுமார் 130000 ஈழ அகதிகளில் சுமார் 30000 ஆயிரம் அளவானவர்கள் மலையகத் தமிழ் மக்கள்.

தெளிவத்தை ஜோசப்


அவர்கள் இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து 70 களில் வன்னியில் குடியேறி பின்னர் யுத்தம் காரணமாக வாழ வழியின்றி படகுகளின் மூலமாக தமிழகம் சென்றவர்கள். ஆனால் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் முறையான அனுமதிகளுடன் தமிழகம் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் அங்கு தேடிக்கொண்டிருக்கும் மறுவாழ்வு பற்றியே தமிழகன் இந்த கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார். மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் இன்னும் வாழ்வு தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவே நிலைமை. இவர்களின் வாழ்வு பற்றியும் மறுவாழ்வு பற்றியும் அக்கறை கொண்டவர்கள் ஒன்று சேரந்து எடுக்கும் முயற்சியே இந்த தொகுப்பு என்று குறிப்பிட்டார்.

வேலு ஐயா 


நூலின் முதலாவது ஆய்வுரையை வழங்கியர் சமூக கலை இலக்கிய ஆய்வாளரும் அக்கறைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான சிராஜ் மஷ்ஷுர். தனக்கேயுரிய பாணியில் ஒவ்வொரு கட்டுரையையும் தனித்தனியே அதேநேரம் ஒட்டு மொத்த தொகுப்பையும் அதன் பலம் பலவீனங்களோடு ஆய்வுக்குட்படுத்தியிருந்தார். நூலின் முகப்பிலே மறுவாழ்வு எனும் சொல்லில் 'ழ்' இடதுபக்கமாக சரிந்து இருப்பதும் அது சிவப்பாக அச்சிடப்பட்டிருப்பதுமே அதன் உள்ளடக்கம் பற்றிய ஒரு பார்வையைத் தருவதாக தெரிவித்ததுடன் மலையக மக்களின் வரலாறு, பொருளாதார நிலை, அடையாளம், தேசியம் ஆகிவற்றோடு இலங்கைத் தமிழர்கள் எனும் பொருளில் அழைக்கப்படுபவர்களில் இருந்து மலையகத் தமிழர்கள் எவ்வாறு மாற்று அடையாளங்களுடன் வாழ்கின்றனர் என்பதை நிறுவும் இலங்கை(யில்) தமிழர்கள் ஆகிய கட்டுரைகள் முறையாகத் தொகுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நூலில் அடங்கியுள்ள கடைசி இரண்டு கட்டுரைகள் இரண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையக் தமிழர்களின் வாழ்வியல் குறித்ததாக அமைந்ததுடன் அவை தனக்கு முற்று முழுதான புதிய வாசிப்பு அனுபவமாகவும் புதிய தகவல்களாகவும் அமைந்ததாக குறிப்பிட்டார். அத்துடன் மலையகம் இன்று அடைந்திருக்கக்கூடிய சமூகத் தட்டின் மாற்றங்கள் குறித்து இந்த நூல் உள்ளடக்காமை ஒரு பலவீனம் என்பதை சுட்டிக்காட்டியதுடன் மலையகத்தில் பிரிக்க முடியாத இரண்டு அம்சங்களான மலையக இலக்கியம் குறித்தும் மலையகத் தொழிற்சங்கங்கள் குறித்துமான கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார். விரிவான ஆழ அகலங்களைக் கொண்டதான இவரது ஆய்வுரை தனியாக பதிவு செய்யப்படவேண்டியது.



இரண்டாவது ஆய்வுரையை ஆற்றிய கலாநிதி ந.ரவீந்திரன் இந்த நூலின் அறிமுகவுரையை எழுதியிருக்கும் தெளிவத்தை ஜோசப் முதல் தொகுப்பாளர் தமிழகன் வரை குறிப்பிட்டிருப்பது போல இந்த நூல் தமிழ் நாட்டு சூழலுக்காக எழுதப்பட்டது மாத்திரமல்ல. இது இலங்கையிலும் சக சமூகங்களால் வாசிக்கப்படவேண்டிய நூல். ஏனெனில், இலங்கையில் சக சமூகங்கள் மலையக மக்கள் அவர்தம் பிரச்சினைகள் குறித்த சரியான புரிதல் இன்னும் சக சமூகங்களிடம் இல்லை. ஏற்கனவே 1932 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையின் கீழ் அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்திருந்தாலும் பிரித்தானிய காலனிய ஆட்சிக்கு கீழான குடியுரிமையே அன்றி உள்ளுர் குடியுரிமை அல்ல. 



அவர்கள் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களித்தபோதும் பண்டாரநாயக்காவின் உள்ளுராட்சியில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுதேச அரசாங்கத்தில் பிரித்தானியர் வழங்கியிருந்த வாக்குரிமையும் பறிக்கப்பட்டனர். பின்னர் அதனை மீளப்பெற்றனர். இதுவே அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குரிமைக்கும் அவர்களின் இலங்கைக் குடியுரிமைக்கும் உள்ள வேறுபாடு ஆகும். தற்போதைய நிலையில் இலங்கையின் வேறு எந்த சமூகம் மீதும் அல்லாத வகையில் மலையக மக்களிடையே சிங்கள மேலாதிக்க சக்திகள் திணித்துவரும் மொழியாதிக்கம் இன்னும் ஒரு சவாலை அவர்களிடத்தில் தோற்றுவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இவரது ஆய்வுரையும் தனியாக பதிவு செய்யப்படவேண்டியது.



ஏற்புரை வழங்கிய தமிழகன் தான் இத்தகைய தொகுப்பை வெளிக்கொணர எண்ணியதன் காரணம் பற்றிக் குறிப்பிட்டதுடன் தமிழகத்தில் பெரும்பாலாகவும் ஏனைய மாநிலங்களில் பரவியும் வாழும் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட உறவுகள் இன்று சுமார் 15 லட்சம் அளவில் இந்தியாவில் வாழ்வதாகவும் அவர்கள் அங்கு தாயகம் திரும்பியவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தமிழகத்தில் தமது மறு வாழ்வைத் தேடிக்கொண்டிருப்பவர்களாக உள்ளனர்.

தமிழகன்


இன்று இலங்கையில் ஒரு மலையகம் இருப்பதுபோல இந்தியாவிலும் ஒரு மலையகம் இருக்கிறது. அவர்களுக்கும் அங்கு அடையாளப்படுத்தல் முதல் வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் வரையான பிரச்சினைகள் பலவுண்டு. இந்த இரண்டு மலையகங்களும் உணர்வுடன் இணைந்து தமது மறுவாழ்வுக்காக திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

முத்துக்குமார் 


வாழ்த்துரை வழங்கிய மலைநாட்டு எழுத்தாளர் மன்ற உபதலைவர் மு.சிவலிங்கம் மறுவாழ்வு என்ற சொற்பிரயோகம் விதவைகள் மீண்டும் திருமணம் முடிப்பதற்கு ஒப்பானது என்று குறிப்பிட்டதுடன் மலையக மக்கள் தமது வாழ்வு மற்றும் அரசியல் குறித்த இன்னும் ஆழமாக சிந்தித்து முன்னகர வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வாமதேவன் 


நிகழ்வின் இறுதி ஒரு மணித்தியாலம் சபையோர் கலந்துரையாடலாக அமைந்தது. முத்துக்குமார், கே.ஜி, வி.எம்.ரமேஷ், போன்ற இளையவர்கள் எழுப்பிய தமிழ்நாட்டில் மலையக மக்கள் தொடர்பான தெளிவு இன்மை, மலையக மக்கள் முன்னெடுக்கப்படவேண்டிய போராட்ட வடிவம், தமிழக இலக்கிய இதழ்களில் மலையக இலக்கியம் இடம்பெறாமை போன்ற கேள்விகளுக்கு வழக்கறிஞர் தமிழகன், பூபாலன், பிரான்ஸிஸ், ஜெயசிங், அ.லோரன்ஸ், இரா.சடகோபன், தெளிவத்தை ஜோசப், ஆகியோர் பதிலளித்தனர். 

பூபாலன் 


வன்னியில் வாழும் மலையக மக்கள் குறித்தும் தலைநகரில் வாழும் மலையக இளைஞர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என சட்டத்தரணி சுதந்திரராஜாவும், மன்னார் மாவட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் குறித்த பதிவுகளை முஜிபுர் ரஹ்மானும் முன்வைத்திருந்தனர். நிகழ்வுகளையும் கலந்துரையாடல்களையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகர் தொகுத்தளித்திருந்தார். நூலின் சிறப்பு பிரதியினை மூத்த எழுத்தாளர் அந்தனிஜீவா வெளியிட்டு வைக்க ஞாயிறு தினக்குரல் பொறுப்பாசிரியர் பாரதி ராஜநாயகம் பெற்றுக்கொண்டார். விழாவுக்கு வருகை தந்த அனைவரும் சிறப்பு பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மண்டபம் நிறைந்த, மனம் நிறைந்த விழாவாக 'மலையகமும் மறுவாழ்வும்' அறிமுகமும் கலந்துரையாடலும் நிறைவுபெற்றது.

நன்றி: வீரகேசரி. 19.05.2018


இப்பதிவு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற 'மலையகமும் மறுவாழ்வும்' நூல் அறிமுக விழா நிகழ்வுகளின் தொகுப்பாக பதிவர் லுணுகலை ஸ்ரீ அவர்களால் எழுதப்பட்டு 19.05.2018 திகதியிட்ட வீரகேசரி பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இப்பதிவு பதிவர் லுணுகலை ஸ்ரீ அவர்களின் பேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது. புகைப்படங்கள் பதிவருக்கு உரித்தானவை ஆகும். வீரகேசரி பத்திரிகை மற்றும் லுணுகலை ஸ்ரீ ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

-சிகரம் 

#மலையகம் #நிகழ்வு #புத்தகவெளியீடு #கொழும்புதமிழ்ச்சங்கம் #மலையகமும்மறுவாழ்வும் #Malaiyagam #Event #BookLaunch #ColomboTamilSangam #MalaiyagamumMaruvaazhvum #LunugalaSri #Virakesari

#096/2018/SIGARAMCO
2018/05/26
மலையகமும் மறுவாழ்வும் 
https://www.sigaram.co/preview.php?n_id=322&code=sXMYc1rh 
பதிவர் : லுணுகலை ஸ்ரீ 
#மலையகம் #நிகழ்வு #புத்தகவெளியீடு #கொழும்புதமிழ்ச்சங்கம் #மலையகமும்மறுவாழ்வும் #Malaiyagam #Event #BookLaunch #ColomboTamilSangam #MalaiyagamumMaruvaazhvum #LunugalaSri #Virakesari


வாழ்தலின் பொருட்டு - 05

கருத்த இவ்விருளைக் குழைத்து பொட்டிட்டுக் கொண்டபின் இருவிழி மூடி அவ்விருளின் நிறம் அப்பிய கணத்தில் பறக்கத் துவங்கியது பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்!

நேற்று சமைத்த பாத்திரத்தில் மீந்த சோறாய் காய்ந்து ஒட்டிக் கொண்ட நினைவுகளை அகற்ற தோதாய் ஊற வைக்கிறேன் உள்ளத்தை !

ஆவியில் அவித்த இட்லியாய் விண்டு விழுங்கிவைத்தும் நினைவைச் செரிக்கும் அகத்தினை பெற்றதும் வரமேதான்!

அணைந்த தீபத்தின் கருகல்வாடையாய் அடைகாத்த அன்பு விழித்திரை தாண்டி படர்கிறது துளிகளாய்!

எங்கோ எப்போதோ சிரித்து வைத்த, சிநேகித்த சில நொடிகள் குமிழிகளாய் உள்ளக்கிடங்கில் வெடித்துச் சிதறுகையில் கருநிற இருளில் மினுமினுக்கிறது நம்பிக்கை நட்சத்திரங்கள்...!

உன்னைப் போர்த்திக் கொண்டு உறங்குதலே மீயின்பம் ஆதலால் உன்னோடு சூடுபறக்கும் ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்து பசியாற்றிக் கொள்ள என்னோடே இருந்துவிடமாட்டாயா மையிருளே? !



உடைந்த வளையல் துண்டாய் உறுத்தி ரணமாக்குகிறது வலி உள்ளத்தை! சேர்த்து வைத்த அத்தனையும் செலவழித்துத் தீர்ந்ததுபோல் திக்கற்றுத் திணறுகையில்தான் அகோரப்பசியென்று பிசைந்து நிற்கிறது பிரியம் தேடி மனது !

கடைவாய்ப்பல் வலிக்கையில் அருந்தும் வெந்நீர்போல வெதுவெதுப்பை விதைக்கும் விழிகளின் பார்வையில் தான் இருக்கிறது வாழ்தலுக்கான நம்பிக்கை ! 

காற்றடித்த திசையெல்லாம் அசைந்து ஆடினாலும் கிளைகளுக்கும் இலைகளுக்குமான பிரியத்துக்கு உயிர் நீர் வார்ப்பதென்னவோ உண்மையில் மண்மூடிய வேர்கள் தான்!

மொய்த்து அரிக்கும் ஈயாய் இடைவிடாது மண்டை ஓட்டுக்குள் நச்சரிக்கும் நினைவைப் புறந்தள்ளி மீண்டும் துளிர்க்க ஒரு கோப்பை தேநீரோடு ஊடுருவி உயிர்பருகி கொள்(ல்) என்விழிகளே !
 

#095/2018/SIGARAMCO
2018/05/26
வாழ்தலின் பொருட்டு - 05

https://www.sigaram.co/preview.php?n_id=321&code=90Rxe1s2
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி) 
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE 
#சிகரம்

Tuesday 22 May 2018

சிகரம் வலைப்பூங்கா - 02

வலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். 'எனது கவிதைகள்' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் தனது கவிதைகளுடன் திரையிசைப் பாடல்களும் ஒலிபரப்பான 'கவிதையும் கானமும்' நிகழ்ச்சியை எழுத்து வடிவில் நமக்குப் படைத்தளித்திருக்கிறார். அவர் தனது 'நிழல் உலகம்' என்னும் கவிதையில் இப்படிக் கூறுகிறார். 


இளைப்பாறுதல்களும்
எல்லை மீறுதல்களும்
மலிந்து கிடக்கும்
இவ்வுலகில்

பொய் முகத்துடனும்
புனை பெயருடனும்
ஒரு வேளை
நீயுமிருக்கலாம்
என்ற எண்ணம்
வரும் போது மட்டும்
ஒரு கணம் நின்று - பின்
துடிக்கிறது இதயம்

இப்படியாக அவரது பல கவிதைகளை 'கவிதையும் கானமும்' பதிவில் எழுத்து வடிவில் மட்டுமல்லாது ஒலி வடிவிலும் கேட்டு மகிழலாம். 

ஒரு படைப்பை படைப்பாளனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் வாசகனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வாசகனின் பார்வை பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். எழுத்தாளன் சிந்திக்காத கோணத்தையெல்லாம் வாசகன் சிந்தித்து அறிவான். எழுத்தாளன் ஒரு படைப்பை ஒரு தடவை தான் எழுதுகிறான். ஆனால் வாசகர்களோ காலத்துக்குக் காலம் மாறுபட்ட சிந்தனைத் தளங்களிலிருந்து சிந்திக்கிறார்கள். இப்படியான ஒரு மாறுபட்ட சிந்தனைக் களத்திலிருந்து 'பொன்னியின் செல்வன்' நாவலை அணுகியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன்

அபிலாஷ் சந்திரன் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 'மின்னற் பொழுதே தூரம்' என்னும் வலைப்பதிவில் எழுதி வருகிறார். எழுத்தாளர் கல்கி நம்மால் நன்கு அறியப்பட்டவர். அவரது 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு' என எத்தனை புதினங்கள் இருந்தாலும் 'பொன்னியின் செல்வன்' தான் கல்கியின் பிரதான அடையாளம். அந்த புதினத்தில் தன்னைக் கவர்ந்த ஓர் அத்தியாயத்தை திறம்பட அலசியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன். 'பொன்னியின் செல்வன் (1) - மதில் மேல் தலை' என்று மகுடமிட்டு 'பொன்னியின் செல்வனுக்கு' மகுடம் சூட்டியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன்!



'வாழ்க்கையில் சாதிப்பது அவசியம் தான், திருப்தியும் கூட!' என்று சொல்கிறார் 'கனவும் கமலாவும்...' வலைப்பதிவர் கமலா ஹரிஹரன். 2011 ஆம் ஆண்டு முதல் வலைப்பதிவு எழுதி வருகிறார். இயற்கை மனிதனுக்கு எத்தனையோ நல்ல விடயங்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மனிதன் இயற்கைக்கு அந்த நன்றிக்கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டும் என்று நினைத்ததே இல்லை. அந்த அவசியத்தை உணர்த்தி நிற்கிறது பதிவரின் சிறுகதை.

காக்கைக்கும் மனிதனுக்கும் விட்ட குறை தொட்ட குறையான ஒரு உறவு இருக்கிறது. குழந்தைக்குச் சோறு ஊட்டுவதில் இருந்து பூஜைப் படையல்களை முதலில் வைப்பது வரை ஏராளம் சொல்லலாம். அந்தக் காக்கையை வைத்து மனிதன் மறந்து போன கடமையை 'நன்றிக் கரையல்கள்' என்னும் தனது சிறுகதை மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கமலா ஹரிஹரன்!

#094/2018/SIGARAMCO
2018/05/22
#sigaram #sigaramco #tamil #tamilblogs #reading 
#வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா 

Popular Posts