Saturday 28 October 2017

ஒரு பட்டிக்காடு...

ஊர்
💚
எங்களூர் சிறிய பட்டிக்காடு
அங்கு பெரிதாய் என்ன இருந்தது
அதன் மருங்குகளில்
கடவுளின் கண்களைப் போல்
இரு நதிகள் ஓடின
பௌர்ணமி பொழியுமதன் அலைகளில்
கெண்டைமீன்கள் நீந்திக் களித்தன
ஊரின் எல்லையிலொரு தாமரைக்குளம்
கரையில் திரௌபதி அருள் செய்தாள்
முன்னிரவில் படித்துறைகளிலிருந்து
காற்றிலெழும்பி வந்தது பெண்டிர் சிரிப்பொலி



அய்யனார் கோவில் சுற்றி புளியந்தோப்பு
ஈரம் விளைந்த அதன் நிலத்தில்
ஓட்டுச் சில்லுகளால் கோடுகள் கீறி
இலுப்பை விதைகள் சேகரித்து
நொண்டி விளையாடுவர் சிறுவர்
முதிர்ந்த வன்னி மரத்தடியில்
எம்மூதாதை வீரனெழுந்த தலமுண்டு
அவன் காவலில் எம்குலம் தழைத்தது
கேழ்வரகும் கம்பும் சோளமும் கவர வரும்
சிட்டுகளை விரட்ட எழுப்பிய ஒலியில்
விலகியது எங்கள் கருக்கல்
ஒன்றாம் வகுப்பு ஆசானோ ஒன்று விட்ட அத்தையோ ஆசை மேலுற எங்கள் குஞ்சுமணிகளை உருவி முத்தமிடுவார்கள்
கமர்கட் வாங்கிக் கொடுத்து
தூது போகச் சொன்ன சிறுவர்கள்
மொழியும் முறைப்பெண்கள் வார்த்தைகளில்
இரவெல்லாம் கனவு வளர்ந்தது
பாட்டன் பாட்டி பெரியப்பன் பெரியம்மா
சித்தப்பன் சின்னாயி மாமன் அத்தை
சொந்தம் சோலியென
பொழுதெல்லாம் நிறைந்தது
விழியில் பீளையும் மூக்கில் சளியும்
அழகுசெய்யும் கோவிந்தனுக்கும்
செல்வி அக்காவுக்கும்
திருஷ்டி கழிக்கும் அம்மாக்களிருந்தனர்
அங்குதான் மாடுகளை மேய்த்தபடி
ஒரு சிறுவன் தாஸ்தாயேவ்ஸ்கியின்
வெண்ணிற இரவுகளைப் படித்தான்
பிறகு தனது நாஸ்தென்காவோடு
அக்கிராமத்தை விட்டு வெளியேறினான்
தன் பூர்வநிலத்தை அறிய மகன் விழையும்போது சொன்னான்
எங்களூர் ஒரு பட்டிக்காடு
அங்கு பெரிதாய் என்ன இருந்ததென
பிறகு அவனறியாமல்
கைக்குட்டையெடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டான்.
#என்னாளும் அழியாத மாகவிதை!

இக்கவிதை கவிஞர் கரிகாலன் அவர்களால் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கவிதை ஆகும். 

ஒரு பட்டிக்காடு... - கரிகாலன் 
 

1 comment:

  1. மண்மணத்தை மனதால் நுகரச் செய்த ஒப்பற்ற வரிகள் ! இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

Popular Posts