Saturday 28 October 2017

மல்லிகைக்கிழமை

*********************
‘வரும்போது
கால் கிலோ மல்லிகை மொக்கு
வாங்கிட்டு வந்துருங்க' -
அந்திக்குள் வீடு திரும்ப
வேண்டியதன் அவசியத்தை
புறப்படும்போதே பூடகமாகப்
புகுத்திடுவாய் மனத்திற்குள்




மாலை உன் கூந்தலேற
பகலெல்லாம் ‘போது’ஆகும்
மல்லிகையைப்போல்
நாளெல்லாம் நம்மிடையே இவ்
வெள்ளிக்கிழமை மெருகேறும்

மாரியம்மன் கோவில் அருகில்
கடைவிரித்துக் காத்திருப்பாள் பூக்காரி
நரைக்கூந்தல் திருநீற்று நெற்றி
வெள்ளுடை உடுத்தி
வெண்பளிங்கு அம்மன்சிலை போன்று
அமர்ந்து பூ தொடுப்பாள்
பூக்காரி என்றுதான் பொதுவாக அழைப்பர்
நான் பூவம்மா என்றழைப்பேன்

கொடிமல்லிப் பூ வளர்ப்பு
குறைந்துவிட்ட காரணத்தால்
முன்பணம் செலுத்திச் சொல்லி வைப்பேன்

அலுவல் முடித்துத் திரும்புகையில்
பூவுடன் சேர்த்து புன்னகையையும்
பொட்டலமாகக் கட்டிக்கொடுப்பாள்

இரை சேகரித்த தாய்க்குருவிபோல்
விரைந்து வீடடைவேன்
வெட்கத்துடன் பொட்டலம் பிரிப்பாய்

மொக்குகளைத் தரையில் கொட்டி
நூற்கண்டு பிரித்து பூ கட்டத்துவங்குவாய்
எதிரில் அமர்ந்து நான்
இரண்டிரண்டாக எடுத்துப் பிடித்துக்
கொடுக்கக் கொடுக்க
வாங்கி வாங்கி சரம் தொடுப்பாய்

எடுத்துக் கொடுக்கும் விரல் இரண்டும்
என்னுதடுகள்
பிடித்து வாங்கும் விரல் இரண்டும்
உன்னுதடுகள்
அவை நான்கும் பரிமாறிக்கொள்ளும்
மலர் முத்தங்கள்

முத்தச்சரந்தொடுத்தல் முடிந்ததும்
குளித்து வந்து கூந்தல் ஏற்றுவாய்
அதுவரை அடைத்து வைத்திருந்த 
வாசத்தையெல்லாம்
உன் கூந்தலுக்குக் கடத்தியபடி
என்னைப்பார்த்து பழிப்புக்காட்டிச் சிரிக்கும்

என் காத்திருப்பைக் கண்டு
இதோ
அழைத்து வந்துக்கொண்டிருக்கிறேன் 
இரவை
எனக் கட்டியங்கூறி
அந்தி வானம் சிவக்கும்
அங்கம் மெல்ல பூக்கும்
*

இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

மல்லிகைக்கிழமை

No comments:

Post a Comment

Popular Posts