வர வர இந்த திரைப்பட விமர்சகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. திரைப்படம் வெளிவந்து அரை மணி நேரத்தில் செம மொக்கை என்கிறார்கள், ஆகா ஓகோ என்கிறார்கள். இந்த அலப்பறைகளை நம்மவர்கள் பேஸ்புக்கில் பார்த்துவிட்டுத்தான் படத்தை பார்ப்பதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. முழுக்கதையையும் சொல்லி விட்டு மீதியை திரையில் பாருங்கள் என்கிறார்கள். இந்த மாதிரியான விமர்சனங்களால் ரசிகர்களின் ரசனை பாதிக்கப்படுகிறது. திரையரங்கில் படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும் போதும் இந்த விமர்சனங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கும். ரசிகன் திரைப்படத்தை தடையின்றி ரசிக்க வேண்டுமானால் திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு விமர்சனம் வெளியிடத் தடை என்று அறிவித்தால் தான் முடியும் போல!
ரசிகர்களின் இந்தத் தொல்லை போதாதென்று மலைக்க வைக்கும் திரையரங்கக் கட்டணங்கள் மறுபுறம் வதைக்கின்றன. திரைப்பட காட்சிக்கான கட்டணங்கள், உணவக வசதிகள் என திரையரங்கு சார்ந்த கட்டணங்கள் எல்லாமே ரசிகர்களிடம் இருந்து ஆயிரங்களை விழுங்கியும் பசி தீராமல் அகோர பணப் பசியுடன் உள்ளன. இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எந்த அரசோ அல்லது அரச அமைப்புகளோ முனைப்புக் காட்டவே இல்லை. தற்போது தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் போன்ற இணையத்தளங்கள் திரையரங்க பண முதலைகளுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டி வருகின்றன.
அண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களுக்கு ஆப்பு வைப்பேன் என சூளுரைத்தார். ஆனால் அவரது துப்பறிவாளன் திரைப்படம் வெளியாகி ஒரு மணி நேரத்தில் இணையத்தில் வெளியானது. திரையரங்குகளின் கட்டணக் கொள்கை மறுசீரமைக்கப்படாவிட்டால் மக்கள் இணையத்தளங்களிலேயே திரைப்படங்களைப் பார்க்கும் நிலை ஏற்படும். பிறகு திரையரங்குகளை மூடிவிட்டு பாதையில் வடை விற்கப் போக வேண்டியது தான்.
#THEATER #CINEMA #TamilCinema #TamilRockers
No comments:
Post a Comment