Wednesday, 11 October 2017

கரை காணாத ஓடங்கள்

புலர்ந்திடும் பொழுதில்
புலன்பெயராதவள் நினைவுகள்
மார்துளைத்த ஈட்டியாய்
மனதை வதைக்கிறது

நாளும் சாகிறேன்
நாட்காட்டியாய் கிழிகிறேன்
கரைசேரும் நுரையாய்
கரைந்தும் போகிறேன்

தெருவில் பார்த்தேன்
தேவதையின் முகத்தை
கண்ணில் இழுந்தாள்
காற்றில் பறந்தேன்




நடு வகுடும் - அதற்கு
நயமாய் சிங்காரமும்
விரல் வரைந்த குங்குமமும்
கீழ் ஒட்டுபொட்டும்

தாழ்பாளில்லாத  இதழும்
தோரணமாய் பற்களும்
குடைசாய்ந்த பிறையாய் புருவமும்
கார்மேகமாய் கூந்தலும்

பின்னலில் சிக்கி
பித்தாகும் மனமும்
அரசு சீருடையும்
அன்ன நடையும்

தோள் பையும்
தொய்வில்லாத பேச்சும்
கண்டதும் காணாத விழியும்
கடக்கும் நேரத்தில்

கடையோரத்தில் வரும் கருமணியும்
கொலுசின் ஒலியும்
விடை கொடுத்தனுப்பும்
மல்லிகை மணமும்

நித்தமும் நீந்துகிறது
நிறைமாத கர்ப்பிணியாய்
ஏந்தித் தவிக்கிறது
அலையினுள் தள்ளாடும்

கரைகாணாத ஓடமாய்
கண்ணீரில் மிதக்கிறது
கலையான உன் முகமும்
கலையாத உன் நினைவும்

- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும் -

No comments:

Post a Comment

Popular Posts