Friday 1 September 2017

பகைவனுக் கருள்வாய் பராசக்தி!

தமிழ் வணக்கம்

இயலிசை நாடக கலை வளர்த்த
கடம்ப வனமதிலே!
தொல்காப்பியனின் இலக்கணமாய்,
வள்ளுவனின் வான்மறையாய்,
நான்மறையின் நாயகியாய்,
பழமையில் புதுமையாய்,
இளமையில் முதுமையாய்,
உலக உயிர்களின் முதல் ஒலியாய்,
விழிக்கையிலே சுவைத்திடும் தேன் சுளையே!
தவறுகையில் தாங்கியணைக்கும் தாய்மடியே!
என் சிந்தைக்கினியவளே!
செந்தேன்மொழியே!
பைந்தமிழே!
நின்தாள் சரணடைந்து செப்புகின்றேன்.
பிழையின்றி தடுத்தாள்வாய்..!!



அவை வணக்கம்

கொஞ்சு தமிழில் நாளும் குழந்தையென
தமிழன்னை மடித்துஞ்சி
அவள் நாவசைக்கும் வாய்மொழியை
வள்ளுவனின் கோல்வாங்கி மற்றுமொரு
காவியம் படைத்திட துடிக்கும்
தமிழன்னையின் செல்வங்களே!
அருந்தமிழ் புலவர்களே!
அனைவருக்கும் கன்னித்தமிழின்
கடைக்குட்டி கவின்மொழிவர்மனின்
கனிவான வணக்கங்களைக்கூறி
சுந்தரேசன்மீனாளின் தாள்பணிந்து
செப்புகிறேன் செந்தமிழை
பாரதியின் பாதம்தொட்டு!

பகைவனுக்கு அருள்வாய்

பகைவனுக்கு அருள்வாய்
பராசக்தி!
பகைவனுக்கு அருள்வாய்!


உண்ண மறந்து தினம்
இடைமறைக்க அடித்துணியு மிழந்து;
அண்டிவந்த பேருக்
கெல்லாம்
வண்டிவண்டியாய் வாரித்தந்த நாளுமீளுமா!

ஆற்றுமணலை வாரிக்
குவித்தான்
நிலமாழ் துளையில் மீத்தேனெடுத்தான்;
பார்க்கையிலேவிழி பறிப்பது போலே
நிலமதுயாவு மணுவுலை யமைத்தான்!

பகைவனுக் கருள்வாய் பராசக்தி!
பகைவனுக் கருள்வாய்!

உரங்கள்வீசி மருந்தைத் தெளித்தான்
மரபணுமாற்றிப் பயிர்களை வளர்த்தான்;
காட்டையழித்துக் கட்டிட மமைத்தான்
காய்கறிவிடுத்துக் காசையா உண்பான்?

காய்கறியரிசியிற் நெகிழியை நுழைத்தான்
ஆநிரைப்பாலிலும் விடமதைக் கலந்தான்;
குடிநீருங்குப்பியில் பணத்துக்கு விற்றான்
மருத்துவன்கூட மனிதத்தை மறந்தான்!

பகைவனுக் கருள்வாய் பராசக்தி!
பகைவனுக் கருள்வாய்!


லஞ்சத்திலெங்கள் நெஞ்சுபதைக்க
வஞ்சித்தான்
பெண்ணைத்தெருவில்
ஆடைகிழித்துப் புணர்ந்தான்;
வாக்குப்போட்டு உரிமை
யிழந்தோம்
மாற்றம்வேண்டி மானமு மிழந்தோம்!

எட்டிக்குதித்து விண்ணை
முட்டிக்கிழிக்கும்
கொட்டமுடைத்துப்புது
சட்டம் படைக்கும்;
அச்சந்தவிர்த்து வம்சமிச்ச மின்றியே
வெஞ்சத்தில்  நெஞ்சறுக்கும்
நாள்வருமுன்னே!

வாட்டம்நீங்கிச் சீற்றங்கொள் தீயெனயெழுந்து
பழம்வீரச்செறிவில் பலியதைமுடிக்கக்
கணையெனயெழுமுன்;
திருந்திடு தவறுகள் உணர்கவென்றே
பகைவனுக் கருள்வாய் பராசக்தி!

பகைவனுக்கு அருள்வாய்!

- இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -

No comments:

Post a Comment

Popular Posts