Wednesday 6 September 2017

களவு போன கனவுகள் - 04


அன்றைய வளநாட்டின்
அழகுப் பெருக்கதனை
எடுத்தியம்ப இயலாது!
ஏடுகள் போதாது !
மலையின் மறுபக்கம்
மங்கள வளநாடு !
மாலை நேரத்தில்
அதனழகும் அருமைச்
சூழலதும், அளப்பரிய தென்றால்
அது மிகையில்லை !
ஆங்கே,
நான் அடியெடுத்து 
மெதுவாக நடக்கையிலே,
நலங்கள்மிகு நன்னாட்டின் 
நாற்புறத்து வீதியிலும்
நலமே மொழிகின்ற 
மக்களது குரல்கேட்கும் !
ஆய்ச்சியர் பாடுகின்ற 
அருமைப் பாடலதும்
ஆட்டிடையன் ஆவினத்தை 
அழைக்கின்ற குரலதுவும்,
சோலைப் பறவைகளின் 
சோவென்ற இன்னிசையும்,
ஆலைக்குச் சென்றுழைத்துத் 
திரும்பும் தொழிலாளர்
அரட்டைப் பேச்சொலியும்,
சாலைக்குச் சென்று 
சலிப்படைந்த சிறுவர்கள்
வீடடையும் வேளையிலே 
விளையாடும் ஒலியும்,
அனைத்தும் ஒருசேரச் செவிபோந்து
ராக மாலிகையாய் ரசம் கூட்டும் !



அது அன்று ! –
இன்றைய நிலையோ
அதுவன்று !
மலிந்திருந்த மக்கள்தொகை
நலிந்துவிட்ட நிலையின்று !
சிணுங்கும் மழலைகள் இன்றில்லை !
மறந்தும் மலையோரப்
பசுமைப் புல்வெளியைப்
பார்க்கும் கண்ணில்லை !
ஊரின் அசைவுகளில் உயிரில்லை !
உறவென்னும் சொல்லுக்கோர்
பொருளில்லை !

ஆனால்
அழிந்துபட்ட அழகுகளின் சாட்சியென
அந்தமிகு மலைப்பாதை ஓரத்தில்
அந்தக் கிழவி மட்டும் வாழ்கின்றாள் !
கனவுகள் நிறைந்திருந்த கண்களிலே
கடந்தகால
நினைவுகள் மாத்திரமே துணையாக
அந்தக் கிழவி மட்டும் வாழ்கின்றாள் !

இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
                                                                                                                                                                    
கனவுகள் தொடரும்....

No comments:

Post a Comment

Popular Posts