Friday 15 September 2017

தமிழ் பேசும் கூகிள்! #GoogleVoiceTypingTamil

இதுவரை தமிழில் விசைப்பலகைகளினூடாக எழுத மட்டுமே அறிந்திருந்த கூகிள் இப்போது நாம் பேசுவதைக் கேட்டு எழுதவும் பழகியிருக்கிறது. தமிழில் மட்டுமல்ல 20க்கும் மேற்பட்ட மொழிகளில் குரல் வழித் தட்டச்சைத் துவக்கியிருக்கிறது கூகிள். கூகிளில் முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே குரல் வழித் தேடல் மற்றும் தட்டச்சை மேற்கொள்ள முடியும். தற்போது அந்த வசதியை பிராந்திய மொழிகள் பலவற்றுக்கும் விரிவாக்கியிருக்கிறது. 



இப்போது நீங்கள் தமிழில் பேசுவதைக் கேட்டு கூகிளில் தேடவும் செயலிகளில் தட்டச்சு செய்யவும் முடியும். ஆனால் தமிழில் குரல் வழியாக திறன்பேசியைக் கட்டுப்படுத்த முடியாது. அந்த வசதி ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. கூடிய விரைவில் ஏனைய மொழிகளுக்கும் அந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்கிறது கூகிள்.

இதன்மூலம் விழிப்புலனற்றோர் மற்றும் விசேட திறனுடையோர் போன்றவர்களுக்கும் திறன்பேசிகளை இலகுவாகக் கையாளக் கூடிய வசதி கிடைக்கவுள்ளது. மேலும் அவசர யுகத்தில் பொறுமையாக தட்டச்சு செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் இது மிகச் சிறப்பான வசதி தான். ஆரம்ப கட்டம் என்பதால் நாம் கூறும் எல்லாச் சொற்களையும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு கூகிளால் எழுத முடியவில்லை. பல்வேறு பிழைகள் காணப்படுகின்றன.

இதனை சரி செய்வதும் மேம்படுத்துவதும் நம் கைகளிலேயே உள்ளது. கூகிள் நாம் பேசுவதைப் புரிந்துகொண்டு எழுதப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. நாம் சொற்களைப் பிழை திருத்தி சரியான சொற்களை உள்ளிடுவதன் மூலம் கூகிள் தானாகவே தனது பிழைகளைத் திருத்திக் கொள்ளும். 

இந்த வசதியை உங்கள் திறன்பேசிகளிலும் பெற்றுக்கொள்ள GBoard விசைப்பலகை அல்லது Google Indic Keyboard விசைப்பலகையினை இற்றைப்படுத்திக் (Update) கொள்ளுங்கள். பின்னர் திறன்பேசியின் மொழி அமைப்புகளுக்கு (Language & Input Settings) சென்று குரல் வழி உள்ளீட்டில் பிரதான மொழியாக தமிழைத் தேர்வு செய்யுங்கள். இப்போது உங்கள் குரலும் பேனையாக மாறி எழுதத் தொடங்கிவிடும்! 

#Google #GoogleVoice #GoogleVoiceTyping #GoogleVoiceType #VoiceOverType

No comments:

Post a Comment

Popular Posts