Sunday 17 September 2017

முகிலும் மயிலும்

ஆதவன் உறங்கியிருக்க
அம்புலியோ விழித்தெழுந்திட...
அகண்ட  வெளியில்
அலங்காரமாயொரு மேடை...

விளக்கின் ஒளியோ
விடியலாய் சொலித்திட...
நடுவில் நாயகனாய்
நாராயணன் சிலையாய் நின்றிருக்க...

பார்த்த கண்களோ
பாரை மறந்திட...
பூமியும் ஆனதே
பூலோக வைகுண்டமாய்..

அழகானதொரு நாட்டியம்
அரங்கேறியதே அம்மேடையில்...
பரம்பொருளின் அவதாரத்தைப்
பரதத்தில் எடுத்துரைக்க...

பார்த்த நானோ
பார்த்தனிடமே சென்றிட...
இடையில் தத்தகாரம்
இனிமையாய் ஒலித்திட...

இமைக்காத விழியோ
இசைத்தவள் பக்கம் ஈர்த்திட...
சோழன் வார்த்தெடுத்த
சிலையாய் அங்க அழகும்...

முழுநிலவாய் பிரகாசிக்கும்
முக அழகும்...
முகில் கிழித்து
முகம் காட்ட வந்த

முழுமதியோ நாணி
முகமறைத்து சென்றிட...
தேற்றிட ஆளில்லாமல்
தேய்ந்தும் போய்விட...

வருவாளோ நடனம்
புரிவாளோ என்று
மனமேங்கி அமர்ந்திருக்க...
மெதுவாய் நோக்கினாள்...

நோக்கும் நேரத்தில்
நோக்காமல் நோக்கா
நேரத்திலெனை நோக்கி
நோகடித்தினாள் கடைவிழியால்...

கண்ணணின் கதையை
காவியமாக்கினாள் பரதத்தில்
கண்ணெதிரே நிறுத்தினாள்
குருவின் ஆசியோடு...

செங்கதிர் தெறிக்கும்
செம்முகத்தாள் சுட்டெரித்தாள்...
உடலை விட்டு
என்னை இழுத்தாள்...

முத்திரை பிடிக்கும்
விரலின் இடுக்கில்
என்னை அடக்கி
அணைத்துக் கொண்டாள்...



விழிக்குள் என்னை
விதையாய் புதைத்துக் கொண்டாள்...
நீந்திக் களித்தேன்
நீளவிழியில் நானே...

வெளியின் நிலவாய்
கருவிழி இரண்டும்
அங்குமிங்கும் அசையும்...
அழகில் சொக்கி நின்றேன் ...

சிலாகித்துப் போனேன்...
சிலிர்த்து விழுந்தேன்...
இமையால் வருடி
இதயத்தினுள் அமர்த்தினாள்...

ஆசனமிட்டு அமர்கையில்
ஆடலின் துள்ளலில்
தெறித்து விழுந்தேன்
எதிரிலிருக்குமென் உடலினுள்...

உயிர்பெற்று எழுந்தேன்...
கருவறை சென்று
மீண்டும் திரும்பினேன்...
முகுந்தனாய் நின்றாள்

குழலூதி எதிரில்...
கண் அசையாது...
கருவிழியும் அசையாது...
அவளை மட்டும் பார்த்தேன்...

அவளின் தாசனானேன் ...
சலங்கை ஒலியும்...
காற்றிலாடும் சிமிக்கியும்...
மார்பின் மேலாடும்

தங்க நகையும் அதில்
தகிக்கும் வைரமும்...
மோகனப் புன்னகையும்...
மனதை மயக்கிட...

மயில் தோகையணிந்து
மாயவனாய் ஆடினாள்...
தோகை விரித்த மயிலாய்
அழகாய் ஆடினாள்...

காதலெனும் யாழெடுத்து
காமத்தையும் அதிலடக்கி
மீட்டினேன் மீராவாய்
முகுந்தனை யாசித்து...

கோகுலக் கண்ணன்
கோபியருடன் விளையாடி...
மீராவை மறந்தானோ
மீட்டிடும் இசையை கேளானோ?...

வாடா கண்ணா...
வந்தென்னை வசந்தமாக்கடாயென
ஆண் மீராவாய்
பெண் கிருட்டிணனை வேண்ட...

பதிலுரைக்காமல் கடந்தாள்...
பார்வையை விட்டு சென்றாள்...
கிழிந்த முகிலோ
கொட்டித் தீர்த்தது மழையை...

மழை விளக்கியது
என் மனதின் வலியையும்...
நிலவின் கோபத்தையும்...
ஒரே நேரத்தில்

மதியும் கலங்கியதே...
மனதும் குழம்பியதே...
மீட்டிட வருவாயோ...
மீண்டுமொரு முறை

யாழெனயெனை மீட்டி
யாதுமாய் நிறைவாயோ...
வாழ்ந்திட வருவாயோ...
வருந்திய மனதிற்கு

மருந்தாய் வருவாயோ...
மகிழ்ச்சியை அதனுள்
தெளித்து செல்வாயோ...
தேனாய் இனிப்பாயோ...

சிரித்து கடந்தவளே...
சிந்தையுனுள் சிலையாய் நின்றவளே...
மீண்டுமொரு முறை
மீள்பதிவாய் என்னுள் வா...

- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும் -

#SATHISHVIVEKA #POEM #TAMILPOEM #SIGARAMCO #TAMIL

No comments:

Post a Comment

Popular Posts