Monday 4 September 2017

சொந்த மண்ணில் முழுத் தொடரையும் இழந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி! #INDIAvsSRILANKA

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டித் தொடரை 3-0 என வெற்றி கொண்டதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடரையும் 5-0 என வெற்றிகொண்டு சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை இலங்கைக்கு பரிசளித்துள்ளது. உலகக் கிண்ணம் 2019க்கு நேரடியாகத் தகுதி பெற இந்தியாவுடனான இந்த தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளையேனும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை அணி முழுத் தொடரையும் இழந்து இந்தியாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. இனி மேற்கிந்தியத் தீவுகள் அணியும் நம்மைப் போலவே முழுத் தொடரையும் இங்கிலாந்திடம் இழக்க வேண்டும் என பிரார்த்திப்பது மட்டுமே ஒரே வழி இலங்கை அணிக்கு!



ஐந்தாவதும் இறுதியான போட்டியில் ஆறுதல் வெற்றியையேனும் பெற்று உலகக் கிண்ண கனவில் கொஞ்சமேனும் வலு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் முனைப்புடன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. ஆனால் யார் வைத்த சூனியமோ தெரியவில்லை தொடர் முழுவதையும் போலவே 240 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. இலங்கை இத்தொடரின் ஐந்து போட்டிகளிலும் முறையே 216, 236, 217, 207 மற்றும் 238 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இந்திய அணிக்கு சவாலான ஓட்ட எண்ணிக்கை ஒன்றைக்கூட பெறவில்லை.



முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. லஹிரு திரிமான்ன 67, மெத்தியூஸ் 55 மற்றும் உபுல் தரங்க 48 என ஓட்டங்கள் குவித்தனர். பந்துவீச்சில் புவனேஷ்குமார் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிக்கொண்டார்.



பதிலளித்தாடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. விராட் கோலி சதமடிக்க (110) கேதர் ஜாதவ் அரைச்சதம் (63) கடந்தார். இலங்கை அணியின் பந்து வீச்சு குறிப்பிடும்படியாக இல்லை. தற்போதைய இலங்கை அணி போராட்டக்குணம் உள்ள அணியாக இருந்த போதிலும் 2019இல் உலகக் கிண்ணத்துக்கு உள்நுழைவதற்கோ அல்லது வெற்றி பெறுவதற்கோ இது போதாது என்பதே உண்மை. ஆட்ட நாயகனாக புவனேஷ்குமாரும் தொடர் நாயகனாக பும்ராவும் தேர்வு செய்யப்பட்டனர். வரும் ஆறாம் திகதி ஒற்றை 20-இருபது போட்டி இடம்பெறவுள்ளது. அதிலாவது வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

#INDvSL #INDvsSL #India #Srilanka #IndiaVsSrilanka #MicromaxCup #RPremadasa #Kohli #Dhoni #MSD

No comments:

Post a Comment

Popular Posts