Monday 5 February 2018

ஏழாம் நம்பர் டோக்கன்

சண்முகனுக்கு வண்டியிலிருந்து விழுவது குலத்தொழிலெல்லாம் கிடையாது. ஆனால் அவனது சரித்திரம் அப்படித்தான் நினைக்கச் சொல்லும்.

அவனும் ஏறாத கோயிலில்லை வேண்டாத சாமியில்லை! மாற்றாத வண்டியுமில்லை! ஆனால் குடிப்பதை மட்டும் நிறுத்த தோன்றவில்லை அவனுக்கு. அதற்கு காரணம் போதையில்லாத சமயங்களிலும் சரிவிகித விபத்துக் கணக்குகள் பதிவாகியுள்ளன சண்முகனின் வரலாற்றில். திருப்பூரிலிருந்து கோவை வரையுள்ள நவீன மருத்துவமனைகள் முதல் காய்ச்சலுக்கு ஊசி போட்டு நியூஸ் பேப்பரில் மாத்திரை மடித்துக் கொடுக்கும் ஒரே ஒரு மருத்துவரை மட்டுமே கொண்ட பத்துக்கு பத்து ஆஸ்பத்திரி வரை அனைத்திலும் பெயர் பதிந்துவிட்டான்.

இரண்டு சிறிய அறுவை சிகிச்சை தவிர பிற சம்பவங்கள் ஒன்றிரண்டு தழும்புகளோடு முடிந்து விட்டவை. பெரும்பாலும் விபத்துக்கு நாய் ஒன்று குறுக்கே வந்துவிட்டதே காரணமாக இருந்தது . தானே விழுந்த தானைத் தலைவன் என்ற பட்டத்தை தவிர்க்க சண்முகனுக்கு நாய்களை தவிர வேறு யாரும் உதவ முடியாது .

மொத்தத்தில் சுத்துப்பட்டி பதினெட்டு கிராமங்களிலும் நாயும் சண்முகனும் பேமஸ் .

இப்படி இருக்கும் போது கடைசியாக நடந்த விபத்தில் நாய்க்கு பதிலாக சுமாரான வேகத்தில் வந்த கார் ஒன்றை தனது வண்டியில் பதம் பார்த்து விட்டான் . சரித்திரத்தை மாற்றி எழுதியது கூட தெரியாமல் கோவையின் புகழ் பெற்ற மருத்துவமனைக்கு 108 ல் சைரன் ஒலிக்க மயக்க நிலையில் சென்ற சண்முகனுக்கு அன்று இரவே தாடைப்பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .

விடிந்த பிறகு தான் நினைவு வருமென்று சொல்லி அறையில் கொண்டு போட்டுச் சென்று விட்டார்கள். சுமார் எட்டு மணிக்கு கண் திறந்த சண்முகனுக்கு சூழல் பிடிபட இரண்டு நிமிடம் ஆனது .

அறையில் அவனது அண்ணன் முருகேசனும் சண்முகனின் தாய்மாமனும் மட்டும் இருந்தனர் .

உடம்பெல்லாம் மரத்துக் கிடப்பதுபோல் இருந்தது . அதைவிட முருகேசனின் பார்வை ஊசியாய் குத்தியது .

"நான் மெதுவாத்தா மாமா போய்ட்டிருந்தேன் . திடீர்னு ஒரு செம்மி நாய் உள்ள பூந்துடுச்சு ..." என்றான் .

முருகேசன் தலையில் அடித்துக் கொண்டே எழுந்து வெளியே சென்று விட்டான் .

மாமனை பார்த்தான் . பூனைபோல நடந்து வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தவர் அதே பூனைக்குரலில் சொன்னார் .

"மாப்ள! நேருக்கு நேரா ஒரு கார சாச்சுப் போட்டு நாய் வந்துடுச்சுனு கோழ மாதிரி சொல்றியே நீயி ... உனக்கு ஆகற ஆஸ்பத்திரி செலவ விட அந்த கார் காரனுக்கு லம்ப்பா பழுத்துப் போகும் . அப்பிடி ஒரு அடி மாப்ள .."

நினைவில் கொஞ்சம் கொஞ்சமாக கார் உருவம் முளைத்தது . இரண்டு நிமிடத்தில் எதிரில் வந்து மோதியது . அதிர்ச்சி அனைத்தையும் மறந்து விட செய்திருந்தது .

உள்ளே திரும்பி வந்த முருகேசன் தான் கவனித்தான் சண்முகனின் வலது கண் முழுதும் கருப்பு வண்ணத்தில் கலங்கி கிடந்தது . நர்சிங் ஸ்டேசனுக்கு ஓடிப்போய் சொன்னான் .

பத்து மணிக்கு டாக்டர் வந்து பார்ப்பார் என்றார்கள் .

பதினோறு மணிக்கு வந்து பார்த்த டாக்டர் கண் டாக்டர் வந்து பார்க்கவேண்டும் என்றார். மதியம் உறங்கிக் கொண்டிருந்த மூவரையும் நர்ஸ் வந்து எழுப்பி கண் டாக்டர் வந்திருப்பதாக சொன்னாள் . ராஜாதி ராஜ ... ராஜ மார்த்தாண்ட ...

ஆற அமர பரிசோதித்த பின் "உடனே ஒரு ஆபரேசன் செய்யணும்! இல்லனா அந்தக் கண்ணுல பார்வை போயிடும் "

அப்போது முருகேசன் டீ வாங்க போயிருந்தான் .

"செலவு எவ்வளவு ஆகும் டாக்டர் ?" என்றார் மாமன் .

"எப்படி பாத்தாலும் ஒன்னு ஒன்னேகால தாண்டிடும். ஏன்னா... கண்ணு பாருங்க ..."

முருகேசன் கேட்டால் நொந்து விடுவான் . சண்முகனுக்கு அழுகை வந்தது. கண்களில் நீர் கோர்த்துக் கிடப்பதை பார்த்ததும் சுப்பு மாமா ஆறுதலாக கையைப் பிடித்துக் கொண்டார் . 



"அழுவாத மாப்ள . எப்படியாவது பணத்த பொரட்டலாம் . "

" மாமா நைட் பண்ண ஆபரேசனுக்கு எவ்வளவு வரும்னாங்க ? "

" அறுவத நெருங்குமாம் மாப்ள ! பெட்டு வாடகையெல்லாம் சேர்த்து "

முருகேசனை நினைத்தால் பாவமாக இருந்தது சண்முகனுக்கு . அவனால் நிச்சயம் இவ்வளவு தொகையை எளிதாக புரட்ட முடியாது .

சுப்பு மாமனின் கைகளை பிடித்தான் " நீ தான் மாமா அண்ணனுக்கு இந்த மேட்டர் தெரியாம பாத்துக்கணும் . பெரிய டாக்டர பாத்து ஒரு வாரம் கழிச்சு பணம் ரெடி பண்ணிட்டு வந்து ஆபரேசன் பண்ணிக்கறோம்னு சொல்லி சீக்கிரம் டிஸ்சார்ஜ் பண்ணிக் குடுக்க சொல்லு . ஒரு கண்ணுலயே நான் பொழச்சுக்குவேன் " .

அவருக்கும் நிலமை புரிந்தது .

முருகேசனிடம் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னதாக சொல்லி அவனுக்கு நிம்மதியை தந்துவிட்டு சண்முகனை திரும்பி பார்த்தார் . கண்களை மூடி படுத்துக்கொண்டான் சண்முகன் . .

அலுவலகத்தில் மல்லுக்கட்ட வேண்டியதாக இருந்தது கண் ஆபரேசனை தள்ளிப் போடவும் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்ய வைக்கவும் . ஒரு வழியாக வெற்றியுடன் அறைக்கு திரும்பினார்

" வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க மாப்ள . நீ போய் ஒரு கார் புடிச்சுட்டு வா நான் பில்ல கட்டீட்டு வந்துடறேன் " என்று பில்லை நீட்டினார் .

முருகேசனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வேகமாக சென்று கேஷ் கவுண்டரில் பணத்தை கட்டிவிட்டு அறைக்கு திரும்பி வரவும் சண்முகனை அழைத்துக் கொண்டு முருகேசன் வெளியே வரவும் சரியாக இருந்தது .

இரண்டு மாதம் கடந்திருக்கும் சண்முகன் ரிசப்சனில் கண் டாக்டருக்கு அப்பாய்ன்மெண்ட் வாங்கிக் கொண்டிருந்தான் . அருகில் துணைக்கு சுப்பு மாமன் .

டோக்கன் நம்பர் ஏழு . . பனிரெண்டு மணிக்கு அழைக்கப்பட்டான் .

" உக்காருங்க உங்க பேரென்ன ?"

"சண்முகனுங்க "

" என்ன பிரச்சனை உங்களுக்கு "

" வலது கண்ணுல ஆபரேசன் பண்ணனுங்க "

" ஏன் ... என்ன ஆச்சு ? பார்வை சரியா தெரியலியா ?"

" அதெல்லாம் நல்லா தெரீதுங் "

" அப்புறமெதுக்கு தம்பி ஆபரேசன் ?"

" நீங்க நல்லா இருக்குற கண்ணுக்கு தான பண்ணுவீங்க .... அதான் பண்ணிட்டு போகலாம்னு எங்க மாமன கூப்புட்டு பஸ் ஏறி வந்தனுங்க "

டாக்டர் திடுக்கிட்டார் ! பழைய பைலை தூக்கி போட்டான் .

"படிச்சு பாரு ! அவனவன் நாலு மாசத்துக்கொரு தடவ குப்புற உழுந்துடறமேனு வெசனத்துல வந்து படுத்துக் கெடந்தா உனக்கு லச்ச ரூவா குடுத்து ரத்தங் கட்டுன கண்ணுல ஆபரேசன் வேற உங்கிட்ட பண்ணோனுமாக்கு ? நீ உம்மைய சொல்லு படிச்சுட்டு வந்தயா இல்ல கோட்டு வாடகைக்கு எடுத்துப் போட்டுட்டு வந்தயா வைத்தியம் பாக்க ? "

சரியாக ஐந்து நிமிடம் சண்முகன் தன் வித்தையை பிரயோகித்ததில் டாக்டர் அரை மயக்க நிலைக்கு போனார் . பைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவன் சுப்பு மாமனை நோக்கி ஒரு வெற்றி புன்னகையை வீசினான் . மாமனுக்கு அடுத்த சேரில் இருந்த எட்டாம் நம்பர் டோக்கனிடம் சென்று பாக்கெட்டில் கைவிட்டு சிறிய மருந்து டியூபை கொடுத்து " உனக்கு ஆபரேசன் எதாச்சும் பண்ணனும்னு சொன்னாங்னா வீட்டுக்கு போய் இந்த மாதிரி மருந்துக் கடையில நாலு வாங்கி கண்ணுல வுடு சரியா போகும் . இவன் டூப்ளிகேட் டாக்டரு " என்றுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான் .

எட்டாம் நம்பர் டோக்கனை அழைத்து அழைத்துப் பார்த்து விட்டு வராததால் டோக்கன் எண் ஒன்பதை அழைத்தார் டாக்டர் . ஒன்பதும் வரவில்லை .

அடுத்த நாளில் இருந்து ஏழாம் எண் நோயாளிகளை ஒருவித பீதியுடனே எதிர்கொள்கிறார் அந்த மருத்துவர் . . .

-ராசு 

#சிகரம் #சிறுகதை #பேஸ்புக் #SIGARAM #SIGARAMCO #SHORTSTORY #STORY #TAMIL

ராசு - சிறுகதை - பேஸ்புக் 

ஏழாம் நம்பர் டோக்கன் - சிறுகதை - சிகரம் 

No comments:

Post a Comment

Popular Posts