Sunday 18 February 2018

தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்பு நேர்காணல்

தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிகரம் இணையத்தளத்தின் சிறப்பு நேர்காணல்:

ஆண்டு விழா நாள் : 28.12.2017

நேர்காணல் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்களில் நடத்தப்பட்டது.

நேர்காணல் விதிமுறைகள் :

*கேள்விகள் பொதுவில் கேட்கப்படும்.
*சுருக்கமான அதேநேரம் பொருத்தமான பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
*கேள்விகளுக்கான பதில்களுக்கு மறுமொழி அளிப்பதோ விமர்சிப்பதோ கூடாது.
*அனைத்தும் தொகுக்கப்பட்டு சிகரத்தில் வெளியாகும்.
*தேவையான மேலதிக நிபந்தனைகள் பின்னர் இணைக்கப்படும்.



கேள்வி 01: 
தமிழ் கூறும் நல்லுலகம் குழு பற்றிய தங்கள் கருத்துக்களையும் குழுவில் இத்தனை நாட்கள் அங்கத்தவராக இருந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாரிராஜன் : அரட்டைதான் அதிகம் என்றாலும், அதிலும் ஒரு அர்த்தம் இருந்தது. கற்றுக்கொண்டது ஏராளம் என்று பொய்யுரைக்க விருப்பமில்லை. ஆனால் கிடைத்ததை தாராளமாய் பெற்றுக்கொண்டோம். வாசித்த மொழியை நேசிக்கத் தெரிந்தோம். பல வியப்புகளை உட்கொண்டோம். கவிஞர்களை அடையாளம் கண்டோம்.. இனிவரும் காலம் எங்களுக்கே. தமிழுக்கே!

பாலாஜி : வியக்க வைத்த பேரும் உண்டு! இங்கு அன்பால் மனதை விண்டு வைத்த பேரும் உண்டு! தமிழாய் பிறந்தோம் தமிழாய் வளர்ந்தோம் என்பதெல்லாம் சரி ! இங்கு அன்பால் இணைந்தோமே அதுவே நெறி!

கவின்மொழிவர்மன் : முகமறியாத உறவுகளாய் முகவுரைகள் கொடுத்து இனம் மொழி ஏதுமின்றி அனைத்தும் கடந்த அன்புள்ளங்கள் நாங்கள். செய்வன நன்றென்றால் தட்டிக்கொடுக்கும் சான்றோர்கள், உடன்பிறப்பாயினும் வஞ்சகிக்குமிவ்வுலகில் எங்களின் தமிழ்கூறும் நல்லுலகம் வஞ்சனை ஏதுமின்றி அனைவரையும் வாஞ்சையோடு வரவேற்கும் தமிழ்தாய் பிள்ளைகள் நாங்கள்.

திறமைகண்டு போற்றிடுவோம். மடமை கண்டு தூற்றிடாமல் இனிதென உரைத்து நேர்வழிப்படுத்திடும் பெரியோர் வாழும் உலகமிது. அவரவர் பாதையை அவர்க்களிப்போம். இங்கு அனைத்திலும் கூடி தமிழ் வளர்ப்போம்.

கலைவாணி : வாருங்கள் வரவேற்கிறோம் வாழ்த்துங்கள் வளர்கிறோம். இனிய நண்பகல் வேளையிலே குடும்பத்தின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு தந்தமைக்கு நன்றி. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. அந்த தமிழ்நாட்டினிலே தமிழுக்கு வலு சேர்க்கும் நண்பர்களுடன் தமிழ் கூறும் நல்லுலகத்தில் இணைந்த அந்த நாள் பொன் நாள். அன்பு உள்ளங்கள் கிடைத்தன. வேலை முடித்து வந்தவுடன் யென் விரல்கள் நோக்கிப்போவது வாட்ஸாப்பில் நமது குழுவை நோக்கித்தான். ஒரு சில நேரங்கள் தவறினாலும் மறக்காமல் மறுநாள் பார்க்கத்தூண்டும் உணர்வு. குறைந்த தினமாயினும் நிறைய கற்றுக்கொண்டேன். தமிழ் செயலியையே இங்குதான் கற்றுக்கொண்டேன். நிறைய தமிழ் வார்த்தைகள். ஆச்சரிய பட வைத்த கவிதைகள். சிகரம் நேர்காணல் படைப்புகள், பேட்டிகள். குடும்பத்தினரின் தமிழ் வாக்குவாதங்கள். முடிவில் ஒன்று சேரும் குழந்தை மனம், இன்னும் சொல்ல வரிகள் போதாது. மறக்க முடியுமா!

முத்துகிருஷ்ணன் : சொந்தங்கள் இல்லை எனினும் உள்ளத்தின் தமிழ் சந்தமாக சங்கமித்த பாச மலர்களுக்கு என் நேச வணக்கம். இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே பறந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையில் என் மனம் ஓய்வு பெற அமரும் கிளை தமிழ் கூறும் நல்லுலகம். தொடரட்டும் பயணம் இனிவரும் பயணம் அதிக ஓய்வு அருள்வாய் இறைவா!

சதீஷ் விவேகா : சிறப்பான ஒரு குழு. விடியலில் நுழைந்ததும் இருநுற்றி ஐம்பதில் இருக்கும் செய்திகள். திகைப்பேன். பார்த்தால் அரட்டைகளும் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். அனைத்தும் தமிழைப் பற்றியதாகத்தானிருக்கும். இதுவே பலம் இக்குழுவிற்கு. வாழ்த்துக்கும் ஆசிக்கும் பஞ்சமில்லை, உரிமையாய் கேட்டே பெறுவேன் இது என் குடும்பம் என்ற உணர்வுடன். இதுவே தமிழ் கூறும் நல்லுலகம்.


கேள்வி 2: 
ஒரு மொழியின் வளர்ச்சியில் தொழிநுட்பம் எத்தகைய பங்கை வகிக்கிறது?

கலைவாணி : ஒரு மொழியின் வளர்ச்சியில் தொழில் நுட்பம் அரிய பங்கை வகிக்கிறது. கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் கணிப்பொறிகளில் எழுதப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றே கூறுவேன். கல்லில் இருந்து ஓலைக்கு தாவி அங்கிருந்து காகிதங்களுக்கு தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்திருப்பது தமிழ் வளர்ச்சியின் அடுத்த நிலை என்றுதான் கூறவேண்டும். கற்றது கையளவு கல்லாதது உலகளவு. இதை மாற்றி இப்படி கூறலாமா கற்றது கடுகளவு கல்லாதது கையளவு. இணையத்தின் வழி கணினியால் தமிழரின் இணைப்பு இணைக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. வெறுங்கை என்பது மூடத்தனம். உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் தாரக மந்திரமாக அறிஞர்கள். திறமைசாலிகள் உழைப்பினை சிப்பிக்குள் முத்தாய் செயல்படுவது இந்த தொழில் நுட்பம் என்பது என் கருத்து.

முத்துகிருஷ்ணன் : இந்த எந்திர யுகத்தில் முன்னேற்றம் புதிய தகவல் தொழில் நுட்பங்களை தகவமைத்து கொள்வதை மிகவும் சார்ந்தது. இருளாக இருக்கும் ஒரு அறைக்குள் சென்று இருளாக இருக்கிறது என்று எவ்வளவுதான் கூக்குரல் இட்டாலும் இருள் நீங்காது. மாறாக ஒரு விளக்கை கொண்டு வாருங்கள் இருள் நீங்கும். விளக்கை போன்றது தான் தொழில் நுட்பம். அதே சமயம் வீட்டை எரிக்கும் அளவு நெருப்பு வேண்டாம்.

முனீஸ்வரன் : மொழியின் வளர்ச்சியில் தொழில்நுட்பம் எவ்வித பங்கும் ஆற்றவில்லை என்பது என் கருத்து. மாறாக மொழியின் வளர்ச்சியை தொழில்நுட்பங்கள் தனக்கான வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்கிறது.

சதீஷ் விவேகா : முக்கிய பங்குண்டு. நம் பண்டைய நூல்களை ஆவணப்படுத்தி அதை இன்றைய தலைமுறைக்கு சேர்ப்பதில் தொழில்நுட்பத்திற்கு முக்கியப் பங்குண்டு.

அருண் பாலசுப்பிரமணியன் : தொழில்நுட்பம் என்பது கணிணி யுகம் மட்டுமல்ல. பனையோலையில் எழுத எழுத்தாணி பயன்படுத்தியதும், அதை ஏடுகளில் அச்சிட்டதும் என தொழில்நுட்பத்தால் மொழி வளர்ச்சிக்கு பெரிய பயனுண்டு. அஃது போல, மொழியின்றி தொழில் நுட்பமும் வளர்ந்திருக்காது.


கேள்வி 3 :
மொழி சமூகத்தின் கண்ணாடி - இக்கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?

முனீஸ்வரன் : மொழி அதை சார்ந்த மக்களின் உயிர் நாடி. அது பிரதிபலிப்பதில்லை உள்ளிருந்து வெளிப்படுவது.

சதீஷ் விவேகா : சமூகத்தின் கண்ணாடி அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு தான்.

பாலாஜி : ஊடகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். சமூகத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்த உதவுவது மொழி!

கலைவாணி : கண்டிப்பாக மொழி என்பது சமூகத்தின் கண்ணாடி என்பதை திட்டவட்டமாக அறிவுறுத்த விழைகிறேன். நாம் ஒவ்வொருவரும் தொடர்பு கொள்ள மொழி மிகவும் அவசியம். தற்போது குழந்தைகளை எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கு எல்லா பாடங்களையும் புரிந்து கொள்வதற்கு மொழி அவசியமாகிறது. அறிவுத்துறையினை புரிந்து கொள்வதற்கும் மொழி மிகவும் அவசியம். மொழியின் துணைகொண்டு தான் குழந்தை சிந்திக்க முடிவெடுக்க செயல்பட முடிகிறது. நினைப்பது முடிவெடுப்பது செயல்படுவது ஆகிய அனைத்தையும் மொழியின் உதவியாலேயே குழந்தை செய்கிறது. சமூகத்தின் ஒரு அங்கமாக குழந்தை இருப்பதற்கு மொழிதான் முதன்மை இடம் வகிக்கிறது. கண்ணாடியாக திகழ்கிறது இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்தும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

முத்துகிருஷ்ணன் : அடுத்தது காட்டும் பளிங்கு போல் சமூகத்தின் நிதர்சனம் காட்டும் மொழி.



கேள்வி 04 :
தமிழ் மொழி நிகழ்காலத்தில் எவ்வாறான சவால்களைச் சந்தித்து வருகிறது? எதிர்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்நோக்கக் கூடும்? (விமர்சனம் தவிர்க்கப்பட வேண்டும்.)

முனீஸ்வரன் : நிகழ்காலத்தில் பேச யோசிக்கின்றனர். எதிர் காலத்தில் பேச பயப்படுவர்.

கலைவாணி : தமிழ் மொழி நிகழ் காலத்தில் நிறைய சவால்களை சந்தித்து வருகிறது. படித்து முடித்து வேலைக்கு சென்றால் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி ஆங்கிலம் தெரியுமா. ஹிந்தி தெரியுமா? ஆங்கில மோகத்தின் தாக்கத்தாலும் ஆங்கிலம் தேவை என்பதாலும் வலுக்கட்டாயமாக தமிழை வேண்டாம் என தவிர்க்கும் நிலைக்கு பெற்றோர்களும் மாணவர்களும் தள்ளப்படுகிறார்கள். தொழில் நுட்பத்தில் கூட பிறமொழி அவசியம் என்பதால் தமிழை விரும்புவோர் கூட காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி பிறமொழியை நோக்கி செல்வதால் தாய் மொழியாம் தமிழ்மொழியின் வரவேற்பு குறுகி கொண்டுதான் செல்கிறது. பணி காரணமாக இடமாற்றம் காரணமாக இந்நிலைக்கு தள்ளப்படுகிறோம். 

பொதுவாக தமிழர்களாகிய நாம் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய சவால்களை எல்லாம் சந்தர்ப்பமாக மாற்றுவோம். புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்மொழியின் அவசியத்தை பெற்றோர்கள் உணர்ந்து கண்டிப்பாக தமிழில் தான் உரையாட வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அடுத்தடுத்த தலைமுறையினரை தமிழ் சென்றடையும். எவனொருவன் சவால்களை சந்திக்க துணிகிறானோ அவனால் மட்டுமே சோதனைகளை தாண்டி வெற்றி நடைபோட முடியும். தமிழ் பேசும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கான ஓர் அமைப்பை உருவாக்குவர்களாயின் மிகவும் பயனுடையதாக அமையும். இல்லையெனில் நாம் மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சதீஷ் விவேகா : பெற்றோரின் ஆங்கில மோகத்தில் சிக்கித் தவிக்கிறது நிகழ்காலத்தில். தமிழையே மொழிப் பாடமாக எடுக்காத சூழலும் நிலவுகிறது. தமிழின் பெருமை மழுங்கடிக்கப்படுகிறது ஆங்கில வழிப்பள்ளியால், பெற்றோரால், இதை ஊக்கப்படுத்தும் அரசால். நாளை மொழியின் பெருமை இழந்த அநாதையாய் நிற்பார்கள். பெரும் தொன்மையான வரலாற்றை தொலைத்து விட்டு நிற்கும் அநாதையாய் நிற்பது போல மொழியையும் இழந்து நிற்போம் எதிர்காலத்தில்.

ஆனால் எனக்கொரு நம்பிக்கை உண்டு. அது என் தமிழ் கொடுத்தது. தமிழுடன் தோன்றிய மொழிகள் அனைத்தும் வழக்கொழிந்து விட்டது, ஆனால் தமிழ் தன்னைத் தானே புதுப்பித்து இன்று வரை நிற்கிறது. தமிழ் வீழாது... சாகாது... பாரதியின் வரிதான் ஞாபகம் வருகிறது சகோதரரே...


கேள்வி 05 :
புதுக்கவிதை குறித்த தங்கள் பார்வை என்ன? புதுக்கவிதை மரபுக்கவிதையின் வளர்ச்சியை தடைப்படுத்துவதாகக் கருதுகிறீர்களா?

சதீஷ் விவேகா : சொல்ல வரும் கருத்தை எளிதாய் அனைவருக்கும் சேர்ப்பிக்க புதுக்கவிதை எளிமையான வழி. ஆனால் கவிஞனாய் சிந்திக்கையில் இலக்கணத்தை மீறாமல் சொல்ல வரும் கருத்தை சொல்லும் போது அதன் அழகியல் தனி. அப்பொழுதே முழுமையான கவிஞனாய் உணர்வேன். புதுக்கவிதையால் மரபுக் கவிதைக்கு பாதிப்பில்லை. கவி எழுதும் ஆர்வமுள்ளவர்கள் முதலில் புதுக்கவிதையே எழுதுவார்கள். தமிழின் ருசி கண்ட பிறகு தானாய் தொன்மையைத் தான் தேடுவார்கள். மரபை நோக்கிய பயணம் தொடங்கும்...

முனீஸ்வரன் : புதுக்கவிதை என்பது வெண்ணீர் வைப்பது போல. மரபுக்கவிதை என்பது நளபாகம் சமைப்பது போல...

ஓர் அடியில் ஈரசை, மூவசைச் சீர் அமைவது அது பா, பாவினத்தைப் பொறுத்தது. ஈரசையே கொண்ட பா, பாவினம். மூவசையே கொண்ட பா, பாவினம் உண்டு. ஈரசையும் மூவசையும் விரவி வரும் பா, பாவினம் உண்டு. அடிகளில் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி இவ்வடிகளில் அமையும் பா, பாவினங்களைப் பொறுத்தே ஓரசைச் சீர் முதல் நாலசைச் சீர்கள் அமையும். மற்ற வகைப் பா, பாவினங்களில் ஈரசை, மூவசைச் சீர்கள் அமைவது அவ்வகைப் பாட்டின் வகை பொருத்தே அமையும்.

இப்படி பெரிய விதிமுறைகள் உண்டு. ஆதலால் மரபுக்கவிதை படைக்க நிறைய ஞானம் வேண்டும். அதான் வெண்ணீர் வைக்க மட்டுமே தெரிந்தவன் நான். புதுக்கவிதை பெருக பெருக மரபுக்கவிதைகளை மறந்து வருகிறோம்.

பாலாஜி : புதுக்கவிதை என்றாலும் அதற்கு ஒரு மரபு இருக்கிறதென்று கருதுபவன் நான்! எந்த விதமான கவிதையாயிருப்பினும் அதில் ஒரு அழுத்தம் வேண்டும். தெளிவின்றி அமையாது கவிதை! சொல்லவந்த செய்தியை 'நச்'சென்று இறுதிவரியிலாவது கொடுக்க வேண்டும். வரிகளில் மீள்பரிமாற்றம் கூடாது. இவையனைத்தும் பின்பற்றப்பட்டால் அக்கவிதை தரமானதாக இருக்கும். இத்தரத்தில் உள்ள கவிதைகள் பலர் எழுதவே செய்கிறார்கள் !

அடுத்து, புதுக்கவிதை மரபுக் கவிதையின் வளர்ச்சிக்குத் தடையா என்று கேட்டீர்கள்! இல்லை என்பேன் நான்! எழுதும் திறனுள்ளவர்களை எதுவும் தடை செய்யவியலாது. என்ன, புதிதாக எழுதத் தொடங்குபவர்கள் இலக்கணப்படி எழுத வேண்டிய தேவையில்லையே என்ற எண்ணத்தில் எழுத்தலங்காரம் செய்யப் புறப்படுவார்கள். கவிதையில் நாட்டமிருப்பவர் முதலில் எழுதத் தொடங்கிவிடுவார்கள்! இலக்கணம் அறிந்தவராயின் தாராளமாகத் தாம் எழுதியவற்றை இலக்கண வரம்புக்கு உட்படுத்த அவர்களுக்குத் தெரியும்!

கவிதை என்பதில் தெளிவு வேண்டும். மொழியின் இனிமை வேண்டும். பொருள் வேண்டும். வரிகளே இசைமயமாய் இருத்தல் வேண்டும். ஆழ்ந்த சிந்தனையின் அருமையான வெளிப்பாடாய் அது அமைதல் வேண்டும். எதுகை, மோனை இருப்பின் சிறப்பு! எதையும் எழுதி இதுதான் கவிதை எனச் சொல்லும் திமிறல் அதில் தெரிதல் கூடாது. வரிகளைப் படித்தால் வானம்போல் சிந்தனை விரிதல் வேண்டும்.

-இந்த நேர்காணலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 'தமிழ் கூறும் நல்லுலகம்' வாட்ஸப் குழுவுக்கு 'சிகரம்' இணையத்தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகள். இந்த முதலாம் ஆண்டு விழாவைப் போல் நூறாவது ஆண்டு விழாவையும் நமது இக்குழு கொண்டாட வேண்டும் என வாழ்த்துகிறோம். வாட்ஸப்பில் நமது 'தமிழ் கூறும் நல்லுலகம்' போன்ற எத்தனையோ குழுக்கள் இயங்கி வருகின்றன. அந்தக் குழுக்களில் எல்லாம் இது போன்ற ஆக்க பூர்வமான முயற்சிகள் எடுக்கப்படும் போது தமிழ் மொழி இன்னுமின்னும் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

'தமிழ் கூறும் நல்லுலகம்' வாட்ஸப் குழுவில் இணைய விரும்பும் நண்பர்கள் 'சிகரம்' இணையத்தளத்தை தொடர்பு கொண்டால் குழு நிர்வாகிகளிடம் உங்கள் கோரிக்கையை கொண்டு செல்லத் தயாராக உள்ளோம். அதே போல சிகரம் இணையத்தள பதிவுகளையும் இப்போது வாட்ஸப்பில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் உங்கள் படைப்புகளையும் வாட்ஸப் ஊடாகவே பகிர்ந்து கொள்ளவும் முடியும். மேலதிக விவரங்களுக்கு மின்னஞ்சல் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க தமிழ்!!!

நமக்காக தமிழ் - தமிழுக்காய் நாம்!

#063
2018.02.18
தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்பு நேர்காணல்     
https://www.sigaram.co/preview.php?n_id=290&code=B6oQs9P8  
பதிவு : தமிழ் கூறும் நல்லுலகம்
#சிகரம் #நேர்காணல் #வாட்ஸப் #வாட்ஸப்குழு #தமிழ்கூறும்நல்லுலகம் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #SIGARAMINTERVIEW #WHATSAPPINTERVIEW #THAMIZHKOORUMNALLULAGAM #WHATSAPP #WHATSAPPGROUP#சிகரம்  

No comments:

Post a Comment

Popular Posts