Tuesday 4 July 2017

திருவிழா

பல்லவி;-

முக்கண்ணன் அருளோட
முளைப்பயிறு
விதைச்சாச்சி!
மூங்கிக்கம்புல மாவிலையும் மல்லிகையும்
சேத்துவச்சி மஞ்சக்கொம்பு கட்டிவச்சி
முகூர்த்தக்காலு நட்டாச்சி!

அனுபல்லவி:-

பத்திரிக்கை அச்சடிச்சி
பக்குவமா காப்புகட்டி
சொந்தங்களை கூட்டிவச்சி
திருநாளும் தொடங்கிடுச்சி..!

சரணம் :-

கொட்டுவச்சி,மேளங்கொட்டி
கோவிலில பொங்கவச்சி
அம்மனுக்கு குலவையிட்டு ஆடு,கோழி
விருந்து வச்சோம்!

சேமம் அதிர-வலம்புரி
 சங்கு முழங்கி அலகுக்குத்தி
பக்தியோடு தீமிதிப்போம்!
நாங்க சொந்தம்கூடி
 தேரிழுப்போம்- தேரில்
எங்க நிலத்தில் விளைஞ்ச
வெள்ளாமையை தொங்கவிடுவோம்!



உடுக்கையடிச்சி பேயோட்டி குட்டிக்கடிச்சி
அதன் பச்சைஇரத்தம்
உணவுண்டு குலவிருத்தி பெருக்கிடுவோம்!
குலசாமியை வணங்கிடுவோம்!

அத்தைப்பொண்ணு
மாமன்பையன் ஆளசந்த நேரத்துல
சீண்டல்கள் செய்துக்கிடுமே!
திருவிழா சந்தையில
சோடி சேர்ந்து ஆடிக்கிடுமே!

ராட்டினமோ சுத்தையில
அத்தை மகள் பூவைக்க
அடுத்துவரும் சுற்றினிலே
மாமன்மகன் அதையெடுக்க
ஆட்டம்
இப்போ ஆரம்பிக்குது!
வயசு புள்ளைங்க
ஆசையோட ஆடி நிக்குது!

பம்பாய் மிட்டாய் கடியாரம்  கட்டி
பஞ்சுமிட்டாய் வாங்கிக்கிட்டு
வண்ண வண்ண நாடாக்களும்
கண்ணாடி வளையல்களும்
பலவிதமா ஒட்டும்பொட்டும்,

விதவிதமா பொம்மைகளும் வாங்கித்தந்தேன்
மாமன் பொண்ணுக்கு!
அவ சப்பித்தந்த குச்சி பனிப்பாகும் அமுதமெனக்கு!

மஞ்சத்தண்ணி திருநாளு!
மாமன்,மச்சான்
 சாக்கிரதையாய் வீட்டுக்குள்ளே
ஒண்டிக்கிடுங்கோ!
முறைப்பொண்ணு மஞ்சத்தண்ணீர்
ஊத்தவர்றா மறைவாக ஓடிவிடுங்கோ!

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!


No comments:

Post a Comment

Popular Posts