Wednesday 12 July 2017

இரண்டு நீலங்களை வென்ற இரு சிவப்பு கிரிக்கெட் அணிகள் !

உலக அளவில் பிரபலமான விளையாட்டு என்றால் அது கால்பந்துதான். கிரிக்கெட் விளையாட்டு அதிக ரசிகர்களை கொண்டிருப்பதைப் போல காட்சி தந்தாலும் ஒரு சில நாடுகள் மட்டுமே அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கின்றன.அதுபோலவே ஒருசில நாடுகள் மட்டுமே கிரிக்கெட்டில் ஆதிக்கமும் செலுத்தி வருகின்றன. மேலும் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ள அணிகள் அனைத்துக்கும் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள் சில அணிகள் கிரிக்கெட்டில் கோலோச்ச பேருதவியாக இருக்கும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க நாம் இவ்வார கிரிக்கெட் செய்திகள் குறித்துப் பார்க்கலாம்.
தரப்படுத்தலில் பின்னடைவையே சந்தித்து வந்த இரு அணிகள் இரு முன்னணி அணிகளுக்கெதிராக தமது வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இரு சிவப்பு அணிகள் இரு நீல அணிகளை துவம்சம் செய்துள்ளன. தற்போது சிம்பாப்வே எதிர் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் எதிர் இந்தியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவதாக சிம்பாப்வே எதிர் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் பற்றிப் பார்க்கலாம். 
இலங்கை அணி தற்போது பலவீனமான நிலையில் இருந்தாலும் சிம்பாப்வேயிடம் தொடரை இழக்குமளவுக்கா பலவீனமாக இருக்கும் என விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என கைப்பற்றியிருக்கிறது சிம்பாப்வே அணி. 16 வருடங்களுக்குப் பின் ஒரு தொடரைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த வெற்றி அவர்களுக்கு தரப்படுத்தல்களில் எந்தவொரு பாரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும் அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகுடத்தைச் சூட்டியிருக்கிறது. சிம்பாப்வே அணிக்கு இத்தொடரின் பின் இலங்கையுடன் இடம்பெறவுள்ள ஒற்றை டெஸ்ட் போட்டியைத் தவிர வேறு சர்வதேச போட்டிகள் எதுவும் 2017 இல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
மறுபக்கம் மேற்கிந்திய தீவுகள் எதிர் இந்தியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-1 என இந்தியாவிடம் இழந்தாலும் ஒற்றை 20-20 போட்டியை கைப்பற்றியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்படுத்தலில் பின்னிலையில் இருந்தாலும் அவ்வப்போது குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்தத் தொடர்களின் முடிவில் இலங்கைக்கு இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒற்றை 20-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வருகை தரவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி ஆகஸ்டில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒற்றை 20-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லவுள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts