Wednesday 5 July 2017

காதற் காமம்

மீசை முளைக்கா பருவத்தில்
ஆசை முளைத்தது
அரைக்கால் சட்டையில்
அரும்பியதே அக்காதல்

சிவந்த அழகியவள்
சீரான பல் வரிசையும்
மேலுதட்டின் மேல் மச்சமும்
மெருகேறி இருக்கும் உதடும்

கறுத்த கண்மணியும்
கலையான புருவமும்
காண்பவர் வியந்து
கண்கொட்டாமல் பார்க்கும் அழகும்

கண்டு விழுந்தேனே
காதலியாய் வடித்தேனே
பூரண அழகியை
பூரணமாய் ஏற்றனே



நொண்டி விளையாடி
நோக்கியே வருவாள்
கபடி விளையாடி
கரம் தழுவிச் செல்வாள்

முன் இருப்பவள்
பின் நோக்குவாள்
பார்த்து சிரிப்பாள்
பொசுங்கி விழுவேன்

தேறி நிற்பேன்
தேவதையைப் பார்த்தால்
தேய்பிறை போல்
துரும்பாய் இளைப்பேன்

யார் விட்ட சாபமோ
அவளை விட்டுப் பிரிந்தேன்
ஆறாத புண் அது
இன்றும் வலிக்கிறதே

நினைவிலே இருப்பாள்
நித்தமும் வருவாள்
நெகிழும் என் நெஞ்சிற்கு
மருந்தாகும் அவள் சிரிப்பு

வாடிய எந்தன்
வாட்டத்தைப் போக்க
மீண்டும் வந்தாள்
மீள்பதிவாய் என் வாழ்வில்


நான் பேசுவேனென அவளும்
அவள் பேசுவாளென நானும்
நகர்ந்த நிமிடங்கள் வருடமாகயிருந்தது
நானாய் பேசினேன்
நாணம் விட்டு

சுருங்கிச் சிரிக்கும்
சுந்தர விழிகள்
சுண்டி இழுக்குதே
சுகந்தம் போல் இருக்குதே

பேசிப்பேசித் தீராத வார்தைகளும்
பார்க்கச் சலிக்காத
பாவையுன் முகமும்
பறந்து விடுவாயோ என

பயந்தே சொன்னேன்
பாவை உன்னிடம் காதலை...
உணர்ந்தேன் உன்னிடமும்
அதே காதலை
ஏமாற்றாமல் ஏற்றாய் என்னை...

ஊர்கூடிக் கல்யாணம்
உற்றாரும் உறவினரும் வாழ்த்த
அரங்கேறியதே ஆனந்தக்கோலம்..

கூரிய புருவம்
குத்திக் கிழிக்க
இதழ் சேரும் முன்
இமை சேர்ந்தது

உச்சி முகர்ந்தேன்
உடல் ஆசை தொடங்கியது
காதோடு நான் பேசும்
ரகசிய மொழிகளை
களவாடத் துடிக்கும்
காதின் சிமிக்கியையும்

கரம் கோர்க்கா
கடிவாளம் போடும்
கை வளையல்களையும்

உடல் பேசும்
மௌன மொழியை
உலகிற்கு உணர்த்தத்
துடிக்கும் காலின் கொலுசையும்

இரு உயிர்
இணைய இடைஞ்சலாய்
இருக்கும் அனைத்தையும்
களைந்திடுவோம்

உயிரும் உடலும்
ஒரு சேரயிணையட்டும்
எழுத்தால் வடிக்க முடியாத
எண்ணற்ற செய்கைகளை

காலத்தில் மறவாத
காதலின் உயிர்ப்புகளை
சேர்ந்தே பருகுவோம்
புரிந்தே புணர்வோம்
காதற் காமத்தை
சேர்ந்தே பெறுவோம்!


இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்.


No comments:

Post a Comment

Popular Posts