Wednesday 26 April 2017

வீதியோரம் வீழ்ந்த மலர் !

ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !

ஒரு
'பாதையோர மலராக',
பார்ப்பவர்  கண்ணுக்கு
முள்ளாக,
எந்த நேரமும்
பறந்து செல்லக்
காத்திருக்கும்
பதராக.......
ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !

ராகமில்லாத
இந்த வரிகள்
எந்த ரகம்?
என்ன பயன்?

மீட்டும் விரலின்றி
வாடுமொரு
வீணையின்
தந்தியாய்,
வியக்கும் கண்களின்றி
ஏங்கும் ஒரு
விசித்திரச் சிற்பமாய்,
விழலில்பாய்கின்ற

வெள்ளத் துளிகளாய்,
வேனலின் வெக்கையாய்,
கானற்பாலையில்
கனலும் முட்களாய்,
கண்களின் ஓரத்தில் காய்ந்த
கண்ணீர்த் துளிகளாய்,
என்றும் எவருக்கும்
ஏற்காத பாரமாய்,
கனியாத எட்டியாய்,
விரியாத மொட்டாய்,
விடியாத இரவாய்,
வேண்டாத வாழ்வாய்,
பணியாத வீம்பாய்,
பாழ்மனத் தீயினில்
வெந்திடும் நாளமாய் ....

விடியலைக் கனவினில்
கண்டதோர் குளுமையில்,
வேதனை மரத்த
மனத்துடன்
இன்னும்....

ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !!
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !


--கே. பாலாஜி
  21.11.2016
இரவு 8 மணி

இக்கவிதை கவிஞர் பாலாஜி அவர்களின் படைப்பாகும்!

No comments:

Post a Comment

Popular Posts