Wednesday 10 January 2018

கனவெல்லாம் கொல்லுறியே!

கண்டதும் காதலில்லை,
கன்னல்மொழி கேட்டதில்லை,
நெஞ்சிலே உன் நினைவு,
நெருஞ்சியாய் குத்துதடி!

கொஞ்சியே நானுமுந்தன்
குழந்தையாய் மாறிடவா,
வஞ்சியே நீயுமென்னை
வாஞ்சையாய் அணைத்திடு வா!




எப்போதும் உன் நினைப்பு 
நெஞ்சுக்குள்ள குளிருதடி!
எங்கெங்கோ தொலைகின்றேன் 
அள்ளிக்கொள்ள வந்திடடி!

கண்ணுக்குள்ள நீயிருந்து 
கண்மணியாய் விழிக்குறியே!
கருக்கலிலே நீநுழைந்து 
கவிதையென பிறக்குறியே!

இதயத்திலே நீயிறங்கி 
இயந்திரமாய் ஓடுறியே!
தடையில்லா மின்விளக்காய்
பளபளன்னு ஜொலிக்குறியே!

செந்தமிழே அஞ்சுகமே 
கொஞ்சிடவே வந்திடவா,
செஞ்சாந்துப் பொட்டெடுத்து 
நெற்றியிலே வச்சிடவா!

குட்டிக்குட்டி நிலவெடுத்து 
உனைப்படைச்ச தாரடி,
குறுநகையில் மின்னல்வந்து 
சிலிர்த்துவிட்டேன் பாரடி!

மண்ணுக்குள்ளே விதைபோல 
முட்டியென்னுள் முளைக்கின்றாயே,
கல்லுக்குள்ளே சிலைபோலே 
உளியெடுத்து செதுக்குறியே!

கல்லுக்குள்ளே தேரையென 
நெஞ்சுக்குள்ளே நீயிருக்க,
கந்துவட்டி போலயென்னை 
கனவெல்லாம் கொல்லுறியே!

-கவின்மொழிவர்மன் 

கனவெல்லாம் கொல்லுறியே! - சிகரம் 

No comments:

Post a Comment

Popular Posts