Friday 19 January 2018

கவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை!

அதிகாரம் 50
இடன் அறிதல் 

****

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்   
நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496)

*****

இடம்மாறின் பயனில்லை !

****

சக்கரம்
தரையில் ஓடும்
தண்ணீரில்
ஓடா தன்றோ
அக்கரை
சேர வேண்டின்
கப்பலில்
போக வேண்டும்




கப்பலைக்
கொண்டு வந்து
கரையினில்
வைத்துக் கொண்டு
பயணத்தை
முடிவு செய்தால்
பலர்நம்மை
நகைக்கக் கூடும்

தகுந்தவோர்
இட மறிந்து
தடுமாறா
அறிவி னோடு
பயணத்தைத்
தொடர்ந்தோ மானால்
நினைத்தஊர்
செல்லக் கூடும்

எதனையும்
சிந்திக் காது
ஏறுக்கு
மாறாய் ஒன்றைச்
செய்திடத்
துணிந்தோ மானால்
கைப்பொருள்
இழக்க நேரும்

அனைத்திலும்
மேன்மை யான
அறிவினைப்
பயன் படுத்தி
வகையாக
வகுத்தோ மானால்
வாழ்வது
வெற்றி யாகும் !

*****

கால்வல்--வலிமையான கால்களை உடைய.

நாவாய்--மரக்கலம் , படகு 

*****

மானம்பாடி புண்ணியமூர்த்தி .
17. 01 . 2018 .

இடம்மாறின் பயனில்லை - சிகரம் 

No comments:

Post a Comment

Popular Posts