Sunday 26 November 2017

தமிழின் சுவை!

நாம் காய் கறிகளின் பக்கம் போய் வரலாமே! சேட்டைக்காரப் புலவர்களுக்கும் வேட்டைக்காடாகத் திகழ்வது நம் செந்தமிழே. புலவர்களின் நையாண்டி, கேலி, பொருள் நிறை வார்த்தை நயங்களை அனுபவிக்க நாம் தனிப் பாடல்களின் பக்கம் போய் வரலாம். இங்கு ஒரு பாடலை அனுபவிப்போம். (வழக்கம்போல இதை இயற்றியவர் பெயர் தெரியவில்லை!).
"கரிக்காய் பொறித்தாள் கன்னிக்காயை தீய்த்தாள்
பரிக்காயை பச்சடி பண்ணினாள் - உருக்கம் உள்ள
அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தை
மகள் உப்புக்காண் சீச்சீ உமி."

கரி என்றால் யானை; யானைக்கு இன்னொரு பெயர் 'அத்தி'. எனவே அத்திக்காய் பொறியல் செய்தாள். கன்னி என்பதற்கு இன்னொரு வார்த்தை 'பாவை'; தீய்த்தாள் என்றால் வறுத்தாள். அதாவது பாவைக்காய் வறுவல் செய்தாள். பரி என்றால் குதிரை; அதற்கு இன்னொரு பெயர் 'மா'. எனவே மாங்காயைப் பச்சடி செய்தாள். அப்பை என்றால் கொடிவகை, 'அப்பைக்காய் என்றால் படர்கொடியில் காய்க்கும் அவரை. அவரைக்காயை நெய் துவட்டலாக சமைத்திருந்தாள்.(சிலர் அப்பைக்காய் எனில் கத்தரிக்காய் என்று பொருள் கொள்வர்.) அத்தை மகள் இத்தனை விதமாய் சமைத்தாலும் எல்லாவற்றிலும் உப்பு அதிகம் கரித்ததால் உமிழ்ந்துவிட்டேன்.
 
 
 
இப்போது 'கொசுறுச் செய்தி'க்கு வருவோம். கண்ணதாசனுக்கு இப்பாடல் மிகப்பிடித்துப்போய் கற்பனைத் தேர் ஏறிப்பறக்கிறார். தனிப்பாடல் புலவர் 4 காய்களைத்தான் சொன்னார். ஆனால் நம் கவியரசு 29 காய்களைச் சொல்லிப் பாடுகிறார்.
"அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ...."

தமிழும், தமிழர்களும் உள்ளவரை வாழ உள்ள பாடல். கவியரசின் மணிமகுடத்தின் 'வைரம்'!
 
- இப்பதிவு காளிதாசன் அவர்களால் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பதிவு ஆகும் - 
 
 

No comments:

Post a Comment

Popular Posts