Tuesday 28 November 2017

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01

வணக்கம் நண்பர்களே!

இந்தப்பதிவு என் நீண்ட நெடுநாள் ஆசை. இதனைப்பற்றி விரிவாக, தெளிவாக, அழகாக பேசவேண்டும் என்பது என் விருப்பம். இனிவரும் நாட்களில் இந்தத் தலைப்பில் நான் தரும் பதிவுகள் அனைத்திற்கும் நண்பர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விவாதங்களையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன். விவாதமற்ற பதிவு கிணற்றில் இட்ட கல் என்பது என் கருத்து. இவ்வளவு பீடிகையுடன் துவங்குகிறது என்னவாக இருக்கும்? இதுவரை படிப்பவர்களின் மனதில் இந்த வினா எழுந்திருக்கும். இனியும் தாமதிப்பது தவறு என்பதால் கூறிவிடுகிறேன்.



நான் பெரிதும் விரும்பும், இன்று என்னை நானே புடம்பார்க்க செய்யும், ஒவ்வொரு நாளும் எனக்கு புதியதாய் ஒன்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும், அமுதினும் இனிய, என்றும் இளமை மாறா, தினம் தினம் புதுப்பொலிவுடன் வளர்ந்து கொண்டிருக்கும் எம் மொழியாம் “தமிழ்மொழி” பற்றிய பதிவு தான் இனிவரும் நாட்களில் நான் தொடரவிருக்கிறேன்.

இவ்வளவு சிறப்பாக பேச, தினமும் ஓய்வின்றி பேச அப்படி என்ன இருக்கப்போகிறது தமிழ்மொழியில்? தமிழக எல்லையை தாண்டினால் மதிப்பற்ற ஓர் மொழி இது. நுனிநாக்கு ஆங்கிலம் உலகம் முழுவதும் சுற்றி வர உபயோகப்படுகிறது. வடநாட்டு ஹிந்தி தெரிந்து இருந்தால் மத்திய அரசாங்கத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலையையும், இந்தியாவில் எங்கு சென்றாலும் தடையின்றி அனைவருடனும் பேச தொடர்புகொள்ள ஏற்ற மொழி.

இப்படிப்பட்ட எந்த சிறப்புமற்ற, பயனுமற்ற தமிழ்மொழியைப் பற்றி பேச என்ன இருக்கிறது? என எண்ணம் கொண்ட நண்பர்கள் நிச்சயம் இப்பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

“நான் ஏன் இம்மொழியை பெரிதும் விரும்பிகிறேன்?” என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்ட கேள்வி இது. நான் படித்தது தமிழ்வழி கல்வி. பள்ளிநாட்களில் என்னுடன் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியை பிழையுடன் எழுதுவார்கள். நான் பெரும்பாலும் பிழையுடன் எழுதமாட்டேன். அந்நாட்களில் எனக்கு ஒரு கர்வம் எனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்று!   (என் அறியா வயதின் மாபெரும் சாதனை இது) அதன் பின், மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே சித்திர கதைகள், சிறுகதைகள் இவற்றை எல்லாம் படிப்பேன். பெரும்பாலும் இவை அனைத்தும் தேவதைக் கதைகள், மாயவிநோத கதைகள். இவற்றைப் படிக்கும் போது என் மனதில் கற்பனை உருவங்கள் தோன்றி என் அகக்கண்ணில் அக்கதையை கண்டு இரசிப்பேன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அப்பாவுடன் நூலகம் சென்று எனக்கென தனியாக பயனர் அட்டை பெற்றுக்கொண்டேன். மாதத்தில் இருமுறை நூலகத்தில் பாதிநாளாவது செலவழிப்பேன். மறக்கமுடியா தருணம் அது!!!

தமிழ்வழிக்கல்வி என்பதால் பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களை படித்ததில்லை.. (எட்டாம் வகுப்பிற்கு பிறகு) பாடத்தில் இருக்கும் non detailed கதைகளைப் படித்தபின் ஆங்கில புத்தகங்களையும் தேடிப்படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டேன். என்னதான் ஆங்கில புத்தகங்களைப் படித்தாலும் தமிழ்மொழியில் கூறப்பட்டிருக்கும் கதைகள், கற்பனைகள் ஏற்படுத்திய தாக்கத்தை எனக்கு ஆங்கிலம் தரவில்லை. சரி, என் சுயபுராணத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
  
தமிழ்மொழி என்றாலே இலக்கணமும் இலக்கியமும் தான், நம் மனதில் நிழலாடும். இன்றும் பலருக்கு இலக்கணம் என்றால் கடினத்திலும் கடினம். ஏன் இத்தகைய எண்ணம்? இலக்கியம் என்றால் அது ஒரு ஆழ்கடல். அதில் உள்ள தொகுதிகள் அதிகம். திருக்குறள், வாழ்த்துப்பாடல், மூதுரை, அவ்வையார் இவற்றை தெரிந்து வைத்திருப்பதே பெரும்பாடு என்ற எண்ணம் இத்தலைமுறை பிள்ளைகளுக்கு. இதனை மாற்றலாம், இந்த எண்ணத்தை மாற்றி இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் சுவையை ஊட்டினால், மொழிமீதான காதல் ஊற்று பெருக்கெடுக்கும். அதனால் என்ன பயன்? என நினைப்பவர்களுக்கு இப்பதிவின் மூன்றாம் பத்தியில் நான் கூறியுள்ள ஆதங்கம் மாற வாய்ப்புள்ளது. என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். முடிந்தவரை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிவரும் நாட்களில் இலக்கியம், இலக்கணம் என்று பேசுவோம்... நன்றி நண்பர்களே!!!

இப்பதிவு பதிவர் பௌசியா இக்பால் அவர்களின் படைப்பாகும்.

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01 - பௌசியா இக்பால் - சிகரம் 

#சங்கஇலக்கியம் #இலக்கியம் #ஆய்வுக்கட்டுரை

No comments:

Post a Comment

Popular Posts