Saturday 4 November 2017

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள கல்விசார் இருக்கை ஆகும். தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்படவிருக்கும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான நன்கொடைகள் மூலம் அமைக்கப்படவுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் வாழும் சில தனிப்பட்ட தமிழ் ஆர்வலர்களின் எண்ணத்தில் உருவான இது, ஹார்வார்டு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இடம்பெற்ற தொடர் சந்திப்புக்களின் விளைவாகச் சாத்தியமானது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கலைகளுக்கும் மானிட அறிவியலுக்குமான துறையின் கீழ் இயங்கும் தென்னாசியக் கற்கைகள் பிரிவின் கீழ் இந்த இருக்கை அமைக்கப்பட உள்ளது.

வரலாறு

அவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் வைதேகியும், அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவ நிபுணரான விஜய் ஜானகிராமனும்பேசிக்கொண்டபோது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் எண்ணம் உருவானது. தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்கான அழைப்புக் கிடைத்தது. ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.[1] இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாகத் தமிழுக்கு ஒரு இருக்கையை நிறுவுவதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகம் முன்வந்தது. இதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறக்கொடையாகக் கொடுக்கப்படவேண்டும்.

நிதி திரட்டல்

ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் தனித்தனியே 500,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மிகுதி 5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இலாப நோக்கற்ற நிறுவனம் (Tamil Chair Inc) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.[2] மருத்துவர் விஜய் ஜானகிராமன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம், திருமதி வைதேகி ஹெர்பெர்ட், திரு பால் பாண்டியன், திரு அப்பாதுரை முத்துலிங்கம், முனைவர் சொர்ணம் சங்கர், திரு குமார் குமரப்பன், முனைவர் ஆறுமுகம் முருகன் ஆகியோர் ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள்.[3]
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த முயற்சியை ஆதரித்துப் பேசியுள்ளனர். தமிழக அரசு இதற்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.[4] தவிர நடிகர்கள், பல்வேறு உயர் பதவிகளில் உள்ளோரும்[5] இப்பணிக்கு நிதியுதவி வழங்கும்படி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2017 அக்டோபர் 21 அன்று கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஏ. ஆர். ரகுமான். அவர் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ், ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார். கிஷான் நித்தி, ரஹ்மான், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் 25,000 டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) காசோலையை வழங்கினர்.[6] ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிக்காக ரூ.10 கோடி வழங்க தமிழக அரசு 2017 அக்டோபர் மாத இறுதியில் உத்தரவிட்டது.[7]

தேவையும் முக்கியத்துவமும்

தமிழ் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மொழிகளுள் ஒன்று. ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குகிறது. அண்மையில் ஒரு செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களுள் அடங்கும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியதும், அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சீர்செய்யப்படலாம். இந்த அடிப்படையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 379 ஆண்டுகள் (2015) பழமையான இது ஐக்கிய அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம். நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கி வழங்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்துக்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும், அங்கீகாரமும் உள்ளன. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று இருப்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழாய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.

தற்போதைய நிலையும் வாய்ப்புக்களும்

ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தெற்காசியவியல் பிரிவின்கீழ் இப்போதும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தொடக்கத் தமிழ், இடைநிலைத் தமிழ், உயர்நிலைத் தமிழ் என மூன்று நிலைகளில் தமிழ்ப் பாடநெறிகள் உள்ளன.[8] ஜொனதன் ரிப்ளே என்பவர் சுமார் 20 மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து வருகிறார். ஆனாலும், இங்கே தமிழுக்கெனத் தனியான ஒரு பேராசிரியரின் கீழ் இயங்கும் கல்விசார் இருக்கை கிடையாது. இதனால், ஹார்வார்டில் தமிழாய்வு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய இருக்கை உருவாக்கப்படும்போது, தெற்காசியவியல் பிரிவின்கீழ் தமிழுக்கெனத் தனியான பிரிவு ஒன்றை உருவாக்கவும், அதற்கெனப் பேராசிரியர் ஒருவரை நியமிக்கவும் முடியும். இதன்மூலம், ஹார்வார்டில் தமிழ்க் கல்வியையும், தமிழ் ஆய்வையும் புதிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.


மேற்கோள்கள் மற்றும் வெளியிணைப்புக்களுக்கு : ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா

No comments:

Post a Comment

Popular Posts