Tuesday 18 April 2017

கல்விச் சாலை !

பால்வெள்ளி நிலா வீசும்
பகட்டுத்தா ரகைகள் மின்னும் 
பலவண்ண நிறங்கள் காட்டும்
வான மேயென் கல்விச் சாலை !
வான மேயென் கல்விச் சாலை !
வாழ்வினைப் பயக்கும் சோலை !

நேற்றைக்கு அழுமாற் போலே
அமுதத்தைப் பொழிந்த வானம்
இன்றைக்குத் தெளிவாய் நின்று
சிரிக்கின்ற தென்னே யென்றேன்!

எல்லையற்ற தன்மை கண்டென்
எண்ணமும் விரியக் கண்டேன்
சிந்தனை, வானம் போலே
விரிந்தாலே விடியும் என்றேன் !

எழிலார்ந்த காவும் கண்டேன்
எத்தனையோ மலர்கள் கண்டேன்
முன்னின்ற மலரின் செடியில்
முள்ளொன்றும்  இருக்கக் கண்டேன்

இன்பங்கள் என்றும் உண்டு
இடையிடையே துன்பம் உண்டு
என்பதை உணர்த்தும் பாங்கில்
முள்ளதுவும் சிரிக்கக் கண்டேன்

வண்ணத்துப் பூச்சி பூவைச்
சுற்றிவந்தமரக்   கண்டேன்
சுவையான தேனை யதுவும்
சுவைத்துண்ணும் பாங்கு கண்டேன்

புவிவாழ்வு சிறிதென் றாலும்
பூவினில் தேனைப் போலே
நிறைந்திடும் இனிமை உண்டு
நீயதை உணரல் வேண்டும்

என்றெனக் குணர்த்தும் வண்டு
எண்ணத்தில் அமர்ந்து கொண்டு
ஏழிசை கீதம் ஒன்று
தன்னுள்ளே பாடிக் கொண்டு !

இதுநாளும் தேடித் திரிந்த
குருவைநான் கண்டுகொண் டேன்
காண்கின்ற பொருள்க ளெல்லாம்
குருவேயென் றுணர்ந்து கொண்டேன்

'எப்பொருள் யார்யார் வாய்க்
கேட்பினும் அப்பொருள் தன்னில்'
உறைகின்ற உண்மை தன்னை
உணர்த்துமோர் குருவைக் கண்டேன் !

--கி.பாலாஜி

# இது முகநூலில் 2012 இல் ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். பழங்காலத்திய  பள்ளிப் பாடப் புத்தகத்தின் நகல்.  எழுதியவர் பெயர் அதில் இல்லை. நான் தமிழில் சிலநாட்கள் கழித்து எழுதினேன்.  மூலத்தின் கருத்துக்கள் அப்படியே உள்ளது. சற்றே விரிவுபடுத்தியும் சொல்லியுள்ளேன். மலையாளத்தில் தலைப்புக்குப் பொருள் 'எனது கல்விச்சாலை'      (என்டெ வித்யாலயம்)

1 comment:

  1. வெளியிட்டதற்கு அ மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

Popular Posts