Wednesday, 28 March 2018

வாழ்தலின் பொருட்டு - 04





இன்று போலவேதான் அன்றைக்கும் 
என்னை முழுதாய் நனைத்தாய்...!
உதடுவழி உயிர் நீர் தந்து 
உயிர்ப்பித்தாய் என் பெண்மையை!

கொஞ்சம் தடுமாறுகையில் கரங்களை வலுவூட்டி தாவி எனை அணைத்தாய்! மலை மீது நின்ற படி உரசிய காற்றையும் உன்னையும் எனக்குள் அனுமதித்தபோது நான் ஈன்றிருந்தேன் உன்னால் கருவுற்று பல கவிக்குழந்தைகளை!

திகட்டத் திகட்ட நீ பொழிந்த தேகமுத்தத்தில் முழுதும் நனைந்தபின் குளிரத் தொடங்கியிருந்தது! உருகிக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சட்டென கரம் உதறி விலகிப் போய்விடுவாய்!

எனது மொத்தக் காதலையும் தொப்பலாய் நனைத்து பிழிந்தெடுத்தபின்னும் நீ மிச்சம் வைத்துப் போவதுதான் தீரா நோயாகிறது!

மறுநாளே காய்ச்சலில் விழும் எனக்கு கடும் எதிர்ப்பு வரும் உன்னை சந்திக்காதேயென...! மாட்டேன் எனச் சொல்வதெல்லாம் நீ மீண்டும் எப்போது வருவாய் என்பதை அறிந்திராததால் தான் ...!

நீ வந்தால் போதும் வந்துவிடுவேன் உன்னுள் நனைந்து என்னை உயிர்பித்துக் கொள்ள உயிர் மாமழையே!

உடனே வா தேநீரோடு காத்திருக்கிறேன்!

முடிந்து போன ஒரு நாள் என்பது
எதுவெனச் சொல்ல இயலாது...
ஏதோ ஒன்றின் துவக்கமாகலாம்,
ஏதோ ஒன்றின் முடிவுமாகலாம்...!

காலச்சக்கரத்தை
நொடிநொடியாய் தகர்த்து
புறவாசல் விரட்டியடித்து
மூச்சை இழுத்துவிடுகையில்,

அசதியில் தூக்கம் வர
கண்விழித்தால் மீண்டும் 
வாசல்படியோரம் கையசைத்து
வந்து நிற்கும் அடுத்தொரு நாளும்...!

சிறகுவெட்டப்பட்ட எனக்கு 
பரிசளிக்கப்பட்ட நந்தவனம்
நான்கு சுவர்களுக்குள்
மணத்துக் கிடக்கிறது...

அசைவற்றுக் காத்திருக்கையில் அதிசயத்தின் ஓர் நாளாகவும்... அவஸ்தைகளில் தவித்திருக்கையில் நகராத நாளாகவும் தன்னைத் தின்னக் கொடுக்கும் என் நாளே...!

சுழலும் உன் சக்கரம் நிறுத்தி என் சுவருக்குள் வந்தமர்ந்து போ... கால்களற்ற என் கடிகாரத்தை சற்று மட்டும் பின்னோக்கி வைக்கிறேன்...

என் பிரியமான நாளே,
நீ அருந்தத் தேநீர் தயாரிக்கிறேன் கசந்துபோன
உன் கணங்களைத் தித்திப்பாக்க கடிந்து கொள்ளாமல்
அருந்திப் போ, என்னோடமர்ந்து இன்றைக்கும் ஓரு கோப்பை தேநீர்...!

வாழ்தலின் பொருட்டு - 04 - 01

வாழ்தலின் பொருட்டு - 04 - 02

#083/2018/SigaramCO
2018/03/28
வாழ்தலின் பொருட்டு - 04   
https://www.sigaram.co/preview.php?n_id=309&code=JQpHy2s4  
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்
 
#083/2018/SigarmbharathiLK
2018/03/28
வாழ்தலின் பொருட்டு - 04   
https://newsigaram.blogspot.com/2018/03/VAAZHDHALIN-PORUTTU-04.html   
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்
 

No comments:

Post a Comment

Popular Posts