Monday 5 March 2018

கவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்!

அதிகாரம் 61
மடி இன்மை 

***

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து 
மாண்ட உஞற்றி லவர் (குறள் 607)

*****

இழிவும் பழியும்!

*****

எதற்காகப்
பிறந்தோ மென்ற
எண்ணமே
சிறிது மின்றி
வாழ்கையில்
பிடிப்பு மின்றி
வாழ்கின்ற
மனித ரெல்லாம்,

திட்டங்கள்
ஏது மின்றித்
திறமைகள்
சிறிது மின்றி
சோம்பியே
கிடந்து நித்தம்
சோற்றுக்காய்
வாழு வோர்கள்,



இனம்மொழி
உணர்வு மின்றி
அறிவதில்
விருப்ப மின்றி
உயிரிலாப்
பிணம்போ லிங்கு
உலவியே
வருகின் றோர்கள்,

இடித்துமே
பலரும் பேச
இகழ்ந்துமே
காரித் துப்ப
நேர்ந்திடும்
சிறுமை யென்று
நெற்றியில்
அடித்துச் சொன்னான்,

தாம்பெற்ற
பிள்ளை யிங்கே
தாழ்ந்திடல்
ஆகா தென்று
தன்நெஞ்சில்
நினைத்த தாலே
தந்தைநூல்
எழுதி வைத்தான்! 

****

இடிபுரிந்து - மற்றவர்களுடைய கடுஞ்சொல்லைக் கேட்க நேர்ந்து.

எள்ளும்சொல் - மதிப்பிழக்கவைக்கும் சொற்கள்.

மடிபுரிந்து - சோம்பலைத்தன் சொத்தாகக்கொண்டு.

உஞற்றுஇலர் - முன்னேற வேண்டுமென்ற முயற்சி இல்லாதவர்கள்.

***

மானம்பாடி புண்ணியமூர்த்தி 
12.02.2018

எனதருமை செல்வங்களே...
மனிதப்பிறப்பு மகத்தானது, மண்ணில் தோன்றிய பிறஉயிர்கள் அனைத்திற்கும் மேலானது, இதை உணராது விலங்குகளைவிட கீழாக சிலர் வாழ்கின்றார்களே!
நாமென்ன அப்படியா? இல்லவே இல்லை!
சாதிப்போம் சரித்திரம் படைப்போம், முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை!
வெற்றிநமதே!
என்றும் உங்களுக்காக...
மானம்பாடி புண்ணியமூர்த்தி

#075/2018
05/03/2018
கவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்!
https://www.sigaram.co/preview.php?n_id=301&code=0bspcMYn
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்

No comments:

Post a Comment

Popular Posts