Sunday 17 December 2017

வென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு !

அனைவருக்கும் வணக்கம்!

மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & 2 வரும் புத்தகக் கண்காட்சி அன்று வானதி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது பாகம் விரைவில் வெளியாகும்.

பொது யுகத்திற்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற போர்களில் தலைச்சிறந்த போராக அனைவராலும் கருதப்படுவது பாரசீகர்களின் யவனப் படையெடுப்பு. பாரசீக மன்னன் டேரியஸ் யவனத்தை நோக்கிப் படையெடுத்த வேளையில் அவனைத் தடுத்து நிறுத்தியவர்கள் ஸ்பார்டா அரசன் லியானிடஸ் மற்றும் எத்தினீய படைத் தலைவன் டெமிஸ்டேக்ளிஸ். வரலாறு போற்றும் மாவீரர்கள் இவர்கள்.




பாரசீகர்கள் யவனத்தை நோக்கி நிகழ்த்திய போரை விடவும் பெரும் போர் மோரியரின் தமிழகப் படையெடுப்பு. ஸ்பார்டா அரசன் லியானிடஸ் மற்றும் எத்தினீய படைத் தலைவன் டெமிஸ்டேக்ளிஸ் ஆகியோரை விடவும் மாபெரும் வீரர்கள் சோழ அரசன் இளஞ்சேட் சென்னி மற்றும் துளு நாட்டு மன்னன் கொங்கணக் கிழான் நன்னன். இருவரது வீரமும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. சென்னியின் வீரத்தினால் நன்னனின் புகழ் மங்கியது. சென்னியின் புதல்வன் கரிகாற் பெருவளத்தானின் புகழினால் சென்னியின் வீரம் வரலாற்றிலிருந்து மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

அசோகவர்த்தனின் மோரியப் பேரரசு மேற்கில் பாரசீகம் முதல் கிழக்கே காமரூபம் வரையும்; வடக்கே இமயம் முதல் தெற்கே கரும்பெண்ணை நதி வரையிலும் பரவியிருந்தது. கலிங்கப் போரை முடித்த அசோகவர்த்தன் போர் புரிவதையே நிறுத்திவிட்டான் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், கலிங்கப் போர் நடைபெற்ற ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே அசோகவர்த்தன் தனது ‘தம்மா’ எனும் பௌத்த மதக் கொள்கையைக் கடைபிடிக்கத் தொடங்கினான். அன்றைய நாவலந்தீவில் மோரியப் பேரரசனுக்கு பணியாத இரு நிலப்பரப்பு உண்டெனில் அவைகளில் ஒன்று கலிங்கம் மற்றொன்று தமிழகம். அசோகவர்த்தனின் கலிங்கப் போருக்கும் அவனது பௌத்த மதத் தழுவலுக்கும் இடைப்பட்ட அந்த ஒன்றரை வருட காலத்தில் பெரும் போர் தென்னகத்தில் நடைபெற்றிருக்கிறது என்பதற்கான குறிப்புகள் நமது சங்க இலக்கிய நூல்களான புறநானூறு, அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் கிடைக்கின்றன.

‘மோரியப் பேரரசுகளும், தமிழ் அரசுகளும் நட்பு நாடுகளாக விளங்கின. ஆதலால் தான் மோரியப் பேரரசன் அசோகவர்த்தனும், அவனது தந்தை அமிர்தகாரன் பிந்துசாரனும் தமிழ் அரசுகளின் மீது படையெடுக்கவில்லை’ என்று பல வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்துவிட்டுக் கடந்துவிடுகிறார்கள். ஆனால், அதே மோரியரின் காலகட்டத்தில் தமிழர்கள் ஒருங்கிணைந்து மொழிபெயர் தேயத்தில் நிலை நிறுத்தியிருந்த சோழர், சேரர், பாண்டியரின் மூவேந்தர் கூட்டுப் படை பற்றிக் கருத்தில் கொள்வதில்லை.



மோரியப் பேரரசுக்கும், தமிழ் அரசுக்கும் இடையில் இணக்கமான சூழல் நிலவியிருந்தால் கரும்பெண்ணை நதிக்கு அருகில் மொழி பெயர் தேயத்தில் சோழர், சேரர், பாண்டியர் மூவரும் இணைந்து பெரும்படையை எதற்காக நிலை நிறுத்தியிருக்க வேண்டும்? அதற்கான முகாந்திரம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடாமலே பலர் கடந்து சென்றுவிடுகிறார்கள்.

வரலாற்று ஆய்வாளர்களின் பாராமுகத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்கையில் ஒரே ஒரு காரணம் மட்டுமே தென்படுகிறது. நாவலந்தீவின் பெரும் நிலப்பரப்பை உள்ளடக்கிய மோரியப் பேரரசு தமிழ் அரசுகளை வீழ்த்த இயலாமல் போரில் தோற்றதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதை விடவும் வேறு காரணம் கிடைக்கக் மறுக்கிறது.

மோரியரின் தமிழகப் படையெடுப்பு பிந்துசாரனின் காலத்திலும் நடைபெற்றிருந்தாலும்; அசொகவர்த்தனின் கலிங்கப் போரில் தொடங்கி அவன் பௌத்த மதத்தைச் சரணடையும் அந்த ஒன்றரை வருட காலத்தை நான் வென்வேல் சென்னியின் கதைக் களமாகக் கொண்டிருக்கிறேன். வரலாற்று ஆய்வாளர்களின் குறிப்புகளையும், எண்ணங்களையும் சுட்டிக் காட்டாமல் சங்க இலக்கியங்கள், அசோகனின் சில கல்வெட்டுகள் மற்றும் காரவேலனின் யானைக்குகைக் கல்வெட்டு ஆகியவற்றின் நேரடித் தகவல்களிலிருந்தும், அத்தகவல்களின் காரண அனுமானங்களின் அடிப்படையிலும் ‘வென்வேல் சென்னி’ புதினத்தைப் புனைந்திருக்கிறேன். கிடைத்த ஆதாரங்கள், அடிப்படைக் குறிப்புகள் ஆகியவற்றை அனைவருக்கும் பயன்படும் நோக்கில் ஆங்காங்கே அடிக்குறிப்புகளில் பகிர்ந்திருக்கிறேன்.

எனது முதல் புதினமான வானவல்லி’யை ஆதரித்ததைப் போன்று வென்வேல் சென்னியையும் வாசகர்கள் ஆதரிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

thanks to :
Wrapper art : Shyam Sankar
Wrapper design : Haris Guhan
Book layout design : Sivagami Ishwarya (Senthil)

Who support lot and Special thanks to :
Bhavani Bhavani, Sakthi Sree, Sundaralingam Sankaravelu, சிவரஞ்சனி சதாசிவம், Vetri Selvan.

வென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு !
 

No comments:

Post a Comment

Popular Posts