Tuesday 26 December 2017

படைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்

சிகரம் : வணக்கம் சிவரஞ்சனி!


சிவரஞ்சனி : வணக்கம் சகோதரரே!

சிகரம் : உங்களைப் பற்றி சிறு அறிமுகம்?

சிவரஞ்சனி : நான் ஒரு இயன்முறை மருத்துவர். குழந்தைகள் நல சிறப்பு பிரிவு. எனக்கு சங்க இலக்கியம் மற்றும் இலக்கணம் என்றால் மிகவும் விருப்பம். தமிழ் முறைப்படி கற்க ஆவல்.

சிகரம் : தமிழ் மொழி மீது உங்களுக்கு எப்படிக் காதல் வந்தது?

சிவரஞ்சனி : என் தாய் மொழி மீது காதல் இயல்பானது சகோ. அது புதிதாக வரவில்லை. பிறப்பிலேயே நான் தமிழர்.

சிகரம் : உங்கள் மொழி ஈடுபாட்டை ஊக்குவித்தவர்கள் பற்றி?

சிவரஞ்சனி : யாரும் ஊக்குவிக்கவில்லை. இயல்பாகவே எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். படித்தது முழுவதும் தமிழ் வழிக்கல்வி தான் (பள்ளிக்கல்வி). தமிழ் மீது பக்தியும் காதலும் அதிகரிக்க காரணமானவர் எனது 11ம் வகுப்பு தமிழாசிரியை அதன்பின்னர் எனது ஆர்வத்திற்கு தீனி போட்டது நமது தமிழ்கூறும் நல்லுலகம் மற்றும் நமது குழு நண்பர்கள்.



சிகரம் : தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உங்களால் எத்தகைய பங்களிப்பை நல்க முடியும் என எதிர்பார்க்கிறீர்கள்?

சிவரஞ்சனி : நமது மொழியின் பெருமையையும் சிறப்பையும் வருங்கால சந்ததியினருக்குக் கொண்டுசெல்வதன் மூலம்!

சிகரம் : தமிழ் வீழும் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்களே, அது குறித்து தங்கள் கருத்து?

சிவரஞ்சனி : அதற்கெல்லாம் துளி கூட வாய்ப்பே கிடையாது. நமது தன்னம்பிக்கையை குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி அது. இப்படி யாராவது கூறினால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. நமது மொழியின் வரலாறு தெரிந்த யாரும் இப்படி கூறவே மாட்டார்கள். அப்படிக் கூறுபவர்களை நிராகரித்து செல்வதுதான் நமக்கு நல்லது.

சிகரம் : சாதாரண மக்கள் மத்தியில் ஆங்கிலம் கலந்து பேசும் போக்கு அதிகரித்து வருகிறதே?

சிவரஞ்சனி : அப்படி ஒரு வழக்கம் எப்போது தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் இப்படி மொழிக்கலப்பு ஏற்படும் போது தாய்மொழி பயன்பாடு குறையும், சொற்கள் அழிந்து அல்லது சிதைந்து போகும். எந்த மொழி பேசினாலும் நமது மொழியை அழியாமல் காக்க வேண்டியது நமது தலையாய கடமை. மொழிக்கலப்பு இயல்பான ஒன்றுதான். ஆனால் தாய்மொழியை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.  

சிகரம் : மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறானதாக உள்ளது?

சிவரஞ்சனி : ஊடகங்களில் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டுமே இருக்கிறது. ஒரு பக்கம் மொழி கற்றுக்கொள்ளவும், மேலும் விவரங்கள் அறிந்துகொள்ளவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. எகா: இணைய கல்வி தளங்கள், யூடியூப், வாட்ஸப், கூகிள் மற்றும் பிற ஊடகங்களில் தமிழ் பயன்படுத்தும் வாய்ப்பு, மேலும் பல. திரைப்படங்களில் கூட வெகுசிலர் நல்ல தமிழில் எழுதுகிறார்கள். 

வீழ்ச்சி - செய்தித்தாள்களில் பிற மொழிக்கலப்பு, எழுத்துப்பிழையுடன் ஊடகங்களில் செய்திகள் பதிவாதல், திரையிசைப் பாடல்களில் தான் அதிகமான கலப்பு நிகழ்கிறது.

சிகரம் : வெள்ளித்திரை எனப்படும் சினிமா தமிழின் வளர்ச்சியைப் பாதிக்கிறதா?

சிவரஞ்சனி : அப்படி ஒரேயடியாக வெள்ளித்திரை மீது பழி சுமத்த இயலாது. நம்மவர்களின் தாய்மொழி பற்றிய கண்ணோட்டம் மாறத் தொடங்கியது தான் காரணம். ஆங்கிலவழிக்கல்வி தான் சிறந்தது என்ற மடத்தனம் முதன்மையான காரணம்.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகள் என்ன?

சிவரஞ்சனி : நிறைய உள்ளது. தமிழ் மொழி மட்டுமல்ல, தற்போதைய காலகட்டத்தில் தாய்மொழி வழிக்கல்வி கிட்டத்தட்ட மறுக்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம். வீட்டில், பொது இடங்களில் பேசுவதற்குக் கூட ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருப்பது ஊக்குவிக்கவும் படுகிறது. இப்படி இருந்தால் மொழி பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்துவிடும். வளர்ச்சியை பாதிக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். மொழி பயன்பாட்டுக்கும் இது பொருந்தும். தொடக்க நிலையிலேயே சரிசெய்ய வேண்டும்.

சிகரம் : இன்றைய உலகில் ஆங்கில மொழியின் பயன்பாடு இன்றி தாய்மொழியினால் மட்டும் நமது தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியுமா?

சிவரஞ்சனி : அப்படி நாம் பழகிக் கொண்டுவிட்டோம். துணைமொழி அவசியம் தான். ஆனால் அதற்காக தாய்மொழியின் அவசியம் தெரியாமல் இருக்கக்கூடாது.

சிகரம் : தாய்மொழி வழிக் கல்வி சாத்தியம் தானா? ஏன் இந்தக் கேள்வி என்றால் நீங்கள் கற்ற மருத்துவத் துறையிலுள்ள பல வார்த்தைகள் இன்னும் தமிழாக்கம் செய்யப்படவேயில்லை. ஆக இவ்வாறான நிலையில் தாய்மொழி வழிக் கல்வி சாத்தியப்படுமா?

சிவரஞ்சனி : பள்ளிக்கல்வி வரை நிச்சயமாக சாத்தியம் தான். அதன்பிறகு கல்லூரி, தொழில் சார்ந்த படிப்புகளில் தாய்மொழிவழிக் கல்விக்கான வாய்ப்பு குறைவு. மேலும் அனைத்து நுட்பமான வார்த்தைகளையும் தமிழ்படுத்துவது என்பதும் சற்று கடினமானது. மேலும் அதற்கான தேவையும் குறைவு.

சிகரம் : ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் துறை சார்ந்த அகராதிகளை ஆங்கில மொழியில் அமைத்திருக்கின்றன. ஆக்ஸ்போர்டு தமிழகராதி கூட உள்ளது. இவர்களுடன் இணைந்து பணியாற்றினால் இது சாத்தியப்படுமா?

சிவரஞ்சனி : முயற்சி செய்து பார்க்கலாம்.

சிகரம் : உங்கள் பொழுது போக்குகள் என்ன?

சிவரஞ்சனி: நூல்கள் வாசிப்பு, இசை, ஆலயங்கள், அருங்காட்சியகம், நீண்ட தொலைவு பயணம், இயற்கையை ரசிப்பது பிடிக்கும், இன்னும் பல...

சிகரம் : உங்கள் மனங்கவர்ந்த எழுத்தாளர்கள் யாவர்?

சிவரஞ்சனி : கல்கி, சுஜாதா

சிகரம் : கணையாழி, கல்கி போன்ற சஞ்சிகை வாசிப்பதுண்டா?

சிவரஞ்சனி : பசுமை விகடன், புதிய தலைமுறை, நக்கீரன்

சிகரம் : மொழி வளர்ச்சிக்கும் வாசிப்புக்கும் என்ன தொடர்பு?

சிவரஞ்சனி : நிச்சயமாக இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை தான். மொழி தெரியாவிட்டால் வாசிப்பு சாத்தியமில்லை. வாசிக்காமல் மொழியறிவு வளர்ச்சியடையாது.

சிகரம் : கவிதை என்றால் என்ன? ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்?

சிவரஞ்சனி : கவிதை பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது சகோ. ஆனால் கவிதை என்பது நல்ல கருத்துக்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். காதலை விரசமில்லாமல் கவிதையாக்க வேண்டும். ஏனென்றால் அதிக கவிதைகள் காதல் பற்றியதே.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன?

சிவரஞ்சனி : கல்வியை அரசியலாகவோ வணிகமாகவோ ஆக்காமல் இருந்தால் போதும். அப்படிப்பட்டவர்களுக்கு துணைபோகாமல் இருக்க வேண்டும். கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். தாய்மொழிக்கல்வியை ஊக்குவித்து முதன்மைபடுத்த வேண்டும்.

சிகரம் : இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கு கொண்டதுண்டா?

சிவரஞ்சனி : வாய்ப்பு கிடைத்ததில்லை சகோ.

சிகரம் : தமிழ் மீது ஆர்வமுள்ள பத்து நண்பர்களை இணைத்தால் நீங்களே இலக்கியக் கலந்துரையாடல்களை ஒழுங்கமைக்கலாமே?

சிவரஞ்சனி : நிச்சயமாக சகோ. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் கலந்துரையாடுவேன்.



சிகரம் : தமிழக அரசியல் சூழல் குறித்த உங்கள் பார்வையைப் பதிவு செய்ய முடியுமா?

சிவரஞ்சனி : இப்போது மிகவும் குழப்பமான நிலையில் தான் தமிழகம் இருக்கிறது. மக்கள் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை துளிகூட இல்லாமல் பதவிக்காக இவர்கள் நடத்தும் அரசியல் பிழைப்பு மிகவும் மோசம். அடுத்த தலைமையைத் தேர்ந்தெடுக்கவே அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

சிகரம் : எதிர்காலத்தில் தமிழ் மொழி என்ன மாதிரியான சவால்களை எதிர்நோக்கக் கூடும்?

சிவரஞ்சனி : இப்போதே பெரிய சவால்களை எதிர்நோக்கிக்கொண்டு தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் போராடித்தான் தமிழைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையக் கூடிய காரணிகள் தற்போது என்ன இருக்கின்றன?

சிவரஞ்சனி : ஏதோ நம்மைப் போன்ற ஓரிரு தமிழார்வமிக்க உள்ளங்கள் தான் ஒரேயொரு சாதகமான காரணி. ஒன்றுபட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மற்ற எதையும் நம்புவது வீண்.

சிகரம் : வாட்ஸப் என்றாலே வதந்தி தானே? அதில் தமிழ் கூறும் நல்லுலகம் குழு எவ்வாறு இயங்குகிறது?

சிவரஞ்சனி : வாட்ஸப் என்றாலே வதந்தியா? இது என்ன புதிய தகவலாக உள்ளது! பெரும்பாலும் பயனுள்ள தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. படைப்புகள், படைப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இந்த தளம் முழுவதும் தமிழில் உரையாடுவதற்கென்று மட்டுமே உருவாக்கப்பட்டது (அதாவது தமிழில் அரட்டையடிக்க மட்டும்). பின்னர் பயனுள்ள தளமாக தரம் உயர்ந்துவிட்டது!

சிகரம் : தமிழ் இலக்கணம் கற்பது கடினமா? எளிதா?

சிவரஞ்சனி : கடித்தால் தான் கரும்பின் இனிமையை சுவைக்க முடியும். அதுபோல் தான் இலக்கணம். சுவைப்பது எப்படி என்று தெரிந்துகொண்டால் போதும்.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியில் சாதாரண மக்களுக்கு அக்கறை உள்ளது எனக் கருதுகிறீர்களா? அதாவது வறுமை கோட்டில் வாழ்பவர்கள், மாதாந்த வருமானத்தை நம்பி வாழ்பவர்கள் அல்லது மொழி தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள்....
சிவரஞ்சனி : எல்லாருக்கும் ஓரளவுக்காவது அக்கறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி செயல்படுத்துவது என்பது தான் தெரியவில்லை. அரசாங்கம் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

சிகரம் : இந்த சாதாரண மக்களை எவ்வாறு நமது மொழி வளர்ச்சிப் பயணத்தில் இணைத்துக் கொள்வது?

சிவரஞ்சனி : ம்... சற்று கடினமான கேள்வி. மொழி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அன்றாட செலவுக்கே மிகவும் அல்லல்படுபவர்கள் கூட தனது பிள்ளைகள் ஆங்கிலம் கற்றால் தான் உயர்வடைவார்கள் என்று எண்ணி தனியார் நடத்தும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். இந்த நிலை மாறினாலே போதும். அதற்கு அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இது மற்றவர்கள் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட தாங்களே நேரடியாக உணர்ந்து கொள்வார்கள்.

சிகரம் : தமிழ் மொழி ஆர்வலர்கள் பரவலாக உலகெங்கும் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை ஒன்றிணைக்க யாரும் முயற்சி எடுக்கவில்லையே?

சிவரஞ்சனி : நிறைய சங்கங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளில் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்.

சிகரம் : இக்காலத்தில் மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே?

சிவரஞ்சனி : இலக்கணம் முறையாகக் கற்காத குறை தான் காரணம்.

சிகரம் : தனித்தமிழில் பேசுவது கடினமானதா?

சிவரஞ்சனி : பேசுவது கடினமில்லை. அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் மற்றவருக்குப் புரியவேண்டும். பேச்சு மொழியில் (communication) ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிகரம் : உங்கள் வாழ்க்கை இலக்கு என்ன?

சிவரஞ்சனி : நல்ல மனிதனாக வாழ்ந்தால் போதும்.

சிகரம் : உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றி?

சிவரஞ்சனி : அப்படி குறிப்பிட்டு எதையும் கூற முடியவில்லை.

சிகரம் : பிறமொழி இலக்கியங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

சிவரஞ்சனி : பள்ளியில் படித்த ஆங்கில இலக்கியம் ஒன்றிரண்டு தான் சகோ. வேறொன்றும் படித்ததில்லை.

சிகரம் : சமூக வலைத்தளங்கள் எனப்படும் பேஸ்புக், வாட்ஸப் போன்றவை வரமா? சாபமா?

சிவரஞ்சனி : இரண்டும் கலந்து தான் இருக்கிறது. நமக்கு எது தேவையோ எது நன்மை தருவதாக இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்.

சிகரம் : நீங்கள் இறுதியாக எமது வாசகர்களுக்கு / மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

சிவரஞ்சனி : எந்த மொழி பேசினாலும், பயன்படுத்தினாலும் நமது தாய் மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும். ஒரு  மொழி அழிந்தால் அந்த இனத்தின் ஒட்டுமொத்த பெருமையும் அழிந்துபோகும். எனவே தாய்மொழி எதுவாகினும் கற்போம், காப்போம், அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வோம். நன்றி!

படைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்

#நேர்காணல் #சிவரஞ்சனி #சிகரம் #நேர்முகம் #SIGARAMCO

No comments:

Post a Comment

Popular Posts