Wednesday 6 December 2017

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02

வணக்கம் நண்பர்களே!

இலக்கணம் :

ஒரு மொழிக்குச் சிறப்பையும் அழகையும் கொடுப்பது அம்மொழிக்கான இலக்கணம் தான். இலக்கணம் என்பது மொழியைத் தவறில்லாமல் கற்க பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்கு கட்டுப்பட்டுத்தான் மொழிகள் இயங்கும். உயிருள்ள எந்த ஒரு மொழிக்கும் இந்த இலக்கணம் இன்றியமையாதது. நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றளவும் “கன்னித்தமிழ்” என்ற சிறப்பைப் பெற்று தமிழ்மொழி தன் இளமையும் இனிமையும் மாறாமல் இருப்பதற்கு காரணம் நம் இலக்கணமே.

முத்தமிழ் இலக்கணம் :

உலகில் உள்ள பல்வேறுபட்ட மொழிகளில் இலக்கணம் என்பது எழுத்துக்கும், சொல்லுக்கும் பொருளுக்குமாக இருக்கும். ஆனால் நம் மொழியாம் தமிழ்மொழியில் இயல், இசை மற்றும் நாடகம் என மூன்று பிரிவுகளைக் கொண்டு முத்தமிழ் என்று போற்றப்படுகிறது. இம்மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியே இலக்கணம் உண்டு. முத்தமிழுக்குமாய் இலக்கணம் கொண்ட நூல் அகத்தியம் ஆகும்.



இசைத்தமிழ் இலக்கணம் :

இசைத்தமிழ் பண்ணிசைத்துப் பாடும் தமிழ். இசைக்கான இலக்கணம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இனிமையாக இயற்றப்படுகிறது. இயற்றமிழில் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்களும், அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பண்ணிசைகளும், அருணகிரிநாதர் , வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முத்துத் தாண்டவர் போன்றோரின் பாடல்களும் இசைத்தமிழே.

நாடகத்தமிழ் இலக்கணம் :

நாடகத்தமிழ் கூத்து பற்றி வழங்கும் தமிழ். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தை கூத்து என்பர். இக்கூத்து தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இயற்றமிழ் இலக்கணம் :

செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதியே இயற்றமிழாகும். இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இயற்றமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி என்பதாகும்.

இயற்றமிழின் ஐந்து வகைகளைப் பற்றியும், இவ்விலக்கணம் எவ்வாறு இலக்கியத்துடன் தொடர்பு கொண்டது என்பதையும் அடுத்த பதிவில் காண்போம்!!!

(தொடர்கிறேன்...)

இப்பதிவு பதிவர் பௌசியா இக்பால் அவர்களின் படைப்பாகும்.

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02 - பௌசியா இக்பால் - சிகரம் 

#சங்கஇலக்கியம் #இலக்கியம் #ஆய்வுக்கட்டுரை

No comments:

Post a Comment

Popular Posts