Tuesday 19 December 2017

காலம் வரவேண்டும் !

கையேந்தி வந்தவரை
கைவிரித்து மறுத்து விடும்
கடும் மனம் எனக்கில்லை
கொடுப்பதும் கூடுதில்லை

நேரம் அறியாமல்
நினைத்தவுடன் கொடுத்து விட்டு
நாளைய பொழுதில்
நமது பாடுபார்க்க வழியின்றி
நொடித்து நிற்க முடியாமல்
நெஞ்சம் தடுமாறி
நினைவுகளில் கணக்கெழுதி
நீட்டுவோமா கரங்களை
என்றும் யோசித்து
நடக்காது என்று சொல்லி
அனுப்புவதே உசிதமோ
என்றே எண்ணம் குழம்பி
எதைச் செய்வோம் எனப் புரியாமல்
மொத்த மூளையும் குழம்பி
மௌனமாய் சில வேளை
மாற்றம் உரைப்பேன்




பொல்லாத மனதுக்குள்
பக்தியோடு கருணையும்
பக்கத்தில் வந்து எழுப்புவதால்
போவென்று சொல்லித் துரத்தி
பதைக்க விடவும் முடிவதில்லை
பாரதி யாக நானில்லை
பானை அரிசியை அள்ளிக் கொடுத்து
பார்த்து ரசித்துப் பாட்டுப் பாட
பிள்ளைகள் வயிற்றை
பட்டினி போட முடியாதே

அள்ளி வழங்கும் அறம் செய்ய
ஆசை நெஞ்சில் உண்டு தான்
அதற்கேற்ற நிறை செல்வம்
எங்கிருந்து யான் பெற

கேட்டு யாரும் வருகின்ற காலம்
கொடுக்கும் வழி திறக்க முடியாமல்
கேடு கெட்ட என் திண்டாட்டம்
கொட்டிவிட வார்த்தை இல்லையே

இருப்பதைக் கேட்டுக் கொடுக்க முடிந்தால்
இனிப்பது
என்னவோ உண்மையே
இது முடியாதென்று அனுப்பிய பின்னே
இரவுத்தூக்கம் தொலைத்து
இதயம் நிம்மதியிழந்து
கொடுமையிலும் கொடுமை
கொடுக்கவியலா நிலைமை

இப்படித் தவித்து
அனுபவத்தில் மலைப்பதால்
சில நாளில் நாளை வா என்னும்
வாதகோனாவேன்
பலவேளைகளில் பிறகொரு நாள்
பார்த்துக் கொடுப்பதாக
வையகோனாவேன்
எனக்கே அரிதென்று
நிச்சயமாக உணர்ந்தால்
முடியாது என்னும்
யாத கோனுமாவேன்
இன்பமாய் வழங்க
எல்லாம் கிட்டிய நாளில்
வழங்கும் கோனாகி
வரமாக சிரித்திருப்பேன்

என்னதான் நான் செய்வேன்
இல்லறத்தாள் ஆகிவிட்டேனே
இங்கே குறை வந்தால்
இல்லாள் பொல்லாதவள்
என்றாகி இனிமை கெட்டு விடுமே

ஆனாலும் ஓர் ஆசை
அள்ளிக் கொடுக்கும் கர்ணன்
ஆசி யில் கொஞ்சம் எனக்கும் கிட்டும்
காலம் வரவேண்டும்

கவிஞர் லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்


காலம் வரவேண்டும் - சிகரம் 

No comments:

Post a Comment

Popular Posts