Wednesday 20 December 2017

படைப்பாளி பாலாஜி ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்

சிகரம் : வணக்கம்

பாலாஜி : வணக்கம்



சிகரம் : கவிதை என்றால் என்ன? ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்?

பாலாஜி : உட்கார்ந்து யோசித்து வருவதில்லை கவிதை! அது ஒரு தீப்பொறி! உள்ளில் கொழுந்து விட்டு எரியும் உணர்ச்சிகளின் வடிவம்! அந்த உணர்வோடு திடுமென்று ஒளிரும் வரிகளில் உயிர் இருக்கும்! இது ஒரு தலை சிறந்த இலக்கணம் கவிதைக்கு! அப்படிச் சொல்வதனால் மற்றவை எல்லாம் கவிதைகள் இல்லையா என்று கேட்கத் தோன்றும்! அப்படி இல்லை! மற்ற காரண காரியங்களோடு எழுதப்படும் வரிகளும் சிறப்பாக அமையும் - எப்போது என்றால் ஏற்கெனவே அந்தக் கருத்துக்கள் குறித்து கவிஞனின் மனம் கனன்று கொண்டிருந்தால், அப்போது பிறக்கும் வரிகளில் ஆழம் இருக்கும்.

இன்னும் சொல்கிறேன்!

கவிதை என்பதில் தெளிவு வேண்டும். மொழியின் இனிமை வேண்டும். பொருள் வேண்டும். வரிகளே இசைமயமாய் இருத்தல் வேண்டும். ஆழ்ந்த சிந்தனையின் அருமையான வெளிப்பாடாய் அது அமைதல் வேண்டும். எதுகை, மோனை இருப்பின் சிறப்பு! எதையும் எழுதி இதுதான் கவிதை எனச் சொல்லும் திமிறல் அதில் தெரிதல் கூடாது. வரிகளைப் படித்தால் வானம்போல் சிந்தனை விரிதல் வேண்டும்.

நான் எழுதுவதைக் கூட நான் கவிதை என்ற பெயர் தரமாட்டேன்! அவை எண்ணங்களின் வெளிப்பாடு; ஒரு உரத்த சிந்தனை. அவ்வளவே! கவிதை என்பது கடைச் சரக்கல்ல, கேட்டவுடன் எடுத்துக் கொடுப்பதற்கு! (அளவுக்கு மீறி நான் பேசுவதாகத் தோன்றினால் மன்னிக்க!) மற்றவரின் இலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதுவது நல்ல கவிதை ஆவது மெத்தக் கடினம்! வரகவிகளுக்கே அந்த வாய்ப்பு! கவிதையில் ஒரு அழுத்தம் வேண்டும்! ஆளுமை வேண்டும்! அனைவர் மனதையும் கட்டியிழுக்கும் எளிமை வேண்டும்! ஏற்றமிகு வரிகளவை ஆதல் வேண்டும்!

சிகரம் : உங்கள் பத்திரிகை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

பாலாஜி : பத்திரிகை அலுவலகத்தில் எனது பணி நிர்வாகமும் கணக்கு வழக்கும் தான்! நல்ல ஒரு நிர்வாகி, அனைவர் மனதிலும் அன்பால் இடம் பிடிப்பவன் என்று பெயரெடுத்தது இறைவனருள். ஓய்வு பெற்று ஏழு வருடங்கள் கழிந்த பின்னும் என்னிடம் அலுவலக நண்பர்கள் தொடர்புடன் உள்ளனர். அது ஒரு வரம். அன்பும் உதவும் மனப்பான்மையுமே எனது அடிப்படைத் தன்மை. நன்றாக உழைத்தேன். நற்பெயர் எடுத்தேன்! பணிபுரியும் காலத்து என்னுடனிருந்த நண்பர்களை என்றும் மறக்கவியலாது!

சிகரம் : உங்களது எழுத்துக்கள் தி இந்துவில் களம் கண்டதுண்டா?

பாலாஜி : இல்லை! அங்கு எனது துறையே வேறு அல்லவா? நான் ஓய்வு பெற்ற பிறகுதான் தி இந்து தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டது.

சிகரம் : வேறு நாளிதழ்கள் அல்லது சஞ்சிகைகளில்?

பாலாஜி : எத்தனையோ வருடங்களுக்கு முன் ஓரிரு முறை கதைக்கு எழுதிய விமர்சனத்துக்குப் பரிசும் கிடைத்ததுண்டு! அதன் பிறகு பத்திரிகைகளுக்கு நான் எதுவும் அனுப்பியதும் இல்லை. முகநூலில் சில எழுதியுள்ளேன். அவ்வளவே!




சிகரம் : நீங்கள் இந்த வாழ்க்கையினூடாக நினைத்ததை சாதித்து முடித்து விட்டீர்களா?

பாலாஜி : என் வாழ்வில் நான் இலக்கு என்ற ஒன்றை வைத்துக் கொள்ளவில்லை. அதை விரும்பவும் இல்லை. அதனால் சாதிப்பது என்பது என்வரை தேவையிருக்கவில்லை. அடிப்படையில் நான் ஒரு 'என்றும் திருப்தியுள்ள மனிதன்'! பெருமைக்குச் சொல்லவில்லை. அதுதான் உண்மை. எனக்குக் கிடைத்தவை அனைத்தும் என் மனம் கவர்ந்தவைதான்! அதனால் என்றும் ஒரு மகிழ்ச்சி; திருப்தி! இலக்கு என்று ஒன்றை வைத்துக் கொண்டால் அதை அடையும் வரை போராட்டம்! அடையாவிட்டால் மனவாட்டம்! எனவே நான் இலக்கில்லாமல் வாழ்ந்தேன்! எல்லாம் சாதித்து மகிழ்ந்தேன்!

பாலாஜி : உங்கள் கேள்விகள் அருமையாக உள்ளன. என் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிக்கொணரும் விதமான கேள்விகள்!

சிகரம் : அரசியல் தொடர்பான புரிதல் உங்களிடம் உள்ளதா?

பாலாஜி : இல்லை! அரசியலில் எனக்கு அணுவளவும் ஈடுபாடு கிடையாது!

சிகரம் : எதிர்காலத்தில் தமிழ் மொழி என்ன மாதிரியான சவால்களை எதிர்நோக்கக் கூடும்?

பாலாஜி : தற்காலத்திலேயே தமிழனாயிருந்தும் தமிழை நன்கு பயிலாத மக்களைத் தமிழ் கண்டுகொண்டிருக்கிறது. மொழியில் அதிகம் புழங்கப் புழங்க அதன் வளம் கூடும். புதிய வடிவங்களை மொழி காணும்! தமிழ் மொழி பயில்பவர்களே குறையும்போது மொழி புதிய வடிவங்களைக் காணும் வாய்ப்பும் குறைகிறது! எனவே எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவில் இந்த நிலையில் ஆன 'சவால்'களை எதிர்நோக்க வேண்டியிருக்கலாம்! தமிழ்மொழியை அதிக அளவில் நம் மக்கள் பயன்படுத்தியிருந்தால் 'சவால்' போன்ற வாக்குகளே புழக்கத்தில் வந்திருக்காது! (தவறாக எண்ணவேண்டாம் இந்தச் சொல்லை இங்கே சுட்டிக் காட்டியதற்கு)

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையக் கூடிய காரணிகள் தற்போது என்ன இருக்கின்றன?

பாலாஜி : கணினி முதல் காரணி! அதன் பயன்பாட்டை சரியான விகிதத்தில் கையாண்டால் நல்ல பலன் தரும் என்று நான் நினைக்கிறேன். இரண்டாவது, ஊடகங்கள். அவை மொழிவளர்ச்சிக்கு என்று தனிப்பட்ட நேரம் ஒதுக்கினால் பலன் இருக்கும். அச்சு ஊடகம் என்று அறியப்படுகின்ற, பத்திரிகைகள் மனம் வைத்து மொழி வளர்ச்சிக்கு உதவலாம். தமிழ் மொழியின் அரிய சொற்கள் , பிறமொழியின் கடின சொற்களுக்கான தமிழாக்கங்கள் இவை பற்றி தனிப்பகுதிகளை அவை உண்டாக்கலாம்.

சிகரம் : உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றி?

பாலாஜி: அப்படிப்பட்ட பெரிய 'சவால்'கள் ஒன்றையும் நான் நேரிட்டதாக நினைவில்லை. தினப்படி வாழ்க்கையில் எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைகள்தாம் நானும் கண்டது! அவையெல்லாம் கொசுக்கடிகள்! அவ்வளவே!

பாலாஜி : நானாக சொல்ல நினைக்கும் சில விடயங்கள் இவை.

என்னை ஒரு புடம் போட்ட தங்கமாக மாற்ற உதவியவர்களில் முதலாமவர் எனது தந்தையார். அவ்வப்போது அவர் தந்த அறிவுரைகளும் அனுபவங்களும் அளவிடற்கரியன! இயல்பாகவே சற்று பயந்த தன்மையுடைய எனக்கு ஒரு சரியான துணையாக இருந்து என்றும் மனதளவில் என் ஊக்கங்ளுக்கு உரமிடுபவர் எனது மனைவி! எனது அகவாழ்வில் ஒரு அகல்விளக்கின் ஒளியாகத் தோன்றி சரியான நேரத்தில் எனது மனஓட்டங்களைத் தனது கவியாலும் எழுத்தாலும் நெறிப்படுத்தியவன் எனது நண்பன் 'இசைக்கவி ரமணன்'. அவனுக்கே இது தெரியாது! கடமைப்பட்டுள்ளேன்! அடுத்து எனது அலுவலக அதிகாரியாக இருந்த கேப்டன் மணி அவர்கள் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியாக இருந்து அலுவலக வாழ்விலும் தனிவாழ்விலும் என் மனதுக்குத் தெம்பு தந்து ஒரு ஊன்றுகோலாக என்னுடனிருந்தவர் அவர்! நினைவு கோராமல் இருக்க முடியாது. எனது இரு மகள்களும், மகனில்லாத குறைதீர்க்க வந்த இரு மருமகன்களும் என் இரு கண்கள் ! எதிலுமே திருப்தியுறும் நான் இனி 'இன்னது வேண்டும்' என்று இறைஞ்சிக் கேட்கும் தேவையின்றி என்னை வாழவைத்திருக்கும் பராசக்தி என்றும் காக்க, எனை மட்டுமல்ல, எல்லோரையும்!

சிகரம் : இரண்டு தலைமுறைகளைக் கடந்திருக்கிறீர்கள். இந்த இரண்டு தலைமுறைகளையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாலாஜி : இரு தலைமுறையும் இரண்டு கண்கள்! முதல் தலைமுறை எனக்கு அடுத்த தலைமுறையை எப்படிக் கையாள வேண்டும் என்று தெள்ளத் தெளிவற உணர்த்தியது! அடுத்த தலைமுறை எம்மிரு தலைமுறைகளிடமிருந்தும் விரும்பிக் கற்ற பாடம் உறவுகளின் மேன்மை! மனிதர்களின் தேவை என்பது பணத்தின் தேவையைவிட சிறப்பானது என்பதை அவர்கள் தெளிவாக அறிந்துள்ளனர்!

சிகரம் : வாட்ஸப் என்றாலே வதந்தி தானே? அதில் தமிழ் கூறும் நல்லுலகம் குழு எவ்வாறு இயங்குகிறது?

பாலாஜி : தமிழ் கூறும் நல்லுலகத்தில் வதந்திக்கு இடமே இல்லை என்பது என் கருத்து. அதில் விவாதிக்கப்படும் செய்திகள் தமிழ் பற்றிதான். இலக்கியம் சங்ககாலப் பாடல்கள், அவற்றின் கருத்துக்கள் இவை பற்றித்தான்! மற்றபடி வேறிடத்தில் வந்துள்ள செய்திகளைப் பரப்புதலோ அது குறித்த விவாதங்களோ இதில் மிகக் குறைவு! முற்றிலும் இல்லை என்றே சொல்லுவேன்! எனவே தமிழ் கூறும் நல்லுலகம் குழு தொடர்பாக வதந்திக்கு இடமில்லை.

சிகரம் : தமிழ் கூறும் நல்லுலகம் குழுவில் வதந்தி பரவுகிறது என்று கூறவில்லை. இப்போது வதந்திகள் வாட்ஸப்பில் தான் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழலில் ஆரோக்கியமான குழுவாக தமிழ் கூறும் நல்லுலகம் குழு எவ்வாறு செயற்படுகிறது என்பதே கேள்வி.

பாலாஜி : அதில் forward செய்திகள் (மீள்பகிர்வு குறுஞ்செய்திகள்) அறவே இல்லை. எனவே வதந்திகளின்றி உண்மைகளில்தான் உலவுகிறது தமிழ் கூறும் நல்லுலகம் குழு

சிகரம் : தமிழ் இலக்கணம் கற்பது கடினமா? எளிதா?

பாலாஜி: பொதுவாக கடினம் எளிது என்பதெல்லாம் கற்பவரின் விருப்பம், ஊக்கம், திறமை இவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பர். இருப்பினும் தமிழின் அடிப்படை இலக்கணங்கள் என்னைப் பொறுத்தவரை கடினம் என்று சொல்லமாட்டேன். கற்கத் தொடங்கினால் விறுவிறுப்பாகச் செல்லும்.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியில் சாதாரண மக்களுக்கு அக்கறை உள்ளது எனக் கருதுகிறீர்களா?

பாலாஜி : அக்கறை இருந்து எதையும் செய்கிறார்களோ இல்லேயோ, பயன்பாடு கண்டிப்பாக மொழியை வளர்க்கிறது; அவர்கள் அறிந்தும் அறியாமலேயும்! எனில் சாதாரண மக்கள் மொழிவளர்ச்சி குறித்தெல்லாம் தனிப்பட்ட முறையில் சிந்திக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியதே!

சிகரம் : இந்த சாதாரண மக்களை எவ்வாறு நமது மொழி வளர்ச்சிப் பயணத்தில் இணைத்துக் கொள்வது?




பாலாஜி : ஊடகங்கள், வலைப்பதிவு, இணையதளம் இவையெல்லாம் மனம் வைத்தால் நடக்கும். மொழியின் பயன்பாட்டைத் தவிர மொழிவளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை முதலில் சிந்தித்தல் வேண்டும். இதைவிட சிறப்பான ஒரு செயல், நம் தாய்மொழியின் சிறப்பு குறித்து நாம் பெற வேண்டிய அறிவு. தமிழ் மொழியில் பண்டுமுதல் என்னவெல்லாம் இருந்து வந்திருக்கிறது என்ற அறிவு தேவை! அதைவிடவும் முக்கியம் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் அடிப்படையாக சரியான முறையில் தமிழ் பேச, எழுத அறிந்து கொள்வது.

சிகரம் : தமிழ் மொழி ஆர்வலர்கள் பரவலாக உலகெங்கும் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை ஒன்றிணைக்க யாரும் முயற்சி எடுக்கவில்லையே?

பாலாஜி : ஆம்! அது வருத்தததிற்குரிய செய்திதான்! தமிழார்வலர்கள் ஒன்றிணைந்தால் ஒரு முன்னேற்றம் ஏற்பட ஏதுவாகும்!

சிகரம் : இக்காலத்தில் மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே?

பாலாஜி : காரணம் கல்வி முறைதான்! கட்டற்ற கவிதை முறை ,கவலையற்று எழுதலாம்! இலக்கணம் சரியான முறையில் கற்பிப்பாரில்லை! இலக்கணம்தானே எழுத்து முறையில் கட்டுப்பாட்டை விதித்து எழுத்தை நெறிப்படுத்தும்! அது இல்லாத காரணத்தால் மரபுக் கவிதையில் நாட்டமில்லை!

சிகரம் : தனித்தமிழில் பேசுவது கடினமானதா?

பாலாஜி : கடினம் என்று சொல்லமாட்டேன். சற்று பழக வேண்டும். ஆனால் ஆங்கிலத்தின் பயன்பாடு என்பது ஊறிப்போய்விட்டது! கூடியமட்டும் தனித்தமிழில் பேச முயற்சி செய்யலாம். சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பேசும்போது உடனே கிடைக்காது போய்விடும்!

சிகரம் : பிறமொழி இலக்கியங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

பாலாஜி : பிறமொழி இலக்கியங்கள் என்று சொன்னால் எனக்கு மிகச் சிறிதளவு தெரிந்தது மலையாளம் பற்றி மட்டுமே! நல்ல தெளிவான சிந்தனை உள்ள எழுத்தாளர்கள் அங்கு உண்டு. தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்களின் சில கதைகள் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.

சிகரம் : சமூக வலைத்தளங்கள் எனப்படும் பேஸ்புக், வாட்ஸப் போன்றவை வரமா? சாபமா?

பாலாஜி : வரமாக வந்தவை என்றே நான் கொள்கிறேன்! ஆனால் அதை சாபமென்று சொல்லும் நிலக்கு வந்துவிட்டது! நல்லதை எடுத்து அல்லதை விடல் வேண்டும்! அவ்வளவே!

சிகரம் : நீங்கள் இறுதியாக எமது வாசகர்களுக்கு / மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

பாலாஜி : வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது இது ஒன்று தான்! தாய் மொழியாகிய தமிழை கசடறப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் முதலில் ! பிறகு ஓரளவுக்காவது படிக்கவும் எழுதவும் கூட ! சிந்திப்பது தமிழில் இருந்தால் விரைவில் தானாகவே எழுதவும் கசடறப் பேசவும் எழுதவும் இயலும்! பிற மொழிகளைக் கற்பது மிகவும் தேவை! எனில் தாய்மொழியை மறக்காதீர்கள்!



சிகரம் : நல்லது. உங்கள் சிறந்த ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி!

பாலாஜி : நான்தான் நன்றி செல்லவேண்டும்

சிகரம் : வணக்கம் 

பாலாஜி : வணக்கம்

படைப்பாளி பாலாஜி ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்

#பாலாஜி #சிகரம் #நேர்காணல் #SIGARAMCO

No comments:

Post a Comment

Popular Posts