வணக்கம் நண்பர்களே! 2006.06.01 அன்று 'சிகரம்' கையெழுத்து சஞ்சிகையாக தனது பயணத்தைத் துவங்கியது. பதினோரு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பண்ணிரண்டாவது அகவையில் உங்கள் 'சிகரம்' காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஒரு குழந்தை போல் மெல்ல மெல்ல நிதானமாக'சிகரம்' தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. வெற்றிப் பாதையில் மெதுவாகவே பயணித்துக் கொண்டிருந்தாலும் இலக்கை நோக்கித் தெளிவாக பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 'சிகரம்' இணையத்தளத்தின் ஆரம்பம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். 'சிகரம்' இணையத்தள வடிவமைப்பின் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில பணிகளே எஞ்சியுள்ளன. அவையும் முடிவடைந்த பின்னர் இணையத்தளம் தனது தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்யக் காத்திருக்கிறது.
மேலும் இம்மாதம் முதல் குரல்ஒலி மற்றும் காணொளி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் 'சிகரம்' உங்களை நாடி வந்து கொண்டிருக்கிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியையும் இச்சந்தர்ப்பத்தில் உங்களுக்கு வழங்கக் கடமைப் பட்டிருக்கிறேன். விரைவில் நிறுவன அமைப்பாக எமது பணியைத் தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நண்பர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஊக்கப்படுத்தலுமே எம்மை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை. மிக்க நன்றி நண்பர்களே.
தமிழரையும் தமிழையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லும் எமது நோக்கத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நமது மொழி, பண்பாடு ஆகியவற்றை பேணிக் காக்கவும் வளர்க்கவும் தமிழராகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுதல் அவசியமாகும். தற்போதைய தமிழர் அரசியல் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தமிழ்த் தலைமைகள் என்று சொல்லிக்கொல்வோரும் குறிப்பிடும்படியாக எதையும் சாதிக்கவில்லை. எல்லோரும் சுயநல அரசியலிலேயே ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே அரசியல் ரீதியாகவும் உறுதியான அடிக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம். அனைத்திற்கும் நாம் துணை நிற்போம். வாருங்கள் ஒன்றிணைந்து பயணிக்கலாம்.
வெல்க தமிழ்!
No comments:
Post a Comment